1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.
‘அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்’ என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.
யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
‘சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு’ என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின் வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம் இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.
விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப் பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல் அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல் வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.
பார்வைக்கு சிங்கள அரசின் வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர் அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக் கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது. தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.
சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும் கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும் பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.
‘காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது’ என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும் அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.
எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல, இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால் சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத் தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.
வன்னித் தமிழனப் படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000 பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000 பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ 3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும் 2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில் கஸ்டம் இருக்க மாட்டாது.
சமாதான காலத்தில் கட்டுமானப்பணி, நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும் பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும் என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.
மேலும் படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம் சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின் பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும் அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப் படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.
சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின் வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன் வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத் தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள் கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.
இருப்பதில் இருந்துதான் அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம் நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில் இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது அவசியம்.
2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது
வன்னி மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு ‘றிவரஷ’ இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும் வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள் திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர். வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம் இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.
அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது. மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன் வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின் தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.
வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும், மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள் மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின. மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.
போராளிகளாய் பிள்ளைகள் யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில் பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.
தாங்க முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க் காணப்பட்டனர்.
முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும் வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர். வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.
இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம் பார்க்க வேண்டும்.
கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும், மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். ‘புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது’ என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.
எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில் சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி மண்ணின் பெரும் துயரை….!
3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.
யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின் செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன் கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக் கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) http://www.museology.org/japan.html. அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம் தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.
காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும் மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.
பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும், தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண் போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக் கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின் அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச் செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும், தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும் போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது வழக்கம்.
இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம் தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார்.
அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர் செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும் மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.
பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ் பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம் எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?
புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல் கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல் கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக.
சொல்லியழ எவருமின்றி!
யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.
அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. பின்னாளில் ஈழப் போரின் முழுச் சுமையையும் வன்னி மக்கள் முதுகில் சுமந்தனர். இலட்சியத்திற்காக உயிர், பொருள், உடமை, உழைப்பு, எண்ணம், உணர்வு, சிந்தை, செயல், பந்தம், பாசம், அனைத்தையும் அம்மக்கள் ஈழப்போரட்டத்திற்கு ஆகுதியாக்கினர்.
எதிரியோ தனது அனைத்து வளங்களையும் மஹிந்த சிந்தனையின் பெயரால் ஒருங்கு திரட்டி உலகை அரவணைத்தும், வன்னியை தனிக்கப்பிடித்தும் தனது கோரப் பற்களை வன்னியின் மீது கவ்வவிட்டார். தனது அறிவையும், ஆற்றலையும், சூழ்ச்சியையும், தந்திரத்தையும் கொண்டு, உலகை தன் கையில் கதாயுதமாய் ஏந்திய எதிரி, அப்பாரிய கதாயுதத்தால் வன்னி மண்ணை ஓங்கி உதைத்தார். மண்ணும் மக்களும், பயிர்களும் உயிர்களும், காடும் வயலும், பொன்னும் பொருளும், ஊரும் பெயரும் என அனைத்தையும் எதிரி தன் யுத்தத் தேர்க்காலுக்கு இரையாக்கினார். வன்னி மக்கள் தேர்க்காலில் சிதைந்து ஊர முடியாத அட்டைகளாய் நசியுண்டு இழுபட்டனர்.
சொந்தங்களை இழந்தனர். பந்தங்களையும் பாசங்களையும் இழந்தனர். சொத்துக்களையும் பத்துக்களையும் இழந்தனர். பத்து என்பதில் மானமும், மரியாதையும் தமிழர் ஏற்றிப் போற்றும் அனைத்து விழுமியங்களும் அடங்குகின்றன. எதிரி தன் கோரப் பற்களை பாலியல் பலாத்காரத்தில் தெளிவாக பதித்துக் கொண்டான்.
மேலங்கிக்காக போராடப் புறப்பட்டு, கோவணத்தையும் பறிகொடுத்த கதையாய் தமிழ் மக்களின் துயரம் உள்ளது. இதில் வன்னிமக்களின் துயரம் உச்சாணிக் கொம்பாய் காட்சியளிக்கிறது. வன்னி என்பது ஒரு நிலநூல் சொல்லாக மட்டுமன்றி, தமிழீழப் போராட்டத்தின் ஒரு குறியீட்டுப் பதமாகவும் மாறிய சொல் அது. தமிழீழம் எனும் இலட்சியத்தையும், உலகத் தமிழினத்தின் கனவையும் காவிநின்ற மண்ணாயும், மக்களாயும், பதமாயும் வன்னி அமைந்தது.
கடித்துக் குதறப்பட்ட அந்த மக்கள் இன்று எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடப்போராய், கைவிடப்பட்டோராய், அன்னியர்களின் தயவுக்கு கையேந்தி நிற்போராய் காட்சியளிக்கின்றனர். இந்த மக்களின் துயரத்தை வரலாறு சரிவரப் பதிவுசெய்ய வேண்டும். எல்லாத் துயரும் அவர்களுக்கே என்று எழுதி வைத்தாற் போல, துயரப்பட்ட அந்த மக்களை நோக்கி, எல்லாக் கவனமும் அந்த மக்களுக்கே என்று முதலில் நாம் எமது வளங்கள் அனைத்தையும் அங்கு திருப்ப வேண்டும்.
‘சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்’. சிதைக்கப்பட்டிருக்கும் கிழக்கையும், வன்னியையும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முதலில் வகுப்பதே தமிழீழப் போராட்டத்தின் தலையாய பணியாய் தற்போது அமைய வேண்டும்.
வன்னிப் பெருந்துயரை எப்படிப் பதிவது. அது ஏடு தாங்காப் பெருந்துயரம். கடலாலும், காட்டாலும், இராணுவ வேலியாலும் சுற்றி மூடிக் கட்டப்பட்டிருந்தவர்கள் வன்னி மக்கள். இத்தகைய ஒரு கூட்டுக்குள் இருந்தும் அவர்கள் கூவத் தவறவில்லை. போரட்டத்திற்காக அனைத்துக் கடப்பாடுகளையும் அவர்கள் ஏற்றார்கள். எதிரியின் அனைத்துவகைத் திணிப்புகளையும் சுமந்தார்கள். எதிரியின் அனைத்து வகை பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமது பொருளாதாரத்தைப் போராட்டத்திற்கு ஈய்ந்தளிக்க அவர்கள் தயங்கவில்லை. தங்கள் தலைப் பிள்ளைகளை போராட்டத்திற்கு உரமாக்கினார்கள். விரும்பியும், விரும்பாமலும் போராட்டத்திற்கான ஆள்பற்றாக்குறைக்கு அவர்கள் தம் பிள்ளைகளை மேலும், மேலும் கொடுக்க நேர்ந்தது. எல்லாவற்றையும் இலட்சியத்துக்காகவே சுமந்தார்கள்.
பிள்ளைகள் மட்டும் களங்களில் நின்று போராடினார்கள் என்றில்லை. எல்லா வகையிலும் அவர்கள் போராட்டத்திற்கு முதுகு கொடுத்தார்கள். இயக்கம் அழைப்பு விடுத்த அத்தனை படைகளுக்கும் முது வயதிலும் அவர்கள் பங்காளியானார்கள். அதிகாலையில் முதியவர்கள் ஆண், பெண் வேறுபாடிறின்றி கொட்டனுடன் பயிற்சி எடுக்கும் காட்சிகளை மனித குல வரலாறு வன்னி மண்ணிற்தான் பதிவு செய்திருக்கிறது என்பதை எமது கண்கள் காணத் தவறக்கூடாது. பிள்ளை போர்க்களத்தில், தாயோ பயிற்சிக் களத்தில் என வரலாறு நகர்ந்தது.
இத்தனை தியாகங்களையும் செய்த இந்த மக்களின் முதுகெலும்பில் ஓடிய இந்தப் போராட்டம் ஏன் தோல்வி கண்டதென்பது ஒரு துயரமான கேள்வி. எங்கள் கண்களை நாங்களே துடைத்துக் கொண்டு, ஏன் தோல்வி கண்டோம்? ஏன் குற்றுயிராய்க் கிடக்கிறோம்? இனி எப்படி எழும்பி நடக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளை நாம் தவறாமல் கேட்டு, எம்மை நாம் சுதாகரிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு கூறுகிறேன். புதுக்குடியிருப்பு நோக்கிப் போகும் A 32 வீதியது. ரெட்பானா கழிந்து, புதுக்குடியிருப்பு நோக்கி போகும் அந்த வீதியில் உள்ள தேராவில் குளம் வீதியை முற்றிலும் மேவிப் பாய்கிறது. போக்குவரத்து அவ்விடத்தில் முற்றிலும் தடைப்பட்டுப் போய்விட்டது. காட்டுக்குள்ளால் ஒரு புதிய பாதையை சில தினங்களுக்குள் அமைத்து முடித்தாயிற்று. ஆனால் பாதை சேறும் சகதியும், முள்ளும் தடியும் நிறைந்ததாய் உள்ளது. அப்போதும் இராணுவம் தமது எறிகணைகளை கண்துஞ்சாது வீசிக்கொண்டிருக்கிறது.
புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து காட்டுப் பாதையினால் எனது உறவினரைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப்பாதை கடந்து குளம் மூடியுள்ள விளிம்பு வீதியில் ஏறுகிறேன். அந்த வேளை வீதியைக் குளம் மூடியிருக்கும். அந்த விளிம்பில் குந்தியவாறு, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுத வண்ணம் இருக்கிறார். நான் அவரை அணுகுகிறேன். அவரது தோளில் கையை வைத்தவாறு அவரை வினவுகிறேன்.
அப்போது அவர் பெரிதாக அழத்தொடங்கினார். அழுது கொண்டு ஆற்றவியலாத் தன் கொடிய துயரை நைய்ந்த குரலில் சொல்லத் தொடங்குகிறார். ரெட்பானா பிரதேசத்ததின் முற்பகுதியில் அவர் குடியிருந்தார். எறிகணை வீச்சில் இருந்து தப்புவதற்காக அங்கு மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். அதில் இவரது குடும்பமும் ஒன்று. அவ்வாறு இவரது குடும்பம் ஓடி வந்து கொண்டிருந்த போது அகோர எறிகணைவீச்சு நிகழத் தொடங்கியதால், வீதியோரத்தில் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் வீடு இருந்தது. அந்த வீட்டுக்குள் ஒரு சிறிய பதுங்குகுழி இருந்தது. அப் பதுங்கு குழிக்குள் தாயும், தந்தையும், மூன்று பிள்ளைகளும் என இக்குடும்பம் பதுங்கிக் கொண்டது.
சிறிது நேரம் கழிந்ததும் பதுங்குழியில் இருந்த ஒரு பிள்ளை தண்ணீர் கேட்டது. தகப்பன் அவ்வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அவ்வேளை ஓர் எறிகணை அந்த சிறிய பதுங்கு குழியின் மீது வீழ்ந்து வெடித்தது. தந்தை ஓடி வந்தபோது தாயும், மூன்று பிள்ளைகளும் அச்சிறிய பதுங்கு குழியில் துடிதுடித்து இறந்தனர்.
தந்தை பின்வருமாறு சொன்னார். ‘எனது கையால் எனது மூன்று பிள்ளைகளையும், எனது மனையையும் அந்த பங்கருக்குள் மூடிப்போட்டு வந்திருக்கிறேன். எப்படி ஐயா நான் தாங்குவேன். கொடிய கடவுள் என்னையேன் கொல்லவில்லை?’
மரணச்சடங்கு எதுவுமின்றி, கூட நிற்பார் யாருமின்றி, சொல்லியழ எவருமின்றி மூன்று பிள்ளைகளுக்கும், தாய்க்குமான புதைகுழி மூடப்பட்டது.
ஆனால், சில வாரங்களின் பின்பு, புதைப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணங்கள் அநாதரவாய் கிடந்த காட்சியைக் கண்ட போது புதைக்கப்பட்டோர் பாக்கியவான்களோ! என்று மனம் வியந்தது.
யாருக்காக யார் அழுவது?
‘ஏமாந்துவிட்டோம் – எதிரி எம்மை ஏமாற்றிவிட்டான்’ என்று காலத்துக்கு காலம் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் கூறிவருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து ஏமாறுகிறோம் என்றால் தவறு எதிரியிடம் அல்ல – எம்மிடந்தான் இருக்கிறது.
இலட்சிய வேட்கையுடன் எழுவதும், பின்பு எதிரியின் காலடியில் மூச்சையற்று வீழ்வதும் எமது வரலாறாய் உள்ளது. கானல் நீரை வானத்து தேவதைகளாக எண்ணி முன்பின் பாராது ஓடிப் போவதும், பின்பு கையறு நிலையில் வெட்கித் தலைகுனிவதும் எமது அரசியல் வாழ்வாய் தொடர்கிறது.
