கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்தார்.
கிரிக்கெட் உலகில் காலடி பதித்த முரளிதரன்
தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார். இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தரதுடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக அதே அரங்கில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் பைபிள்
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோர் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சின் டொன் பிராட்மன்
1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.
இதனால் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் டொன் பிராட்மன் என வர்ணித்துள்ளார்.
சிகரம் நோக்கி நடந்த முரளிதரன்
சின்னசாமி முத்தையா, இலட்சுமி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக நத்தரன்பொத்தை, குண்டசாலையில் முரளிதரன் பிறந்தார்.
இவருக்கு சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பள்ளிக் கல்வியை பயின்ற முரளிதரன், பள்ளி அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார்.
பள்ளிக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பள்ளி அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து 1990 மற்றும் 1991ம் ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் “பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்” என்ற விருதை பெற்றார்.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான, சென்னையை சேர்ந்த மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார்.
1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை தொடங்கி உச்சம் தொட ஆரம்பித்தார்.
ஒழுக்கத்தில் சச்சினுடன் கைகோர்த்த முரளிதரன்
இந்திய அணிக்கு சச்சின், கும்பிளே, அவுஸ்திரேலியாவுக்கு பொண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அதிக எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை.
தனிப்பட்ட ஒழுங்கீன பிரச்சனைகள், ஆடுகள சச்சரவுகள், அணிபிளவு அரசியல், நிர்வாக எதிர்ப்பு போன்று எந்த களங்கமமும் அற்ற ஆட்ட வரலாற்றை பொறுத்த வரையில் முரளிதரனுடன் ஒப்பிடத்தக்க நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
என்னை நம்பி அணி இல்லை
கிரிக்கெட்டில் இருந்து 2011ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னதாகவே ஓய்வு பெறப் போவதாக முத்தையா முரளிதரன் கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ஆட முடியாததால், நம்பிக்கை இழந்து காணப்படும் முரளிதரன் 2011க்கு முன்பாகவே ஓய்வு பெற்றுவிடுவேன் என்று விரக்தியுடன் பேசினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 16 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி மிகவும் சோர்ந்து போய்விட்டேன். அதனால் அந்த நாட்களைப் போல என்னால் விளையாட முடியவில்லை.
என் உடம்பு எந்தளவு ஒத்துழைக்கிறதோ அதைப் பொறுத்துதான் எல்லாம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லை.
ஒரு காலத்தில் விக்கெட்டுக்காக அணி என்னை நம்பியிருந்த காலம் உண்டு. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால் நல்ல திறமையாக நான் கிரிக்கெட்டை விளையாடி வந்திருக்கிறேன் என்ற சந்தோஷமும், பெருமையும் எனக்கு உள்ளது என்று கூறி சாதனைகளுக்கு விடை கொடுத்தார்.
|