றக்பி வீரர் வஸீம் விவகாரம் நடந்து, நடக்கப்போவது என்ன??
குற்றம் என்றும் மறைக்கப் பட முடியாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும். இது தான் குற்றவியலைப் பொறுத்தவரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்போது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் குறித்த சம்பவமும் வந்திருக்கின்றது.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த சம்பவத்தை நாம் நோக்கலாம். அது கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி. 119 பொலிஸ் அவசர தொலைபேசி மத்திய நிலையம் ஊடாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் ஒன்று பரிமாறப்படுகின்றது.
ஆம், நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலிகா மைதானத்துக்கு அருகே வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப் பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளதாகவே அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் தான் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்ற பொலிஸ் குழு அங்கு ஒரு வாகனம் எரிந்து தணல் பறக்கும் நிலையில் இருந்ததை அவதானித்துள்ளதுடன் உள்ளே யாரோ ஒருவர் தீயில் கருகியிருந்ததை அவதானித்துள்ளனர்.
இந் நிலையில் தான் பொலிஸாரின் கண்களுக்கு அந்த இடத்தில் கீழே விழுந்திருந்த டப்ளியூ.பி. கே.கிவ். 6543 என்ற இலக்கத் தகடு தட்டுப்பட்டுள்ளது. உடனடியாக அந்த இலக்கத் தகட்டை மையப்படுத்தி விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் அதிகாலை (2012.05.17) 2.00 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முருகன் பிளேஸ் வீதியில் இருந்த அந்த வீட்டுக் கதவைத் தட்டி குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனம் பற்றி விசாரித்துள்ளனர்.
அதன்போது தான், அந்த கார் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனுக்கு சொந்தமானது என தெரியவந்தது. ஆம், பொலிஸார் தட்டியது வஸீம் தாஜுதீனின் வீட்டுக்கதவைத் தான்.
வஸீம் தாஜுதீன் கொள்ளுப்பிட்டி சென். தோமஸ் கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்தவர். தாய் தந்தையுடன் ஒரு சகோதரர் ஒரு சகோதரி கொண்ட சிறிய குடும்பத்தின் நேசத்துக்குரியவர். ஆரம்ப கல்வியின் பின்னர் கல்கிஸை சென்.
தோமஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தவர். பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் சென்.தோமஸ் கல்லூரியின் றக்பி அணியின் உப தலைவராக 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடியவர்.
அத்துடன் 19 வயதுக்கு கீழ்ப் பட்டோருக்கான பாடசாலை அணியில் அதே ஆண்டு விளையாடியவர். இவற்றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர்.
அத்துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்காகவும் விளையாடியவர். இந் நிலையிலேயே அவர் 2008 ஆம் ஆண்டில் ‘ஜனரஞ்சகமான றக்பி வீரர்’ என்ற விருதினை வெற்றிகொண்டிருந்தார்.
இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலைவராக 2009 ஆம் ஆண்டு தெரிவானார். அதன் பின்னர் தாஜுதீன் காயத்துக்கு உள்ளாகினார். இதனால் அவரின் காலில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்துக்கு வந்தார். இந் நிலையில்தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலையில் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந் நிலையில் அப்போது முதல் வஸீமின் மரணத்தை பல தரப்பினரும் மர்மம் நிறைந்ததாகவே பார்த்தனர். எவரும் அதனை சாதாரண விபத்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை எனலாம். அதற்கு பல காரணங்கள் இருந்தன. எனினும் சில பொலிஸார் அதனை விபத்தாக வஸீமின் குடும்பத்தாரிடம் சித்திரிக்க முயற்சித்துள்ளமை தொடர்பிலும் தகவல் இல்லாமல் இல்லை.
எனினும் பொலிஸார் இந்த சம்பவத்தின் பின்னர் புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிவானுக்கு தாக்கல்செய்துள்ள பீ அறிக்கைகளில் இதனை விபத்து என குறிப்பிடவில்லை. மாற்றமாக வஸீமின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகிக்கத் தக்க பல்வேறு விடயங்களை அந்த பீ அறிக்கைகள் ஊடாக பொலிஸார் அப்போதே வெளிப்படுத்தியுள்ளதை ‘கேசரி’ வெளிப்படுத்துகின்றது.