குறைவற்ற இலட்சியப் பற்றும், அளவற்ற தியாகமும், நிகரற்ற அர்ப்பணிப்பும் நிரம்பிய மக்கள் நாம். ஆனால் தோல்வியையும், வேதனைகளையும், தலை குனிவுகளையும் தவிர வரலாற்றில் இதுவரை வேறு எதனையும் அறுவடை செய்ததில்லை.
வீழ்ச்சிக்கும், தோல்விக்கும், துயருக்கும், இழப்புக்கும் பின்பு நாம் அதற்கான உண்மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக எதிரியை திட்டித் தீர்ப்பதிலும், விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று வரட்டு வியாக்கியானம் அளிப்பதிலும் அளப் பெரிய நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கின்றோம்.
நாங்கள் ஏன் காலம் காலமாய் தோற்கிறோம்?
ஏன் எதிரிகளின் காலடியில் கதியற்று வீழ்கிறோம்?
எங்கள் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் ஏன் வீண் போகின்றன?
ஏன் எந்த வெற்றியையும் அடையவோ அன்றி, அடைந்தவற்றைத் தக்க வைக்கவோ முடியாதவர்களாய் இருக்கிறோம்?
தோல்விகளுக்கான பொறுப்புக்களை எதிரியில் சுமத்துவதா?
அல்லது நாங்கள் ஏற்பதா?
யார் பொறுப்பு?
இத்தகைய கேள்விகளுக்கு நாம் நியாயபூர்வமாகவும், நாகரீகமாகவும் பதில் காணத் தவறுவோமேயானால் தோல்விகளை இன்னும் நூற்றாண்டுக் கணக்கில் காவிச்செல்ல நேரும். அதற்காக வரலாறு எம்மை எள்ளி நகையாடும்.
வன்னிப் படுதோல்வியும், வன்னி இனப்படுகொலைகளும் 21 ஆம் நூற்றாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தையும், ஒரு புதிய படிப்பினையையும் வரலாற்று அரங்கில் தோற்றுவித்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் நூற்றாண்டுக் கணக்கான சங்கிலித் தொடர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்று சர்வதேச அரசியல் பற்றிய பார்வையும், பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கை பற்றிய நோக்கு நிலையும் நூற்றாண்டுக் கணக்காய் தமிழ் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பது.
முள்ளிவாய்க்காலில் இனவாதமும், சர்வதேச சக்திகளும் ஒரு பரிசோதனையை நடாத்தி முடித்துள்ளன. இதனை ஓர் உள்நாட்டு பரிமாணத்தில் மட்டும் விளங்காது சர்வதேச அரசியல் ஒழுங்கிலும், ‘சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற படச்சட்டக் கட்டுக்குள்ளும் வைத்து விளங்க வேண்டிய அவசியம் எம்முன் உண்டு.
எல்லாவற்றுக்கும் அப்பால் எம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் அடுத்த கட்ட வரலாற்றை காவிச் செல்லப் போகிறது. எனவே எஞ்சியிருப்பதைப் பற்றிய மதிப்பீடும், காவக்கூடிய சுமையும், செல்லக் கூடிய தூரமும், செல்வதற்கான வழிவகைகளும், செல்வதற்கேற்ற ஏதுக்களும் பற்றிய கணிப்பீடு மிகவும் சரியாக அமைய வேண்டும். இவற்றின் அடிப்படையில் யதார்த்தபூர்வ அடியெடுப்புடன் மட்டுமே நாம் பயணிக்க முடியும்.
வன்னிப் பெருநிலத்தில் எல்லாவகைப் பரிசோதனைக் களமாகவும் எங்கள் மக்கள் ஆக்கப்பட்டார்கள். அக்கினிக் குண்டுகளுக்கு எங்கள் மக்கள் இரையானார்கள்.
இறந்துபட்டோர் பற்றிய துயரம் ஒருபுறமும், அக்கினிக் குண்டுக்கு ஆகுதியாய் இறக்கப் போகின்ற இனியவர்கள் பற்றிய துயரம் இன்னொரு புறமுமாய் வன்னி வாழ் மக்கள் தங்கள் துன்ப துயரங்களை சுமந்தார்கள். என்நெஞ்சில் கனக்கும் துன்பங்களையும், துயரங்களையும் நான் எழுத்தில் வடிப்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டும் இருப்பதற்கல்ல. இத் துன்பத்துக்கு முடிவுகட்ட வேண்டிய தீர்வு காணும் பொறுப்பின் பொருட்டுமாகும்.
என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு குடும்பத்தின் காலம் ஓராண்டு மட்டுமே. ஆயினும் அக்குடும்பம் என் இதயத்தில் பதித்த தாக்கம் பெரிது. அவள் க.பொ.த. உயர்தர மாணவி. மிகவும் அழகாகவும் துடுக்காகவும் இருப்பாள். அவள் பிறந்த அன்று அவளின் தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காக்களும், இரண்டு அண்ணாக்களும் இருந்தனர். தந்தை அவளை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவளது ஓர் அக்கா யாழ் பல்கலைக்கழக பட்டதாரி. அவள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணிபுரிந்தாள். மற்றைய அக்கா மணமாகி விட்டார். ஓர் அண்ணன் கடற்புலிப் போராளி. மற்றைய அண்ணன் க.பொ.த. உயர்தரம் கல்வி கற்றுக்கொண்டிருந்தான்.
இவளது ஆசை தான் ஒரு மருத்துவராய் வரவேண்டும் என்பது. மிகவும் கெட்டிக்காரி. வெட்டொன்று துண்டிரண்டாய் பேசும் இயல்புள்ளவள். ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய அறிவிருந்தது. எல்லோருக்கும் இவளே வீட்டில் செல்லம். ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பில் குடும்பத்தில் இன்னொருவர் இணைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. தாயின்றி தாம் செல்லமாக வளர்த்த இவளை போராளியாக்க யாரும் தயாராய் இருக்கவில்லை. மற்றைய அண்ணன் தங்கையைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக போராளியாகினான்.
இப்போது குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகளும் போராளிகள் ஆகிவிட்டனர். ஆனால் அண்ணன் போராளியானது தங்கையையும், ஏனைய சகோதரிகளையும் பெரிதும் வாட்டியது. இப்போது இரு அண்ணன்களும் போராளிகள் என்ற போராளி அட்டை கையில் இருப்பதால் இவள் வெளியே நடமாடுவது சாத்தியப்பட்டது. இந்நிலையில் அவள் அவ்வப்போது என்னைப் பார்க்கவும், என்னுடன் ஏதாவது பேசி ஆறுதல் பெறவும் வருவாள். இவளது பட்டதாரி அக்கா என்னைக் கண்டதும் தன் போராளித் தம்பிமாரைப் பற்றி சொல்லிக் கண்கலங்கத் தொடங்குவாள்.
தற்போது தொடர்ச்சியான இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்களே ஓரிடத்தில் தங்கலாம் எனும் நிலை. இப்போது நாம் இடம் பெயர்ந்து சுதந்திரபுரத்தில் அரசாங்கம் அறிவித்த ‘பாதுகாப்பு வலயத்தில்’ இருக்கிறோம். உணவு, நீர், கழிப்பிட வசதியின்மை என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஓயாது கூவி விழும் எறிகணை வீச்சுக்கள்.
இந்த எறிகணையில் ஒன்று இவளது கூடார வீட்டின் மீது வீழ்ந்தது. தந்தையும் இவளும் காயமுற்றனர். காயமுற்ற தந்தையையும், தங்கையையும் நாடி பட்டதாரி அக்கா ஓடிப் போகிறாள். ஒரு எறிகணை அவளுக்கென்று ஏவினாற் போல அவளுயிரைப் பலிகொண்டது.
சுதந்திரபுரத்தில் வைத்தியசாலைக்கு அருகே குடியிருந்த எனக்கு இச் செய்தி கிடைத்ததும் நண்பர்கள் சிலருடன் இவர்களது வீட்டுக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் மணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகாத ஓர் ஆசிரியையின் துணைவன் சில நாட்களுக்கு முன் எறிகணை வீச்சில் இறந்து விட்டார் என்றும் அவரது வீடு அந்த வழியில் இருப்பதை அறிந்து அந்த வீட்டுக்குச் செல்கிறோம். அவள் தனது துணைவனின் கோர மரணத்தைச் சொல்லி கதறியழும் காட்சி எமது நெஞ்சைக் குடைந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாதவாறு தனது நீண்ட காலக் காதலையும், பெரும் போராட்டத்தின் பின்பான தனது திருமணத்தையும் சொல்லி, அது நிலைக்காது போன வேதனையை அவள் தன் கதறலால் வெளிப்படுத்திய போது இந்தப் பூமியே திரண்டழுவது போல் எனக்கிருந்தது.
எம் பயணம் எறிகணை வீழ்ந்த வீட்டை நோக்கி நகர்கிறது. அந்த துடுக்கான அழகி காயத்துடனும், துவண்ட உருவத்துடனும் தன் அக்காவின் இழப்பை எண்ணிக் கதறியழுகிறாள். அவளின் மனத்தில் அவளின் தந்தைக்குரிய ஸ்தானம் எனக்கிருந்தது. அவளின் திறமையைப் பாராட்டுவதிலும், அவளை ஊக்குவிப்பதிலும் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. இப்போது அந்த துயர்தோய்ந்த முகத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கேற்பட்டது.
என்னைக் கண்டதும் தன்னிடம் இருந்த சக்திகள் அனைத்தையும் வரவழைத்து ஓவென்று கதறியழுதாள். ‘ஐயோ! அக்கா தானே எனக்கு அம்மா. உங்களுக்கு தெரியும் தானே – அக்கா என்மீது உயிரையே வைத்திருத்தாள் என்று. என்னைக் காப்பாற்ற வந்துதானே அக்கா சாகவேண்டி வந்தது. ஐயோ நானும் சாகப்போறன்’ என்று என்முன் அவள் கதறிப் புழுவாய்த் துடித்த காட்சி என் கண்முன் இன்னும் படமாய் உள்ளது.
அங்கிருந்து நான் கூட வந்தவர்களுடன் வீடு திரும்புகிறேன். அப்போது வழியில் தெரிந்த இன்னொரு குடும்பத்தினர் என்னைக் கண்டு மறிக்கின்றனர். நான் அவர்களுடன் பேசிக்கொள்ள என்னுடன் வந்தவர்கள் வைத்தியசாலையில் காயப்பட்டோருக்கு உதவுவதற்காக முன்னே செல்கிறார்கள். சிறிது நேரம் கழிந்து விட்டது. எம்மைக் கடந்து சென்ற ஓர் எறிகணை சுமாராக 200 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்தது. நான் பேசுவதை நிறுத்திவிட்டு எறிகணை வீழ்ந்த இடம் நோக்கி நகர்கிறேன். எட்டு அல்லது ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். தாய் கதறியழுகிறாள்.
மீண்டும் ஓர் எறிகணை தலைக்கு மேலாய் கூவிச் செல்கிறது. மக்கள் அங்கிங்காய் ஓடுகின்றனர். ஐயோ! என்ர குஞ்சுகள் என்று கூறியவாறு தாய் ஏனைய இரண்டு பிள்ளைகளை கையில் பிடித்த வண்ணம் அவர்களை பாதுகாப்பதற்காக பதுங்குழி ஒன்றை நோக்கி ஓடுகிறாள். இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் பிள்ளையை அப்படியே விட்டுவிட்டு எந்தொரு தாயும் ஓடுவாள் என்று கற்பனை செய்ய முடியாது. ஆனால் இங்கு அவள் ஓடுகிறாள்.
தன்னுயிரைக் காப்பதற்காக அவள் ஓடுகிறாள் என்று நான் நினைக்கவில்லை. தனது ஏனைய இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக அவள் ஓடுகிறாள். அன்பும் பாசமும், பொறுப்பும் பண்பாடும், கடமையும் உணர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு இரத்தமும் தசையுமான யதார்த்தத்தால் நிறுத்துப் பார்க்கப்படும் ஒரு கொடிய அனுபவம் இது.
எந்தவொரு தாயாலும் இரத்த வெள்ளத்தில் இருக்கும் தனது பிள்ளையை விட்டுவிட்டு ஓடமுடியுமா? ஆனால் இங்கு அப்படித்தான் யதார்த்தம் எல்லோரையும் வழிநடத்தியது. இறந்து போன தமது பாசத்திற்குரியவர்களின் துயரம் ஒரு புறமும், உயிருடன் இருக்கும் தம் இனியவர்களை இழந்திடுவோமோ என்ற ஏக்கம் அதை விடப் பெரிதாகவும் அலைமோதிய ஒரு துயரத்தை என் மனத்தராசில் அளந்து பார்க்க முற்படுகிறேன். இவ்வாறு சொல்லும் போது, இதனை அளக்கக்கூடிய ஒரு பொருளென்று நான் கருதவில்லை. ஆனால் அப்படி ஒன்றுடன் ஒன்று மோதிய அந்த வினோதமான அனுபவத்தை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது.
