M.ஷாமில் முஹம்மட்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வர வேண்டும் என்ற கோரிக்கை இன்று முஸ்லிம் சமூகத்தில் பலமான அரசியல் அலையாக உருவெடுத்துள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம்களும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரவேண்டும் என்று விரும்பும் நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் வெறுமனே ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கோரவில்லை இனவாத , பிரதேசவாத கண்கொண்டு மக்களை பார்க்காத அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும். விட்டுகொடுக்காத தூய்மையான ஒருவரை எதிர்பார்கிறார்கள். குறிப்பாக இன்றைய முஸ்லிம் வாலிபர்கள் இதைதான் கோரி நிற்கின்றார்கள்.
முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான ஜனநாயக பூர்வமான கோரிக்கைதான் . முஸ்லிம்களில் சிலர் குறிப்பிடுவது போன்று முஸ்லிம் முதலமைச்சர் சிந்தனை இனவாத சிந்தனையல்ல. இலங்கையில் இருக்கும் 9 மாகாணங்களில் 7 மாகாணங்களில் பெரும்பான்மையின சிங்கள பிரதிநிதிகள் முதலமைச்சர்களாக உள்ளனர். வடமாகாணத்தில் எதிர்காலத்தில் தமிழ் முதலமைச்சர் வருவதற்கான 100% சாத்தியம் உள்ளது. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை மட்டுமல்ல சட்டரீதியாக ஏற்றுகொள்ளக் கூடிய அபிலாசையும் கூட. ஆனால் முஸ்லிம் சமூகம் இன்றைய வாலிபர்களின் விருப்பத்தை கருத்தில்கொள்ளவேண்டும் வாக்களிக்கப் படும் நபர்கள் தூய்மையான மனிதர்களா ? என்பதை ஆராய்ந்து வாக்குகளை பயன்படுத்தப்பட வேண்டும். எமது வாக்கை பயன்படுத்தி ஒருவரை நாம் தெரிவு செய்யும் போது ‘அமானத்’ என்ற இஸ்லாமிய கோட்பாடு கவனதில் கொள்ளப் படவேண்டும் .
இதை தெரிவித்து கொண்டு. கிழக்கு மாகாண சபை பற்றி விளங்கிக்கொள்வோம், இலங்கையில் மாகாண சபை முறை என்பது 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இந்திய , இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டு மாகாணங்களுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட ஒரு அரசியல் முறையாமும். மாகாண சபை என்பதற்கு சட்ட வரைவிலக்கணம் ஒன்றும் இதுவரை வழங்கப் படவில்லை .
1987 ஆம் ஆண்டு இந்திய , இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கையில் வடக்கு உட்பட 9 மாகாண சபைகள் உருவாகப்பட்டுள்ளன. அவைகளில் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு வருகிறது . இலங்கையின் மாகாணங்களுக்கு இலங்கை சட்டயாப்பின் பிரகாரம் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரை ஜனதிபதியே நியமிக்கிறார் .
மாகாணசபை இன முரண்பாட்டுக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப் பட்டிருந்தாலும் மாகாண நிர்வாகம் இன்னும் முன்மொழியப் பட்டுள்ள அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவில்லை. மாகாண நிர்வாகத்திற்கான முன்மொழியப்பட்டுள்ள அதிகாரங்கள் கிடைக்கும் போது அது ஒரு ஓரளவு சுதந்திரத்துடன் நடவடிக்கைளை முன்னெடுக்க சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளும். இந்த வகையில் இலங்கை முஸ்லிம் அரசியலில் பிரதான பிராந்தியகாக இருக்கும் கிழக்கு மாகாணம் பற்றி விளங்கி கொள்வோம்.
