தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(14.04.2024) அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2611ஆவது நாள் போராட்டம்
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்கார்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611ஆவது நாளாக நாம் போராடிவருகின்றோம்.
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எமக்கு மகிழ்ச்சியான விடயம்.
இவர்கள் சேர்ந்து, தமிழர்கள் மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு மாற்றத்தை வலியுறுத்தி, செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கையில் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.அத்துடன்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் உரிமை உள்ளது.
பொதுவாக்கெடுப்பு
அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானவர்கள். இதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள நமது தமிழர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும் 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தமிழ் அரசியல்வாதிகள் மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்க வேண்டும்.
அவர்கள் அரசியலில் இருந்து பின்வாங்கி, புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை நாடுகளான மொண்டினீக்ரோ, தெற்கு சூடான், கொசோவோ, கிழக்கு திமோர் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க புதிய தலைமுறையை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.