கால் நூற்றாண்டாகத்தொடரும் யாழ் முஸ்லிகளின் அவலம்

339

யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களாகப் பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் இறுதி இரு வாரங்களுக்குள் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஆணி வேர் பக்க வேரின்றி, ஒட்டு மொத்த வட மாகாண முஸ்லிம்களும் ஆயுததாரிகளால் பிடுங்கி எறியப்பட்டனர்.

வெளியேற்றம்-சாவகச்சேரி 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். இவ்வாறு பலர் அச்சுறுத்தப்பட்ட நிலையில், 800 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சாவகச்சேரி (ஜாவா கச்சேரி என்ற பெயர் தற்போது திரிபடைந்துள்ளது) பகுதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதலாவதாக வெளியேற்றப்பட்டனர். ஒரு வர்த்தகரிடம் ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டே அந்த வெளியேற்றம் இடம்பெற்றது. துரத்தப்பட்ட இம்மக்கள் வவுனியா பகுதியில் தஞ்சமடைந்தனர்.

முல்லைத்தீவு இராணுவத்தினருக்கு தகவல் கொடுப்பதாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீது அபாண்டமாகக் குற்றஞ்சுமத்திய தமிழீழ விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அவர்களைச் சொந்த இடத்திலிருந்து துரத்தி விட்டனர். மறிச்சிக்கட்டி தற்போது வில்பத்து விவகாரத்தால் அதிகம் பேசப்பட்ட மறிச்சிக்கட்டிப் பகுதியை முஸ்லிம்கள் தற்போது ஓரளவு அறிந்து வைத்துள்ளனர். இங்கிருந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். கிளிநொச்சி வடக்கில் மிக சொற்பமான முஸ்லிம்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர். அங்கு 400 பேர் வரை வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆயுத முனையில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி விடுதலைப்புலிகளால் துரத்தப்பட்டனர். மன்னார் தலைமன்னார் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து முழுமையாக 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டனர். இவர்கள் கடல் வழியாகவும் புத்தளம்-மன்னார் வீதியூடாகவும் புத்தளத்தையடைந்தனர்.

சிலர் மதவாச்சியூடாக தென் பகுதிக்கு வந்தனர். யாழ்ப்பாணம் யாழ் மாவட்டத்தில் 1500 வருடங்களுக்கும் மேலாக வரலாற்றைக்கொண்ட முஸ்லிம்கள் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற பலவந்த வெளியேற்றங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. இந்நிலையில், 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி 1000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் யாழ்.முஸ்லிம் பிரதேசத்தைச்சுற்றி வளைத்து, இரண்டரை மணி நேரத்திற்குள் இங்கிருந்து வெளியேற வேண்டுமெனக் கட்டளையிட்டனர். உலகில் எந்தவொரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள். வெளியேற்றப்பட்டோர் தொகை வடக்கில் முஸ்லிம்களின் தனியான கணக்கெடுப்பொன்று இருக்கவில்லை. என்ற போதிலும், 1990 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் காலங்களில் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.

இதன்படி மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 54000 பேரும், யாழ் மாவட்டத்தைச்சேர்ந்த 20000 பேரும், முல்லைத்தீவைச்சேர்ந்த 7000 பேரும், வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த 4000 பேரும் கிளிநொச்சியைச்சேர்ந்த 400 பேரும் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவை அண்ணளவான கணக்கெடுப்பாகும். எனினும், பல குடும்பங்கள் புத்தளம், குருநாகல், கொழும்பு, அநுராதபுரம், நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்குச் சென்று உறவினர்களுடன் இணைந்து கொண்டனர். குறிப்பாக, கண்டி, மாவனெல்லை, மாத்தளை போன்ற பகுதிகளிலும் குடியேறினர். இவ்வாறான இடம்பெயர்வுகள் குறித்து கணக்கெடுப்புகளில் உள்ளீர்க்கப்படவில்லை. இது முஸ்லீம் சமூகத்திலிருக்கும் பாரியதொரு குறைபாடு. ஆவணப்படுத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல், ஆய்வுகளுக்கு ஊக்குவித்தல் இது போன்ற பல சமூகவியல் துறையில் இலங்கை முஸ்லிம்கள் இன்றும் பின்தங்கியே இருக்கின்றார்கள். சுமார் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 27 வருட காலமாக தனது சொந்தப்பூமியை இழந்து தனது தாயகத்திலே அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிலேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்தப்பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன.

