சர்வதேச மேற்பார்வை நிறுத்தப்படவேண்டும் என்பதா கஜேந்திரகுமாரின் நோக்கம்

375

ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திரகுமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் ஜெனீவாவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணங்காட்டி இலங்கை அரசாங்கம் ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு அனைத்துலக சமூகம் இடமளிக்கக் கூடாதெனவும், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறிருந்தார்.

இதன்மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கி, மஹிந்தவை காப்பாற்ற சுமந்திரன் முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் முகமாக, ஆதவன் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்த போதே சுமந்திரன் மேற்குறித்தவாற கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தற்போதுள்ள புவிசார் அரசியல் சூழ்நிலையில் இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ பாரப்படுத்துவது சாத்தியமற்றது என்பது கஜேந்திரகுமாருக்கும் புரியும்.

இப்படி இருக்கையில் அவரது நகர்வு இலங்கை மீதான சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கஜேந்திரகுமாமார் கூறுவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவ்விடயங்களை பாரப்படுத்துவதாக இருந்தால், குற்றவியல் நீதிமன்றமானது யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மாத்திரமே அது குற்றங்களாக பார்க்கும். ஆனால், ஐ.நா. தீர்மானத்தின் படி யுத்தக் குற்றம் மட்மடமன்றி பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் அதில் உள்ளன.

ஐ.நா.வில் நான் இலங்கைக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக கஜேந்திரகுமார் குறிப்பிடுகிறார். நான் கால அவகாசமாக அதனைக் கருதவில்லை. மாறாக இலங்கை மீதான சர்வதேசத்தின் பார்வை நீடிப்பாகவும் மேற்பார்வை தொடர்ச்சியாகவுமே கருதுகின்றேன். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் எல்லா விடயங்களும் முடிவுக்கு வந்து விடும். அப்படி முடிந்தால் மஹிந்த தரப்பிற்கு அது சாதகமாக அமையுமே தவிர தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நன்மை பயக்காது” எனத் தெரிவித்தார்.

SHARE