முதலாவது பீ அறிக்கையானது சடலம் மீட்கப்பட்ட 2012.05.17 அன்று பிரேத பரிசோதனை செய்வதற்கான கோரிக்கையை முன் வைத்து சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் விபரமான பீ அறிக்கையானது கடந்த 2012.05.21 அன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஆவது பீ அறிக்கையில் சுமார் 7 வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த பீ அறிக்கையானது வஸீமின் சடலத்தை அவரது சகோதரியான விமானப்படையின் மருத்துவர் ஆய்ஷா தாஜுதீன் அடையாளம் காட்ட குறிப்பிட்டிருந்த, 2009.06.21 ஆம் திகதி கொழும்பு நவலோக வைத்தியசாலையில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சையின் போது அவரது காலில் வைக்கப்பட்டு தைக்கப்பட்டிருந்த உலோகத் துண்டு தொடர்பிலான உறுதியினை பெற்றுக் கொள்ளும் விதமாக குறித்த தனியார் வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரும் நோக்குடனேயே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது வஸீம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் ஊகங்களை அன்றே வெளிப்படுத்தத் தக்க பல விடயங்களை பொலிஸார் அன்றைய பீ அறிக்கையிலேயே சாட்சியங்களின் வாக்குமூலம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் பீ அறிக்கை படி, வஸீம் தாஜுதீனின் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் வஸீம் தாஜுதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி வெள்ளவத்தை முருகன் வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து மொஹம்மட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பருடன் பிறிதொரு நண்பரை சந்திக்க தனது கே.கிவ்.6543 என்ற காரில் சென்றுள்ளார்.
போகும் போது தான் திரும்பி வர நள்ளிரவு 12.30 மணியை தாண்டும் என கூறியே வஸீம் சென்றுள்ளதாக அந்த பீ அறிக்கையில் தகவல் உள்ளது.
இந் நிலையில் தான் எரிந்துகொண்டிருந்த காருக்குள் இருந்து 2012 ஆம் ஆண்டு மே, 17 அதிகாலை வேளையில் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார். தாஜுதீன் பயணித்த வாகனம் சாலிகா மைதானத்துக்கு அருகில் உள்ள மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் தீயில் எரிந்துகொண்டிருந்தது.
அந்த வாகனத்தின் உள்ளேயே வஸீம் தாஜுதீனின் சடலம் இருந்தது. இந் நிலையில் மேலோட்டமாக பார்க்கும் எவரும் அதனை விபத்து என்றே அனுமானித்தனர்.
எனினும் பொலிஸார் அப்போது மன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கைகளில் சந்தேகிக்கத் தக்க சில விடயங்கள் தொடர்பில் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஊடாக தெரியப்படுத்திய போதும் அது தொடர்பில் ஆழமான விசரணைகளை நடத்தவில்லை என்றே தோன்றுகின்றது.
