வரலாற்று இந்தியாவில் பல புத்திஜீவிகள், பல கல்விமான்கள், பல விஞ்ஞானிகள் இருந்தாலும் கூட டாக்டர் அப்துல் கலாமை மிஞ்சுமளவிற்கு யாரும் வாழ்ந்ததாக வரலாற்றில் இடமில்லை.
அரசியலையும் வாழ்ந்து பார்த்தவர் என்பதில் டாக்டர் அப்துல் கலாம் ஒரு சகலதுறை ஆட்டக்காரர்.
அரசியல் என்று வரும்போதுதான் அறிஞர் அண்ணா ஞாபகத்தில் வருகிறார்.
அவரும் அரசியலிலிருந்த எந்தவொரு சூழலிலும் மேற்குறிப்பிட்ட அப்துல் கலாமிடமிருந்த அத்தகைய குணங்களும் இவருக்கும் இருந்தன.
இங்குதான் அப்துல் கலாமும் அறிஞர் அண்ணாவும் அரசியல் ரீதியாக ஒப்பிடுகையில் தற்காலச் சூழலில் அரசியலை ஒரு கவசமாக பயன்படுத்தினார்களே தவிர நிரந்தர கவசமாக அரசியலை அவர்கள் அணிந்ததில்லை.
களப்பணி
எந்தவொரு தனிமனிதனும் வாழும் நாட்களில் விரும்புவது பெயர், பணம், பட்டம், பதவி, புகழையே…. மாறாக, மறைந்த பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி கலாமோ எதிர்கால இந்தியாவே இளைஞர்களிடம் எனும் கோஷங்களை மாணவர்கள் மத்தியில் நித்தம் நித்தம் முழங்குவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
தன்னுடைய வாழ்நாட்களில் அதிகமான நேரங்களையும் நாட்களையும் மாணாவர்கள், இளைஞர்கள் என புத்தெழுச்சி ஊட்டும் செயற்பாட்டிலேயே தன்னை மெழுகாக அர்ப்பணித்தார். கடைசி நிமிடம்வரை தான் கொண்ட கொள்கைகளில் சற்றும் தளராது உறுதியுடன் இருந்தமைக்கு பல சான்றுகள் வரலாற்றில் உள.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் தனது மாறா இலட்சியம் , கொண்ட கொள்கை போன்றவற்றில் கடைசிவரை களத்தில் நின்றவர், அவரும் பணத்தையோ., புகழையோ. பட்டத்தையோ, பெயரையோ, மொத்தத்தில் பெருமையை விரும்பியதில்லை.
மாறாக இலட்சிய வேட்கை, கொள்கை, மக்கள், தனிநாடு, உரிமை போன்றவற்றை பெரிதாக மதித்தார்.
உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் நடந்துள்ள சூழ்நிலையிலும் அவ் அமைப்புக்களை வழி நடாத்தியவர்கள், தலைமை தாங்கியவர்களும் விடுதலைப் புலிகளின் தலைவரைப் போன்று இலட்சியத்திலும் கொள்கையிலும் உறுதியாக இருந்தார்களா என்பது இதை வாசிக்கும் நீங்களே உய்த்தறிந்து கொள்வீர்கள்.
இன்று இந்த உலகம் போற்றும் உத்தமனாக இறந்தும் வலம்வரும் அப்துல் கலாம் மக்கள் மனங்களில் நிறைந்து இருப்பதற்கு காரணம் அவருடைய குணவியல்பு.
ஆம் நாம் நினைக்கலாம்…… இவரை விட பல மகான்கள் உலகத்தில் இறந்திருக்கின்றார்கள்.ஏன் இந்த குதர்க்கம் என…
இந்த இடத்தில் தான் எம்முடைய மனட்சாட்சியின் உரையாடல்கள் பதிலாக அமையும்.
இலட்சியம்.
அப்துல் கலாம் அவர்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்தார். அவருடைய உயிர் பிரியும் தருணத்திலும் கூட மாணவர்கள், எதிர்கால இந்தியா, வரலாறு என்பவற்றில் உறுதியாக இருந்தார்.
அதேபோன்றே விடுதலைப் புலிகளின் போர் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறிய போதிலும் அது மெளனிக்கப்படும் கடைசி தருணம்வரை களத்தில் தான் கொண்ட இலட்சியத்திற்காக மக்களுடனும் போராளிகளுடனும் தலைவரும் தளராது நின்றிருந்தார்.
அப்துல் கலாம் தனது கடைசி மூச்சை விடும்வரைக்கும் மாணவர் எனும் ஆயுதத்துடன் இருந்தார். அது போன்று விடுதலைப் புலிகளின் தலைவர் போராட்டம் மெளனிக்கும் வரைக்கும் கொள்கை எனும் ஆயுதத்துடன் போராட்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக உள்ளார்.
சிலரது வியாக்கியானங்கள் – மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுடன் விடுதலைப் புலிகளின் தலைவரை ஒப்பிடலாமா என்கின்ற விமர்சனம் கிளைவிட்டு படரலாம்.
ஆனாலும் இருவேறு தளங்களில் அசைக்கமுடியாத கொள்கைகளுக்காகவும் இலட்சிய வேட்கைக்காகவும் வாழ்நாளில் வாழும் நாட்களை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தவர்கள் இவ் இ(ரு)வர்களே….!
முகில்