கிழக்கு மாகாணத்தின் மொத்தப்பரப்பானது 390 சதுர கிலோமீற்றர் உள்நாட்டு நீர் நிலைகளும் உள்ளடங்க 9,792 சதுர கிலோமீற்றர்களாகும். இலங்கையின் மொத்தப்பரப்பில் 16% தினை கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணம் மரபு ரீதியாக இலங்கையின் தானியக் களஞ்சியம் என கருதப்பட்டதுடன் புகழ்பெற்ற திருகோணமலை இயற்கைத் துறைமுகம் என்பன இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்தை மிகவும் அழகுப்படுத்துகின்றன. கிழக்கு மாகாணத்தின் தலைநகராக திருகோணமலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.கிழக்கு மாகாணம் மூன்று நிருவாக மாவட்டங்களான அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் 45 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், 1,087 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்குகின்றது. இன்று கிழக்கு மாகாண சபை ஐந்து அமைச்சுக்களையும் பதினெட்டு திணைக்களங்களையும் கொண்டுள்ளது . இதற்கு மேலதிகமாக பிரதம செயலாளரின் கீழ் 16 நிறுவனங்கள் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தித் தொழிற்பாடுகளுடன் இயங்குகின்றன. மாகாண அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், இடைநிறுத்தல்கள்; மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் என்பன மாகாணப் பொதுச்சேவை ஊடாக ஆளுநரினால் நிருவகிக்கப்படுகின்றது.
காணி மற்றும் போலீஸ் அதிகாரம் என்பன கிடைக்கலாம். காணி போலீஸ் அதிகாரம் பற்றி மற்ற மாகாண சிறுபான்மையினரையும் கருத்தில்கொண்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது. ஆனால் கிழக்கில் காணி அதிகாரம் கிடைத்தால் இன்று முஸ்லிம்கள் கிழக்கில் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் கிழக்கு சபையை மேலும் பலமுள்ளதாக மாற்றும்.
மற்ற மாகாண முஸ்லிம்களையும் கருத்தில் கொண்ட அரசியல் அணுகுமுறை கண்டிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடைபிடிக்கப்படவேண்டும். ஏனென்றால் கிழக்கு மாகாணம்தான் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் தலைநகரை போன்று செயல்படவேண்டியுள்ளது. இதை யார் மறுத்தாலும் இதுதான் எதார்த்தமாக நிகழப் போகிறது .
1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடமாகாணமும் , கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக பிரகடனப் படுத்தப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு தற்காலியமானது என்றும் வடக்குடன் நிரந்தரமாக கிழக்கு இணைவது தொடர்பாக கிழக்கில் மக்கள் கருத்து கணிப்பு 31 டிசெம்பர் 1988 க்கு முன்னர் இடம்பெறவேண்டும் என்ற நிபந்தனையுடன் தற்காலிகமாக இணைக்கபட்டது. ஆனால் தேர்தல் மூலம் மக்கள் கருத்து கணிப்பு இடம்பெறவில்லை. வடக்குடன் கிழக்கு இணைந்த நிலையில் முதல் தேர்தல் இடம்பெற்றது.
1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் தடவையாக வடக்கையும் , கிழக்கையும் ஒரு மாகாணமாக கொண்டு தேர்தல் இடம்பெற்றது. குறித்த தேர்தலில் இந்தியாவில் கைப்பாவைகளாக செயல்பட்ட EPRLF மற்றும் ENTLF கட்சிகள் வெற்றி பெற்றன முறையே EPRLF 35 ஆசனங்களையும் ,ENTLF 12 ஆசனங்களையும் கைப்பற்றியது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை கைப்பற்றியது, அன்று ஆட்சியில் இருந்த UNP ஒரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றியது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது தமிழர்களுக்கு நிகரான தொகையில் அன்று இருந்த போதும் வடக்குடன் கிழக்கும் இணைக்கப் பட்டு தேர்தல் இடம்பெற்றதால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பலமற்றதாக ஆனது. இதனால் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம்கள் வடக்கு , கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. கீழ் உள்ள அட்டவனையில் மக்கள் தொகைகளை பார்க்கவும் .
கிழக்கு மாகாணத்தின் 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் பிரகாரம் சமூகங்களில் மக்கள் தொகை
மாவட்ட |
தமிழர் |
முஸ்லிம் |
சிங்களவர் |
பறங்கியர் |
இந்/தமிழர் |
மலே |
ஏனைய |
மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|
அம்பாறை | 111,948 | 268,630 | 228,938 | 929 | 58 | 163 | 53 | 610,719 |
மட்டகளப்பு | 381,841 | 128,964 | 2,397 | 2,412 | 143 | 81 | 19 | 515,857 |
திருகோணமலை | 95,652 | 151,692 | 84,766 | 967 | 490 | 327 | 469 | 334,363 |
மொத்தம் |
589,441 | 549,286 | 316,101 | 4,308 | 691 | 571 | 541 | 1,460,939 |
.
தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாக இணைப்பில் EPRLF , ENTLF யுடன் இணைத்து நிர்வாகத்தை அமைத்தது EPRLF வரதராஜ பெருமாள் முதலமைச்சராக இந்தியாவின் ஆசியுடன் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்த அமுல்படுத்தலை கண்காணிக்க வந்த இந்திய படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர் பிரேமதாச அரசுக்கும் புலிகளுடன் மோதல் ஆரம்பமானது வருடங்கள் ஓடியது வடக்கு , கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டின் கீழ் வந்தது.
1991 ஆம் ஆண்டு இலங்கை மத்திய அரசு வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை கலைப்பதாக அறிவித்தது . 1993 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களுக்கு தேர்தல் இடம்பெற்றது. ஓவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அவை இடம்பெற்றன . ஆனால் வடக்கு கிழக்கு அல்லது (வடகிழக்கு வடக்கும் கிழக்கும் இணைந்த நிலையில் உள்ள மாகாணம்) தொடந்து புலிகளின் கட்டுப் பாட்டு பிரதேசமாக இருந்தமையால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மகிந்த அரசு கிழக்கில் புலிகளை ஒழித்தது. கிழக்கை முழுமையாக விடுவித்தது. இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கை யாப்புக்கு முரணானது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி வடக்கையும் , கிழக்கையும் இரண்டு மாகாணங்களாக பிரித்து வைத்தது.
இதை தொடர்ந்து கிழக்கு மாகாண தேர்தலை நடத்த அரசு தீர்மானித்தது இது தான் வடக்கு கிழக்கு பிரிக்கப் பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் கண்ட முதல் தேர்தல் இந்த தேர்தல் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றது.
வடக்கில் இருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களை கொண்டது. அம்பாறை , திருகோணமலை , மட்டகளப்பு ஆகியவைகளே அவை ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆசனங்கள் வழங்கபடுகிறது இதன்படி அம்பாறைக்கு 14 ஆசனங்களும் திருகோணமலைக்கு 11 ஆசனங்களும் மட்டகளப்புக்கு 10 ஆசனங்களும் மேலதிகமாக 02 போனஸ் ஆசனங்களும் வழங்கபட்டுகிறது மொத்தமாக 37 ஆசனங்க வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தல் மே மாதம் நடத்தப் படும் என்று 2008 ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது.
கிழக்கில் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆளும் தரப்பு கிழக்கில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் திட்டங்களை வகுத்து களம் இறங்கியது. வடக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலை தான் முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்தது .
கிழக்கு மாகாண தேர்தலில் களத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல முயற்சிகளை செய்து கட்சியில் இருந்து பிரிந்தவர்களை கொண்ட பாரிய முஸ்லிம் முன்னணி ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த முயற்சில் அது தோல்வியை சந்தித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னம் அமையப்போகும் முஸ்லிம் முன்னணியின் சின்னம் என்று வலியுறுத்தியமை உடன்பாடு ஏற்படாமைக்கான பிரதான காரணமாக சொல்லப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அதன் பாரிய முஸ்லிம் முன்னனி முயற்சியில் இறுதியில் தோற்று போனது . இதற்கு ஊர்த்துவ சிந்தனைகளும் தனிப்பட் அரசியல் இலாபங்களும் காரணமாக அமைந்தது என்று முஸ்லிம் சமூக ஆர்வலர்களினால் அன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டது .
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -UPFA- பிள்ளையான் தலைமயிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை TMVP இணைத்துகொண்டு தேர்தல் கள வியூகங்களை அமைத்து. அந்த வியூகத்தின் ஒரு கட்ட நகர்வாக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளை குறிவைத்து தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்ட UPFA அதில் வெற்றியும் பெற்றது .
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரான MLAM ஹிஸ்புல்லாஹ் திடீர் என ஆளுதம் தரப்புடன் இணைந்து கொண்டார் என்ற செய்தி வெளியானது . ஆளும் தரப்பில் இணைந்துகொண்ட ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சர் பதவி பெரும்பான்மை பெரும் கட்சிக்கு உண்டு என்று ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவித்திருந்தார் .
அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹகீம் எதையும் கருத்தில் கொள்ளாதது கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் வியூகம் அமைப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கூட்டு இன்றி தனியாக போட்டியிட்டால் இரண்டு ஆசனங்களை கூட அதனால் கைப்பற்றமுடியாது என்று தெரிவித்திருந்தார் .
