குருநகர் யுவதியின் மரணம் குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படுவதாக ஆயர் இல்லம் அறிக்கை!

615

 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி கொன்ஷொலிட்டா என்ற அந்த 22 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் உரிய சாட்சியங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர்மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயினும் இந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் இரு அருட் தந்தையர்கள் மீது அவருடைய பெற்றோர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பெற்றோர் உறவினர் உள்ளிட்ட குழுவொன்று புதன்கிழமை யாழ் ஆயர் இல்லத்தின் எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கிறது. இந்தப் பெண்ணின் மரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்திய யாழ் மாவட்ட பதில் சட்டவைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் அந்தப்பெண் மீது வன்முறைகளோ, பாலியல் வன்முறையோ பிரயோகிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அந்த சடலத்தில் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தி வருவதாக ஆயர் இல்லம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அருட் தந்தையர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள போதிலும், எவரும் ஆயர் இல்லத்திற்கோ அல்லது பங்குத் தந்தையிடமோ இதுகுறித்து இதுவரை முறையிடவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயர் இல்லம் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறாதவாறு வைக்கப்பட்டிருந்தார் என்று தெரியவந்திருப்பதாகவும், இந்நிலையில் இரண்டு அருட்தந்தையர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மைத்தன்மை மற்றும் பாரதூரத்தன்மை என்பவற்றை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவதற்குத் தம்முடன் தொடர்பு கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆயர் இல்லத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிஸார் நடத்தி வரும் விசாரணைகளுக்கு ஆயர் இல்லம் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், தவறுகள் மறைப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடும் என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர் இல்லத்தின் அறிக்கையில் இந்தச் சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளால் குழப்படையாமல் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE