கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை எடுத்து பார்க்கும்போது இது இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்படப்போகும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று கூட கருதலாம். 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, 1970ஆம் ஆண்டுகளில் உலக எண்ணெய் நெருக்கடியுடன் வந்த பாரிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் 1953ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறப்பர், அரிசி நெருக்கடி போன்ற இவைகள் எல்லாவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது தற்போது இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிதான் மாபெரும் நெருக்கடியாக அமையலாம்.
இதற்கான காரணம் இலங்கையினுடைய பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்கனவே பல பிரச்சினைகள் இருந்தமையே. இந்த கோவிட்-19 அனர்த்தம் வருவதற்கு முன்பே கடந்த வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடி நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பொருளாதாரக் கட்டமைப்பின் நெருக்கடித்தன்மை
இலங்கை பொருளாதாரத்திற்கு இருக்கும் பிரச்சினை, சில புள்ளிவிபரங்களூடாக நாங்கள் விளங்கி கொள்ளலாம். இலங்கையினுடைய மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் பொழுது அரசாங்கத்தினுடைய உள்நாட்டுக்கடன் அதன் 41.6% ஆகவும், அந்நிய கடன் 41.2% ஆகவும், வருடத்திற்கான மொத்த கடன் செலுத்துகை 14.5% ஆகவும் அமைகிறது. ஆனால், அரசாங்கத்தினுடைய வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின் 16.0% தான் இருக்கிறது (நிதியமைச்சு ஆண்டறிக்கை 2018).
இங்கு இலங்கை தன்னுடைய மூன்று வகையான அந்நிய (external sector) கடன்கனை செலுத்தமுடியாத நிலைமை இருக்கிறது. ஒன்று – வேறு நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன்கள். உதாரணமாக சீனா, இந்தியா மற்றும் ஜப்பான். இரண்டாவது – சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள். உதாரணமாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம். இந்த இருவகையான கடன்களையும் மீளச்செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்த மூன்றாவது வகையான கடன் என்பது இலங்கை விற்றிருக்கும் இறைமைப் பிணைமுறிகள் (sovereignty bond) ஆகும். இவை பாரிய அளவில் மீள்செலுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. சர்ச்சைக்குரிய விடயம் என்ன வென்றால், தேசிய இறைமை தொடர்பாக பரவலாக பேசும் எங்களுடைய தேசிய அரசியல் தலைவர்கள்தான் கடந்த பன்னிரண்டு வருடகாலத்தில் தொடர்ந்து இறைமையை பிணைமுறியாக விற்றுள்ளார்கள்.
அந்த விதத்தில் தற்போது இலங்கையினுடைய அந்நிய செலவீனம் (foreign exchange) 7.5 பில்லியன் அமெரிக்க டொலராகும் (750 கோடி அமெரிக்க டொலர்). அதாவது, 4.5 மாதங்களுக்கான இறக்குமதி பொருட்களுக்கான அந்நிய செலவீனமாக இது அமைகிறது. இவ்வாறு இருக்க அடுத்த பன்னிரண்டு மாதத்திற்குள் மீள்செலுத்த வேண்டிய இறைமைப் பிணைமுறி மற்றும் அன்னிய கடன்களின் மொத்தத்தொகை 4.8 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்த இறைமைப் பிணைமுறி என்பது சர்வதேச சந்தைகளில் பெற்ற நிதிக்கடனாக அமைவதனால் அவற்றிற்கு கால அவகாசம் பெற முடியாது. சென்ற வருடங்களில் நாங்கள் இவ்வாறான பிணைமுறிக்கடன்களை மீளச்செலுத்துவதற்கு மீண்டும் புது பிணைமுறிக் கடன்களை பெற்றே செலுத்தினோம். ஆனால், தற்போதைய உலக நிலை காரணமாகவும் இலங்கையினுடைய நெருக்கடி காரணத்தாலும் உலக சந்தையில் இலங்கை பிணைமுறிகளை விற்பதாக இருந்தால் கடந்த காலங்களிலும் பார்க்க பல மடங்கு அளவிலான வட்டியைக் கட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான மோசமான நெருக்கடிதான் கிறீக் நாட்டில் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது.
அடுத்ததாக இலங்கையின் இறக்குமதிஎன்பது ஏற்றுமதியிலும் பார்க்க இரண்டு மடங்காக சென்ற வருடங்களில் அமைந்திருந்தது. இதை நாங்கள் சுற்றுலாத்துறை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்களாலோ, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனுப்பும் பணத்தினால் அல்லது வெளிதுறையிலிருந்து (External Sector) பெற்றுக்கொள்ளும் கடனூடாக சீர்செய்து வந்துள்ளோம். தற்போதிருக்கும் நிலை என்னவென்றால் எங்களுடைய ஏற்றுமதிப்பொருட்கள் குறிப்பாக சுதந்திர வர்த்தக வலையங்களின் ஆடை ஏற்றுமதிகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை முற்றாக மூடப்பட்டுள்ளது. இவைதவிர வெளிநாடுகளில் வேலைபுரிபவர்கள் கூட திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மேலும் தேயிலை போன்ற பொருட்களின் ஏற்றுமதி உலகரீதியான போக்குவரத்து பிரச்சினை காரணமாகவும் உலகசந்தையின் நிலவரம் காரணமாகவும் குறைவடைந்துள்ளது.
