குளிர்காலத்தில் உடலின் முக்குற்றங்களுள், பித்தம் அதிகரித்து இருப்பதால் இயல்பாகவே உடலின் வலு சற்று குறைந்திருக்கும். இக்காலங்களில் உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ரைனோ வைரஸ், ஃப்ளூ காய்ச்சல் (இன்புளூயன்சா) போன்றவை அதிகமாகப் பரவும். இவை ஒருவரிடம் இருந்து அவர்களின் தும்மல், இருமல் மூலம் மற்றவருக்கு வேகமாக பரவும். ஆகவே, இக்காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.
சாதாரண சளி, இருமலுக்கு:
1) ஆடாதோடை இலை – 2, கற்பூரவள்ளி இலை – 2, துளசி இலை – 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து அவற்றைபிழிந்து சாறு எடுத்து தேனுடன் சூடுபடுத்தி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, இருமல் மூலமாக வெளியேறும்
2) தூதுவளை, மிளகு ரசம் வைத்து மதிய உணவை சாப்பிட வேண்டும்.
3) சிற்றரத்தை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 10 கிராம் அளவில் எடுக்கவும், கொத்தமல்லி 50 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு டீ ஸ்பூன் பொடியை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை நீங்கும். நல்ல பசியைத் தரும்.
4) நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் இவைகளும் சிறப்புடையது. சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் இரண்டு மாத்திரைகளை வாயிலிட்டு மென்று சாப்பிட வேண்டும். துளசி மாத்திரை 1-2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நிலவேம்பு குடிநீர் 30 முதல் 60 மி.லி. வீதம் தினம் ஒருவேளைக் குடிக்கலாம். இது வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. இரவு தூங்கும் முன்பு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு இவைகளை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும். ஆடாதோடை மணப்பாகு 5 மி.லி. காலை, இரவு இருவேளை குடிக்க வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)