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி TMVP யின் தலைவரான பிள்ளையானை தமிழர் தரப்பில் பிரதான வேட்பாளராகவும் , முஸ்லிம் தரப்பில் UPFA கட்சின் பிரதான வேட்பாளராக ஹிஸ்புல்லாவையும் நிறுத்தி வெற்றி வாய்ப்பு நோக்கி திட்டங்களை வரைந்து செயல்படுத்தியது .
அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் பாரிய வெற்றியை பெறவேண்டும் முதமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் பல வியூகங்களை அமைக்க முயல்வதாக தெரிவித்தது. இறுதியில் அன்று முன்னாள் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாவை இழந்த நிலையில் 2008 ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹகீம் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் பசீர் சேஹுதாவூத் ஆகியோர் தமது பாராளுமன்ற உறுப்புரிமைகளை அதிரடியாக இராஜினாமா செய்துகொண்டு தாம் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் கிழக்கில் இனவாத , மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாத கருத்துக்கள் மேடைகளில் முழங்கியது இவை இஸ்லாமிய சிந்தனையாளர்களை விசனமடைய செய்திருந்தது.
திட்டமிட்டபடி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றது. நடை பெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது . இதில் 18 ஆசனங்களை நேரடியாகவும் இரண்டு ஆசனங்களை போனஸ் மூலமும் பெற்றுக்கொண்டது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டாக போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 15 ஆசனங்களை கைப்பற்றியது இரண்டு ஆசனங்களை மக்கள் விடுதலை முன்னணியும் , தமிழர் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியும் தலா ஒரு ஆசனங்களை கைப்பற்றி கொண்டன .
2008 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கிழக்கில் பிரதான கட்சிகளில் SLMC ,UNP யுடனும், UPFA MLAM ஹிஸ்புல்லாவையும் , TMVP யையும் , இணைத்து கொண்டு பெற்ற வாக்குகளும் ஆசனங்களும் விபரம்:
அம்பாறை-2008
கட்சிகள் | வாக்குகள் | வீதம் | ஆசனம் |
UPFA | 144,247 | 52.96 | 8 |
UNP | 121,272 | 44.52 | 6 |
திருகோணமலை-2008
கட்சிகள் | வாக்குகள் | வீதம் | ஆசனம் |
UNP | 70,858 | 51.37 | 5 |
UPFA | 59,298 | 42.99 | 4 |
PLF | 4,266 | 3.09 | 1 |
மட்டகளப்பு-2008
கட்சிகள் | வாக்குகள் | வீதம் | ஆசனம் |
UPFA | 105,341 | 58.09 | 6 |
UNP | 58,602 | 32.31 | 4 |
TDNA | 7,714 | 4.25 | 1 |
.
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற 18 ஆசனங்களில் 08 முஸ்லிம் ஆசனங்கள் ஹிஸ்புல்லாவினாலும் 07 தமிழ் ஆசனங்கள் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினாலும் பெறப்பட்டவை.
கட்சியில் முஸ்லிம் உறுப்புரிமை பெரும்பான்மையாக இருந்தபோதும் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற போட்டி ஆரம்பமாகியது ஏற்கனவே பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு முதலமைச்சர் என்ற வாக்குறுதியை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியவில்லை அதற்கு அன்று காரணங்களும் இருந்தது எப்படியானாலும் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற தரப்பாக முஸ்லிம் தரப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள்ளும் , வெளியில் எதிர்கட்சிகள் உள்ளடங்கிய கிழக்கு மாகாண சபையிலும் 17 முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தது, அப்படி இருந்தும் கூட முஸ்லிம் தரப்புக்கு முதலமைச்சர் பொறுப்பு வழக்கப்படாமை MLAM ஹிஸ்புல்லாவுக்கு வெற்றிபெற்றும் கிடைத்த அதிர்ச்சி தோல்விமட்டுமல்ல முழு முஸ்லிம் தரப்புக்கும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது .
இருந்தும் அன்று இருந்து சூழ்நிலையில் அப்படி ஜனாதிபதி நடந்து கொண்டமை முஸ்லிம் தரப்பால் ஓரளவு சகித்துக்கொள்ளப் பட்டது .
முதல் முதலமைச்சர் கனவில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் நியாயத்துக்கு புறம்பாக தோற்று போயின, தோற்று போனது கிழக்கு மாகாண சபையில் மொத்தமாக 37 உறுப்பினர்களில் 17 முஸ்லிம் பிரதிநிதிகளில் ஆளும் தரப்பில் 08 பேரும் எதிர் தரப்பில் 09 பேருமாக சபையில் பெரும்பான்மை சமூகமாக நின்றனர் , சபையில் இரண்டாம் நிலையில் 12 தமிழ் பிரதிநிதிககள் தெரிவாயினர், சபையில் மூன்றாம் நிலையில் 08 சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
கட்சிகளில் முஸ்லிம் , தமிழ் ,சிங்கள சமூகங்கள் பெற்ற பிரதிநிதித்துவம் கீழ் அட்டவணைகளில் பார்க்கவும்.
UPFA / TMVP கூட்டாக இணைந்து பெற்ற ஆசனங்கள்: சமூகரீதியாக
அம்பாறை | முஸ்லிம்கள் -03 | தமிழர் -03 | சிங்களவர்-02 |
திருகோணமலை | முஸ்லிம்கள்-02 | தமிழர் -00 | சிங்களவர்-03 |
மட்டகளப்பு | முஸ்லிம்கள்-03 | தமிழர் -04 | சிங்களவர்-00 |
மொத்தம் | முஸ்லிம் ஆசனங்கள்-08 | தமிழர் ஆசனங்கள்-07 | சிங்களவர் ஆசனங்கள்-05 |
SLMC / UNP /JVP/TDNAகூட்டாக இணைந்து பெற்ற ஆசனங்கள்: சமூகரீதியாக
அம்பாறை | முஸ்லிம்கள் -04 | தமிழர் -00 | சிங்களவர்-02 |
திருகோணமலை | முஸ்லிம்கள்-03 | தமிழர் -2 | சிங்களவர்-01 |
மட்டகளப்பு | முஸ்லிம்கள்-02 | தமிழர் -03 | சிங்களவர்-00 |
மொத்தம் | முஸ்லிம்கள் ஆசனங்கள்-09 | தமிழர் ஆசனங்கள்-05 | சிங்களவர் ஆசனங்கள்-04 |
.
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிளவு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை சமூகமாக இருந்தும் முதலமைச்சர் கதிரையை கைப்பற்ற முடியவில்லை. வடக்கு கிழக்கு இணைத்திருந்த காலத்தில் 1988இல் இடம்பெற்ற முதல் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒற்றுமையாக இருந்து 17 ஆசனங்களை கைப்பற்றியது. அனால் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்தமையால் 17 என்பது சிறு தொகையாக இருந்தது. ஆனால் கிழக்கு வடக்கில் இருந்து சுதந்திரம் பெற்று அதன் முதல் தேர்தலில் 2008 இல் இடம்பெற்றபோது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையாக இடம்பெற்றபோதும் ஆளும் தரப்பு ,எதிர் தரப்பு என்ற பிளவு முஸ்லிம் முதலமைச்சர் வருவதை தடுத்து விட்டது.
ஆனால் இன்று பிரதான எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஆளும் தரப்பில் இருப்பதால் ஆளும் தரப்பில் முஸ்லிம் சமூக அரசியல் பிரதிநிதிகளின் உறுப்புரிமை பலம் பெற்றதாக அமையும் என்று எதிர்பார்கலாம். அதேவேளை தமிழ் சமூகத்தின் தரப்பில் கடந்த கிழக்கு மாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கும் இதனால் கடந்த முறை UNP க்கு வாக்களித்த பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம் திரும்புவார்கள் . கடந்த தேர்தலில் 60 வீதமான அதாவது 10 லட்சம் வரையிலான வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி இருந்தனர். ஆனாலும் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வூட்டி பலரையும் வாக்களிக்க தூண்டும் உச்சகட்ட முயற்சியில் இறங்கும். அதன் மூலம் கடந்த முறையைவிடவும் அதிகமான தமிழ் மக்கள் வாக்குகளை பயன்படுத்தலாம். அதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமயிலான TMVP கட்சி கணிசமான மக்களை தன்பக்கம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை கட்சிகள் பெரும் உறுபினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் .
தமிழ் சமூகத்தின் அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொகை வலுவான ஒன்றாக உருவெடுக்க முடியும். இன்று கிழக்கு மாகாண மக்கள் தொகையில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்து பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தொடக்கம் பலரும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இந்த நிலையல் 30 ஆண்டுகளின் பின்னர் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்று அவை வெளியிடுவதற்காக தயாரிக்கப் பட்டு வருகிறது .
