மனமும் மருந்தும்
இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை’ என சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்ற புது கிலியை பற்ற வைத்துள்ளார் அமெரிக்க ரூட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் வல்லுனர் ஹெலன் ஃபிஷர்!
ஏற்கனவே மன அழுத்தம்… இதில் ரொமான்ஸும் இல்லை என்றால்..? காதல் இல்லா உலகம் என்னவாகும்? பாலியல் பிறழ்ச்சி நிபுணர்
டாக்டர் கார்த்திக் குணசேகரன் இதைப் பற்றி விளக்குகிறார்…
“நரம்பியல் மின்கடத்தியாக செயல்படும் செரட்டோனின் மற்றும் டோபோமைன் வேதிப்பொருட்கள் மூளையில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு சிக்னல்களை எடுத்துச் செல்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் நம் உடலில் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் ஏற்படும். காதல் உணர்ச்சி ஏற்படுவதில் தொடங்கி, பாலியல் ஆசை மற்றும் பாலியல் செயல்பாட்டைத் தூண்டுவதில் பெரும் பங்கு இந்த செரட்டோனின் மற்றும் டோபோமைனுக்கு உண்டு.
மனச்சோர்வு, கவலை (Anxiety) மற்றும் தூக்கமின்மை போன்ற மனநல சிகிச்சைகளில் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு எதிரான மருந்தாக
SSRI (Selective Serotonin Reuptake Inhibitors) பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாலியல் ஆசை மற்றும் செயல்பாட்டைக் குறைப்பதாக நோயாளிகளின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக SSRI மருந்துகள் மனிதனின் மனநிலை ஊக்கியாக செயல்படும்
டோபோமைன், செரட்டோனின் சுரப்பை தடை செய்வதால், தொடர்ந்து இவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அடிப்படை பால் ஈர்ப்பு உணர்வுகூட குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மனித மூளையில் காதல் சம்பந்தப்பட்ட பாலுணர்வு, பிணைப்பு மற்றும் காதல் என மூன்று வெவ்வேறான – ஆனால், ஒன்றோடொன்று பிணைந்த அமைப்புகள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளுக்கு டோபோமைன் இன்றியமையாதது. செக்ஸின்போது, இருவரிடமும் காதல் பிணைப்பு ஏற்படுவதற்கு மூளையில் ஹார்மோன்களின் கலவை உற்பத்தியாகிறது. தம்பதிகள் ஒருவரையொருவர் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் போதே மூளையில் டோபோமைன் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
பார்வை வழியே பரிமாறப்படும் காதல் நீடித்து, பாலியல் செயல்பாட்டை தொடங்க வேண்டுமானால் இதன் பணி தொடர வேண்டும். இத்தகைய மருந்துகளால் டோபோமைன் உற்பத்தியே தடைபடும்போது, எங்கிருந்து காதல் வரும்? பாலுணர்வு தூண்டப்படும்?
அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு, டோபோமைன், செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கும் அதேவேளையில், பாலுணர்வுத் தூண்டலை பாதிக்காத வகையில் மன அழுத்த மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் இப்போது மருந்து கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. என்று அவை சந்தைக்கு வருகிறதோ, அந்த நாளே காதலுக்கு மகிழ்ச்சி தரும் நாள்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக்!