ஏனெனில் சம்பவத்தை முதலில் கண்ணுற்றுள்ள அல்லது சம்பவ இடத்துக்கு முதலில் வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில்,
தான் உறங்கிக்கொண்டிருந்த போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்த போது கார் ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும், உடனே தான் அவ்விடத்துக்கு வந்த போது எரிந்து கொண்டிருந்த காருக்கு மேலதிகமாக அப்பிரதேசத்தில் மேலும் இரு கார்கள் நின்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிந்துகொன்டிருந்த கார் அருகே தான் செல்ல முற்பட்ட வேளை அங்கு நின்றிருந்த ஏனைய கார்களில் இருந்தவர்கள் தன்னை அவ்விடத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியதாகவும் அதனையடுத்தே தான் 119 இலக்கத்தை அழைத்து விடயத்தை தெரிவித்ததாகவும் பொலிஸாருடன் கதைத்துவிட்டு பார்க்கும் போது அவ்விரண்டு கார்களையும் அங்கு காணமுடியவில்லை எனவும் அந் நபர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரும் சந்தேகிக்கத் தக்க விடயம் ஒன்றினை உள்ளடக்கி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். குறித்த இரவு தனது வீட்டின் அறை ஒன்றில் வேலையில் இருந்த போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வெளியே வந்து பார்த்த போது கார் ஒன்று எரிந்துகொண்டிருந்ததாகவும் தான் அங்கு ஓடிச் சென்றதாகவும் குறிப்பிடும் அந்த நபர், அவ்விடத்துக்கு தான் செல்லும் போது பாதையில் இருவர் நின்றிருந்ததாகவும்,
நீங்களா இந்த காரில் வந்தீர்கள் என தான் அவர்களிடம் வினவியதாகவும் அதனையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு அப்போதே குறித்த நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இவ்விரண்டு வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்க்கும் போது வஸீம் தாஜுதீன் காருக்குள் எரிந்துகொன்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான கார், நபர்களின் நடமாட்டம் அவ்விடத்தில் இருந்துள்ளது. அது எத்தனை பேர், எந்த எந்த கார் என்பது தெரியாது. எனினும் அவற்றை உறுதியான ஆழமான விசாரணையொன்றின் ஊடாக வெளிப்படுத்த கண்டிப்பாக முடியும்.
இந் நிலையில் வஸீமின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாத விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே அவருடன் இறுதியாக சென்ற நண்பர் மொஹம்மட். ஏனெனில் இறுதியாக அவருடனேயே வஸீம் வீட்டிலிருந்து வெளியேறியதாக வஸீம் குடும்பத்தாரின் பொலிஸ் வாக்குமூலங்களில் உள்ளது.
இந் நிலையில் வஸீமின் சடலம் மீட்கப்பட்ட போது நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மொஹம்மட் வழங்கியுள்ள வாக்குமூலம் வஸீமின் கார் குறித்த நேரத்துக்குள் பயணித்த பயணப் பாதைகள் தொடர்பிலான தகவல்களை ஊகிக்க முடியுமானதாக உள்ளது.
மொஹம்மடின் வாக்குமூலத்தின் படி, வஸீம் வீட்டுக்கு சென்றுள்ள மொஹம்மட், அங்கிருந்து வஸீமின் வாகனத்தில் வஸீமுடன் நுகேகொட, விஜேராம வீதியில் உள்ள மதனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு சென்றுள்ளனர். மதனும் வஸீம், மொஹம்மட்டின் நண்பராவார்.
இந் நிலையில் மதனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேரடியாக அங்கிருந்து மதனின் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது மதனின் காதலி அண்டர்ஸன் பிரதேச தொடர்மாடியொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் மதனின் காதலி வீட்டுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கு வைத்து மது அருந்தியுள்ளனர். இதனை மதனின் காதலி வீட்டாரும் , மதன், மொஹம்மட் ஆகியோரும் தமது வாக்கு மூலங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இரு போத்தல்கள் மதுபானத்தை அவர்கள் அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரவு 11.00 மணியைத் தாண்டிய நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.
முதலில் மதனை நுகேகொடை, விஜேராம பகுதியில் உள்ள அவனது வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ள வஸீம் பின்னர் கிருலப்பனைக்கு வந்து அங்கு தனது நண்பன் மொஹம்மட்டையும் இறக்கி விட்டுள்ளார்.
அதன் பின்னரேயே அவர் மொஹம்மட்டிடம் தான் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதன் பின்னரேயே நாரஹேன்பிட்டி பிரதேசத்தின் சாலிகா மைதானத்துக்கு அருகே மதிலுடன் மோதி எரிந்துகொன்டிருந்தாக கூறப்படும் காரில் இருந்து தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்கூறப்பட்ட சம்பவங்கள் மொஹம்மட், மதன் மற்றும் மதனின் காதலி வீட்டாரின் பொலிஸ் வாக்கு மூலங்களில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
கிருலப்பனையில் தனது நண்பனை இறுதியாக இறக்கி விட்ட வஸீம், தனது வீடு நோக்கி செல்வதாக கூறியே சென்றுள்ளார். அப்படியானால் வெள்ளவத்தை, முருகன் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு செல்ல வஸீம் நாரஹேன்பிட்டி பகுதிக்கு செல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படியானால் வஸீமின் கார் எப்படி நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலுடன் மோதியது? அப்படியானால் யாராவது வஸீமை கடத்தினரா போன்ற கேள்விகள் எழுவது யதார்த்தமானதே
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை 3ஆம் இலக்க நீதிவனுக்கு 2012.05.17 அன்று பிரேத பரிசோதனை செய்வதற்கான கோரிக்கையை முன் வைத்து பொலிஸாரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அப்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றது.
