காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல்

32

 

இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன.

பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ஆம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை. எஞ்சிய பணயக் கைதிகளை உடனடியாக ஒப்படைக்கும்படி இஸ்ரேலும், காஸாவில் இருந்து வெளியேறும்படி ஹமாஸும் வலியுறுத்தியதால் 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தது.

hamas warns time running out new israeli hostage
பிணைக்கைதிகள்எக்ஸ் தளம்

இதையடுத்து, காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிலிருந்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள காணொளியில், இஸ்ரேலிய பிணைக் கைதிகளாகச் சிக்கியிருக்கும் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகிய இருவரையும் சித்ரவதைச் செய்ய முற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

சமூக வலைதளமான டெலிகிராமில் ஹமாஸ் பயன்படுத்தும் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த காணொளியில், ‘நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகைச் செய்யும்’ என்று குறிப்பிட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE