யாழ்ப்பாணம் சாவகச்சேரி உணவகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவகத்தில் பத்து இலட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று அதிகாலை மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் சகோதரன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரினுடைய வாக்குமூலத்துக்கமையவே இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யயப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்ட பணத்திலிருந்து புதிதாக வாங்கியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
உணவகத்தில் திருடியவர் தொடர்பான விவரங்களை முகநூலில் பதிவுசெய்து, அது பற்றித் தகவல் கிடைத்ததால் முதல் சந்தேகநபர் பிடிபட்டார். அவரை, சாவகச்சேரியிலிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று மக்களின் உதவியுடன் பிடித்து சாவகச்சேரிக்குக் கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார் உணவக நடத்துநர்.
இந்தத் திருட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இரவு இடம்பெற்றது.
ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த மறைகணணிகளின் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு உணவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.
அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தானும் விசாரணையில் இறங்கினார் கடை நடத்துநர்.
கடைக்குள் செயலிழக்காமல் இருந்த மறைகணணியின் உதவியுடன் அதற்கு முதல் நாள் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாகப் பார்வையிட்டபோது முதல் நாள் அங்கு உணவருந்த வந்திருந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட மறைகணணிப் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்துள்ளார் என்பதை இயன்றளவு உறுதி செய்துகொண்டார்.
அந்தப் படங்களை முகநூலில் பதிவு செய்து அவர் தொடர்பான விவரங்களைத் தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனை வருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தப் பதிவைப் பார்த்த முல்லைத்தீவு உடையார் கட்டைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒருவர் பற்றிக் கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
உணவக உரிமையாளர் நேற்றுமுன்தினம் சிலருடன் அங்கு சென்றபோது அவர்களைக் கண்டதும் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ள போது பொதுமக்களின் உதவியுடன் அவர் மடக்கிப் பிடிதது அவரை வாகனத்தில் கொண்டு வந்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸார் குறித்த நபரை உணவகத்துக்கு முன்பாக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வைத்திருந்துவிட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது சந்தேக நபரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.