இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும். இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் தலையீடு செய்வதற்கு நோர்வேயினைப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறமுடியும். இலங்கையில் நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகளின் பின்னணியில் இந்தியா பிரதான உந்து சக்தியாக இருந்தது என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இறுதியில் ஏற்பட்ட மோசமான அழிவுகளுக்கு இந்தியா காரணமாக இருந்தது என்ற கருத்தை இலங்கையின் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான இராஐதந்திரச்செயற்பாட்டில் இந்தியாவின் வகிபாகத்தினை இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக நோர்வே பிரசுரித்த சமாதானத்திற்கான கையாளுகை 1997 – 2009 வரையிலான இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய மதிப்பீடு (Pawns of Peace Evaluation Peace efforts in Sri Lanka, 1997-2009) என்ற அறிக்கையும், அவ்அறிக்கை வெளியிட்டு எரிக் சொல்ஹெய்ம் ஆற்றிய உரையும் தெரிவிக்கின்றன. இவற்றைஅடிப்படையாகக்கொண்டே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
சமாதானத்திற்கான கையாளுகை
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டமை இந்தியாவிற்கும், இவர்களுக்கும் இடையில் நிரந்தர பிரிநிலைக் கோடாக மாறி விட்டது. அன்று தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் செயல்படுவதற்கான தடையினை இந்திய அரசாங்கம் தொடர்ந்து விதித்து வருகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக இந்தியா நேரடியாகப் பங்குபற்றுவதனைத் தடுத்திருந்தது. இந்தியா தமிழீழத்திற்கான போராட்டத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கீகரித்துக் கொள்ளவுமில்லை. அதேநேரம் தன்னால் வளர்க்கப்பட்டு பின்னர் தன்னால் நிராகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உடனடியாக நிறுத்த முடியாமலும் திண்டாடியது. அதாவது இலங்கை பிளவுபடுவதைக் கடுமையாக எதிர்த்த இந்தியத் தலைவர்கள் தமிழீழத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தனர். அதேநேரம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு இந்தியா ஆரம்பத்திலிருந்து முயற்சிகள் எடுத்திருந்ததாயினும், பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் எதனையும் வழங்குவதற்கு இலங்கை மாத்திரமன்றி இந்தியாவும் தயாராக இருக்கவில்லை.
ஆயினும் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்தியா மீது செலுத்திய அழுத்தத்தினை கருத்தில் கொண்டு நோர்வேயினை அனுசரணையாளர் வகிபாகத்தினை வகிக்கும் படி இந்தியா கேட்டுக் கொண்டது. அதாவது நோர்வேக்கு தொடர்பாளர் பணிபாத்திரமே வழங்கப்பட்டது. சகல தீர்மானங்களையும் புதுடெல்லியே எடுந்திருந்தது. இவ் உண்மையினை தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில் பின்வருமாறு விபரிக்கின்றார். “நோர்வே என்பது வெறுமனே பிரபாகரனை அணுகுவதற்கான ஒரு தொடர்பாளர் பாத்திரம் மட்டுமே. இலங்கையின் சமாதான முயற்சி வெளிப்பார்வைக்கு நோர்வேயின் குழந்தை போன்று காட்சியளித்தாலும் உண்மையில் இதை இயக்கிய சக்தி இந்தியாதான்”.
தனது பணி வெறுமனே தொடர்பாளர் பணிதான் என்பதை நன்கு அறிந்து கொண்டாலும் இப் பணி மிகவும் குறுகிய காலத்தில் நிறைவடைந்துவிடும் என்று நோர்வே எதிர்பார்த்திருந்தது. ஆனால் நோர்வே எதிர்பார்த்தது போல் குறுகிய காலத்தில் இது நிறைவடைந்துவிடும் என இந்தியா எண்ணியிருக்கவில்லை. இதனை எரிக் சொல்ஹெய்ம் வார்த்தையில் கூறுவதாயின் “சில மாதங்களில் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நோர்வேயின் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தையினை ஆரம்பித்தோம். எங்களை மிகவும் அமைதியாக இருக்கும்படியும், அமைதியாக இருக்க முடியவில்லையாயின் இதிலிருந்து விலகிவிடுங்கள்…. இதற்குக் குறைந்தது பத்து வருடங்கள் எடுக்கலாம். சமாதான செயல்முறையுடன் அமைதியாக இருப்பதற்கு நீங்கள் தேவை” என இந்தியா எமக்குக் கூறியது.
