காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள்

305

 

யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள் உள்ளன.

அபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யா வண்ணம் பாதுகாத்தல், யுத்த காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல பிரச்சினைகள் உள்ளன. இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஒன்றே.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒக்டோபர் 30 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. அனைத்துலக காணாமற்போனோர் நாள் கொஸ்டரிக்காவில் 1981 இல்தொடங்கப்பட்ட ‘கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு’ என்ற அரசசார்பற்ற அமைப்பினால் லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.இவ்வாறு ஆரம்பமாகிய ‘காணாமல் போனோர் நாள்’ இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றது.

தொடர்ந்தும் நினைவு கூர வேண்டியுமுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினரால் சந்தேகத்தின் பேரிலும் சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்த்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர். சுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது. இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இவர்களுக்கான தீர்வு என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் காணப்படவில்லை. ஆனால் இன்று யுத்தம் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள முன்னேற்றம் என்பது கண்துடைப்புக்களுடனேயே உள்ளது. முன்னைய அரசாங்கமானது யுத்த மோதல்களின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்ததுடன், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறலைப் புறந்தள்ளியிருந்தது.ஆயினும் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐநா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருக்கின்றது. – ஆயினும் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்காகவும், கால நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் முயல்கின்றதே தவிர அதில் எந்த முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றி விடலாம். அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம சாந்திக்காக வழிபடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா? என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது. இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. அந்த உச்சகட்ட துயரத்துடனேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள்மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். அவர்கள் காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும், இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் யாருக்கு பொறுப்புக் கூறப் போகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய நான்கு தாய்மார் மரணித்திருக்கின்றார்கள்.

அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து விட்டார்கள். இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும்.வடக்கு, கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் இன்று ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், கொழும்பிலும் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றிருக்கின்றன. மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.அந்த மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். தொடர் போராட்டங்களால் உடல், உளரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஒரு நிகழ்வினை நடத்தியிருந்தனர். இவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டித்துள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூற வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சம்பந்தர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதன் மூலம் இந்த மக்களுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கும் எதைச் சொல்ல முனைகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை அவர் முன்னிறுத்த முயல்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனோர் எவரும் இல்லை.

அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த நகர்வுடன் சம்பந்தரும் ஒத்துப் போகின்றாரா…?காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும் மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தாத நிலையில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியிருப்பது என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கிறது.நாடு கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் கூட தமது நாட்டையும், மக்களையும் நேசித்தவர்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும். அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் முன்னெடுத்திருந்தார்கள்.

அதில் பல ஈழ உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்கில் பதவிகளையும், சொகுசு வாழ்க்கையும் பெற்று வலம் வரும் அந்த மக்களின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கானசெயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற பெயரிலான அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இருப்பினும் அந்தஅலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இந்த அலுவலகம் தொடர்பான தென்னிலங்கையின் கருத்துக்களை பார்க்கின்ற போதும் அந்த சட்ட மூல உள்ளடக்கம் பற்றி நோக்கும் போதும் அது வெறும் கண்துடைப்பு அலுவலகமாகவே அமையப் போகின்றது என்பது புலனாகின்றது.ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம் சிரத்தையுடன் கையாள்வதாக தெரியவில்லை. இரகசிய தடுப்பு முகாம்கள்,சிறைச்சாலைகள் என தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும். அத்துடன் காணாமல்ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில் உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும். ஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. இதன் மூலமே மீள நிகழாமையை உருவாக்க முடியும்.

SHARE