சிங்களப் பேரினவாதத்தின் 07வது துரோகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

301

கூட்டாட்சி அரசாங்கத்தை நம்பி சிறுபான்மைக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இவ்வரசாங்கம் நிறுவப்பட்டது. சுமுகமாக தீர்வுகளை நோக்கி காய் நகர்த்தப்படும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவ்வரசாங்கம் மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றவேண்டும் என வலியுறுத்தி நின்றது. தேர்தல் காலத்திலும் இவர்களது பிரச்சாரங்கள் இவ்வாறே இருந்தது. அதன் பின்னர் கூட்டாட்சி அரசாங்கத்தின் உண்மை முகம் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. அதனது பூரண வெளிப்பாடே இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேன அவர்கள் சதிப்புரட்சி ஒன்றை உருவாக்கி இலங்கைத் திருநாட்டில் ஒரு குழப்ப நிலையினை ஏற்படுத்தி இருக்கின்றார். அந்த வகையில் வில்லியம் கோபல்லாவ, ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, ரணசிங்க பிரேமதாசா, டிங்கிரி பண்ட விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகிய 07 ஜனாதிபதிகளும் துரோகிகளாகவே முத்திரை குத்தப்படுகின்றனர்.
இதில் குறிப்பிடப்பட்ட எவருமே தமிழ் மக்களுக்கான உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. கூடிய ஆண்டுகள் சந்திரிக்கா அம்மையார் அவர்கள் ஆட்சி செய்திருக்கின்றார். இவர்கள் அனைவரும் தமது சுயநல அரசியலையே செய்து வந்தனர். மாறி மாறி வரும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் சுமத்தப்பட்டதே தவிர சிறுபான்மைச் சமூகத்திற்குச் சாதகமாக அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே அவர்களுக்குக் கிட்டவில்லை. இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்துகொண்டே செல்கின்றது. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் நிலைமைகள் எவ்வாறு இருந்ததோ அதைவிட தற்போது மோசமான நிலையில் நாடு பயணிக்கிறது. இந்நாட்டில் சிங்கள பேரினவாத அரசினால் மீண்டும் மறைமுகமாக இனவழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. வலுவானதொரு பௌத்த நாடாக இலங்கையை வைத்துக்கொள்வதும், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் கரையோரங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதும், வட-கிழக்கில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதிலும் அரசு கடந்த காலங்களை விட தற்போது தீவிரமாகச் செயற்படுகின்றது.

        

01.William Gopallawa
විලියම් ගොපල්ලව
வில்லியம் கோபள்ளவா
(1897–1981)

02. Junius Richard Jayewardene
ජුනියස් රිචඩ් ජයවර්ධන
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(1906–1996)

03. Sri Lankabhimanya
Ranasinghe Premadasa
රණසිංහ ප්‍රේමදාස
ரணசிங்க பிரேமதாசா
(1924–1993)

04. Sri Lankabhimanya
Dingiri Banda Wijetunga
ඩිංගිරි බණ්ඩා විජේතුංග
டிங்கிரி பண்ட விஜேதுங்க
(1916–2008)

05. Chandrika Kumaratunga
චන්ද්‍රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග
சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா
1994–2005

06. Mahinda Rajapaksa
මහින්ද රාජපක්ෂ
மகிந்த ராசபக்ச
2005–2015

07. Maithripala Sirisena
මෛත්‍රිපාල සිරිසේන
மைத்திரிபால சிறிசேன
2015 –

தமிழ் மக்கள் காலகாலமாக கேட்டு வந்த வட-கிழக்கு இணைப்போ அல்லது 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய விடயங்களோ, கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் பற்றியோ, தொடர்ந்தும் பல வருட காலங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறை கொள்ளாது தான் இலங்கையை இவ்வளவு காலங்களாக ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களும் செயற்பட்டு வந்தனர் என்பதே வரலாறு. அதே வரலாற்றுத் துரோகத்தை தற்போதைய ஆட்சியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தமிழினத்திற்குச் செய்துள்ளார். இதிலிருந்து சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் வழங்குவதற்கு உடன்பாடு இல்லை என்பதையே இந்த நல்லாட்சி அரசும் எமக்கு கற்றுத்தந்த பாடம் எனலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற பழமொழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு துரும்பாக கையில் எடுக்கவேண்டும்.

SHARE