கொழும்பில் மே தின கூட்டத்துக்குத் தடை

678

தொழிற்சங்க ஒன்றியம் மே தினக் கூட்டம் நடத்தத் தடை ( படத்தில் ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்)
இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஹைட் மைதானத்தில், மே தினக் கூட்டமொன்றை நடத்த தொழிற்சங்க ஒன்றியத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இலங்கைப் போலிசார் விடுத்த வேண்டுகோளொன்றை ஏற்றுக்கொண்ட கோட்டை நீதிமன்றம் இந்தத் தடைஉத்தரவைப் பிறப்பித்தது.

இந்த இடத்தில் மே தினக் கூட்டத்துக்கு, முதல் முறையாக இலங்கை வங்கி உழியர்களின் சங்கம் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தங்களிடம் அனுமதி வாங்கியிருப்பதாகப் போலிசார் தெரிவித்தனர்.
எனவே இந்த மைதானத்தில் தொழில் சங்க ஒன்றியம் கூட்டம் நடத்த அனுமதி தரப்படவில்லை என்று தெரிவித்த போலீசார், இந்த இடத்தில், இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதன் முலம் மோதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

பொலிசாரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்தத் தடை உத்தரவை பிறப்பித்தார்.
ஆயினும் போலீசார் கூறிய கருத்துகளை நிராகரித்த தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 16 ம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றின்போது ஹைட் மைதானத்தில் மே தின கூட்டமொன்றை நடத்துவதற்கு போலீசார் தனக்கு அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு போலீசார் பொய்யான தகவல்களை வழங்கி இந்த தடை உத்தரவைப் பெற்றிருப்பதாக, அவர் குற்றம்சாட்டினார்.

ஆயினும் தனது மே தினக் கூட்டம் நாளைய தினம் கொழும்பில் நடத்தப்படுமென்று தெரிவித்த ஜோசப் ஸ்டாலின் நடத்தப்படவுள்ள இடம் நாளை அறிவிக்கப்படுமென்றும் கூறினார்.

இதன் படி ஹைட் மைதானம் உட்பட வேறு விதிகளில் கூட்டங்களோ பேரணிகளோ நடத்துவதற்கு தொழிற்சசங்க ஒன்றியத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தார் நீதிபதி.

SHARE