கடந்த கால தரவுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த முறை முஸ்லிம்களின் முதலமைச்சர் கனவு நிஜமாகும் வாய்ப்புகள்தான் அதிகம் காணப்படுகிறது . ஆனால் எந்த முஸ்லிம் கட்சி கிழக்கின் முதலமைச்சர் பதவியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றும் என்பதில்தான் தற்போது போட்டி ஆரம்பமாகியுள்ளது. அதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனால் பிளவு படும் நிலையில் உள்ளது கடந்த கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாஹ் பிரிந்து சென்றார் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் இருந்தது . தற்போது கல்முனை மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கட்சின் தலைவருக்கு சவால் விடுதுள்ளார் .
அதேவேளை சக்தி வாய்ந்த முஸ்லிம் அமைச்சர் என்று தெரிவிக்கபடும் ரிஷாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும், அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமயிலான தேசிய காங்கிரசும் கிழக்கு களத்தில் முஸ்லிம் பிரதான வேட்பாளர் தொடர்பாக பேசிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. வடக்கு , கிழக்கை நிபந்தனையுடன் இணைக்க ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேலும் உள்ளக உடைவை தவிர்க்க தன்னை அவசரமாக நேர்த்தியாக ஒழுங்கு படுத்தி களத்தில் இறங்கவேண்டிய தேவையுள்ளது. வடக்கு , கிழக்கு இணைப்பை எதிர்க்கும் தேசிய காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஒன்றாக களத்தில் இறங்குவது மிகவும் பலமான பலப்பரிச்சை ஒன்றை நோக்கி முஸ்லிம் கட்சிகளை நகர்த்தி செல்கிறது.
தேசிய அரசியலில் முஸ்லிம் அரசியல் கட்சி வேருபாடுகள பல பாதகமான. சில சாதகமான விளைவுகளை தந்து வருகிறது . மூன்று முஸ்லிம் கட்சி என்பதால் மூன்று அமைச்சர்கள் என்பது சாதகமாக நோக்கப் பட்டாலும் , கிழக்கு மாகாணத்தில் கட்சி வேறுபட்டு முஸ்லிம் அரசியலில் பாதகமான விளைவுகளைத்தான் கொண்டுவரும் என்பது வெளிப்படையான விடையம். இந்த வகையில்கிழக்கு மாகாண சபை அரசியலை முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு அரசியல் வியூகம் வகுப்பது தவிர்க்க முடியாத தேவையாகும் .
அதேவேளை கிழக்கில் இஸ்லாமிய விரோத பிரதேசவாத தீயை பற்றவைக்கும் விதமாக கருத்துக்களை ஒரு அரசியல்வாதி முன்வைத்துள்ளார் என்ற குற்றசாட்டுக்கு ஒருவர் இலக்காகியுள்ளார். அமைச்சர் ஹக்கீமின் கிழக்கு வரவை அவர் விரும்பாவிட்டால் அதை எதிர்க்க வேறு வழிமுறைகளை கையாளலாம். தேர்தல் காலங்களில் ஊர்த்துவம் , பிரதேசவாதம் என்பன முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தூண்டப் பட்டு முஸ்லிம் சகோதரத்துவ விரோத வழிமுறைகள் கையாளப்படுவது இன்று அரசியல் தளத்தில் அதிகம் இடம்பெற்றுவருகிறமை சமூக நோய்களுக்கு உட்படாத இஸ்லாமிய செயல்பாட்டாளர்களை விசனம் அடையச்செய்து வருகிறது .
கடந்த ஆண்டுகளில் மிக வேகமாக இஸ்லாமிய அரசியல் தத்துவத்தை விசுவாசிக்கிற சுமூகமான சகவாழ்வை உயர்ந்த இலச்சியதுடன் நேசிக்கும், வாலிபர் கூட்டம் அதிகரித்து செல்கின்றமை எதிர்காலத்தில் சமூகத்தையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் விற்று அரசியல் செய்கிற சமூக வியாபாரிகளான மோசமான அரசியல்வாதிகள் விரைவாக அரசியலில் இருந்து தூக்கி வீசப்படும் நிலை உருவாக்கும் என்று எதிர்பார்ப்பது நேர்த்தியான பார்வைதான். முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் மிகப் பிரதான இயக்க சக்தியாக இஸ்லாம் உள்ளது என்பதை அவர்கள் புறக்கணித்து செயல்படக்கூடாது .