சமாதான முயற்சிகளில் மறைமுகமாக இந்தியா ஈடுபட்டுள்ளதை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்ததுடன் அதனை விரும்பியும் இருந்தனர். ஆனால் திரைமறைவில் தான் செயற்படுவதை வெளிப்படையாகக் கூற இந்தியா விரும்பவில்லை. 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்த நிறுத்த உடன்பாட்டினையடைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன் அதற்கான பல உள்ளடக்கங்களையும் புதுப்பித்துக் கொடுத்தது. சமாதான முயற்சிகளில் வேறு நாடுகள் தொடர்புபடுவதை இந்தியா விரும்பாததுடன், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்த நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துள்ளது.இதனை எரிக் சொல்ஹெய்ம் “இந்திய றோ அதிகாரிகள் இந்த முயற்சிக்குப் பின்னால் இந்தியா இருப்பதை பகிரங்கப்படுத்த வேண்டாம் எனக் கோரியிருந்தனர். இதனால் இவ் யுத்த நிறுத்த உடன்படிக்கை நோர்வேயின் தனித்துவமான செயற்பாடு போல் கருதப்பட்டது. சமாதான முயற்சிகளில் பிரதான அனைத்துலக சக்தி தொடர்புபடுவதை இந்தியா விரும்பவில்லை. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் பங்கு பெற வேண்டும் என்பதை இந்தியாவே தீர்மானித்தது. 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னர் இந்திய றோ அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ரகசியமாகச் சந்தித்தும் இருந்தனர்” எனக் கூறியமை இதனை உறுதிப்படுத்துகின்றது. எனவே இலங்கையில் நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகளின் பின்னணியில் இந்தியா பிரதான உந்து சக்தியாக இருந்ததும், இதனை தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு அறிந்திருந்தனர் என்பதுடன் இறுதியில் அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இந்தியா காரணமாக இருந்தது என்பதும் தெளிவாகின்றது.
இந்தியாவின் தேசிய நலன்களை நிராகரித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் எதையும் சாதித்து விட முடியாதிருந்தது. இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் தேசிய நலனுக்காகத் தமது கொள்கையினை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கவில்லை. இரு தரப்பும் ஒருவரின் நலனுக்காக மற்றவர் தமது கொள்கையினை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தனர். அதேநேரம் ராஜீவ் காந்தி படுகொலை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உச்ச மட்ட கோபத்திற்குள் இந்தியா உள்ளாவதற்குக் காரணமாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாதுள்ளது. ஆயினும் அன்ரன் பாலசிங்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்திருந்தார். 2006ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக இவர் கூறியகருத்துக்கள் இதனை உறுதிப்படுத்தியிருந்தது. “இது வரலாற்று ரீதியான நிரந்தரத் தன்மைமிக்க துன்பியல் சம்பவம். இதற்காக நாங்கள் ஆழ்ந்து வருந்துகின்றோம். இந்திய மக்களும், இந்திய அரசும் இந்த விடயத்தை மிகவும் பெரும் தன்மையுடன் புறம்தள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்”.
ஆயினும் இதனை எரிக் சொல்ஹெய்ம் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார். “அரசியல்வாதிகளை படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித இராணுவ அல்லது அரசியல் விளக்கங்களையும் கொடுக்க முடியாது. ராஜீவ் காந்தியை ஏன் படுகொலை செய்தார்கள்? ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து ஆதரவினைப் பெற வேண்டும் என்றால் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி எவரையாவது கொலை செய்வதா? தமிழ் புலிகளுக்கு இந்தியா பிரதான ஆதரவு வழங்கும் நாடாக இருந்தது. ஏன் அவர்கள் இந்தியாவின் முன்னால் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள்? இது பாரிய தவறாகும்”.
மாற்றுத் தீர்வில் நாட்டமின்மை
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அனுபவித்த சலுகைகளை நோர்வேயின் அனுசரனையிலான பேச்சுவார்த்தையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுபவித்தனர். இது தொடர்பாக நோர்வே வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு விபரிக்கின்றது. “அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு நன்மையளித்தது. இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் சந்திப்புக்கள், பொது விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திலும் பங்குபற்றித் தங்கள் புலிக் கொடியை ஏற்றினர். பாடசாலைகளில் தங்கள் பிரச்சாரப் படங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் பொது நிகழ்வாக மாறியது. தங்களின் செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அரச தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழவில்லை. மூன்றாவது சமூகக் குழுவான முஸ்லிம்களிடமிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் அரசு – புலிகள் இருதரப்பு சமநிலை வலு பிறிதொரு நிலைக்கு மாறியிருந்தாலும் அடிப்படையில் யுத்த நிறுத்த உடன்பாடானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே சாதகமாக இருந்தது”.
“எதிரியை எதிரியாகத் தொடர்ந்து பேணுவதன் மூலம் இலக்கினை அடைதல்” என்ற தத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்திக்குச் சமமான மாற்றுத் தீர்வினை முன்வைக்கக்கூடிய சூழல் உருவாதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்தனர். ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாத் தெரிவுசெய்யப்பட்டிருப்பின் மாற்றுத் தீர்வு ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து ரணில் விக்கிரமசிங்காவினை அரசியலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர். இதனை எரிக் சொல்ஹெய்ம் தனது அறிக்கை வெளியீட்டு உரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். “நானும் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட மிலிந்த மொரகொடவும் இணைந்து சமஸ்டித் தீர்வு நகலொன்றை வரைந்தோம். அதனை அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது பிரபாகரனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அது நிராகரிக்கப்பட்டது”.