திறந்த தீர்ப்பொன்றை அதில் குறிப்பிட்டிருந்த சட்ட வைத்திய அதிகாரி, அவரது நுரையீரலுக்குள் காபன் மொனோட்சைட் வாயு நிரம்பி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கும் மேலதிக பரிசோதனைகளுக்காக பாகங்களை அனுப்புமாறு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களான நிலையில் கடந்த பெப்ரவரி மாதமே பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த அறிக்கையில் தன்னால் அது தொடர்பில் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியவில்லை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இவையனைத்தும் வஸீமின் மர்ம மரணம் குறித்து ஏதோ ஒன்றை துலக்க வேண்டி நிற்பதாகவே கருதச் செய்தது.இதனையடுத்தே இது தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கைமாறியது.
குறிப்பாக சாதாரணமாக இறந்த நபர் ஒருவரின் விடயத்தில் அவரது சடலத்தை கையளிப்பது தொடர்பில் பின்பற்றப்படும் நடை முறைகள் கூட றக்பி வீரர் விடயத்தில் சற்று கடினமாகவே பின்பற்றப்பட்டுள்ளது.
அவரது சடலத்தை கையளிக்க விமானப்படை மருத்துவரான சகோதரியிடம் இரு சத்தியக் கடதாசிகள் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காட்ட சென்றபோது பல்வேறு அழுத்தங்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டதாக வஸீமுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவற்றுக்கு மேலாகத் தான் வஸீம் தாஜுதீனின் பணப்பை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் இருந்து நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக வஸீம் குடும்பத்தவர் ஒருவரின் தகவல்களின் பிரகாரம், வஸீமின் சகோதரி பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக வஸீம் தனது பணப்பை இன்றி எங்கும் செல்வதில்லை.
அந்த பணப் பையை அவர் ஒரு போதும் காற்சட்டை பைக்குள் இடமாட்டார் என்பதும் அது அவரது கையில் அல்லது காரிலேயே இருக்கும் என்பதும் மேலதிக தகவல். அப்படியானல் வஸீமின் கார் நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலில் மோதி எரிந்துகொண்டிருக்க பணப்பை மட்டும் கிருலப்பனையில் கைவிடப்பட்டிருந்தது.
அப்படியானால் தனது நண்பனான மொஹம்மட்டை இறக்கி விட்ட பின்னர் வஸீம் தாஜுதீன் யாராலாவது கடத்தப்பட்டாரா?, அல்லது வேறு ஏதும் ஆபத்துக்கு முகம் கொடுத்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் அவசியமாகும்.
இந் நிலையிலேயே வஸீம் தாஜுதீனின் சடலம் தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது முதல் வஸீம் தாஜுதீனின் மரணம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வந்ததுடன் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டார் என பலமான வாதங்கள் அல்லது சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், கொலைக்கான காரணங்களாக இரு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதில் முதலாவது காரணம் காதல் விவகாரம் குறித்ததானது. தற்போது பரவலாக வெளிப்பட்டுள்ள வாய்மொழி ஆதாரங்களின் பிரகாரம்,
பிரபலமான அரசியல் புள்ளியின் மகன் ஒருவர் காதலித்ததாக கூறப்படும் யுவதியை (சினிமா பிரபலம் ஒருவரின் வாரிசு) வஸீம் தாஜுதீன் காதலிப்பதாக நினைத்து அல்லது சந்தேகம் கொண்டு இந்தக் கொலை புரியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கதையானது தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள குறித்த யுவதியே கூறியதாக பிரபலமான இணையத்தளமொன்று முதலில் தகவல் வெளியிட்டிருந்தது.
