சர்வதேச விசாரணைகள் தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுமா?

420

இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது ‘இனப்படுகொலையே’ என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. தீர்மானத்தினை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈ.பி.டி.பி) ஆதரித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கடந்த வருடம் முழுவதும் பலமுறை குறித்த தீர்மானத்தை வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைக்க முனைந்தார். ஆனாலும், தீர்மானத்தின் சரத்துக்கள் தீர்க்கமானதாக இல்லை, ஆதாரங்கள் போதுமானதாக இல்லை மற்றும் பொருத்தமான அரசியல் சூழல் இல்லை என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற மைத்திரி அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே கடந்த நிலையில், வடக்கு மாகாண சபையில், இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை முக்கியம் பெறுகின்றது.
அதுவும் மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலொன்று நடைபெறவிருந்த நிலையில் குறித்த தீர்மானம் தென்னிலங்கை அரசியல் களத்தில் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. ஏற்கெனவே, பொது எதிரணியாக ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்ட மைத்திரிபால சிறிசேன மீது சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும், மஹிந்த அரசாங்கமும் பிரிவினைக்குத் துணை போகும் ‘எதிரணி கூட்டு’ எனும் கருத்துக்களை பெரும் பிரசாரமாக முன்வைத்தது. இறுதி மோதல்களில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானத்தை வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது.
புதிய அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘ஓர் அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி மோதல்களின் போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படை யினரால் காப்பாற்றப்பட்டார்கள். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது’ என்றார். அத்தோடு, ‘இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடக்கு மாகாண முதலமைச்சரும், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு நன்றாகவே தெரி யும். கடந்தமுறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத அவர், இப்போது எப்படி அதை ஏற்றார்? இறுதி மோதல்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது.
விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதி மோதல்களின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணம்’ என்றிருக்கின்றார் அவர். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானத்தை வடமாகாண சபையில் முன்வைத்து முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய நீண்ட உரை மிகுந்த கவனம் பெறுகின்றது. அதுவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமும், கருத்தொருமையில்லாத நிலையும் மேலெழுந்துள்ள நிலையில் ‘இலங்கைத் தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாசைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன. எமது நிலை, விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில் பலரின் உதைக்கும் எதிர் உதைக்கும், எறிவுக்கும் எதிர் எறிவுக்கும் ஆளாகி வருகின்றது’ என்ற ஆதங்கத்துடனேயே அந்த உரை ஆரம்பமானது.

1. இறுதி மோதல்களில் திட்டமிட்ட ரீதி யில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
2. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
3. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலவில்லை.
4. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை கைவிட எத்தனிக்கின்றன.

இந்த நான்கு விடயங்களையும் முன்னிறுத்தியதாகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை அமைந்திருந்தது. இறுதி மோதல்களின் போது தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள், ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகளுக்கு அமைய சட்டவாளர்களின் உறுதுணையோடு பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தீர்மானம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தியாவது நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே என்றும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதித் தேர்தல் வெற்றிகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வஞ்சக முகத்தைக்காட்ட ஆரம்பித்திருப்பதாக மிகவும் காட்டமான முறையில் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