இது மாற்றுத் தீர்வை பரிசீலிக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கவில்லை என்பதை உணர்த்தப் போதுமானதாகும். ஆயினும்தமிழீழ விடுதலைப் புலிகளை மாற்றுத் தீர்வு ஒன்றினை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. மாறிவரும் பூகோள அதிகாரச் சமனிலையால் இனிவரும் காலங்களில் இலங்கையுடன் மாத்திரமன்றி மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சர்வதேச அரசுகளுடனும் யுத்தம் புரியவேண்டிவரலாம் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எடுத்துரைக்கக்கூடிய வல்லுனர்கள் இத்தருணத்தில் இல்லாமல் போனது துரதிஸ்டவசமானதாகும்.
2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் இவ்வெற்றிடம் ஏற்பட்டிருக்கக் கூடும். எரிக் சொல்ஹெய்ம் இதனைப் பின்வருமாறு விபரிக்கின்றார். “அன்ரன்பாலசிங்கம் புற்றுநோயால் இறந்திருக்காவிட்டால்…. நான் எண்ணுகின்றேன் அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் பாரிய வேறுபாடுகள் உருவாகிவிட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் எல்லாத்தவறுகளையும் செய்தனர்…. பாலசிங்கம் இறந்து மூன்று வருடங்களுக்குப் பின்னர்கூட தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து அர்த்தமுள்ள சிறிதளவிலான இராணுவ அல்லது அரசியல் தொடர்பான எவ்வித ஆரம்பமும் நிகழவில்லை. பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் பிரபாகரன் தனித்திருந்தே தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார்”.
இறுதிநேர ஏற்பாடு
நோர்வேயின் அறிக்கையில் முக்கியமான பிறிதொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது “மூன்றாக இருந்த யுத்த தவிர்ப்பு வலயங்கள் இரண்டாக சுருங்கிய நிலையில், வைகாசி மாதம் 8ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சிறியதொரு நிலப்பகுதிக்குள் அகப்பட்டனர். மறுதினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கடைசிக் கப்பல் வன்னியைச் சென்றடைகின்றது. கடும் சண்டையால் கப்பலின் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு ஆயுதக்களைவு தொடர்பாக வரையப்பட்ட உடன்பாடு ஒன்றிற்கு இணங்கிப் போகுமாறு ஆலோசனை வழங்கினார். இந்த ஆவணம் வை. கோபாலசாமிக்கு அனுப்பப்பட்டு அது அவரால் நிராகரிக்கப்பட்டதுடன் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறும் அது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கும் என அவர் தமிழீழ விடுதலைப் புலிககுக்கு ஆலோசனை கூறுகின்றார். இந்நேரத்தில் இலங்கை இராணுவம் தனது இறுதித் தாக்குதலை தொடுப்பதற்குத் தயாராகியிருந்தது.
மாற்று வழியோன்றினை ஏற்றுக் கொள்ளும்படி தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்ப்பந்திக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. தானே தெற்காசிய வல்லரசு என்று இந்தியா நம்புகின்றது. அத்துடன் தனது அயல் நாடுகளில் சமாதான சூழல் நிலவ வேண்டும் எனக் கருதுகின்றது. இதனால் இலங்கையில் மோதல் தணிப்பு எத்தகைய நிலையில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாடாக இந்தியாதான் இருக்க வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறையுடன் இருக்கிறது. 1980 களுக்குப் பின்னர் இலங்கையின் உள் விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்ட காலத்திலிருந்து இது வரை இக்கொள்கையினையே இந்தியா பின்பற்றுகின்றது. முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய பேட்டியில் “யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பூரணமாக அழித்தொழிக்கப்படுவதைப் நேரடியாகப் பார்ப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. ஆகவே நான் நம்புகின்றேன் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக இந்தியாவிற்கு நன்கு தெரியும். ஏனெனில் பாராட்டப்படக்கூடிய சிறந்த புலனாய்வாளர்களை முற்றுகைக்குள்ளாகியிருந்த யுத்தப்பிரதேசத்திற்குள் இந்தியா வைத்திருந்தது” எனக் கூறியுள்ளார். எனவே “இந்தியாவின் அங்கீகாரத்துடன் தான் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்தியா எண்ணியிருந்தால் யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த வேளையில் அதனைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அவ்வாறு சொல்லவோ செய்யவோ இல்லை”. இந்தியாவின் சதிக்குத் துணைபோன நோர்வே தமிழ் மக்கள் சமத்துவம், கௌரத்துடன் இலங்கையில் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். இதனை நோர்வே செய்யத் தவறுமாயின் சதிக்குத் துணைபோன குற்றச்சாட்டிலிருந்து வரலாறு