சிவில் சமூக அமைப்புகளும் திறனற்ற தலைமை­களும் இலங்கையில் மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்டியங்கும் முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்கள் முஸ்லிம்கள் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறை காட்டாமல் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர். இலங்கையிலிருக்கும் முஸ்லிம் இனவாத, பிரதேசவாத அரசியல் கட்சிகள் யாழ் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையை முதலீடு செய்தும் பிரசாரம் செய்தும், அரசியல் இலாபமீட்டியும் தங்களது வாழ்க்கையையும் தாம் சார்ந்த குடும்பங்களையும் வளம் பெறச்செய்துள்ளனர். மற்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தானும் புலிகளால் விரட்டப்பட்டவன். தானும் சகலதையும் இழந்து அகதியாக வந்தவன் எனக்கூறி முஸ்லிம் இனவாதத்தைத் தூண்டி மக்களின் வாக்குகளைப் பெற்று தம் வாழ்க்கையையும், தாம் சார்ந்த குடும்பத்தினரையும் வளமாக வாழ வைத்துள்ளனர்.

புலிகளால் 24 நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்து வாழ்ந்த அப்பாவி மக்களை இருபத்திரெண்டு வருடங்களின் பின்பு மீள்குடியேற்றம் எனும் பெயரில் அவர்களது உணர்வுகளைத்தூண்டி நீதிமன்றத்திற்கு கல்லெறிய வைத்து, அவர்கள் மத்தியில் வன்முறைக் கலாசாரத்தையும் வளர்த்த கீழ்த்தரமான அரசியல்வாதிகளும் எம்மத்தியில் இருப்பதையிட்டு, முஸ்லிம் சமூகம் வெட்கித்தலை குனிய வேண்டிய சூழ்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது. யுத்தம் முடிவுற்றதன் பின்பு, மீள்குடியேற்ற அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும், இந்த வடமாகாண முஸ்லிம்களைத் தொடர்ந்தும் அகதிகளாகவே வைத்திருந்த பெருமை இந்த முஸ்லிம் அமைச்சரையே சாரும். இது போன்ற இனவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளும், பிரிவினைகளும் நம்மத்தியில் இருக்கும் வரை இந்த வடமாகாண அகதிகளை தொடர்ந்தும் அகதிகளாகவே வைக்க முற்படுவார்கள்.

புலம் பெயர் யாழ் முஸ்லீம் சமூகம்   புலம் பெயர் தேசத்தில் வாழும் இலங்கை யாழ் முஸ்லிம்கள் மத்தியில் திடீரென்று தமது தாயாகச் சொந்தங்கள் பற்றி ஞாபகம் வந்திருக்கிறது. பாசம் வந்திருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகாவது இப்படியான நினைவுகள் அவர்களுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தும், இலங்கையின் வடக்கில் முஸ்லீம்களையும் தமிழர்களையும் இணைக்கும் செயற்பாடுகள் எப்படியிருந்தாலும் இந்த புலம் பெயர் தேசங்களில் வாழும் வடக்கு முஸ்லிகள் மத்தியிலிருக்கும் பிரிவினைச் சண்டை, சச்சரவுகள் நடுத்தெருவில் சந்தி சிரிக்க வைத்திருக்கிறது. இலண்டன் மாற்றும் பெரிஸை மையமாக வைத்து இயங்கும் அமைப்புக்களுக்கிடையிலான சண்டை இவைகளுக்கு மத்தியில் இவர்களிடமிருக்கும் பிரதேசவாதம், இயக்கச்சண்டைகள், இவர்கள் எதைச்சாதிக்கப் போகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE