சிங்களப் பேரினவாதிகளான மைத்திரி-ரணில், த.தே.கூட்டமைப்பை பிளவுபடுத்த பாரிய திட்டம்

403

இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வந்துகொண்டிருக்கக்கூடிய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முழுமையாக வழங்கப்போவதில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய அரசி யல் காலகட்டத்துள் வருகின்றபொழுது மைத்திரி – ரணில் உடனான தேசிய அரசாங்கம் ஒரு வலுவான நிலையில் உள்ளது எனப் பலராலும் பேசப்படுகின்றது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாயிற்று அல்லது தீர்க்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டுவதற்கான சிங்களப் பேரினவாதிகளின் முயற்சியே தேசிய அரசாங்கம் என்பதாகும்.
இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 05 ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் 30 வருட காலங்களாகப் போராடிய விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கேள்விக்குறியே தோன்றியுள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா போன்றோரின் காலத்தில் இந்திய – இலங்கை உடனான ஒப்பந்தத்திலே சரியான தீர்வினை தமிழினத்திற்குப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். இங்குதான் பாரிய மாற்றம் விடுதலைப்புலிகளுக்கும் – தமிழ் மக்களுக்கும் இடையில் உருவாகியது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இந்திய இராணுவம் காலடிவைத்தபோது விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அரசிற்கும் இடையே நிரந்தரமான பிரி வினையை உருவாக்குவதே பிமேதாசா வினதும், ஜெயவர்த்தனாவினதும் திட்டமாக இருந்தது. அதன் ஊடாக அனைத்துத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐக்கியதேசியக்கட்சி ஆட்சியில் இருந்த காலமாகும்.

இந்திய இராணுவத்தின் வருகையின் தந்திரோபாயமானது, விடுதலைப்புலிகளின் கைகளில் இலங்கை நாட்டை ஒப்படைப்பதாகும். அதற்காக ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள். ஆனால் நிலைமைகள் வேறுவிதமாக மாற்றம் பெற்றது. விடுதலைப்புலிகளை இந்திய அரசிற்கு எதிராக ஏவிவிட்டு அவர்களை இம்மண்ணில் இருந்து வெளியேற்றினால் விடுதலைப்புலிகள் எதனைக்கேட்கிறார்களோ? அதனைத் தருவேன் என்பதே பிரேமதாசாவின் உடன்பாடாகவும் இருந்தது. இவ்விடயத்தில் இலங்கை, இந்திய அரசுடன் இணைந்து தமிழினத்திற்குத் துரோகம் விளைவித்தது. ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுத்த இந்தியா விடுதலைப்புலிகள் உடனான இறுதிநேர யுத்தத்தில் காட்டிக்கொடுப்புக்களை மேற் கொண்டது.
குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள யோசப் முகாமில் இந்தியாவின் இராணுவ உயரதிகாரிகள் விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளை கண்கானிப்புக்கருவிகளின் உதவியுடன் அரசுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர். அதேவேளை பத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டமையும் விசேட அம்சமாகும். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களைச் செய்கின்றேன் என வெளியுலகுக்குக் காட்டினாலும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் கடந்த இலங்கை அரசுடன் இணைந்து விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், தமிழினத்தையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தீவிர மாக ஈடுபட்டது. தற்பொழுது மீண்டும் ஒரு போராட்டத்தை உருவாக்கவேண்டும் என்கின்றதான முனைப்புடன் அமெரிக்க அரசு செயற்பட்டுவருகின்றது. இவை இவ்வாறிருக்க ரணில் தலைமையை கொண்டுவந்ததற்கான காரணம் என்னவென்றால் அந்த நாடுகளினு டைய தேசியப்பிரச்சினையில் அக்கறை காட்டவேண்டும் என்பதற்காகவே. தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை என்பது கிடப்பில் போடப்பட்டதொன்றாகவே இருக்கும். காலத்திற்குக்காலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் கைகொடுக்கின்றோம் என சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியாக பல்வேறான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. அப்பேச்சுக்கள் ஒவ்வொன்றும் திம்பு முதல் டோக்கியோ என ஆரம்பித்து தொடர்ந்தும் இடம்பெற்றுவந்தது. எனினும் அனைத்துப்பேச்சுக்களும் தோல்வியில் முடிவடைந்தது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல 22 சர்வதேச அமைப்புக்களும், 52 நாடுகளும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அங்கீகரித்தன. இவையணைத்தும் தோல்வியில் முடிவடைவதற்கான அடிப்படைக்காரணங்களாக அமெரிக்கா மற்றும் இந்தியாவினது தேசிய அரசியல் காணப்பட்டது. சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்றவேண்டும் என்கின்ற முனைப்போடு விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட இவ்விருநாடுகளும் முயற்சிசெய்து அதில் வெற்றியும் கண்டது. விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் சீனாவும் செயற்பட்டாலும் அந்நாடு தமது தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அபிவிருத்திகள் என்கின்ற போர்வையில் பணத்தினை வாரி வழங்கியது. இதனது விளைவு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இன்று தேசிய அரசு ஒன்றினை நிறுவும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசினைப்பொறுத்தவரை பலம் குன்றிய அரசு என்றே குறிப்பிடவேண்டும். யார் யார் எப்போது யாருடன் இணைவார்கள், வெளியேறுவார்கள் எனக்குறிப்பிடமுடியாது. இவ்வாறிருக்க த.தே.கூட்டமைப்பானது தற்போது பாராளுமன்றத்தில் வலுவான நிலை யில் இருக்கின்றது. இந்நிலையை உடைப்பதற்கான முயற்சிகளாக பதவிகள் மற்றும் இவர்களுக்கான சுகபோகங்களை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் செயற்படுத்தலாம் என இவ்வரசு கங்கணம் கட்டிநிற்கின்றது. த.தே.கூட்டமைப்பின் ஆயுதக்குழுக்களைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த அரசுகளுடன் விலைபோனவர்கள்தான். என்றாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் த.தே.கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இவ்வாயுதக்குழுக்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் பாரிய ளவில் தமிழ் மக்களுக்கான தீங்கு நட வடிக்கைகளில் இவர்கள் ஈடுபடவில்லை.

தற்போது ஒற்றுமையாக இந்தக் கட்சிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாக இணைந்துள்ள இத்தருணத்தில், ஆசைகாட்டி மோசம் செய்யும் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் தேசிய அரசின் முக்கிய புள்ளிகளான மைத்திரி, ரணில், சந்திரிக்கா ஆகிய மூவரும் இணைந்து செயற்படுகின்றனர். ஒரு குழுவை இல்லாதொழிக்கவேண்டும் அல்லது அதனது செயற்பாடுகளை ஓரங்கட்டவேண்டும் எனில் அரசியல் மாத்திரமல்ல அதனை இராஜதந்திர முறையிலும் மேற்கொள்ள இயலும். அதுவே சர்வதேச நாடுகளின் அரசியல் உத்தியாகும்.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களை சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்றியிருக்கின்றார்கள். பாராளு மன்றத்தில் முதலாவது அமர்வில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தன் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கின்றபொழுது இவ்வரசுடன் ஒத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே அமையப்பெறுகின்றது. நாடாளுமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தலை மையில் கூடியது. இதையடுத்து சபா நாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட கரு ஜயசூரிய எம்.பிக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாட்டின் உயரிய சபைக்கு நீங்கள் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அரசியல் உரிமை, சபையைப் பிரதிநிதித்து வப்படுத்தும் உறுப்பினர்களின் உரிமை ஆகியவற்றைக் காப்பவராக நீங்கள் இருக்கின்றீர்கள். அரசியல் அனுபவம் மிக்க ஒருவர் சபை உறுப்பினர்களையும் நியாயமாக நடத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

நாட்டின் முக்கியமான தருணத்தில்தான் நீங்கள் சபாநாயகராகப் பதவியேற்றுள்ளீர்கள். நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்று முரண்பாடுகள் காணப்பட்டன. யுத்தத்தால் நாம் துன்பப்பட்டோம்;. பல பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அதை மீண்டும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் நாட்டில் நீதி, இறைமையை நிலைநாட்டத்தான் ஜனவரி 8ஆம் திகதி தமது வாக்குகளை அளித்தனர். இந்த நாடாளுமன்றமானது முக்கிய விவாதத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. புதிய ஆட்சியின் கீழ் ஜனநாயகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும்.

