சிங்களவர்கள் தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்-: C.V.விக்னேஸ்வரன்

460

சிங்களப் பெரும்பான்மையினர், பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்களமக்கள் தான் என்றும் தமிழர்கள்

Oct092013_2
இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நாவலர் சிலை நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிலைகளை நாம் நாட்டுவது எதற்காக? எமது பாரம்பரியத்தில் எமது சரித்திரத்தில், எமது பண்பாட்டுச் சூழலில் பலர் காலத்திற்குக் காலம் பிறந்து வளர்ந்து பாரம்பரிய
தொடர்ச்சிக்காகவும், எம் மொழியை, எம் இனத்தை, நாட்டை, மக்களை மேம்படுத்திச் செல்வதற்காகவும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு சரித்திரத்தில் இடம்பெறுகின்றார்கள்.

பொதுவாகச் சமுதாயமானது சீர்குலைந்து, இருக்கும் நிலையில் இவ்வாறான மறுசீரமைப்பினை சமுதாயத்தில் ஏற்படுத்துபவர்கள் அச் சமுதாயத்தின் நன்மதிப்பையும் நன்றியறிதல்களையும் பெறுகின்றார்கள்.

அவர்களைப் பின்னர் வரும் மக்கள் நன்றியறிதல்களுடன் மனதில் நிலை நிறுத்த வேண்டும் என்றே அவர்களின் பிரதிமைகளை சிலைவடித்து பாதுகாத்து வருகின்றார்கள்.

பௌத்தத்தின் பின்னைய உள்நுழைவால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்திற்கு பௌத்தத்தால் கவரப்பட்டு பௌத்த சமயிகளாக மாறி, அதன்பின்னர் சமய குரவர்களின் வரவாலும் அவர்களின் சமய ஆதிக்கத்தாலும் பௌத்தத்தில் இருந்து விடுபட்டு சைவத்திற்குச் சென்றவர்களே எமது மூதாதையர். ஒருகால கட்டத்தில் தமிழ்ப்பேசும் பௌத்தர்கள் வடகிழக்கில் வாழ்ந்ததால்த்தான் பௌத்த சின்னங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன.

அதையே தவறாகச் சிங்களப் பெரும்பான்மையினர் பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்களமக்கள் தான் என்றும் தமிழர்கள்
இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள். பௌத்த மதத்
தமிழர்களைச் சிங்களவர் என்று தவறாகப் பிரசாரம் செய்கின்றார்கள்.

ஏன் இராவணனையே ஒரு சிங்களவர் என்கின்றார்கள்! “தெமல பௌத்தயோ” அதாவது “தமிழ் பௌத்தர்கள்” என்ற ஒரு சிங்கள நூல் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன என்பவரால் உண்மையை விளக்கி சில காலத்தின் முன்னர் எழுதப்பட்டது.

அதன் மறு பிரசுரிப்பைச் சில பௌத்த பிக்குகள் அண்மையில் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு தான் உண்மையை வெளிவராமல் தடுக்கப்பார்க்கின்றார்கள் பெரும்பான்மையினருள் சிலர். சிங்கள மொழி என்பதன் உற்பத்தியே பௌத்தத்தின் நிமித்தமே எழுந்தது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். புத்த பிக்குகள் பாளி மொழியை இங்கிருந்த தமிழ் மொழிக்குள் உட்படுத்தியே சிங்கள மொழி பிறந்தது.

எனினும் சைவசமயம் மறு சமயங்களால் மங்கிப் போன காலகட்டங்களில் அதனை மேலோங்க வைப்பதற்கு வந்த அவதார புருஷர்கள் தான் எமது சமயகுரவர்கள்
நால்வரும் என்று கூறலாம். பல் வித அற்புதங்களைச் செய்தும், உணர்வுகளைக் கனிய வைக்கும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடியும் மக்கள் மனதை
இறைவன் பக்கந் திருப்பி மீண்டும் சைவத்தை வளரச் செய்த மகானுபாவர்கள் அவர்கள்.

அந்த விதத்திலேயே எமது நாட்டிலும் சைவ மறுமலர்ச்சி அண்மைய நூற்றாண்டுகளில் நடந்ததென்றால் அந்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களே.

