குர்திஷ் படைகளுக்கு அமெரிக்கா நேரடி ஆயுத சப்ளை

439
ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் தன்னாட்சி பெற்ற குர்தீஷ்தான் பகுதியிலும் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றினர். அத்துடன் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதற்காக குர்திஷ் படைகள் மீது சமீபத்தில் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படையினர் போராளிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். அதேசமயம் முன்னேறிச் சென்ற குர்திஷ் படையினரும், போராளிகளிடம் இழந்த 2 நகரங்களை மீட்டனர்.

இந்த நிலையில் போராளிகளை ஆக்ரோஷமாக தாக்கும் வகையில் குர்திஷ் படையினருக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதங்களை வழங்க தொடங்கியுள்ளது. இத்தகவலை உறுதி செய்துள்ள அமெர்க்க மூத்த அதிகாரிகள், எந்த நிறுவனம் எந்த வகையான ஆயுதங்களை அனுப்பியுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.

இதற்கு முன் ஈராக் அரசுக்கு மட்டுமே ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. அங்கிருந்து குர்திஷ் படைகளுக்கு ஆயுதங்கள் செல்லவும் வசதி செய்து கொடுத்தது. தற்போது 2 நகரங்களை குர்திஷ் படைகள் மீட்டதையடுத்து பாதுகாப்பு பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ளும் வகையில் நேரடியாக ஆயுதங்கள் வழங்குகிறது.

இதற்கிடையே, அரசியல் மற்றும் ராணுவ எழுச்சிக்கு மத்தியில் ஈராக் மக்கள் அமைதி காக்கும்படி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி வலியுறுத்தினார்.

SHARE