சகல மக்களும் உரிமை, இறைமை உடையவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பொறுப்புகளை நீங்கள் மதித்து செயற்படுவீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த இலக்குகளை அடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு முழு ஆதரவை வழங்கும்’ என தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் கூறியிருப்பதானது இனிமேல் தாம் எதிர்ப்பு அரசியலை நடாத்தப்போவது இல்லை என்பதனையே எடுத்துக்காட்டுவதுடன் வடமாகாண சபை தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை மற்றும் இனப்படுகொலை தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றது என்பதையே இவ்வுரை எடுத்துக்காட்டுகின்றது. பாராளுமன்றில் இருந்து சாதித்துக்காட்டவேண்டும். அதற்கேற்ற சந்தர்ப்பங்கள் கிடைத்தால் பதவிகளை யும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதாகும். இதற்கிடையில் சம்பந்தன் அவர்களுக்கு எதிர்க்கட்சிப் பதவியினை வழங்கினால் இப்பதவியில் இருந்துகொண்டு இனப்படுகொலைகள் பற்றிப் பேசுவது சாத்தியமற்றதொன்றாகவே அமையும். தற்போது த.தே.கூட்டமைப்பின் அரசின் நிலைப்பாடும் அரிசிக்குள் பருப்பினைக் கலந்தது போன்ற செயற்பாடாகவே இருக்கின்றது. இந்நிலையில் தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் பற்றிப்பேசுவது எவ்வாறு என்கின்றதான கேள்விகளும் எழுப்பப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவினது திட்டங்கள் அனைத்தும் நீண்ட தூர இடைவெளி யின் பின்னர் ஒரு விடயம் முற்றாக தகர்க்கப்படுதல் என்பதாகும். அவ்வாறான திட்டங்களையே கடந்தகாலங்களிலும் அவர் செயற்படுத்திக் காட்டியிருக்கின்றார். அவர் பிரதமராக வந்ததும் இலகுவாகத்தான். தற்போதுங்கூட அவரது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவி ரம் காட்டிவருகின்றார். அதற்காக மாகாண சபை, உள்ளூராட்சி போன்ற தேர்தல்களில் தமது கட்சியின் உறுப்பினர்களை பலப்படுத்தி அடுத்துவரும் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பான்மைப் பலத்தினைப்பெறும் நோக்கில் முழுமூச்சாக செயற்பட்டுவருகின்றார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன், பொன்.செல்வராசா போன்ற த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உள்வாங்கப்பட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அதற்காகவே விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியாகவிருந்த கருணா அம்மான் அவர்களை ஆசிய பசுபிக் வலய நாடுகள் பிரபல்யப்படுத்தி வருகின்றன. அதற்காகவே திட்டமிடப்பட்டு இம்முறைத்தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியல் கூட அவருக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு நாட்டிலும் எங்கோ ஓர் மூலையில் எப்பொழுதும் ஒரு ஆயுதப்போராட்டம் இருக்கவேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் ஒரு அரசியல் உத்தியாகும். அதனையே மைத்திரியும், ரணிலும் செயற்படுத்தி வருகின்றனர். தேசிய அரசாங்கம் தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பங்காளிக்கட்சிகள் தேசிய அரசிற்கு ஒத்துழைப்பு வழங்காதவிடத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது அதற்கான மாற்றுவழிகள் கையாளப்படும். தற்போது பதவி தேவை இல்லை எனக்கூறுபவர்கள் பதவி தேவை என ஒற்றைக்காலில் நிற்பார்கள். கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கும்பொழுது த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் ஒத்த செயற்பாட்டினையே நடத்திவருகின்றார்.

சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியாகவும் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் மேற் கொள்ளப்பட்டுவந்த நிலையில் அனைத்துமே தற்போது மந்தநிலையினை அடைந்துள்ளது. தேர்தலில் பேசப்பட்டுவந்த த.தே.கூட்டமைப்பின் வேகம் குறைவடைந்துள்ளது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை தொடர்பில் வாய்நிறையப் பேசிய த.தே.கூட்டமைப்பினர் ரணிலின் சதித்திட்டத்தினால் வாய்மூடும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இனி மேல் புட்டுக்குழலுக்கு தேங்காய்ப் பூவினைப்போல த.தே.கூட்டமைப்பினர் எனக்கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நெற்றிப்பொறியன்

SHARE