கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்த ஆலோசனை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனம்

78

 

கனேடிய நகரமொன்றில் , கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்துள்ள வித்தியாசமான ஆலோசனை ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொரன்றோவில் கார் திருடர்கள் திருடவரும்போது, அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டு விடுங்கள் என பொலிசார் ஆலோசனை ஒன்றைக் கூறியுள்ளார்கள்.

அவர்களுக்கு உங்கள் கார்தான் வேண்டும். ஆகவே, அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து கார் சாவியைத் திருட விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேறொன்றும் தேவையில்லை. ஆகவே, நீங்கள் கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டால் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்களைத் தாக்குவதிலிருந்து தப்பலாம் என பொலிசார் ஆலோசனை கூறியுள்ளார்கள்.

ஆனால், பொலிசாரின் இந்த வித்தியாசமான ஆலோசனையை சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக கேலி செய்துவருகிறார்கள்.

திருடர்கள் காரைத் திருடிச்செல்லட்டும், விடுங்கள் என்கிறார்களா பொலிசார் என சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு அதே சமூக ஊடகத்திலேயே பதிலளித்துள்ள பொலிசார், நல்ல நோக்கத்தில்தான் பொலிசாரில் ஒருவர் அவ்வாறு ஆலோசனை கூறினார், ஆனாலும், கார் திருடுவதற்காக வீட்டுக்குள் திருடர்கள் நுழைவதைத் தவிர்க்க வேறு சிறந்த வழிமுறைகளும் உள்ளன.

உங்கள் காரை கேரேஜுக்குள் நிறுத்துவது, கார் நிறுத்துமிடத்தில் விளக்குகள் போட்டு வெளிச்சமாக வைத்திருப்பது, CCTV கமெராக்கள் பொருத்துவது முதலான வழிமுறைகளும் உங்கள் காரை பாதுகாக்க உதவும் என்று கூறியுள்ளார்கள்.

அத்துடன், எங்காவது சுற்றுலா செல்வீர்களானால், அதைக் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதும் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கிறார்கள் பொலிசார்.

SHARE