காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 08 மாவட்டத் தலைமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் – இல்லையேல் ஆபத்து

283

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடத்தப்படும் போராட்டம் 100 நாட்களை எட்டிப்பிடிக்கவிருக்கின்றது. இந்நிலையில் பலர் தங்களை தேசியவாதிகள் என இனங்காட்டிக்கொண்டு இப்போராட்டத்தில் இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுக்கான சில உதவிகளைச் செய்துவிட்டுப்போகின்றார்கள்.

உணர்வுபூர்வமாக, உத்தியோகபூர்வமாக பலர் இப்போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். அதில் ஒருசிலர் தமது சுயலாபத்திற்காக இப்போராட்டத்தைப் பயன்படுத்துவது மக்களது உணர்வுபூர்வமான தங்களது உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாக அமைகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இவர்கள் நீதியைப் பெற்றுத்தருவார்கள் என்கிற நம்பிக்கையற்ற நிலையிலேயே தமக்காக ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்களை அஹிம்சை வழியில் நடாத்திவருகின்றனர். எனினும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நடத்தப்பட்ட ஒருசில போராட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் போன்றவற்றிற்கு அரசு முழுமையான தீர்வுகளை வழங்கவேண்டும். இல்லையேல் இப்போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று இம்மக்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.

இதில் மிக முக்கியமாக கடத்தப்பட்டு காணாமல் போனோர் தொடர்பாக பரணகமவின் அறிக்கையின்படியும், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுடைய தரவுகளின் படியும் 24000பேர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதில் பரணகமவின் ஆணைக்குழு முன் சாட்சியங்கள் வழங்கியவர்களின் வரிசையில் 6000இற்கு உட்பட்டவர்களே இருக்கின்றனர். ஏனையவர்கள் பயத்தின் காரணமாக சாட்சியங்களைப் பதிவுசெய்யவோ அல்லது எங்கோ ஒரு மூலையில் எமது பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்கிற காரணத்தால் பங்கெடுக்கவில்லை. ஆனால் இப்போராட்டக் களத்தில் இருக்கும் மக்களுக்கு அரசு உரிய பதிலை வழங்கவேண்டும். அவர்கள் இல்லை என்ற சான்றிதழை அரசு வழங்குமாகவிருந்தால் அது எவ்வாறு என்ற காரணத்தையும் தெரிவிக்கவேண்டும். இதனால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பது உறுதிப்படுத்தப்படும் என்ற காரணத்தாலேயே அரசு தயக்கம் காட்டுகிறது.

இதற்கிடையில் சிங்கள இனவாதிகள் இப்போராட்டங்களை குழப்பும்நோக்கில் தமிழ்ப் பிரதிநிகளை இதில் ஈடுபடுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். காணாமல் போனோர் சங்கத்தின் உறுப்பினர்கள் பல பிரிவுகளாகச் செயற்படுகினற்னர். இதில் ஒருசிலர் காணாமல்போனவரை வைத்து ஆதாயம் தேடும் நோக்கில் பிரிந்துசென்று செயற்படுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க, தமிழ் மக்களை பிரதிபலிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இவர்களுக்கான இறுதித்தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவேண்டும். பதில் இல்லையேல் பாராளுமன்றத்தைப் புறக்கணிப்போம் என சம்பந்தன் கூற ஏன் தயங்குகின்றார். அவ்வாறு அவர் தயங்குவதன் காரணமாக கடந்த கால அரசைப் போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களை இவர்களே உருவாக்கிக்கொடுத்துள்ளனர் எனலாம்.

போராட்டத்தில் இருப்பவர்களும் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பணத்திற்காக, உங்களது சுய விருப்பத்திற்காக இப்போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது. மக்கள் புரட்சி ஒன்று இதன் ஊடாக இலங்கையில் வெடிக்கவேண்டும். மக்கள் புரட்சி எங்கு வெடிக்கிறதோ அங்கு சுதந்திரம் மலரும் என்பது வரலாறு. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் அதன் வலிமையை குறைக்கும் ஒரு செயல்வடிவமே, தொடர்ந்தும் அடையாள உண்ணாவிரதங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது. ஒரு கட்டம் வரை மக்கள் போராடிவிட்டு எழுந்து சென்றுவிடுவார்கள் என்பதுவே அரச கட்சிகளின் நிலைப்பாடு. இதற்கு மாறாக மக்கள் இறங்கியிருப்பது பாராட்டத்தக்கது.

எந்தெந்த மாவட்டங்களில், கிராமங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் இருப்பின் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதனை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் மக்களாகிய நீங்களும் களம் இறங்கவேண்டும். இல்லையெனில் இந்நிலை தொடருமாகவிருந்தால் இப்போராட்டம் நாளடைவில் செயலிழந்துவிடும் என்பது எமது கருத்து.

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்,  

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியொருவர், வவுனியாவில் கடைக்கு வேலைக்குச் சென்றவேளை காணாமல் போன தனது தாய் எங்கேயென, தன்னுடைய தாயின் படத்தைக் காண்பித்து கேள்வியெழுப்பினார். கடந்த 2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவடைந்து வவுனியா செட்டிகுளம், வலயம்-04 முகாமில், வாழ்ந்தபோது அத்தாய், தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் வாழவைப்பதற்காக, வவுனியா கச்சேரியில் உள்ள, சிற்றுண்டிச்சாலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதியன்று, வேலைமுடித்து வீடு திரும்பியவர், இன்றுவரை வீட்டுக்கு வரவேயில்லை என்றும் அந்தச் சிறுமி தெரிவித்தார். இதேவேளை, தனது மகள் காணாமல் போனதிலிருந்து இன்று வரை அவருடைய பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபடுவதாகவும் கச்சான் விற்றே, பிள்ளைகளை வாழ வைப்பதாகவும், தெரிவித்துள்ள காணாமல் போயுள்ள பெண்ணின் தாய், தனக்கும் 66 வயதாகிவிட்டதாகவும் தன்னால் உழைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எனவே, தனது மகளை விரைவில் தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரினார்.

விடுதலை உணர்வுடன் தேசியம், சுயநிர்ணய உரிமைக்காக இறுதிவரை போர்க்களத்தில் நின்ற தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சுயநலமற்று தமிழினத்தின் விடிவுக்காகப் போராடியவர். ஏனைய ஆயுதக்குழுக்கள் இப்போராட்டத்தை இடைநடுவில் காட்டிக்கொடுத்து துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் என்பதுதான் நாம் அறிந்த வரலாறு.

 

மறவன்

SHARE