இந்தத் தருணத்தில் வேறெரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சித்த, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவங்களின் நுண்விபரங்களை உள்ளடக்கிய பல
ஏட்டுச் சுவடிகளும் பழம்பெரும் நூல்களும் ஆங்காங்கே எங்கள் மக்கள் இல்லங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. நாவலர் அன்று செய்த கைங்கர்யத்தின்
தொடர்ச்சியாக நாங்கள் இந்நூல்களைச் சேகரித்து Micro Film என்ற நுண்படமெடுக்கும் முறையில் அவற்றைப் பிரதி பண்ணி ஒரு கலை அருந்தகத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

அந்நூல்களைத் தம்கைவசம் வைத்திருப்போர் எமது யாழ் முதன்மை நூலகருடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்தால் எமது வடமாகாணசபை அவற்றின் பாதுகாப்புக்கான காப்பகம் ஒன்றினை நிறுவ முயற்சி எடுக்கும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

ஆறுமுகநாவலர் முழுமையான சிந்தனையுடன் கடமையாற்றியவர். எவ்வளவுதான் ஒரு இனத்தின் தனிப்பட்ட நபர்கள்  பல நன்மைகளைத் தம் மக்களுக்குச் செய்தாலும்
காலாகாலத்தில் அவர்களுக்கு அரசியல்ப் பலம் இருந்தால்த்தான் மேம்பட்ட சேவைகளை அவர்கள் நல்கலாம் என்ற எண்ணத்துடன் தமிழ் மக்களின் நலன் கருதி
அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்குத் தகுந்த ஒருவரை அடையாளப்படுத்தி அவரைத் தேர்தலில் நிறுத்தி அவருக்காகப் பிரசாரம் செய்து அவரை வெற்றியும் பெற
வைத்தார். அவர் வேறு யாருமல்ல சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே!

சென்னை உலகத் தமிழ் மாநாட்டின் போது கம்பர், ஒளவையார் போன்றவர்களுக்கு சிலை அமைத்த போதும் நாவலருக்குச் சிலை வைக்காத ஆதங்கத்தை தீர்க்கும்
முகமாக எமது மக்கள் 1969ம் ஆண்டில் நாவலர் சபையினை அமைத்து நாவலர் சிலையை அமைத்து அன்றைய தேசாதிபதி, பிரதமர் மற்றுந் தந்தை செல்வா
ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற சமூகப் பிரதிநிதிகள் புடை சூழ பவனியாகக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துச் சென்று நல்லூரில் அவரது சொந்தக்
காணியில் சிலையையும் நாட்டி, நான்கு நாள் மாநாட்டையும் நடாத்தி பெருமைப் படுத்தினர்.

வடக்கு மாகாண வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மாகாண சபை செயற்படத்தொடங்கிய பின்னர் முதல்தடவையாக இன்று  வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத்திட்டத்தினை வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தின் கைதடி மத்தியில் தெரிவு செய்யப்பட்ட முற்றாக கண் பார்வை இழந்த பயனாளி கந்தையா வரதராசன் வீட்டில் அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொணடனர்.

வீடமைப்புத்திட்டத்திற்கான  நிதியாக கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூபா மூன்று மில்லியன் ஒதுக்கப்பட்டு வந்தது. 2014 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபாவில் முதலமைச்சரின் நல்லெண்ணத்தில் தோன்றிய “வறிய மக்களுக்கு புதிய வீடு” என்ற திட்டம் முதல்தடவையாக இவ்வருடம் யாழ்ப்பாணம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பயனாளிகள் வடக்கு மாகாண சபை முதலமைச்சரிடம் வீடு கட்டுவதற்கு உதவி கோரிய, போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பொதுமக்களிலிருந்து பொருத்தமான பயனாளிகள் சரியாக இனங்காணப்பட்டு ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் ஒரு பயனாளிக்கு ஆறு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் கூடுதலாக நிதி கிடைக்கப்பெற்றால் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இன்னும் வீட்டு வசதி இல்லாத வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

SHARE