இவ்வாறான நிலமைகள் காரணமாக இலங்கையின் நாணயமதிப்பும் வேகமாக குறைவடைகிறது. இலங்கை பாரிய கடனை மீளக்கட்டவேண்டும் எனும் பிரச்சினை மட்டுமல்லாமல், இறக்குமதிப் பொருட்களை வாங்கும் சூழலும் இல்லை என்பதே நிதர்சனம். ஆகவே, அரசாங்கம் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்துள்ளது.
மேலும் ஒரு பிரச்சினை என்னவென்றால் உள்ளூர் பொருளாதாரத்தை எடுத்து பார்க்கும் போது அரசாங்கத்தினுடைய வருமானம் செலவீனத்திலும் பார்க்க குறைவாக இருக்கிறது. இங்கு அண்மைக்காலத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கு பின்பு அரசாங்கம் வரியைக் குறைத்ததனால் வருமானம் மேலும் 1/3 பங்கு குறைவடைந்துள்ளது. இந்தப் பாரிய நெருக்கடி மத்தியில் அரசாங்கத்தால் மக்களுக்கான அனர்த்த சலுகைகள் செய்வதும் ஒரு பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கின்றது.
ஆகவே, இந்த இரட்டை நெருக்கடிகள், அதாவது வெளித்துறை மற்றும் அரசாங்கத்தின் வரவு செலவு நிலைமை, தற்போதிருக்கும் அனர்த்தத்தின் பொருளாதாரக் குழப்பத்தை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது. இவ்வாறான நெருக்கடியில் இலங்கை தன்னுடைய வரலாற்றில் முதன்முறையாக தனது அந்நிய கடன்களை கட்டமுடியாது போகலாம் எனும் அச்சத்தை உருவாக்குகிறது. ஒரு நாடு வங்குரோத்து அடைவதால் (bankruptcy) எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதிலோ, வெளிநாட்டு ஒப்பந்தங்களைச் செய்வதிலோ பிரச்சினையை எதிர்நோக்கும்.
பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைப்பது
இந்த நிலைமையில் இலங்கையினுடைய பொருளாதாரக் கொள்கைகள் உடனடியாகக் காணப்படும் நிதிப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அதேநேரம் கடந்த காலத்திலிருந்த வங்குரோத்து பொருளாதாரக் கொள்கைகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு அபிவிருத்தியடையாத நாட்டில் ஏன் சொகுசு வாகனங்களை இறக்குதி செய்வதிலும் பெரும் போக்குவரத்து சாலைகளை அமைப்பதிலும் முதலீடு செய்யப்பட்டது? இவைகள் நாட்டிற்கு வருமானத்தை கொண்டுவந்ததா?
மேலும், இலங்கைக்குள் உற்பத்தி செய்யக்கூடிய உதாரணமாக கடதாசிகள், காட்போட் அட்டைகள் போன்றவற்றைக்கூட 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல் பால்சார்ந்த உணவுப்பொருட்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் இலங்கை ஒரு தீவாக இருந்தபோதும் கடலுணவுகள் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. இவ்வாறான பொருளாதாரக் கொள்கைகள் தான் எம் நாட்டை ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஆகவே, எங்களுடைய பொருளாதாரக் கட்டமைப்பை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய ஒரு தேவையுண்டு. அதை மாற்றியமைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியையும் உள்ளூர் கைத்தொழில்களையும் வேகமாக உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது.
இவ்வாறான நெருக்கடி மத்தியில் தனியார்துறை முதலீட்டு பொருளாதாரத்தை வளர்க்கப் போவதில்லை. முதலீடுகளைச் செய்யவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. ஆனால், ஏற்கனவே கூறியது போல் அரசாங்கத்தின் நிதி நிலைமை கடன் நிலைமையாகவே உள்ளது. அதாவது, வருமானம் செலவிலும் பார்க்க குறைவாக உள்ளது. ஒரு பொருளாதாரம் சுழற்சியில் ஓடாமல் இருக்கும் நிலைமையில் வரியூடாக பெரிய அளவில் வருமானத்தை திரட்ட முடியாது. சென்ற வருடங்களில் செல்வந்தர்கள் மேல் நேரடி வரியை அதிகரித்து அரசாங்கத்தினுடைய வருமானத்தை அதிகரித்திருக்காத பட்சத்தில் தற்போது வருமானத்தை திரட்டமுடியாது.
இந்த நிலைமையில் அரசாங்கம் இலங்கையில் இருக்கும் சொத்தை மீள விநியோகிப்பதன் ஊடாகத்தான் இவ்வாறான முதலீடுகளிலும் எங்களுடைய நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் ஒரு நிலைபேண் அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும். இவ்வாறு நாட்டின் சொத்தை மீள விநியோகித்தல் என்பது அடிப்படையில் ஒரு வர்க்க முரண்பாடு. செலவந்தர்களின் சொத்தை அபகரித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் இது. அந்த மாற்றத்தை செய்வதற்கான அரசியல் விருப்பு இருக்கிறதா என்பதுதான் எங்கள் முன்னிருக்கும் முக்கியமான கேள்வி.
கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்