கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர். உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய, ஓப்பிரேசன் லிபரேசன் (வடமாராட்சி ஒப்பிரேசன்) போன்றவற்றை குறிப்பிடலாம். வடமாராட்சி ஓப்பிரேசன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கை. யாழ்குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த இராணுவ நடவடிக்கையில் கோட்டபாய ஒரு முக்கிய இராணுவ அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். தாக்குதலில் இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான், ஓப்பிரேசன் பூமாலை என்னும் பெயரில் இந்திய கடற்படை விமானங்கள் உணவுப்பொதிகளை போட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் போனது. இந்தியா அப்போது தலையீடு செய்யாதிருந்திருந்தால், தாங்கள் அப்போதே விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம் ஆனால் இந்தியா விடயங்களை குழப்பிவிட்டது என்றவாறான ஒரு கருத்து கொழும்பில் உண்டு.
1992இல் இராணுவத்திலிருந்து ஒய்வுபெற்ற கோட்டபாய, 1998இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கோட்டபாய இலங்கையின் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளை இராணுவ ர்Pதியில் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கை இலங்கையில் எவருக்குமே இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், அதனை செய்ய முடியும் என்பதில் கோட்டபாய மிகவும் உறுதியாக இருந்ததாக எரிக் சொல்கெய்ம் கூறுகின்றார். 2011இல் நோர்வேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகின்ற போதே, சொல்கெய்ம் இதனை கூறியிருந்தார். அதவாது, இந்த உலகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சாத்தியமென்று எவருமே கூறியிருக்கவில்லை. அப்போது இராணுவத் தளபதியாக இருந்த, ஜெனரல் சரத்பொன்சேகா விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் பலவீனப்படுத்துவது சாத்தியமே தவிர, முழுமையாக அழிக்க முடியாது என்றே கூறியிருந்தார். ஆனால் ஒருவர் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தார். அவர்தான் கோட்டபாய ராஜபக்ச. அதே வேளை பிறிதொரு உரையாடலில் கோட்டபாய பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக வரக் கூடுமென்றும் சொல்கெய்ம் கூறியதாகவும் ஒரு தகவலுண்டு. திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்காக வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றின்போது, இந்தக் கேள்வியை நான் முன்வைத்திருந்தேன். நீங்கள் இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகின்றது ஆனால் தற்போது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில் அது இலங்கையை மையப்படுத்தி நிகழும் புவிசார் முரண்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கு சொல்கேய்ம் நேரடியாக எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை அதே வேளை தான் அவ்வாறு கூறவில்லை என்றும் மறுக்கவில்லை. கோட்டபாயவின் வெற்றியை சொல்கெய்ம் பத்து வருடங்களுக்கு முன்னரே கணித்திருக்கின்றார் என்னும் முடிவுக்கே வரலாம்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சினை மீளவும் பேசு பொருளாகப் போகின்றது. முன்னைய ஆட்சியாளர்கள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் அணுகுமுறையை கடைப்பிடித்திருந்தனர். 2015இல் கொண்டுவரப்பட்ட பேரவையின் பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியதன் மூலம், உலகிற்கு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொண்டனர் ஆனால், ஏற்றுக்கொண்டது போன்று விடயங்களை நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்குள் இருந்த உள் முரண்பாடுகளை காரணம் காட்டி பொறுப்புக் கூறலை இழுத்தடித்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மீளவும் யுத்த வெற்றியின் சொந்தக்காரர்களிடம் ஆட்சி சென்றிருக்கின்றது. அவர்கள் இனி இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவர்?
மைத்திரி-ரணில் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக கூறியிருந்தாலும் கூட, இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு சர்வதேச தலையீடுகளும் இடமளிக்க முடியாது என்றே கூறிவந்தனர். இத்தனைக்கும் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிரேரணையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றலுடன் கூடிய, நீதி விசாரணை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக உறுதியளித்த அரசாங்கமே அவ்வாறு கூறியிருக்கின்ற நிலையில், யுத்தத்திற்கு தலைமை தாங்கிய, பிரதான நபரே இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், நிலைமைகள் எவ்வாறிருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் சிரமமிருக்காது. ஜனாதிபதி கோட்டபாய இராணுவம் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டால், அது அவர் தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு சமமானது. எனவே கோட்டபாயவின் அதிகார எல்லைக்குள் இந்த விடயங்களை விவாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லவே இல்லை. அதற்காக மனித உரிமைகள் பேரவையுடனான தொடர்பை அரசாங்கம் துண்டித்துக் கொள்ளாது. தங்களின் நியாயத்தை சொல்லுவதற்கான ஒரு சர்வதேச களமாக அதனையும் அரசாங்கம் பயன்படுத்தும்.