யாருக்காக யார் அழுவது? எறிகணை துரத்த நானும் ஓடுகிறேன். இறந்துவிட்ட சிறுவன் அனாதரவாய் அப்படியே கிடக்க நாங்கள் எல்லோரும் கையறு நிலையில் ஓடுகிறோம். நாம் இருக்கும் வைத்தியசாலைச் சூழலை அண்மிக்கிறேன். வாசல் நிறைய காயப்பட்டோர் அடுக்கடுக்காய் கட்டாந்தரையில் கிடத்தப்படுகின்றனர். அழுகுரலும், அவலமும், கையாலாகாத்தனமும் எம்மைக் கயிறு திரித்தாற் போல் திரித்தெடுக்கிறது.
யாருக்காக யார் அழுவது?
கஞ்சிக் கொட்டில் படுகொலைகள்
ஆயுதப் போராட்டம் உருவாகி 30 ஆண்டுகள்தான். இதனைத்தான் சிங்கள அரசு ‘பயங்கரவாதம்’ என்று கூறுகிறது. ஆனால் இனப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. சமாதான வழியில் அப்பிரச்சினையை தீர்க்க தமிழ்த் தலைவர்கள் முயன்ற போது, சிங்கள அரசு அதனைத் தீர்த்திருந்தால் இலங்கைத் தீவில் இரத்தக் களரி ஏற்பட்டிருக்க முடியாது.
இதனைத்தான் திரு.இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறினார். அரசு கூறும் ‘பயங்கரவாதப் பிரச்சினை’ தோன்ற முன்பே இனப்பிரச்சினை இருந்தது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டு அதனை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக வர்ணிப்பது தவறு என்ற அர்த்தத்தில் அமைந்திருந்திருந்த அவரின் கருத்து இங்கு மிகவும் கவனத்திற்குரியது.
அரசுகள் தமது தேவைகளுக்கு ஏற்ப போராட்டங்களை ‘பயங்கரவாதம்’ என்றும், ‘விடுதலைப் போராட்டம்’ என்றும், ‘புரட்சி’ என்றும், ‘கிளர்ச்சி’ என்றும், ‘குழப்பம்’ என்றும், ‘நாசகாரச் செயல்கள்’ என்றும் வர்ணிப்பதே சர்வதேச அரசியலில் ஒரு வழக்கமாக உள்ளது. ஓர் அணி நாடுகள் ஒரு போராட்டத்தை ‘விடுதலை’ என்றழைத்தால், அதன் எதிரணி நாடுகள் அப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று அழைக்கும். ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின்பு உலகில் உள்ள எல்லா ஆயுதப் போராட்டங்களையும் ‘பயங்கரவாதம்’ என்ற சர்வவியாபக பொருளுக்கு உலக அரசியல் கொண்டு வந்துவிட்டது.
இப்பின்னணியில் தமிழீழ மக்களின் மீதான இன ஒடுக்குதலை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ற அணிக்குள் போட்டு அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்துயரத்தை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை, பரிதாபகரமான இனப் படுகொலையை ஒரு கணம் இந்த உலகம் தம் கண்களைத் திறந்து பார்ப்பது அவசியம்.
புதுமாத்தளனில் இருந்து வெள்ள முள்ளிவாய்க்கால் வரையான ஒரு சிறு நிலத்துண்டில் இலட்சக்கணக்கான மக்கள் ‘பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் அடைக்கப்பட்டாயிற்று. அரசு கூறிய ‘பாதுகாப்பு வலயத்தின்’ மீது எறிகணைகளும், துப்பாக்கி ரவைகளும் பாய்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு மேலால் விமானக் குண்டு வீச்சுகளும் இன்னொருபுறம் உண்ண உணவின்மை, குடிக்க நீரின்மை, அடிப்படை மருத்துவத்திற்கான மருந்தின்மை, கழிப்பறை வசதியின்மை என ஒருபுறமும், இவற்றின் மத்தியில் இயக்கத் தடையை மீறி வெளியேறத் துடிக்கும் மக்கள் என இன்னொரு புறமுமாய் அங்கு நிலைமைகள் உள்ளன.
இப்பின்னணியில் ஒரு நேர உணவுக்கு வழியில்லாத சூழல் உருவாகிவிட்டது. எறிகணை துரத்தி மக்கள் ஓடும் போது கையில் இருக்கும் ஒரு பிடி அரிசியை எடுத்துக் கொண்டு ஓடத்தவறினால் உணவின்றிச் சாக வேண்டிய துயரம் மறுபுறம் இருந்தது. எறிகணை வீழ்ந்து ஓடும் போது ஒரு பிடி அரிசியைத் தூக்கத் தாமதிப்பவர், மறுகணம் எறிகணையில் சிக்குண்டு இறந்தோரின் பட்டியலில் வருவார். இதனைப் புரிந்து கொண்டாற்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்த கஞ்சிக் கொட்டில் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.
சுமாராக 500 மீற்றர் இடைவெளிக்கு ஒன்றாக கஞ்சிக் கொட்டில்கள் அமைக்கப்பட்டன. கஞ்சி காய்ச்சத் தேங்காய்ப் பால் இல்லை. ஆரம்பத்தில் பால்மாவைக் கஞ்சியில் கலந்து கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டு வந்தன. பின்பு பால் மாவும் இல்லாது போன நிலையில் அரிசியும், உப்பும் போட்டு கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டது. ஒவ்வொரு கஞ்சிக் கொட்டிலிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நிற்பர்.
இவ்வாறு பொக்கணையில் ஒரு கஞ்சிக் கொட்டிலில் காலை, மதியம் என இருநேரத்திற்கும் பொதுவாக பகல் 11 மணியளவில் ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமி நின்றனர். இக்கஞ்சிக் கொட்டில்களில் தாய்மார்களும், சிறுவர்களுமே கஞ்சிக்கு காத்திருப்பது வழக்கம். ஏனெனில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி வயது வந்தோர் மறைவிடங்களில் ஒதுங்கியிருப்பர். இதனால் இக்குழந்தைகளும், தாய்மார்களும் நிரம்பி வழிந்த இக்கஞ்சிக் கூடமே எதிரியின் எறிகணைக்கு இலக்காகப் போகிறது.
வானத்தில் ஒரு வேவு விமானம் இதனைப் படம் எடுத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. தெளிவாக அவர்களுக்கு இங்கு குழுமியிருப்பது குழந்தைகளும், தாய்மார்களும் தான் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அந்த அரக்கத்தனமான கண்கள் எவ்வித இரக்கமும் இன்றி இலக்குத் தவறாது முதலாவது எறிகணையை வீசியது. குழந்தைகளும், தாய்மாரும் உடல் சிதறி மாண்டனர்.
எறிகணை வீசுவதில் ஒரு தந்திரத்தை எதிரி பயன்படுத்தி வந்தான். அதாவது முதலாவது எறிகணை வீழ்ந்து சுமாராக 5 நிமிடங்களுக்கும், 10 நிமிடங்களுக்கும் இடையேயான இடைவெளியில் இரண்டாவது எறிகணை அவ்விடத்தில் வீழ்ந்து வெடிக்கும். ஏனெனில் முதலாவது எறிகணை வீழ்ந்ததும் காயப்பட்டோரைத் தூக்குவதற்கென சற்று நேரத்தில் மக்கள் கூடுவர். அந்த நேரம் அவ்வாறு காயப்பட்டோரைக் காப்பாற்ற வருவோரைக் குறிவைத்தே இரண்டாவது எறிகணை வீசப்படும்.
ஆனால் இங்கு எதிரி தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டான். அதிகம் மக்கள் குழுமியிருந்ததனால் மக்கள் கூட்டம் கலைய முன்பே அடுத்தடுத்து இரண்டு எறிகணைகளையும் கணப்பொழுது இடைவெளியில் எதிரி வீசினான். இதில் 50க்கு மேற்பட்டோர் அவ்விடத்திலேயே மாண்டனர். காயப்பட்டோர் தொகை இன்னும் அதிகம். இவ்வாறு குழந்தைகளும், தாய்மாரும் காந்திருந்து ஏந்திச் செல்லும் கஞ்சியில்தான் அந்தக் குடும்பங்கள் முழுவதினதும் உயிர் தங்கியிருப்பது உண்டு. ஆனால் இங்கு கஞ்சிச் சட்டியோடு உயிரும் போய்விட்டது. இப்படிக் கஞ்சிக் கொட்டிற் கதைகள் பல.
இவ்வாறே சில தினங்களின் பின்பு பொக்கணை ஆரம்ப சுகாதார மையத்தினரால் குழந்தைகளுக்கென பால்மா விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் நிகழ்ந்த இந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல் தாய்மார் கைக் குழந்தைகளுடன் பால்மாவுக்கு வரிசையில் காத்திருந்தனர். இதுவும் அந்த வேவு விமானத்தின் கண்களில் படமாய்ப் பதிய நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற இராட்சத நெஞ்சங்கள் இதன் மீதும் ஓர் எறிகணையை வீசியது. டசின் கணக்கில் குழந்தைகளும், தாய்மாரும் மாண்டனர். அந்த வீதி ஓரே இரத்தாறாய் காட்சியளித்தது. இதற்கு ‘மனிதாபிமான இராணுவ நடவடிக்கை’ என்று சிறிதும் வெட்கப்படாது பெயர் வைத்தார்கள்.
மனித நாகரிகத்திற்கு சிறிதும் பொருந்தாத இத்தகைய கொடும் செயல்களை அரங்கேற்றித்தான் தமது இராணுவ நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்தார்கள். இதனை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அவர்கள் கூறினாலும் இது புலிகளுக்கு எதிரானது அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான ஓர் இனப்படுகொலை தான் என்பதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் மட்டும் போதுமானது.
அதாவது இத்துணைப் படுகொலைக்குப் பின்பும் இலங்கை ஒரே நாடு, ஓரே இனம், ஒரே மக்கள், ஓர் ஒற்றை ஆட்சியரசு என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ‘சுதந்திரதின’ உரையில் தமிழ்த் தேசிய இன உரிமையை நிராகரித்து முழு இலங்கையையும் ஒரே சிங்கள இனமயமாக்குவதே தனது கொள்கையென தீவிர சிங்கள இனவாதம் பேசியுள்ளார். அதாவது வேறு எந்த இனத்திற்கும் இங்கு உரிமையில்லை. காகம் கூட சிங்களத்திற்தான் கரையவேண்டும் என அவர் கட்டளையிடுவாரா? அப்படி காகத்திற்கு இருக்கும் தனித்துவம் கூட, தமிழருக்கு இல்லாது போகும் துயரத்தை எந்த இராணுவ நடவடிக்கையாலும் நியாயப்படுத்த முடியாது.
உலக ஜனநாயகமும், மனிதகுல நாகரிகமும் இதனை பார்த்து வாழாதிருக்குமா? இனியும் தான் சர்வதேச சமூகம் இன ஒடுக்கு முறைக்கு ஒத்துப் போவதற்கு நியாயம் கூற முடியுமா?
அனைத்துவகை நெருக்கடிகளின் மத்தியில் ‘பாதுகாப்பு வலயம்’ எனும் சிறுநிலக் கொலைக் களத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அடித்துப் போடப்பட்ட குற்றுயிர்ப் பாம்பென நெளிந்து துடித்த பெருந்துயரை ஜனநாயகத்தின் பெயரால் 21ஆம் நூற்றாண்டு மனித குல நாகரிகம் எப்படிப் பதிவு செய்யப் போகிறது?
ஒரு வேளை உலகளாவிய ரீதியில் தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு ஈழத்தமிழரை ‘ஜினி பிக்’ (Guinea pig) எனும் ஒரு மருத்துவ பரிசோதனைப் பிராணியாக உலகம் பயன்படுத்தியுள்ளதா எனும் துயர்மிகு கேள்விக்கு இந்த நாகரிக உலகம் பதில் சொல்லியாக வேண்டும்.
இனப்படுகொலையும் பண்பாட்டுப் படுகொலையும்
கொழும்பில் ஐ.நா. சபைக்கான பேச்சாளராய் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்ற கோர்டன் வைஸ் அளித்த தகவலின் படி, இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ள தகவல் உலகின் பார்வையை ஒருகணம் ஈழத்தமிழர் பக்கம் நோக்கித் திருப்பியுள்ளது.
ஒரு தகுதிவாய்ந்த, அங்கீகாரம் உள்ள ஒரு தலையாய சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு வெளிநாட்டவரது தகவல் என்ற வகையில் அவர் கூறியுள்ள இத்தகவல் சர்வதேச அரங்கில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதனுடன் கூடவே ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் திருமதி. நவநீதம்பிள்ளை, இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டுமென்று, ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பான தற்போதைய நிலையில் மீண்டும் வலியுறுத்தியிருப்பது அதிக கவனத்தை இலங்கைபாற் திருப்ப உதவியுள்ளது.
