கொல்கத்தாவில் வசித்து வரும் ஷமி (24), ரஞ்சிக் கோப்பையில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.பி.எல். போட்டியின்போது மாடல் அழகியான ஹசின் ஜகானை சந்தித்தார். அதன்பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். பல சர்வதேச விளையாட்டு வீரர்களைப் போன்று ஷமியும் மாடல் அழகியை தனது காதலியாக தேர்வு செய்தார்.
இவர்கள் திருமணம் மொராபாத்தில் நேற்று எளிமையாக நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்திய அணி வீரர்களின் பயணத் திட்டத்தை உறுதி செய்ய முடியாது என்பதால், அவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. வீரர்களுக்கு வசதியான தேதியில் கொல்கத்தா அல்லது டெல்லியில் தனியாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக ஷமியின் தந்தை கூறினார்.
இந்த மாத இறுதியில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை முதல் இங்கிலாந்தில் நீண்ட காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.