சகோதர பௌத்த நாடு என்றவகையில் தாய்லாந்து எப்போதும் இணைந்து செயற்படும் – தாய்லாந்து மகாநாயக்க தேரர்

296

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டுள்ள இலங்கையுடன் சகோதர பௌத்த நாடு என்றவகையில் தாய்லாந்து எப்போதும் இணைந்து செயற்படும் என்று தாய்லாந்து மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ப்ரா பஹவனஹேஹூன் வட் மெஹேயோங் தேரரின் தலைமையில் தாய்லாந்து மகாநாயக்க தேரர் உள்ளிட்ட 70 பேர் கொண்ட தூதுக்குழுவினர் கடந்த  21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று வெசாக் கொண்டாட்டங்களை பார்வையிட்டனர்.

மேலும்  கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு விகாரைகளுக்குச் சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

தாய்லாந்து பௌத்த தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பில் தாய் ஸ்ரீலங்கா பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் விகாராதிபதி சங்கைக்குரிய ராஸ்ஸகல சீவலி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தேரர்களின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌத்த நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால நெருங்கிய உறவுகளை இதன்போது நினைவு கூர்ந் தார்.

SHARE