வெறுமனே ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்காது, இதனை ஓர் இனப்படுகொலை என்ற பரிமாணத்தில் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது சாதாரண மனித உரிமை மீறல் என்ற அளவுக்கோ அல்லது மேலெழுந்தவாரியாக ஒரு யுத்த மீறல் குற்றம் என்ற அளவுக்கோ இதனைப் பாராது, இது ஒரு திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை (Genocide) என்ற பரிமாணத்தில் பார்க்கப்படவேண்டிய அளவிற்கு இப்படுகொலை பற்றிய நிகழ்வுகள் உள்ளன.
படுகொலை செய்யப்பட்டோர் தொகை 40,000 என்று ஒரு தகுதி வாய்ந்த சர்வதேச அதிகாரியின் கூற்று வந்திருப்பது என்ற வகையில் இது ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஆகும். ஆனால் இத்தொகை இதனை விடவும் இரண்டு மடங்குக்கு மேல் என்ற உண்மையை சர்வதேச சமூகம் கண்டுகொள்ள இன்னும் அதிக தூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்தின் தகவலின்படி வெறும் 3,000 பேர் மட்டுமே யுத்தத்தில் சிக்குண்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் விஞ்ஞானபூர்வமான ஒரு கணக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக செய்ய முற்பட்டால் 80,000 திற்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டுகொள்வது சாத்தியம்.
கொல்லப்பட்டுள்ளவர்களின் மண்டை ஓடுகளை எண்ணி கணக்கெடுக்கலாம் என்ற நிலையில்லை. ஆனால் கொல்லப்பட்டுள்ளோரின் தொகையை கண்டறிய புள்ளிவிபர முறையில் இடமுண்டு.
நேரடியாக நான் வன்னியில் பணிபுரிந்த அரசாங்க அதியுயர் அதிகாரிகளுடன் வன்னியில் வைத்துப் பேசியுள்ளேன். அதில் அத்தகைய ஓர் உயர் அதிகாரியின் தகவலின்படி, யுத்தம் தொடங்கிய நாளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிப்பகுதியில் மொத்தம் 3,80,000 (மூன்று இலட்சத்து எண்பதாயிரம்) பேர் வாழ்ந்ததற்கான பதிவு தம்மிடம் உண்டு எனக் குறிப்பிட்டார்.
தமது நிர்வாக தேவைகளுக்கான உத்தியோகபூர்வ உள்ளுர் கணக்கெடுப்புக்களின் படி இத்தொகை கண்டுகொள்ளப்பட்டது என்றும், கொழும்பில் இருக்கும் அரசாங்கத்திடமும் இத்தொகை நிர்வாக தேவைக்காக கையளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிடார். மேலும் இத்தொகை வன்னியில் பணிபுரிந்த அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி சுமாராக 2,70,000 பேர் அகதி முகாங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றோர் தொகை வெறும் 3,000 பேர்தான். அத்துடன் போராளிகள் என்றதன் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொகை 11,000 பேர் என அரசு சொல்லுகிறது. இத்தொகை மேற்படி 2,70,000 அகதிகளின் தொகைக்கு உள்ளடங்கலானதா அல்லது புறநீங்கலானதா என்பதை அரசின் கணக்கு தெளிவுபடுத்தவில்லை.
மேலும் வன்னிக்கான பாதை மூடப்பட்ட காலத்தில் வன்னியிலிருந்து பாஸ் நடைமுறையின் மூலம் வெளியே சென்றிருக்கக் கூடிய மக்களின் தொகை ஆகக் கூடியது 10,000 பேரைத் தாண்டமாட்டாது. அதேவேளை வன்னிக்கான உள்வரவுத் தொகையும் இங்கு கணக்கில் எடுக்கப்படவேண்டும்.
இந்த 11,000 கைதிகளையும் புறநீங்கல் என்று எடுத்துக் கொண்டாலும் கூட உள்வரவுத் தொகையையும் குறைந்தது 3,000 பேர் எனக் கணக்கெடுக்கும் இடத்து, சுமாராக 90,000 பேரைக் காணவில்லை. இது வரை 7,000 பேர் வரையே கொல்லப்பட்டுள்ளதாக பக்க சார்பற்ற சர்வதேச பதிவுகள் உள்ளன. ஆனால் இந்த 40,000 என்ற தகவல் வந்தபோது மேற்படி 90,000 பேருக்கான நிகழ்தகவுகள் இங்கு கண்ணுக்குத் தெரிகின்றன.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், கடைசி மூன்று மாதங்களில் கொல்லப்பட்டோர் தொகைதான் 40,000 பேர் என கோல்டன் வைஸ் கூறியுள்ளார். அப்படியாயின் 2006 மத்தியில் யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து 2009 மே மாதம் யுத்தம் முடிந்த வரையான காலத்தில் மேற்படி 90,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்க முடியும் என்ற கணக்கு இலகுவில் நிரூபணமாகக் கூடியது.
சாதாரணமாக உயர் அரசாங்க அதிகாரிகளை பக்கசார்பற்ற முறையில் விசாரணை செய்தாலே அரசாங்கப் பதிவேடுகளின் அடிப்படையில் அல்லது வாய்முறைப்பாடுகளின் அடிப்படையில் இத் 90,000 பேர் பற்றிய விபரத்தை தெளிவுறக் கண்டுகொள்ள முடியும்.
வன்னி மண்ணில் உலகின் கதவுகளை மூடிவிட்டு, சர்வதேச நிறுனங்களையும் வெளியேற்றிவிட்டு, இப்பெரும் இனப்படுகொலை நடந்துள்ளமை 21 ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் இந்த உலக சமூகம் பதில் சொல்ல வேண்டிய ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே தற்போது 40,000 என்று வெளிவந்திருக்கும் தகவலும், பக்கசார்பற்ற விசாரணை வேண்டுமென்ற நவநீதம்பிள்ளையின் வலியுறுத்தலும் இக்கட்டத்தில் மேலும் உண்மைகளை கண்டறிவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளன.
இங்கு கண்கண்ட சாட்சிகளை வைத்துக் கொண்டு மட்டும் அரசின் இனப்படுகொலை பற்றிய எண்ணிக்கையை நாம் கண்டறிய வேண்டுமென்று இல்லை. அதற்கான சாட்சியங்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், அரசுக்கு அஞ்சி பலர் சாட்சியம் அளிக்க முன்வரப் போவதுமில்லை. களத்தில் கொல்லப்பட்டோரின் தொகையை ஒவ்வொன்றாய் எண்ணி கணக்கெடுத்தவருமில்லை. ஆதலால் மேற்படி பதிவேடுகளுக்கும், இப்பதிவுகள் பற்றிய வாய்முறைப்பாடுகளிலும் இருந்து எஞ்சியுள்ளோரின் கணக்கை வைத்துக் கொண்டு கொல்லப்பட்டோரின் கணக்கை கண்டறிவது இலகுவானது. அதன்படி அக்கணக்கு 90,000 பேர்வரை வருமென ஒரு குத்துமதிப்பீட்டுக்கு இப்போது வரலாம்.
மேற்படி இனப்படுகொலையையும் இதன் சூழலையும் நான் எனது பச்சைக் கண்களால் கண்டவன். குழந்தைகளும், பெண்களுமே இதில் அதிக தொகையில் மாண்டிருந்தனர் என்பதை தெருக்களிலும், வெளிகளிலும், குடியிருப்புகளிலும், கடற்கரை ஓரங்களிலும் நான் கண்டுள்ளேன்.
தாயைத் தேடிப் பிள்ளையும், பிள்ளையைத் தேடி தாயும் ஓடும் அவலத்தில் அவர்கள் எறிகணைகளுக்குள் இலகுவாக சிக்குண்டு விடுகிறார்கள். சிறுவர்களின் மனோநிலையில் அவர்கள் தொடர்ந்து அதிக நேரம் பதுங்கு குழிகளில் இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறிது நேரத்தில் பதுங்கு குழிகளுக்கு வெளியே வந்துவிடுவார்கள். தாய்மார் பிள்ளைகளுக்கான உணவு தேடலின் பொருட்டு அல்லது சமையலின் பொருட்டு பதுங்கு குழிகளுக்கு வெளியே அதிகநேரம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.
இந்நிலையில் சிறுவர்களும், தாய்மாரும் பதுங்கு குழிகளுக்கு வெளியே நடமாடுவது அதிகம். எறிகணை வீச்சுச் சத்தம் கேட்கும்போது தாய்மார் பிள்ளைகளைத் தேடி ஓடுவதும், பிள்ளைகள் தாய்மாரை நோக்கி ஓடுவதுமான தருணங்களில் அவர்கள் இலகுவில் எறிகணைக்கு இலக்காகி விடுகிறார்கள்.
இந்நிலையிற்தான் கொல்லப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் தொகை அதிகம் என்ற கணக்கு சாத்தியமாகிறது.
இக்காலகட்டத்தில் இவ்வாறாக காயமுற்றோரின் தொகை அதிகமாகி வைத்தியசாலைகளில் நிரம்பும்போது வைத்தியசாலை இரத்தாறாக காட்சியளிக்கும். அதேவேளை அங்கு பணிபுரிந்த மருத்துவர்களின், பணியாளர்களினதும் தொண்டும், சமூகப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு அயராது பணிபுரிந்த வைத்தியர்களின் பெயர்களை என்னால் பட்டியலிட்டுச் சொல்லமுடியும். ஆனால் இங்கு நான் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
அவர்களின் பெயர் சொல்லி அவர்களின் அரும்பெரும் பணிகளை பாராட்டும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன். நான் நேரில் அவர்களை கண்ணால் கண்டு வாயால் பாராட்டி கைகுலுக்கியுள்ளேன். நான் ஒரு குடிமகன். சாத்தியமான இடங்களுக்குச் சென்று நிலைமைகளை எனது கண்களால் காண்பதிலும், அவர்களின் துயரங்களில் பங்கெடுப்பதிலும் எனக்கு அக்கறையிருந்தது. அந்த அக்கறையினால் அவர்களை நான் நேரில் பாராட்டியுள்ளேன்.
வெளியுலக மக்களுக்கு பல தகவல்களை சொல்ல வேண்டிய ஒரு சமூகப் பொறுப்பு எனக்குண்டு. அந்த வகையில் வன்னி மக்களின் துயரங்களைப் பதிகின்ற ஒரு சிறு ஆரம்பத்தை மட்டுமே என்னால் செய்யமுடியும். இப்பொறுப்பை வேறு பலரும் தொடர்வதற்கான தொடக்கமாக மட்டும் கருதியே இதனை ஆரம்பித்துள்ளேன். இன்னும் ஓரிரு தொகுதிகளுடன் வன்னித் துயர் பற்றிய எனது பதிவுகளை நான் நிறுத்திவிடுவேன்.
இங்கு இத்துயரைப் பதியும்போது இதில் உன்னதமாகப் பணிபுரிந்த மாந்தர்களைப் பற்றிய பதிவும் அவசியம் என நான் கருதுகிறேன். பலரது அரும் பெரும் பணிகள் எதிர்கால சமூகத்திற்கும், உலகின் கண்களுக்கும் முன்மாதிரியாய் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
குறிப்பாக மருத்துவம், சுகாதாரத்துறை சார்ந்தோரது பணிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களது பணிகளும், விரல் விட்டு எண்ணக் கூடிய அரசாங்க உயர் உத்தியோகத்தர்களது பணிகளும், பொறுப்பு வாய்ந்த தொண்டர் நிறுவனத்தோரது பணிகளும் அதிகம் கருத்தில் எடுக்கப்படத்தக்கவை.
சுதந்திரபுரத்தில் இரண்டு பெண்தாதிகள் எறிகணை வீச்சுக்கு கடமையின் போது பலியாயினர். அப்போது நான் வைத்தியசாலைப் பகுதியில் நின்றேன். தமது சக இரு பணியாளர்களும் கொல்லப்பட்ட அந்தப் பீதியையும் கடந்து அந்த வைத்தியசாலையில் மருத்துவர்களும், பணியாளர்களும் காயப்பட்டோர்களை கவனிப்பதிலேயே கண்ணாய் இருந்த காட்சி மிகவும் உருக்கமான சமூகவுணர்வு மிக்கதாக இருந்தது.
இந்த உலகம் கண்டு கொள்ளவேண்டிய முக்கியமான ஒரு விடயம் உண்டு. ஒரு சிறுநிலப் பரப்பில், அதுவும் போதிய உணவின்றி, வசதிகள் இன்றி மக்கள் இலட்சக்கணக்கில் அடைபட்டிருந்தபோது தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக அதிகமானது. ஆனால் தொற்று நோய் பற்றிய சிறுபதிவிற்கான வாய்ப்பும் அங்கு இருக்கமுடியாத அளவிற்கு சுகாதார, வைத்தியத் துறையினரது பணி மிகவும் பெரிதாக இருந்தது.
