கோடையில் பலன் தரும் பழ வகைகள்

324
கோடையில் பலன் தரும் பழ வகைகள்

பழ வகைகள்
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது.

கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளலாம். இதனால் சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும். எந்த வகைப் பழங்களை சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களைச் சாப்பிடலாம்; பழச்சாறாகவும் பருகலாம். இதன் மூலம் வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

தர்பூசணி:

தர்பூசணியில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனே ஈடு செய்யப்படும்.

முலாம் பழம்:

கோடைக்கு ஏற்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களில் முலாம் பழமும் ஒன்று. இதில்  வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு காணப்படுகின்றன. வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை வாரத்திற்கு மூன்று முறையாவது  சாப்பிடலாம்.

அன்னாசிப் பழம்:

நா வறட்சியை குறைக்கக்கூடிய ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உள்ளது. நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது அன்னாசிப்பழம்.

மேலும் சப்போட்டா, மாம்பழம்,  கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களைத் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளின் அளவு அதிகரிக்கும்.

பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது. முடிந்தவரை பழங்களைக் கடித்து சாப்பிட குழந்தைகளை பழக்குங்கள். இதன் மூலம் நார்ச்சத்து உடலுக்கு முழுமையாகக் கிடைப்பதோடு, செரிமானக் கோளாறுகளும் ஏற்படாது.

SHARE