தாஜுதீனை தனது சகாக்களின் உதவியுடன் (சாரதி, பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் )கொலை செய்து காரில் போட்டு எரித்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணையை மூடிமறைக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கூறியிருந்ததாக அறியமுடிகின்றது.
எனினும் இது தொடர்பில் தற்போது கருத்து வெளியிடும் குறித்த யுவதி மேலுள்ள அந்த காதல் கதையை முற்றாக நிராகரிக்கின்றார். அவர் தனக்கு தாஜுதீன் எச்சந்தர்ப்பத்திலும் அறிமுகமற்றவர் என உறுதியாக கூறும் நிலையில் வஸீம் தாஜுதீன் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற்று உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
அத்துடன் மரணித்த அப்பாவி ஒருவருடன் தன்னை இணைத்து அவரது நற்பெயருக்கும், எனது நடத்தை தொடர்பிலும் பொய்யான பிரசாரங்களை செய்வதையும் கைவிட வேண்டும் எனவும் யசாரா தற்போது வாய் திறந்துள்ளார்.
அத்துடன் வஸீம் தாஜுதீன் எந்த விடயமாக இருந்தாலும் தனது சகோதரியுடன் பகிர்ந்துகொள்ள மறப்பதில்லை. அதன்படி யுவதிகள் தனக்கு விடும் பார்வைகளில் இருந்து அனைத்தையும் சகோதரிக்கு தெரியப்படுத்தும் வஸீம் யுவதி தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறி இருக்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார். இந் நிலையில் காதல் விவகாரம் என்ற காரணம் தொடர்பில் உறுதியான சான்றுகள் இல்லை என்லாம்.
தற்போது வஸீம் தாஜுதீன் விவகாரத்தை கையாளும் குற்றப் புலனாய்வுப் பிரிவோ விசாரணை அதிகாரிகளோ இது காதல் விவகாரத்தின் பிரதிபலனாக ஏற்பட்ட கொலை என மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் அதனை உறுதியான காரணமாக நம்புவது முட்டாள் தனமானது.
அதே போன்று தான் தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் அனுமானிக்கத் தக்க இன்னொரு காரணம் உள்ளது. அது றக்பி விளையாட்டுடன் தொடர்புடையது.
அதாவது தாஜுதீன் ஒரு கழகத்துக்காக விளையாடிய நிலையில் ஜனரஞ்சகமான அவரை தமது அணி சார்பில் விளையாட அரசியல் புள்ளியின் மகன் வற்புறுத்தியுள்ளதாகவும் அதற்கு அவர் மறுப்புப் தெரிவித்ததன் விளைவே அவரது மரணம் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பார்க் கழக அணியில் இணைந்த தாஜுதீன் ஆண்டின் சிறந்த ரக்பி வீரராகவும் தெரிவானார். இந் நிலையில் அவருக்கும் றக்பி விளையாட்டு தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த அரசியல் வாதி ஒருவரின் மகன்மாருக்கும் இடையில் அறிமுகம் இருந்தது.
அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடியவர்கள். இந் நிலையில் ஹெவ்லொக் கழகத்தின் வீரரான தாஜுதீனுக்கும் குறித்த அரசியல் வாதியின் மகனுக்கும் இடையே ஹெவ்லொக் கழகத்தில் இருந்து பிறிதொரு கழகத்துக்கு தாஜுதீனை விளை யாட கோரியமை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் கதையை அல்லது சந்தேகத்தை முற்றாக நிராகரித்து விட முடியாது.
கடந்த ஆட்சியின் போது றக்பி விளையாட்டு எந்தளவு தூரம் பிரபலமானது, அதனுடன் இணைந்து இருந்தவர்கள் யார் என்பதெல்லாம் ஒன்றும் ரகசியம் இல்லை. அதன் அடிப்படையில் பார்க்கின்ற போதும் அதே அரசியல் புள்ளியின் மகனே சந்தேகிக்கப்படுகின்றார்.
‘வஸீம் எதுவாக இருந்தாலும் அவரது சகோதரியிடம் சொல்வார். இந்த சம்பவத்தின் பின்னர் இந்த வதந்திகள் குறித்து நான் அவளிடம் கேட்டேன். வஸீம் சிறந்த றக்பி வீரர் என்ற ரீதியில் அவரை வேறு கழகங்களுக்கு விளையாட தொடர்ச்சியாக அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையாக சொல்வதென்றால் சீ.எஸ்.என். இவரை ஹெவலொக் கழகத்தில் இருந்து எடுத்து இன்னொரு கழகத்துக்கு விளையாட வைக்க முயற்சித்துள்ளது. அதனால் வஸீம் சீ.எஸ்.என். க்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதனால் சில சின்ன முரண்பாடுகள் தோன்றியதாக அவர் அப்போது தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
எங்களது மகன் திடகாத்திரமானவன். அத்துடன் பிரபல்யமான றக்பி வீரர். பல யுவதிகள் அவர் மீது நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர். இது தான் இன்று இளைஞர்களுக்கு நடப்பது. இது தொடர்பில் வஸீம் அவனது சகோதரியிடம் கருத்துக்களை பரிமாறியுள்ளார்.
எனினும் அவர் ஒரு போதும் தனக்கும் குறித்த பேசப்படும் யுவதிக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக குறிப்பிட்டிருக்கவில்லை. முகப் புத்தகம் முதல் எங்குமே குறித்த யுவதியின் புகைப்படத்துடன் கூட வஸீமை நாம் காணவில்லை.
எனினும் நீங்கள் குறிப்பிடும் அந்த யுவதி சீ.எஸ்.என்.இல் வேலை செய்யும் போது ஒரு முறை விளையாட்டு நடவடிக்கை ஒன்று தொடர்பில் வஸீமை தொடர்புகொண்டுள்ளார். எனினும் வஸீம் அதனை நிராகரித்ததாக நான் அறிகின்றேன். நாம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கின்றோம்.’ என வஸீமின் மாம உறவு முறையிலான மொஹம்மட் பயாஸ் லத்தீப் என்பவர் தெரிவிக்கும் கருத்துக்களும் அவதானத்தில் கொள்ளப்படவேண்டியதே.
எனினும் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த அரசியல் புள்ளியின் மகனை சந்தேக நபராக பெயரிடாத நிலையில் இந்த விடயம் தொடர்பில் நீண்ட விசாரணைகள் அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வஸீம் தாஜுதீனின் மரணம் விபத்தா?, கொலையா என இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் சந்தேக நபர்கள் என சிலரை பெயரிடுவது உண்மையில் பொருத்தமாக அமையாது.
எனினும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில், குற்றப் புலனாவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுகத் நகஹமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகர தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தாஜுதீனின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கத் தக்க பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு அது தொடர்பில் புதுக் கடை மூன்றாம் இலக்க நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தாஜுதீனின் பற்கள் உடைக்கப் பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, குதி கால் பகுதியில் உள்ள எலும்பும் உடைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியும், தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியும் உள்ளமைக்கான சான்றுகளை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர , இரசாயன பகுப்பாய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ ஆகியோரை அவர்களது அறிக்கையில் காணப்பட்ட பரஸ்பர வேறுபடுகள் குறித்து விசாரித்த போது தெரிந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்து தாஜுதீனின் தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களை வெளிப்படுத்த முயன்ற போதும், தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று கடந்த மாதங்களில் மன்றுக்கு சத்தியக் கடதாசி ஒன்றினை முன்னிறுத்தி தம்மிடம் அந்த தரவுகள் இல்லை என குறிப்பிட்டிருந்தனர்.