இன்றைய உலக ஒழுங்கில் மனித உரிமைகள் மீதான உலகளாவிய கரிசனை என்பது பலம்பொருந்திய நாடுகளின் அதிகார நலன்களோடு தொடர்புபட்டிருக்கின்றது. இதனை ஒவ்வொரு ஆட்சியாளரும் நன்றாக புரிந்து வைத்திருக்கி;ன்றார். இலங்கையின் ஆட்சியாளர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். 2009இற்கு பின்னரான சூழலில் சில விடயங்களில் மேற்குலகுடன் (அமெரிக்காவுடன்) ஒத்துப்போகாத காரணத்தினால்தான், அமெரிக்கா மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது, சில மென் அழுத்தங்களை பிரயோகித்தது. ஆனாலும் அந்த மென் அழுத்தங்களை மகிந்த பொருட்படுத்தவில்லை. மேற்குடன் ஒரு பிடிவாதமான அரசியல் அணுகுமுறையையே மகிந்த கடைப்பிடித்தார். மகிந்த மேற்குடன் நெகிழ்வான போக்கை கடைப்பிடித்திருந்தால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடர்ந்திருக்காது. இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த எதிர்பாராத தோல்வியை சந்தித்தார். மகிந்த அதிகம் சீனாவை நோக்கிச் சாய்ந்து கொண்டிருந்த பின்புலத்தில்தான் அவர் ஆட்சியை இழந்தார். ஆரம்பத்தில் அது சீனாவிற்கு வைக்கப்பட்ட ஒரு செக் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் இடம்பெற்ற விடயங்களோ அதனை தவறென்று உணர்த்தியது. ஆட்சி மாற்றங்களின் மூலம் இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கை முற்று முழுதாக தடுத்துநிறுத்த முடியாது என்னும் உண்மை தெளிவானது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு கொடுத்ததும், கூடவே 15000 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு கொடுத்ததும் மகிந்த ராஜபக்ச அல்ல. அதனை செய்தது, மேற்குடனும் இந்தியாவுடனும் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆட்சியாளர்கள்தான். எனவே மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் ஊடாக, சீனாவை சற்று எட்ட வைக்கலாம் என்னும் கணிப்பு வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் 2019 – தேர்தலில் இந்தியாவோ அல்லது மேற்கோ பெரிய ஆர்வங்களை காண்பிக்கவில்லை. அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் கூட, வருபவர்களை கையாளுதல் என்னும் அடிப்படையிலேயே விடயங்களை கையாண்டனர்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாபதியாக வந்ததிலிருந்து பல்வேறு விடயங்களை கூறிவருகின்றார். அவர் கூறும் விடயங்கள் நாட்டின் அபிவிருத்தி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் நல்ல திட்டங்கள்தான் ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் இலங்கைக்குள் அதிக முதலீடுகள் வர வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டுமாயின் அவர் பல்வேறு விடயங்களில் மேற்கின் நலன்களோ ஒத்துப் போகத்தான் வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் அவரால் முன்னோக்கி நகர முடியாமல் போகும். இதெல்லாம் அவர்கள் அறியாததும் அல்ல. சிங்கள ராஜதந்திரம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு பயணிப்பதில் வல்லமை மிக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவையும் அமெரிக்காவையும் சினேக வட்டத்திற்குள் வைத்துக் கொள்வதிலேயே கோட்டபாய கவனம் செலுத்துவார். முதலில் இந்தியா அதன் பின்னர் அமெரிக்கா என்பதே அவரது அணுகுமுறையாக இருக்கலாம். கோட்டபாய நிச்சயம் ஜெனிவாவில் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த வகையில் அவர் ஜெனிவாவை சில விடயங்களில் எதிர்ப்பார். ஜெனிவாவை எதிர்த்துக் கொண்டும் அமெரிக்காவுடன் நிற்க முடியுமென்னும் உலக யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.