கொக்குவில் பகுதியில் இன்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு! படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

623

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது ஆயுதம் தாங்கிய படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல எனவும்> இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாகவும் படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்து வருகின்றனர்.

இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில் மூன்று மாத பயிற்சி இடம்பெறுமென்றும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தொழில் என்றும் அந்த அறிவித்தலில் படையினர் தெரிவித்துள்ளனர்.

மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்றும் படையினர் கூறியிருக்கின்றனர். அத்துடன் இது ஒய்வூதிய உரித்துடைய நிரந்தர நியமனம் என்றும் அந்த அறிவித்தலில் படையினர் கூறியிருக்கின்றனர்.

ஏற்கனவே இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பல பெண்கள் படையினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் தொழில் வாய்ப்பு என்ற பெயரில் படைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறுகின்றது.

இத்தகைய ஆட்சேர்ப்பின் மூலம் வடக்கில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இதுவென எச்சரிக்கப்படுகின்றது.

 

SHARE