தம்மிடம் மூன்று மாதங்களுக்கு உட்பட்ட தகவல்களே பதிவில் உள்ளதாக இதன் போது குறிப்பிட்ட குறித்த சேவை வழங்கும் நிறுவனத்துக்கு எந்த வகையிலேனும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளுக்கு உதவுமாறும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இது வரை 27 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். அதில் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர், றக்பி வீரர்கள் மற்றும் தாஜுதீனின் சடலத்தை முதன் முதலாக அவதானித்தவர்கள் என பலர் அடங்குவதாக புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி தெஹிவளை மையவாடியில் இருந்து, தாஜுதீனின் மூத்த சகோதரி ஆய்ஷா தாஜுதீன், சகோதரன் அஸ்பான் தாஜுதீன் உள்ளிட்ட உறவினர்கள், மையவாடி நிர்வாகத்தினரின் சாட்சியத்துக்கு அமைய சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கல்கிசை மேலதிக நீதிவான் பிரிஹர்ஷா ரணசிங்க முன்னிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையில் கொழும்பு மேலதிக விஷேட சட்ட வைத்திய நிபுணர் எச்.டீ.என்.ஹேவகே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்தியத் துறை தொடர்பிலான விஷேட விரிவுரையாளர் ஜீவா பெரேரா ஆகியோர் கொண்ட விஷேட சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினரால் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு சட்ட வைத்திய மற்றும் உடற் கூற்று நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு மூன்றாம் இலக்க நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் தாஜுதீனின் மரண விசாரணைகளில், தீர்ப்பை வழங்க நீதிவானுக்கு அவசியமாகியுள்ள, தாஜுதீனின் உடலில் உள்ள சந்தேகிக்கத் தக்க காயங்கள் மற்றும் மேலதிக தகவல்களை உள்ளடக்கியதாக சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலைப் பெற்றுக் கொள்ள இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இந்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு மன்றில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை விட தற்போது புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தாஜுதீன் கடத்தப்பட்டதாகவும் அதற்கு டிபண்டர் ரக வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதகவும் அந்த வாகனம் செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்டதாகவும் அது தொடர்பில் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவின் தகவல்களின் அமைவாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் விசாரிக்கப்பட்டமையானது உண்மை எனவும் எனினும் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பில் அவர் விசாரிக்கப்படவில்லை எனவும் வேறு ஒரு வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே விசாரிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
இந் நிலையில் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அடித்துக் கூறும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன அதனுடன் ஜனாதிபதி பதுகாப்புப் பிரிவினரில் மூவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.
இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தற்போது அரசியல் இலாபம் கருதி பல்வேறு வகையில் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வஸீம் தாஜுதீனின் கே.கிவ்.6543 என்ற வாகனம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை நீதிமன்றம் டொயாட்டோ லங்கா நிறுவனத்திடம் கோரியுள்ளது. 10 கேள்விகளை கொடுத்துள்ள நீதிமன்றம் அதற்கான பதிலாக அந்த அறிக்கையை கோரியுள்ளது.
வஸீமின் கார் விபத்துக்கு உள்ளாகியதா? அதற்கான சாத்தியம் உள்ளதா போன்றவற்றை அரியவே இந்த விஷேட ஆய்வறிக்கை கோரப்பட்டுள்ளது.டொயடோ லங்க தலைமையகத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் டப்ளியூ.எல்.வில்சன் பெரேராவிடம் கோரப்பட்டுள்ள இந்த அறிக்கையை மேலதிக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க, மோட்டார் வாகன போக்கு வரத்து ஆணையாளர் அலுவலகத்தின் உதவி ஆணையாளர் (தொழில் நுட்பம்) ஜெ.எஸ்.ஏ.ஜயவீர ஆகியோரின் முன்னிலையில் மேறகொண்டு தயாரிக்க வெண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன் அறிக்கையும் மன்றுக்கு சமர்பிக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு பிரதி புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பொலிஸ் தடயவியல் பிரிவினரால் சம்பவம் இடம் பெற்ற வேளை எடுக்கப்பட்ட படங்கள் வீடியோக்கள் என்பனவும் பயன்படுத்தப்படவுள்ளன.
எனவே வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் பொறுப்பு வாய்ந்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர தலைமையிலான பொலிஸ் குழு விரையில், பொதிந்துள்ள மர்மங்களை துலக்கி சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.