‘நாங்கள் மஹாநாயக தேரர்களிடம் வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் எதனையும் அப்புறப்படுத்தப்போவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்கவுள்ளோம்’ என்று ரணில் விக்கிரமசிங்க அண்மைய சந்திப்பொன்றின்போது தன்னிடம் குறிப்பிட்டதாகக்கூறிய சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அப்படியே கிடப்பில் போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயல்கின்றது. இது, தீர்வுக்கான வழியில்லை. மாறாக, பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான வழி என்று தொனிப்பட பேசியிருந்தார்.
இப்படியான முரண்பட்ட சூழலுக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற நிலையில், சி.வி.விக் னேஸ்வரனின் ஐக்கிய தேசியக் கட்சி மீதான காட்டமான விமர்சனம் பல செய்திகளைச் சொல்வதாக அமைகின்றது. ஏனெனில், சி.வி.விக் னேஸ்வரனை வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையிலான இணைப்பாக அல்லது மிதவாத தமிழ்த் தலைமையாக தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகள் கருதுகின்றன. அவரையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களும், நடவடிக்கைகளும் எரிச்சலடைய வைத்திருக்கின்றது.
குறிப்பாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான அண்மைய சந்திப்பின்போது பல இணக்கப்பாடுகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டிருந்தார். அதில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்து அங்கு மீண்டும் பொதுமக்களை குடியமர்த்துதல் என்பது முக்கியமானது. ஆனால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன அண்மையில் மேற்கொண்ட வடக்கு விஜயத்தின் போது, ‘வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது’ என்ற கருத்தை வெளியிட்டு வைத்தார்.
இன்னொரு விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அது, என்னவெனில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதனால், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை கைவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இதனை பெரும் அழுத்தமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வைத்திருக்கின்றார்.
அந்த விடயத்தையும் சி.வி.விக் னேஸ்வரன் தன்னுடைய உரையின் போது கோடிட்டார். தங்களுக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமைக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுக ளின் விசாரணைகளோ, தீர்மானமோ அவசியமில்லை என்பது. அதுதான், உரையின் ஆரம்பத்திலேயே தமிழர்களாகிய நாம் உதைபடும் பந்தாக இருக்கின்றோம் என்கிற ஆதங்கத்தினை முன்வைத்திருந்தார்.
‘இறுதி மோதல்களில் இடம்பெற்றது இனப்படுகொலையே’ என்பதை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை முழுவதுமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டுமே வரலாற்றில் பதிவுகளாக இருக்கும். அதையே, குறித்த தீர்மானம் இறுதியாக சாதித்ததாக இருக்கும். ஏனெனில், சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானத்தினை கவனத்தில் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இப்போது கிஞ்சித்தும் இல்லை.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை கோருவதற்கான சமிக்ஞையே அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பின் போது எமக்குக் காட்டப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகா ணசபையின் 34வது அமர்வு நடைபெற்ற நிலையில் இனப் படுகொலைக்கு எதற்காக சர்வதேச விசாரணையினை நாங்கள் கோருகி றோம் என்பதற்கான விளக்கத்தை சபைக்கு வழங்கும் வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதுமே அவர் இவ்வாறு கூறினார்.
முதலமைச்சர் மாகாணசபையில் இன அழிப்புக்கான தீர்மானத்தை கொண்டுவந்திருந்த நிலையில் இந்த பிரேரணை எதற்காக? சர்வதேச ஒழுங்கை மீறி செயற்பட்டால் வெற்றி கிடைக்குமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், சர்வதேச நாடுகளுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் அல்லது அவர்களுடைய நலன்சார்ந்த விடயங்கள் இருக்கும்.
அதற்காக எங்களுடைய நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது அண்மையில் நாம் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்தபோது அந்தச் சந்திப்பில் உள்ளக விசாரணைக்கான சமிக்ஞையே காண்பிக்கப்பட்டது.
ஆனால் எங்களுடைய மக்கள் உள்ளக விசாரணையில் நம்பிக்கை யற்றிருக்கின்றார்கள். அதுவே எங்கள் நிலைப்பாடும் கூட. இந்நிலையிலேயே நாங்கள் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம்.
நாங்கள் எங்களுக்கு எது சரியானது, எது பிழையானது என்பதை ஆராய்ந்து அதையே கேட்க வேண்டும். அதனை யாரும் பிழையென கூற முடியாது என முதலமைச்சர் விளக்கினார். இவ்வாறான நிலையில் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பதவியினைப் பெற்றிருக்கின்றது. ஒருவேளை பதவி மோகங்களால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள வர்கள் அரசினால் உள்வாங்கப்படலாம். சம்பந்தனுடைய கருத்துக்களின்படி வடமாகாண சபையினர் இனப்படுகொலை தொடர்பில் பேசிக்கொண்டிருக்க தாம் அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்வதற்காக அரசுடன் இணையலாம் என்கின்ற சிந்தனையுடன் அவர்கள் செயற்பட்டு வருவதுபோல் தென்படுகிறது.
பதவிகளின் பின்னாள் அலை யும் இவர்கள் மீண்டும் எவ்வாறு தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் தொடர்பில் பேசப்போகின்றார்கள். ஆரம்பகட்டத்தில் சிவாஜிலிங்கம் வடமாகாணசபையில் ஒரு பிரேரணையை முன்வைத்தபோது போரின் நிலவரங்கள், பிரபா கரனின் நோக்கம் என்னவென்று தெரிந்தபின் தீர்க்கமான முடிவினை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்தார். பின்னர் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அடுத்து என்ன நிகழப்போகின்றது என்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் விடயமாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடிய போராட்டம் பலமிழந்து போனால் தமி ழினம் இலங்கையில் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படும். இதனை தடுப்பதற்காக தொடர்ந்தும் த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபை மற்றும் கிழக்குமாகாண சபை என இரண்டும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும்.

இந்தப்போராட்ம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ? எங்கு தொடங்கியதோ? அங்கேயே மீண்டும் சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. தமிழினத்திற்கு நன்மை பயக்கும் முகமாக இந்தத் தேசிய அரசாங்கம் அமையும் எனக் கூறிக்கொண்டு த.தே.கூட்டமைப்பினுடைய பலத்தினை இல்லாதொழிப்பதற்கு முனைப்புக் காட்டப்படும். இதற்கு எதிரான முன்னெடுப்புக்களைத்தான் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மேற்கொண்டுவருகின்றார். இதற்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும், வட மாகாணசபைக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகி விக்னேஸ்வரனை வடமாகாண சபையில் இருந்து வெளியேற்றும் சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம். தற்போதைய அரசி யல் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்கின்ற சிந்தனையுடன் ஆழமாக செயற்படவேண்டும். விக்னேஸ்வரனின் செயற்பாடுகளில் அரசு குறுக்கிடு மாகவிருந்தால் அதன் விளைவு பார தூரமாக இருக்கும். இதனைத் தவிர்த்துக் கொண்டு த.தே.கூட்டமைப்பும், வடமாகா ணசபையும் சிந்தித்துச் செயற்படுவது சிறந்தது.

சுழியோடி

SHARE