காடடர்ந்த மருத்துவ வசதி குறைந்த வன்னியில் மலேரியா, மூளை மலேரியா, டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பது இங்கு துலக்கமாகப் பெருமையுடன் பதியப்படவேண்டிய விடயம் ஆகும். உலகம் இதனை வன்னியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். எதிர்கால தமிழீழ அரசில் இவர்கள் சரிவர அடையாளம் காணப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களும் பரிசில்கள் வழங்கப்பட வேண்டியவர்களுமாவர்.
ஆங்காங்கே எங்கும் சிதறல்களாக பிரேதங்கள் காணப்படுவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உழவு இயந்திரப் பெட்டிகளில் 50 தொடக்கம் 60 வரையான பிரேதங்கள் குவியல் குவியல்களாக ஏற்றப்படுவதும், காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதும், இவ்வாறு அவர்கள் கொண்டு செல்லப்படும் போது மைதானத்தில் ஓட்டப் பந்தயத்திற்கு கோடுகள் வரைந்தாற்போல அந்தப் பாதைகளில் இரத்தக் கோடுகள் வழிநெடுங்கிலும் பதிந்திருப்பதும் மனத்தைவிட்டு அகல முடியாத துயர்நிறைந்த காட்சிகளாய் உள்ளன.
அப்பணியாளர்கள் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி அவசர கதியில் பிரேதங்களை ஏற்றிச் செல்கையில் பிரேதங்களின் கால், கை, தலை போன்ற பாகங்கள் உழவு இயந்திரப் பெட்டிகளில் தொங்குவதைப் பார்க்கும் போது, மிகப் பக்குவமாக பண்பாட்டுப் பரிமாணங்களுடன் நிகழும் வழக்கமான மரணக் கிரிகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு மனம் வெதும்பும்.
எனவே வெறுமனே இவற்றை மரணங்களாக மட்டும் பாராமல் பண்பாட்டுப் படுகொலைகளாகவும் பார்க்க வேண்டும்.
வன்னியில் இறுதிவரை நின்ற ஓர் அரசாங்க உயர் உத்தியோகத்தரின் பணிகளை நான் நேரில் கண்டேன். அவர் அதிக சமூகப் பொறுப்புடனும், சிறந்த நிர்வாகத் திறனுடனும் 24 மணிநேரமும் பணிபுரிந்தார். பலதடவைகள் நான் அவரைச் சந்தித்துள்ளேன். அவரது சமூக உணர்வும், அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வமும், அவரது நிர்வாகத் திறனும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. நான் அவரை மெய்மறந்து பாராட்டியுள்ளேன். நான் ஒரு சாதாரண குடிமகன்தான். அதில் நான் ஒரு குடிமகனாக நின்று அவரைப் பாராட்ட வேண்டிய அந்தப் பாத்திரத்தின் அளவில் நான் அவரைப் பாராட்டியுள்ளேன்.
ஆனால் எதிர்காலத்தில் அரச அதிகார அளவில் அல்லது நிறுவன அளவில் தமிழ் சமூகம் மேற்படி பணிபுரிந்த பல்வேறு துறையினரையும் அடையாளம் கண்டு எதிர்கால சமூகத்திற்கு முன்மாதிரிகளை உருவாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்குரிய முக்கியத்துவங்களை அளிக்கவேண்டும்.
துயரின் மத்தியில் மினுங்கும் விடயங்களையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மேற்படி தகுதிவாய்ந்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் உண்மையான தொகையை வெளியே கொண்டுவர உதவுவதுடன் தாம் கண்ட கேட்ட வன்னித் துயரங்களை அவர்கள் பதிவுசெய்ய வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
இனப்படுகொலைகள் – 1983 கறுப்பு ஜூலை
1983 கறுப்பு ஜூலை
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன யூ.என்.பி. தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள், சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.
மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ- பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை இரத்தக் களரி இயக்கம் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது. இதற்கான குண்டர், ஆயுதந் தாங்கிய இராணுவ இயக்கத்துக்கு அங்கிகாரம் பெறும் பொருட்டு இறந்த இராணுவப் படையாட்களின் சகல சடலங்களும் கொழும்பு கனத்தையில் இடம்பெறும் தகனக் கிரியைகளுக்கு கொணரப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. அது இனவாதப் படுகொலையாளர்கள் அணிதிரள விடுக்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக விளங்கியது.
1970- 77 கூட்டரசாங்க காலத்தில் சட்ட ரீதியானதாக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் கையாட்களான சமசமாஜ- ஸ்டாலினிச கட்சிகளும், இக்கட்சிகளின் எடுபிடிகளான நவ சமசமாஜக் கட்சியினரும் யூ.என்.பி.யின் ”சட்டத்தையும் ஒழுங்கையும்” பேணும் இயக்கத்துக்கு தோள் கொடுத்த ஜே.வி.பி,யும் இனவாதத்தை வெளிவெளியாக அரவணைத்துக் கொண்டனர். பொதுமக்களை குழப்பியடிக்கவும் இனவாத யூ.என்.பி. குண்டர் இயக்கத்தின் செல்வாக்குக்கு அதன் ஒரு பகுதியை பலியிட்டும் நடாத்திய அரசியல் இயக்கத்தில் சிங்கள இனவாத குண்டர்களும் இருந்தனர்.
இந்த இனவாத பேரழிவு அரசியல் விதிமுறையை தோற்கடித்து சிங்கள – தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அனைத்துலகவாத அடிப்படையில் ஐக்கியப்படுத்தி வழிநாடாத்த அன்று போராடியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அதனால் அதன் அச்சகம், அலுவலகத்தின் முகவரிகளும் அவ்வாறே அதன் முன்னணி அங்கத்தவர்களின் முகவரிகளும் இரத்தக்களரிக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக இருந்த தனியார் இடங்களின் பட்டியலில் அடங்கி இருந்தது. இது பின்னர் வெளியான சாட்சியங்களின் மூலம் அம்பலமாகியது.
ஜூலை 24ம் திகதி கொழும்பு கனத்தையில் கூடிய இரத்த வெறிக்குண்டர்களை நன்கு தூண்டி விடும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் ஆத்திரமூட்டல்களில் இறங்கியது. இறுதிக்கட்டத்தில் இறந்த இராணுவப் படைகளின் சடலங்கள் கனத்தையில் தகனம் செய்யப்படாமல் அவரவர்களின் ஊர்களில் தகனம் செய்யப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. கூடியிருந்த குண்டர்கள், கும்பல் கும்பலாக பிரிந்து இராணுவ பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொரளை முச்சந்தியில் அன்று மாலை இரத்தக் களரிகளிலும் காட்டுமிராண்டி படுகொலைகளிலும் ஈடுபட்டனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்தின் திருப்பு முனையாக 1983 ஜூலை முதலாளித்துவ அரச ஆதரவுடன் அந்த விதத்தில் ஆரம்பமாகியது.
1983 ஜூலை 23ம் திகதி ஆரம்பமான தமிழர் படுகொலை இரத்தக்களரி இயக்கம் பல நாட்கள் தொடர்ந்து பரந்து வந்தது. தனது சொந்த அனுபவங்களின் படி, இந்த காட்டுமிராண்டி இயக்கத்தின் பல கோணங்கள், அரசாங்க முன்னணிப் பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுசின் முன்னணிப் பத்திரிகையாளரும் தெகிவளை வாசியுமான ரீ. சபாரத்தினம் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு மிதவாதியின் படுகொலை (ஜிலீமீ விuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ ணீ னீஷீபீமீக்ஷீணீtமீ) என்ற நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளன.
“ஜூலை 24 விடியற்காலை 5 மணிக்கு எனக்கு நாராஹேன்பிட்டியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு, காடையர்கள் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதாகவும் வீதிகளில் கொள்ளையடித்துக் கொண்டு திரிவதாகவும் தெரிவித்தது. நான் எனது சிறுவயது ஆண் பிள்ளைகள் இருவருடனும் பம்பலப்பிட்டி காசல் ஒழுங்கையில் உள்ள எனது உறவினரின் வீட்டுக்கு விரைந்தேன். அந்த வீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் அகதிகள் முகமாக மாற்றப்படும் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்தது. இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு அணிதிரண்ட கும்பல் இரும்புக் கம்பிகளுடனும் ஆயுதங்களுடனும் ஆயுதபாணிகளாகி தமிழ்க் கடைகளையும் வீடுகளையும் உடைத்துத் தள்ளி, நகரை வலம் வந்தது. இவர்களின் பின்னால் பெற்றோல் டின்களையும் தாங்கிய கும்பல்கள் கடைகளையும் வீடுகளையும் தீமூட்டி வந்தனர்.
“அன்று காலை முழுவதும் கலகக்காரர்கள் பஸ்கள், லொறிகள், புகையிரதங்கள் மற்றும் அரசாங்க வாகனங்களில் கொழும்புக்கு பெருக்கெடுத்து வந்தனர். அவர்கள் தமிழர்களின் வீடுகளைக் கண்டு பிடிப்பதற்காக தேர்தல் இடாப்புகளை எடுத்து வந்திருந்தனர். அத்தகைய ஒரு குழு தெகிவளைக்கு சென்றது. அவர்கள் அயலவர்களை எனது வீட்டைக் காட்டும்படி கேட்டனர். அந்தப் பகுதியில் தமிழ் வீடுகள் கிடையாது என அவர்கள் கூறியதும் அவர்கள் தமிழரைக் பாதுகாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இடாப்பைக் காட்டினர். எனது பெயரின் கீழ் சிவப்பினால் கோடிடப்பட்டு இருந்தது. கலகக்காரர்கள் எனது வீட்டுக்கு சென்றனர். முன் கதவை உடைத்து திறந்தனர். எனது அலுவலக அறையில் இருந்த புத்தகங்களை வெளியில் இழுத்துப் போட்டு அவற்றுக்கு தீ மூட்டினர். அந்த அறையில் இலங்கை இந்திய வரலாறு பற்றிய அருமையான நூல்கள் இருந்தன. அந்த புத்தக அடுக்குகள் மூன்று நாட்கள் தொடர்ந்து எரிந்ததாக எனக்குத் தெரிய வந்தது.
“மதியநேரம் நான் காசல் ஒழுங்கையில் இருந்து எனது அயலவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். வீடு தீப்பற்றி எரிவதாக அவர்கள் கூறினர்கள். அதே நேரத்தில் ஆர். சிவகுருநாதன், பீ. பாலசிங்கம், கே. நடராசா, கே. சிவப்பிரகாசம், திருமதி. பொன்மணி குலசிங்கத்தினதும் மற்றும் பத்திரிகைத் துறையில் செல்வாக்கான பதவிகளை வகித்த இன்னும் பலரது வீடுகளுக்கும் தீ முட்டப்பட்டன. அந்த நேரத்தில் ஆளும் யூ.என்.பி. யின் தொழிற்சங்க கன்னையான சிறில் மத்தியூ தலைமையிலான ஜாதிக சேவக சங்கமே இந்தக் கும்பல்களுக்குப் பெயர்களையும் விலாசங்களையும் வழங்கியதாகத் தமிழர்கள் நம்பினர்.
“அதே வேளையில் ஒரு காடையர் கும்பல் கடற்கரைப் பக்கமாக காசல் ஒழுங்கையினுள் நுழைந்து ஒழுங்கையின் கடைசி வீட்டைத் தாக்கியது. நான¢ நான்கு அமச்சர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் எடுத்தேன். ஆனால், அவர்கள் ஜனாதிபதியுடன் இருப்பதாக எனக்கு கூறப்பட்டது. உன்மையில் அவர்கள் அவரை நாட்டுக்கு உரை நிகழ்த்தும்படி நெருக்கி வந்தனர். தெளிவாகக் குழம்பிப் போயிருந்த அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போயிருந்தார். ‘விடயம் கட்டுப்பாட்டைத் தாண்டிவிட்டது’ என அவர் தனது அமைச்சர்களிடம் தெரிவித்தார். தொண்டமானும் மற்றும் தமிழ் பிரமுகர்களும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும்படி அவரை நெருக்கினார்கள்.”
இந்த விதத்தில் நாடகபாணியில் இங்கே விபரிக்கப்பட்டிருப்பது சிங்கள இனவாத குண்டர் கும்பல்களின் கடைகெட்ட தன்மையையாகும். எப்போதுமே பிற்போக்கிற்கு செவிமடுக்கும் வரலாறு கொண்ட தொண்டமான் உட்பட்ட பிற்போக்கு தமிழ் பிரமுகர்கள் எனப்படுவோரின் மலட்டுத் தன்மையும் இது எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி ஜயவர¢த¢தன ”தனது ஆட்சியில்” செய்யப் போன நடவடிக்கையின் பரிமானம் எந்தளவானது என்பது மட்டுமே கூறப்படவில்லை.