இன்று இருக்கும் எந்த அரசியல்வாதியும் இஸ்லாம் எதிர்பார்கின்ற இலட்சணங்களை கொண்டிருக்கவில்லை என்ற மனப் பதிவு முஸ்லிம் சமூகத்திடம் பலமாக உள்ளது. இன்று முஸ்லிம் சமூகம் காணும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இப்படிதான் இருக்கிறார்கள் முஸ்லிம்களை ஒருவருக்கு ஒருவர் மோதத் தூண்டும் அரசியாவாதிகள் ,சில வேலைகளில் தேவையற்ற முறையில் இனவாதம் பேசும் அரசியல்வாதிகள் , அரசியல் இலாபம் அடைய முஸ்லிம் சமூகத்திற்குல் குழப்பத்தையும், வன்முறையையும், ஊர்துவத்தையும், பிரதேசவாதத்தையும் தூண்டிவிடும் அரசியல்வாதிகள் மற்ற சகோதரனின் இரத்தத்தை ஓட்டும் அரசியல்வாதிகள், எதிர்த்தரப்பின் சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கும் மற்றும் அதற்கு தூண்டும் அரசியல்வாதிகள் , மேடைகளில் தமது தலைவர்களை அளவுக்கு அதிகமாக துதிபாடி மற்றவரை மிக கேவலமாக வர்ணிக்கும் அரசியல்வாதிகள், ஒன்றுமை என்ற பெயரில் இஸ்லாமிய கோட்பாடுகளையும் அடையாளங்களையும் விற்பனை செய்யும் அரசியல்வாதிகள். இஸ்லாமிய அடிப்படையான கடமைகளைக் கூட புறக்கணித்து செயல்படும் அரசியல்வாதிகள், சமூகத்தின் பொது நலனை புறம்தள்ளி தான் , தனது இலாபம் என்று இயங்கும் அரசியல்வாதிகள், பெரும்பாவங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள், தனது கட்சிக்காரன் தனது அடியாள் மற்றவருக்கு தீங்கு இளைத்தும் அவனை பாதுகாக்கும் அரசியல்வாதிகள் , மற்றவரின் தேவைகளையும் கருத்துகளையும் மதிக்காத அரசியல்வாதிகள் , பாவங்களுக்கு லைசன்ஸ் கொடுக்கும் அரசியல்வாதிகள், இவர்கள்தான் எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் இவர்களில் ஒருவர்தான் முதலமைச்சராகவும் வரபோகிறார்.
இன்று இஸ்லாமிய விரோத பிரதேசவாத கருத்துக்கள் பலர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிழக்கில் தூய இஸ்லாமிய சிந்தனையின் தாக்கம் அதிகரித்து செல்வதால் பிரதேசவாதம் பேசி முஸ்லிம் சகோதரத்துவ விரோத கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது சொந்த கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட வெறுப்பு கொள்ளும் நிலை உருவாகிவருகிறது என்று எனது நண்பரான தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். அதில் நிறைவான உண்மைகள் உண்டு .
முஸ்லிம் சமூகம் உயர்வான தூய்மையான தெளிவான இலட்சணங்களை கொண்ட சமூகமாக இருக்கவேண்டும் என்று இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகள் போதிக்கிறது. அதற்கு மாற்றமாக பாவங்களுக்கு நாம் தொடர்ந்தும் வாக்குகளை வழங்க முடியாது விரைவில் மாற்றங்கள் வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகள் எமது சமூகத்தில் இருக்கிறது அவைகள் தேவையான தளத்தில் முழுமையாக தொழில்பட்டால் விரிவான மாற்றத்தை காணமுடியும் .எமது இஸ்லாமிய அமைப்புகள் நிறுவங்கள் இவைகள் இலங்கை அரசியல் தளத்தில் தேர்தலில் குதிக்கா விட்டாலும் ஒரு கூட்டமைப்பாக செயல்பட முன்வந்தால் அவை முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் ஆனால் அரசியலில் தெளிவான அறிவு , பார்வை இன்றி இஸ்லாமிய நிறுவங்கள் இருந்தால் அவைகளை அரசியல்வாதிகள் தமது தேவைக்கு பயன்படுத்தி விட்டு போகும் நிலைதான் அதிகரிக்கும் – வரபோக்கும் முதலமைச்சர் தூய்மையான முதலமைச்சராக வர இந்த முறை தொடங்கி முயற்சிகளை செய்வோம் .