1977 தேர்தலில் வென்றவுடன் பொலிசாரை மூன்று நாட்கள் லீவில் அனுப்பி தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஜயவர்த்தனாவின் கீழ் யூ.என்.பி கட்டவிழ்த்து விட்ட பயங்கர இயக்கம் இதைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக்கப்பட்டு கொழும்பிலும் ஏனைய மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டமை ஜனாதிபதி ஜயவர்தனவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரத்தின் அளவாகும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் கிடையாது. இது ஜூலை 23ம், 24ம் திகதிகளில் அவர் செயற்பட்ட விதத்திலும் அவ்வாறே அதன் பின்னர் அவரின் நடைமுறையின் மூலமூம் நன்கு நிரூபணமாகியது.
ஜூலை 23ம் திகதியில் இருந்து கொலைகார காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து இரத்தக் களரிகளில் ஈடுபட்ட பொலிசாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாக வீதிகளில் உலாவ இடமளித்ததன் பின்னர் ஜுலை 25 மாலை 2 மணிக்கே ஜனாதிபதி ஜயவர்த்தன கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாலை 6 மணிக்கேயாகும்.
எவ்வாறெனினும் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் பிற்போக்கு முதலாளித்து அரசின் ஒடுக்குமுறை ஆயுதங்களின் ஒரு அங்கமாகும். அவை மூலம் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுக்குக் கிட்டும் நிவாரணமோ அல்லது பாதுகாப்போ கிடையாது. முதலாளித்துவ ஒடுக்குமுறைப் பிடியை இறுக்கமாக்கி பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்ட தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அவசரகால சட்ட ஆட்சிக்கு வாக்களித்துள்ள, சமசமாஜ, இ.தொ.கா, நவசமசமாஜ மற்றும் ஸ¢டாலினிச கட்சிகள் போன்ற துரோக அமைப்புக்களால் மட்டுமே இத்தகையவை கிட்டுமென கூற முடியும். பொதுமக்கள் அந்தப் பொறியில் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக பொதுமக்கள் தமது பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்துகொள்ள, முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்தும் அரசில் இருந்தும் முதலாளித்துவ, முதலாளித்துவச் சார்பு கட்சிகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமான முறையில், தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்படும் மக்கட் குழுக்களை அணிதிரட்டிக் கொண்டு பாதுகாப்புக் கமிட்டிகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.
அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியினதும் மேற்சொன்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்கள் இளைஞர்களை அணிதிரட்டும் அவசியம் 1983 கறுப்பு ஜூலையின் அனுபவத்தின் மூலம் மேலும் ருசுப்படுத்தப்படுகிறது.
முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், குண்டர்கள் ஏனைய மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது இரத்த களரியையும் படுகொலைகளையும் முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகியது. ஜூலை 26ம் திகதி இனவாதிகள் கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருணாகலை, இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை நன்கு காட்சிப்படுத்தினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் கடற்படையினர் முன்நிலை வகித்திருந்தனர். இனவாத காடைத்தன குண்டர் இயக்கத்துக்கும் முதலாளித்துவ சட்டத்துக்கும் அரச படைகளுக்கும் இடையே நிலவிய பிரிக்கமுடியாத பிணைப்பை இது வெளிக்காட்டியது.
அரசின் தொடர்பு
ஜூலை 26ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத குண்டர்களுக்கும் அரச நிறுவனத்துக்கும் இடையேயான உறவினை பலம்வாய்ந்த முறையில் அம்பலமாக்கியது. வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள சிறைக் கைதிகள் தூண்டிவிடப்பட்டனர். தமிழ் சிறைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அங்கு 35 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் பேரால் எதிர்ப்புக் காட்டுவதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினராகப் பேர் பிரேரிக்கப்பட்டு ஈடேறாது போன குட்டிமணியும் இதில் அடங்குவார். இது முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை அமைப்பான சிறைச்சலை அதிகாரிகளின் உடன்பாடும் பங்களிப்பும் இல்லாமல் இடம்பெறக்கூடிய ஒரு சுயமான நிகழ்வு அல்ல. இந்தச் சம்பவம் இடம்பெற்றதற்கு மறுநாள் ஜூலை 27ம் திகதியும் அதே விதத்தில் அதே இடத்தில் வைத்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் விவாதத்துக்கு இடமற்ற முறையில் நிரூபணமாகியது.
முதலாளித்துவ அமைப்பினால் எவ்வித எதிர்காலமும் அற்றமுறையில் அனாதைகள் ஆக்கப்பட்டு இம்சைக்குள் தள்ளப்பட்ட அநாகரீக சமூகத்தின் ஒரு பகுதியினர் முதலாளித்துவ வர்க்கத்தின் கடைகெட்ட தேவைகளின் பேரில் எவ்வளவு இலகுவான விதத்தில் தூண்டிவிடப்படுகின்றார்கள் என்பதனை கறுப்பு ஜூலையின் சகல சம்பவங்களும் பிரசித்தமாக்கின. விஞ்ஞானபூர்வமான சோசலிச இயக்கத்தின் ஸ்தாபக பத்திரமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் (1848) மார்க்சும் எங்கெல்சும் இந்த விடையத்தை புகழ் வாய்ந்த முறையில் தீர்க்கதரிசனமாக கண்டார்கள்.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ”பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ”அபாயகரமான வர்க்கம்” பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்தினுள் இழுக்கப்படலாம், ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக்கருவியாய் இலஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றனர்.” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – பக்கம்- 60)
பாசிஸ்ட்டுகளும் அவ்வாறே பாசிஸ்டுகளுக்கு கம்பளம் விரிக்கும் தீவிரவாத பைத்தியங்களும் எப்போதும் வக்காலத்து வாங்குவது இந்த லும்பன் சமூகத் தட்டினை (தெருவில் உழைப்பவர்கள்) அணிதிரட்டிக் கொள்வதற்கேயாகும். அது அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டின் காரணமாகத் தவிர்க்கமுடியாத விதத்தில் தலைநீட்டும் பிற்போக்கு அவசியமாகும். ஜே.வி.பி. யினதும் ஜனதா மித்திரோ அமைப்பினதும் நவசமசமாஜ கட்சியினதும் இன்னும் பல தீவிரவாத கும்பல்களதும் வாய்வீச்சுக்களினுள்ளும் திட்டங்களினுள்ளும் இந்த லும்பன் குழு சார்ந்த அவசியங்களை நன்கு கண்டு கொள்ள முடியும். இனவாதம் சாதிவாதம் வகுப்புவாதம் உட்பட மக்கள் நலவாதத்தின் பக்கமும் இந்தப் பிற்போக்கு அமைப்புக்கள் ஈர்க்கப்படுவது, லும்பன் சமூகத் தட்டு சம்பந்தமான அவர்களின் மோப்பம் பிடித்தலின் திட்டவட்டமான ஒரு வெளிப்பாடாகும்.
கடந்த காலத்தில் இருந்து நாகரீகத்தின் பயனத்தில் சமூக முன்னேற்றமானது, இன்றைய சமூக முறையினுள் இருந்துவரும் உற்பத்திச் சக்திகளை அழித்தொழிப்பதாக அல்லாது மிகவும் உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி செய்யும் வல்லமை கொண்ட வர்க்க சக்தியை அரசியல் அரங்குக்கு கொண்டுவர போராடுவதன் மூலமே இடம்பெற்றுள்ளது. நிலமானித்துவ முறைக்கு எதிராக அந்தப் பணியை இட்டுநிரப்பக் கூடியதாக விளங்கிய சமூக சக்தி முதலாளித்துவ வர்க்கமேயானால் முதலாளித்துவ அமைப்பின் கீழ் நாகரீகத்தின் பேரழிவைத் தவிர்க்கும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய பிரதிநிதி தொழிலாளர் வர்க்கமேயாகும். மார்க்சும் எங்கெல்ஸ்சும் தீர்க்கதரிசனமாகக் கண்ட விஞ்ஞான சமூக உண்மை இருபதாம் நூற்றாண்டின் முழு அனுபவங்களின் மூலமும் ருசுப்படுத்தப்பட்டுள்ளது.
சமசமாஜ, ஸ்டாலினிச, நவசமசமாஜ, இ.தொ.கா. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தேசியவாத முதலாளித்துவச் சார்பு அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கம் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒரு புறத்தில் தமிழ் தேசியவாத குட்டி முதலாளித்துவ குழுக்கள் தலைதூக்கின. மறுபுறத்தில் இனவாத ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கள் தெற்கில் வளர்ச்சி கண்டன. இது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாத யுத்தத் தீப்பிளம்புக்கு எண்ணெய் வார்ப்பதாக விளங்கியது.
கறுப்பு ஜூலையில் கொலைகளுக்கும் இரத்தக் களரிக்கும் இலக்கானவர்களின் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் 350 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 18,000 தமிழர்களின் வீடுகளும் கடைகளும் கொள்ளையிட்டுத் தீவைக்கப்பட்டதாகவும் கூறுகின்றன. முதலாளித்துவ அரசு வெளியிட்டுள்ள இந்த உத்தியோகபூர்வமான அறிக்கைகள் சரியானவை அல்ல என்பதை எப்போதும் போல் இங்கும் குறிப்பிட்டாக வேண்டும்.
சிங்கள வெகுஜனங்களின் இயக்கம் அல்ல
ஆனால், அந்த உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் இருந்து அகதிகளாக வந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமானது எனக் குறிப்பிடுகின்றன. அதில் இருந்து ஒரு முடிவுக்கு வருவது அவசியம். கறுப்பு ஜூலை சிங்கள பொரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற ஒரு தமிழர் எதிர்ப்பு இனவாத இயக்கமாக இருந்திருக்குமானால், ஒரு லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாவதற்கு மாறாக கொலைசெய்யப்பட்டிருப்பார்கள். இல்லை. அது பொரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட படுகொலை, இரத்தக்களரி இயக்கமாக விளங்கவில்லை. அதற்குப் பதிலாக அது யூ.என்.பி. அரசாங்கம் முன்கூட்டியே அணிதிரட்டிக் கொண்ட லும்பன் உலகின் கொலையாளிகளை இனவாதத்தினால் தூண்டிவிட்டு, இராணுவ- பொலிஸ், சிறைச்சாலை உட்பட அரச ஒடுக்குமுறை நிறுவனங்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டி இயக்கமாகவே விளங்கியது.
இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் மக்களிடமிருந்து பலருக்கு தமது அயல் சிங்கள நண்பர்கள் உயிர்தப்ப உதவிய விதம் பற்றிக் கூறவேண்டி இருந்த உண்மைக் கதைகள் பல. என்றும் துயருறும் அந்த பொதுமக்கள் என்ன மொழி பேசினாலும் எந்த மதத்தையும் கலாச்சாரத்தையும் கடைப்பிடித்தாலும் துயரத்தின் போதும் சங்கடத்தின் போதும் பொதுவில் நடந்து கொள்ளும் விதிமுறை அதுதான். இனவாத, இனக்குழுவாத மோதுதல்கள் ஆளும் வர்க்கத்தின் அவசியங்களுக்கு இணங்க, அவர்களின் நலன்களுக்கு அவர்களால் வழி நடாத்தப்படும் காடையர்கள், அரச இயந்திரத்தைக் கொண்டு கட்டவிழ்த்து விடும் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாகும். பொதுமக்கள் தமது வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின்படி பொதுவில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான கட்டுப்பாடான சமுக வாழ்க்கைக்கான மனித முயற்சிகளில் ஆகும்.
இந்த மனிதத் தன்மை வாய்ந்த முயற்சிகளுக்கு வர்க்க சமுதாயம் என்றும் எதிரிடையாக இருந்து வந்துள்ளது. முதலாளித்துவ அமைப்பின் கீழ் வர்க்க துருவப்படுத்தலுக்கு உள்ளான வர்க்க சமுதாயம், முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சி நிலமையின் கீழ் அதன் நச்சுத்தனமான இலட்சனமான ஏகாதிபத்திய உலக யுத்தத்தையும் நாட்டுக்கு நாடு காலனித்துவத்தை இலக்காகக்கொண்ட இனவாத இனக்குழுவாத மோதல்களையும் நனவான முறையில் சிருஷ்டிக்கின்றது. இலங்கையினுள் இனவாத யுத்தமாக இந்த ஏகாதிபத்திய அவசியத்தின் பெரிதும் நச்சுத்தனமான தன்மையே வெளிப்பட்டுள்ளது.
யூ.என்.பி. அரசாங்கம் விதித்த அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் இனவாத குண்டர்களையும் ஆயுதப்படைகளின் கொலையாளிகளையும் இரத்தக்களரிக் காரர்களையும் பாதிக்கவில்லை. அதற்குப் பதிலாக அது அவர்களின் குண்டர் நடவடிக்கைகளுக்குப் புதிய உத்வேகத்தை வழங்கியது.
அத்தகைய ஒரு பக்கபலம் இல்லாமல் இந்தக் காடையர் இயக்கம் இயங்கி இருக்குமானால் அதனது நிலையான கோழைத்தனம் அம்பலப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும். இது ஹிட்லரின் இயக்கம் தொடக்கம் ஜே.வி.பி. யின் பாசிச இயக்கம் வரையிலான வகையறாக்களைச் சேர்ந்த இத்தகைய இயக்கங்களால் பல தடவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவற்றின் கொலைகார நிழல் எங்கும் இறுக்கப்பட்டு அவற்றின் கால்கள் கட்டிப்போடப்பட்டது அரச இயந்திரத்தின் பொலிஸ்- இராணுவம் உட்பட முதலாளித்துவ அமைப்புக்களின் மூலமே. முதலாளித்துவ அரசைத் தூக்கிவீசும் மூலோபாயம் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தை சுமந்து பாசிச எதிர்ப்பு மற்றும் இனவாத எதிர்ப்பு இயக்கம் எனக்கூறிக் கொள்ளும் இயக்கங்கள் எங்கும் தமது வங்குரோத்தினையும் மலட்டுத்தனத்தினையும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளன. மார்க்சிஸ்டுகள் இனவாதக் குண்டர்களுக்கும் பாசிஸ¢டுக்களுக்கும் எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அரசுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசை ஸ்தாபிக்கும் முலோபாயத்துடன் இணைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
ஜூலை 29ம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் மூலம் குண்டர்களின் மேற்சொன்ன தன்மை சுட்டிக் காட்டப்பட்டது. அது ”புலிகள் கொழும்புக்கு வந்து விட்டனர்,” என்றக் கூச்சலுடன் இடம்பெற்றது.
பிரச்சாரத்தின் தொடக்கமாக புறக்கோட்டை சம்பவம் விளங்கியது. அதை ஆரம்பித்தவர்கள் பொலிஸ்காரர்களாக இருந்தனர். தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு அறைக்குள் சுருண்டு கதவை மூடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுவொன்றை வெளியில் கொண்டுவந்து கொலைகாரர்களின் கைகளில் ஒப்படைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். வெடிச் சத்தம் கேட்ட உடனேயே அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த குண்டர்கள் தமது மனதில் பொங்கிக்கொண்டிருந்த பீதிக்கு பதிலளிக்கும் பொறுப்பை தமது கால்களிடம் ஒப்படைத்தனர். தலை திரும்பிய பக்கம் எல்லாம் ஓடிய அவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் போதே “கொழும்புக்கு புலி வந்துவிட்டது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” எனக் கூச்சலிட்டனர். ஒரு சில கணங்களில் இந்தக்கதை கொழும்பு முழுவதிலும் அயல் பகுதிகளிலும் காட்டுத் தீ போல் பரவியது. குண்டர்களின் பீதி குண்டர்களுக்கு ஊடாகவே வாய்க்கு வாய் பரவியது. சகல சந்திகளிலும் உற்சாகவேடம் பூண்டு உலாவி வந்த இனவாதிகள் அகப்பட்ட இடங்களில் ஒழித்துக் கொண்டனர். இராணுவ- பொலிஸ¢ காவல் நிலையங்கள் வெறிச்சோடிய சம்பவமும் அத்துடன் இடம்பெற்றதாக பல இடங்களில் அறியக் கிடைத்தன.
பு.க.க.வின் அஞ்சாத தலையீடு
சமூகத்தின் தெருக்கும்பல் தட்டினில் இருந்து திரட்டி, அரச இயந்திரத்தின் சக்தியை ஊட்டி வீதியில் இறக்கப்படும் இந்தக் குண்டர் இயக்கத்துக்கு எதிராக, புரட்சிகர சமுக சக்தியான தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை இந்த இரத்தக்களரி தீவைப்புகளுக்கும் அரச அடக்குமுறைகளுக்கும் மத்தியிலும் கைவிடாதிருக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ¢ட் கழகம் பார்த்து கொண்டது.
சிங்கள இனவாதிகள் சிருஸ்டித்துள்ள பேரழிவுகளின் பரிணமத்தையிட்டு பொது மக்களை விழிப்படையச் செய்வதைக் கூட தவிர்க்கும் பொருட்டு அவசரகால சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கைகள் மூலம் கொலைகள், இரத்தக்களரிகள் பற்றிய செய்திகளை வெளியிடுவது அடியோடு தடைசெய்யப்பட்டு இருந்தது. தொழிலாளர் பாதை மற்றும் கம்கறு மாவத்த பத்திரிகைகளை வெளியிட பு.க.க. தணிக்கை அதிகாரியிடம் சமர்ப்பித்த கட்டுரைகள் தலைமுதல் அடிவரை வெட்டித் தள்ளப்பட்டன. இந்த நிலையில் புட்சிகர இயக்கத்தின் வாயைக் கட்டிப் போடுவதற்கு எதிரான ஆபத்துக்கிடையேயும் போராடுவது தவிர்க்க முடியாததாகியது. தணிக்கை அதிகாரிகளின் தணிக்கைக்கு சமர்ப்பிக்காமல் இரகசியமாக ஒரு பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட பு.க.க. முடிவு செய்தது.
அது கட்சியின் அச்சகத்தினது மட்டுமல்ல முழுக் கட்சிக் காரியாளர்களதும் பாதுகாப்பை பணயம் வைத்து எடுத்த அஞ்சாத தீர்மானமாகும். புரட்சிகர இயக்கம் ஆபத்தை சகிக்காது இருக்க முடியாது. புரட்சிக் கட்சி காரியாளர் பயிற்சி மையம் பிற்போக்கு பிரச்சாரங்களினால் வழிதடுமாறாததும் முதலாளித்துவ அரச ஒடுக்குமுறையின் எதிரில் கிடுநடுக்கம் பிடிக்காத தலைமையினால் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு பங்களிப்பச் செய்வதே. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு அரசியல் அமைப்பும் அன்று செய்யாத ஒன்றாகும். அது ஏனைய சகல அரசியல் கட்சிகளும் முதலாளித்துவ அரசின் சட்டத்தை காக்கும் காரியத்தை அங்கீகரித்துக் கொண்டு இருந்ததோடு தொடர்ந்தும் இருந்து வருவதாலாகும்.
தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தை விளக்கி 17 பக்கங்களுடன் வெளியான இந்தச் சிறிய நூல் ஜூலை 23ம் திகதியில் இருந்து ஆரம்பமான இனவாத இயக்கத்தின் தன்மையையும் அதன் அடிப்படைகளையும் பின்வருமாறு விளக்கியது.
”ஜூலை 23ம் தொடங்கிய இனவாத மக்கள் படுகொலை கலகத்தினால் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் தமிழ் தேசிய இனத்தினர் அகதி முகாம்களில் தள்ளப்பட்டுள்ளனர். இத்த மாவட்டத்தில் ஒரு தமிழ் கடையோ வேலைத்தலமோ அல்லது வெற்றிலை சுருள் வண்டியோ மிஞ்சவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர தமிழ் தேசிய இனத்தினர் அவர்கள் வாழ்ந்த சகல இடங்களில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு நூல் பந்து வரை கொள்ளையடிக்கப்பட்டு அவற்றுக்கு தீமூட்டப்பட்டுள்ளது.
“சாதாரண மனிதன் மட்டுமல்ல அரசாங்க உயர் அதிகாரிகளும் பொலிஸ் திணைக்களத்தினதும் இராணுவத்தினதும் அதிகாரிகளும் நீதிபதிகளும் – அவர்கள் தமிழராக இருந்ததால்- இந்தத் தலைவிதிக்கு முகம் கொடுத்தனர். அதாவது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய சகல மாகாணங்களிலும் சகல தமிழ் தேசிய இனத்தவர்களும் உக்கிரமான தாக்குதல்களினால் அவ்விடங்களில் இருந்து அடியோடு தூக்கி வீசப்பட்டனர்.
“கலகம் தேயிலை இறப்பர் தோட்டங்கள் வரை பரந்து சென்றது. தோட்டத்துறை அடியோடு தீமூட்டப்படாது போனதற்குக் காரணம், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்களும் இந்திய மக்கள் இயக்கமும் உக்கிரம் கண்டதேயாகும். கலகக்காரர்கள் அரசாங்க அமைச்சரான தோட்டத் தொழிலாளர் தலைவர் தொண்டமானின் இ.தொ.கா. கொழும்புத் தலைமையகத்தைத் தாக்கி அதன் ஒரு பகுதிக்கும் தீ வைத்தனர்.
“இவை எல்லாவற்றிற்கும் மேலாக கலகக்காரர்கள் இந்தியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் சொந்தமான பெரிய, சிறிய கைத்தொழிற்சாலைகள் அனைத்தையும் அடியோடு தக்கியதோடு உற்பத்தி உபகரணங்களையும் சேதமாக்கி அவற்றுக்கு தீமூட்டி நாசமாக்கினர். இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் சிங்களம் பேசும் தொழிலாளர்களாவர். மஹாராஜா கைத்தொழிற்சாலைகள், சின்டெக்ஸ், சென்ட் அன்தனிஸ் ஹாட்வெயர்ஸ், ஹைட்ராமணி, கே. ஜீ. இன்டஸ்ட்ரீஸ், ஜெட்ரோ இன்டஸ்ரீஸ், டாட்டா காமன்ட்ஸ¢ போன்ற ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்த பக்டரிகள் அடியோடு தவிடுபொடியாக்கப்பட்டன.
“இதைக்காட்டிலும் மிகவும் பயங்கரமான சம்பவம் வெலிக்கடை அரச சிறையில் இருந்த தமிழ் விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 54 பேர் அரசாங்க இராணுவத்தின் தலையீட்டில் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டதாகும்.
“தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்தக் கடைகெட்ட அநியாயங்கள் 35 வருடங்கள் இடம்பெற்று வந்த தேசிய ஒடுக்குமுறையினதும் அடக்குமுறையினதும் உச்சக்கட்டமாகும். இவற்றை தற்செயலான சம்பவங்களாக வர்ணிக்க ஒரு துரோகியினால் மட்டுமே முடியும்.
“இந்த மக்கள் படுகொலை நடவடிக்கைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்துக்கு உள்ளான வங்குரோத்து தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தமது மரணத்தை ஒத்திப்போடும் பொருட்டு மேற்கொண்ட கையாலாகாத்தனமான பிரயத்தனத்தில் இருந்து பெருக்கெடுக்கின்றது என மாக்ஸ்சிஸ்ட்டுக்கள் முன்கூட்டியே நிருபித்துக்காட்டியுள்ளனர்.
“இந்த அநியாய நடவடிக்கைகளிலும் மக்கள் படுகொலைகளிலும் முதலாளி வர்க்கத்தின் சகல பகுதியினரும், சகல கட்சிகளும் இராணுவமும் சிறைச்சாலை உட்பட முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்களும் புத்த கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் முழு முதலாளித்துவ பத்திரிகை குழுக்களும், குட்டி முதலாளித்துவத்தின் தலை குழம்பிய உயர்தட்டினரும் அவரவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க தொடர்புபட்டுள்ளனர் என இந்தக் கலகத்தின் உள்ளடக்கத்தை கவனமாக ஆராயும்போது நிருபணமாகும்.
“இது தேசிய ஒடுக்குமுறை பற்றிய உலகலாவிய ஒரு தோற்றப்பாடேயன்றி ஸ்டாலினிஸ்டுகளும் திரிபுவாதிகளும் பூசிமெழுக முயற்சிக்கும் விதத்தில், பிற்போக்கு முதலாளித்துவ சமூதாயத்தினுள் அழிபாடுகளாக இருந்து கொண்டுள்ள, பின்தங்கிய சமூகத்தட்டினரிடமிருந்து காலத்துக்குக் காலம் வெடித்துக் கிளம்பும் இனவாதக் குமுறல் அல்ல. 1983 ஜூலை கலவரம், இறுதியாக முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பாத்திரங்கள் தீர்க்கப்படாத ஒரு நாட்டில், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் உலக நெருக்கடியின் கொதிப்புக்குள் அகப்படுவதற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையே இருந்து கொண்டுள்ள பிரிக்கமுடியாத உறவை நிருபித்துக் காட்டியுள்ளது. இதில் இருந்து தலைதப்ப எவராலும் முடியாது.”
1983 ஜூலை இறுதியில் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக் களரியையும் படுகொலைகளையும் பிற்போக்காளர்கள் நாடு பூராவும் கட்டவிழ்த்து விட்டது ஏன்? இதை அன்றைய யூ.என்.பி. ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினால் தொடுக்கப்பட்ட சவாலை தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதல் ”தன்னியல்பான” தமிழர் எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும் என்ற கூச்சலையும் அவ்வாறே அது ”சுயமான மக்கள் கலகங்களின் ஒரு வெளிப்பாடாகும்” என்ற நவ சமசமாஜக் கட்சித் தலைவர்களின் தீவிரவாதக் கூப்பாடுகளையும் தவிடு பொடியாக்கிவிட்டது.
1983 கறுப்பு ஜூலை ஆரம்பமான ஜூலை 23ம் திகதிக்கு சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர் ஜூலை 17ம் திகதி கொழும்பு அரசாங்க லிகிதர் சேவை மண்டபத்தில் 28 தொழிற் சங்கங்களின் செயற்பாட்டாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இது 1980 ஜூலையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரில் சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்களின் தட்டிக் கழிப்புக்களையும் ஜே.வி.பி. யின் கருங்காலித்தனங்களையும் பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக யூ.என்.பி. அரசாங்கம் தொடுத்த மிலேச்சத் தாக்குதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்துக்காக மீண்டும் அணிதிரண்டதை வெளிக்காட்டிக் கொண்டது.
தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை 1980ஐக் காட்டிலும் இன்றைய தருணத்தில் சகிக்க முடியாது போனதற்கு காரணம் யூ.என்.பி. அரசாங்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் திணித்த நெருக்குவாரம் உக்கிரம் கண்டுபோய் இருந்ததேயாகும். தொழிலாளர்களின் சம்பளத்தின் நிலையான பெறுமானத்தை வெட்டித் தள்ளும் பொருட்டும் ரூபாவை மதிப்பிறக்கம் செய்யும் படியும் கல்வி, சுகாதார மற்றும் நலன்புரி சேவைகளை வெட்டும்படியும் ஏகாதிபத்திய வங்கியாளர்கள் அரசாங்கத்தை நெருக்கி வந்தனர். ஜூலை மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த போல் பப்பியர் தலைமையிலான பார்வையாளர் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து, நாட்டில் இருந்து வெளியேறியதுதான் தாமதம் உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் வங்கியாளர்களுக்கு இருந்து கொண்டிருந்த அவசரத்தை காட்டிக் கொண்டனர். பொதுமக்களை கசக்கிப் பிழியும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்கிடாது போனால் அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் தொடர்ந்தும் கடன் வழங்குவது இல்லை என்ற முடிவினை எடுக்க இருப்பதாக வங்கியாளர்கள் அச்சுறுத்தலாக எச்சரித்தனர். வங்கிகளின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்து கொண்டிருக்கையிலேயே அரசாங்கம் ரூபாவை 5.5 வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்தது. இருந்தாலும் வங்கியாளர்கள் அதையிட்டு திருப்தியடையவில்லை.
இத்தகைய ஒரு நிலையிலேயே தொழிலாளர் வர்க்கத்தினுள் பதட்டம் வளர்ச்சி கண்டுவந்தது. தொழிற்சங்கங்கள் உட்பட தொழிலாளர் அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. 11 கோரிக்கைகள் இயக்கம் என்ற பேரிலான அமைப்பைச் சூழ 28 தொழிற்சங்கங்கள் அணிதிரண்டது இதன்படியேயாகும்.
பாரம்பரியமான தொழிற்சங்க கோரிக்கைகள் என்ற முறையில் 1980 வேலை நிறுத்தக்காரர்களை மீண்டும் சேவையில் சேர்த்தல், தொழிலாளர் சம்பளத்தை ரூபா 500 ஆல் கூட்டுதல் போன்ற கோரிக்கைகளை முன்னணியில் கொண்டிருந்த போதிலும் 28 தொழிற்சங்கங்கள் நிறைவேற்றிக் கொண்ட கோரிக்கைகள் அரசியல் தன்மை கொண்டவையாக விளங்கின. இதற்கிடையே கூட்டுத்தாபனங்களை தனியார் துறையிடம் கையளிப்பதை நிறுத்துதல், இலவசக் கல்வி வெட்டை நிறுத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், விவசாய நிலங்களை ஏகாதிபத்திய வாதிகளிடம் ஒப்படைப்பதை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.
இவை தொழிற்சங்க போராட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்லும் அரசியல் போராட்டத்தை வேண்டிநிற்கும் கோரிக்கைகளாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கவாதத்தினுள் தொழிலாளர்களை கட்டிப்போட நடவடிக்கை எடுத்த போதிலும் யூ.என்.பி. அரசாங்கம் அதனால் திருப்திகண்டு நிலைமையை புறக்கணித்துவிட முடியாது போய் விட்டது.
பு.க.க.வுக்கு இருந்த ஆதரவு
இன்றைய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் ஜூலை 17ம் திகதி நடந்த 28 தொழிற்சங்கங்களின் பேராளர் மகாநாட்டில் மட்டுமன்றி பரந்த தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.
இந்தப் பேராளர் மகாநாட்டில் பேசிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அங்கத்தவரான பரீடா இம்ரான் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரகோசத்தின் மத்தியில் பேசுகையில் ”சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்வதை மேலும் காலம் கடத்த முடியாது” எனக் குறிப்பிட்டார்.
”11 கோரிக்கைகளை வெற்றி கொள்வது யூ.என்.பி அரசாங்கத்தை தோற்கடிப்பதுடன் இணைந்து கொண்டுள்ளது” எனக் கூறிய அவர் ”வடக்கு பிரதேச மக்களுக்கு எதிராக அரசாங்கம் இனவாத யுத்தத்தை தூண்டி விட்டிருப்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தடம்புரளச் செய்யவதற்கேயாகும்” எனவும் குறிப்பிட்டார்.
“உற்பத்திச் சக்திகளையும் சேவைகளையும் ஒழித்துக்கட்ட ஏகாதிபத்திய வங்கியாளர்களின் சார்பில் அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கம், இனவாதக் குழப்பங்களை சிருஷ்டிப்பது அந்த நடவடிக்கையை எடுக்கவேயாகும். தொழிலாளர் வர்க்கம் தொழில், சேவைகளை கட்டிக் காக்க வேண்டுமானால் இனவாத யுத்தத்திற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் எனக்கூறிய அவர், யூ.என்.பி. அரசாங்கம் நடாத்தும் சேவை, தொழில் அழிப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டி வெகுஜனக் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும், அரச குண்டர் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புக் கமிட்டிகளை அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.” (கம்கறு மாவத்தை, தொழிலாளர் பாதை 1983ஜூலை 19)
இது அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்கத்தினுள் நடாத்திய சக்தி வாய்ந்த அரசியல் தலையீட்டுக்கான ஒரு உதாரணம் மட்டுமே. இதற்கு முரண்பட்ட முறையில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகளும் நவசமசமாஜக¢ கட்சியினதும் ஜே.வி.பி.யினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் மற்றும் 28 தொழிற்சங்கங்களின் முன்னணியும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்திக்கான பொதுப் போராட்டத்தில் இருந்து ஓட்டமெடுத்து, யூ.என்.பி. இனவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கு முண்டு கொடுத்தன. இந்த பக்கத் தூண்களோடு யூ.என்.பி. அரசாங்கம் முடிந்தவரை சகல இடங்களிலும் அவற்றை பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை குழப்பியடிக்கவும் பிளவுபடுத்தவும் மற்றும் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக்களரியையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துவிடவும் செயற்படவும் முடிவெடுத்ததானது, எதிர்காலத்தில் வர்க்கப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சியால் தாங்க முடியாத மட்டத்துக்கு வளர்ச்சிகாணும் என அது நனவாக கணித்துக் கொண்டிருந்ததாலேயே ஆகும்.
இனவாத ரீதியில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கு முன்னதாக பல் துலக்கி வாய் கழுவும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் பல தயாரிப்புக்களில் ஈடுபட்டது. தமிழ் மக்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த சற்றடே ரிவீயூ சஞ்சிகையும் சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டன. சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசனும் வடக்கில் செயற்பட்ட காந்திய இயக்கத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 17ம் திகதி நடைபெற்ற தொழிலாளர் பேராளர் மகாநாட்டில் இந்த நடவடிக்கைகள் கண்டனம் செய்யப்பட்டன. அத்தோடு தடையை அகற்றும்படியும் கைதானவர்களை விடுதலை செய்யும்படியும் கோரும் அவசர பிரேரணைகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கொடிய அடக்குமுறையின் உக்கிரமான தாக்குதல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு தொடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. பு.க.க. பத்திரிகைகளான தொழிலாளர் பாதை மற்றும் கம்கறு மாவத்தை மீதும் அரசாங்கத்தின் விஷ நகக் கீறல்கள் விழுந்தன. தொழிலாளர் வர்க்கத்தினதும் அரசியல் ரீதியில் நனவான பகுதியினரிடையேயும் அது அந்தளவுக்கு கோபமூட்டியதன் காரணமாக, தொழிலாளர் பேராளர் மாகாநாட்டில் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக விளங்கிய எச்.என். பெர்னாந்து, அரசாங்கத்தின் அந்த வேட்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தள்ளப்பட்டார்.
அன்று கம்கறு மாவத்தை பத்திரிகை வெளியீட்டாளராகவும் அச்சகனாகவும் விளங்கிய ஆனந்த வக்கும்புர, வெள்ளவத்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். வவுனியாவில் இடம்பெற்று வந்த தமிழர் எதிர்ப்பு தகவல்களைத் திரட்ட வவுனியா சென்றதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில் பு.க.க. அச்சகமும் அலுவலகமும் வெள்ளவத்தையில் இயங்கி வந்தன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த அரசியல் பிரச்சாரம் காரணமாக வக்கும்புரவை பொலிசார் பிணையில் விடுதலை செய்த பின்னர் அவரை வவுனியா பொலிஸ் நிலைய அதிபரிடம் சரணடையுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வளர்ச்சி கண்டுவந்த இனவாத வன்முறையின் பின்னணியின் கீழ், அந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பு.க.க.வை இரத்தக் களரியில் நசுக்கித் தள்ள அரசாங்கம் தீர்மானம் செய்திருந்ததை எடுத்துக் காட்டியது. ஆதலால் வக்கும்புரவை சரணடையுமாறு வவுனியா பொலிஸ¢ நிலைய அதிபர் பிறப்பித்த கட்டளைகளை மீறுவதென பு.க.க. தீர்மானித்தது.
வர்க்கப் போராட்டத்தின் உக்கிரம்
இந்த சகல சம்பவங்களும் வர்க்கப் போராட்டத்தின் சூடுபிடித்திருந்ந விதத்தை எடுத்துக் காட்டின. பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையே புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் ஸ்தாபிதம் செய்யப்படாமல் இருந்தமை ஆளும் வர்க்கத்துக்கு இருந்த ஒரே வாய்ப்பாகும். கிளர்ந்து வரும் பொதுஜன கிளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை உபகரணங்களான பொலிஸ், இராணுவம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளால் முடியாது போனதை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் புரிந்து கொண்டன. எனவே தான் யூ.என்.பி. தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களிடையே சமசமாஜ, கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, ஜே.வி.பி., இ.தொ.கா. கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் அவ்வாறே தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்களும் திட்டமிட்டு உருவாக்கி இருந்த அரசியல் ஆயத்தமற்ற நிலைமையைப் பாவித்து இனவாத கலவரத்தினால் நாட்டில் தீச்சுவாலையை மூட்டத் தீர்மானித்தது.
கட்டவிழ்த்துவிட்ட தமிழர் எதிர்ப்பு கலவரத்தின் பின்னணியில் இருந்த குறிக்கோள், எழுச்சி கண்டுவரும் தொழிலாளர் வர்க்கப் போராட்ட அலையை தவிடுபொடியாக்குவதாக இருக்குமானால், இனவாத வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அதைச் சூழ ஒடுக்கப்படும் மக்களை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டவும் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தடைசெய்வதுடன் நிற்காது அதை தவிடு பொடியாக்குவதும் அந்தப் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலில் ஒரு பாகமாகியது புதுமையானது அல்ல.
ஜூலை 24ம் திகதி வெள்ளவத்தை பகுதிக்கு தீவைத்தும் கொள்ளையிட்டும் தமிழ் உயிர்களை சுட்டுப்பொசுக்கியும் வந்த யூ.என்.பி. குண்டர்களில் ஒரு பகுதியினர் அப்பகுதியில் அமைந்திருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அலுவலகத்தையும் அச்சகத்தையும் தேடி அலைந்தது தற்செயலானது அல்ல. ஆனால், கொழும்பு 6 கனல் ஒழுங்கை 21ம் இலக்கத்தில் இருந்த கட்சி அலுவலகத்தையும் அச்சகத்தையும் குண்டர்கள் அணுகுவது தவிர்க்கப்பட்டது அப்பிரதேச மக்களால் என்பது அப்படி ஒன்றும் தற்செயலானது அல்ல. அம்மக்கள் குண்டர்களை வேறு வழியில் திசை திருப்பி விட்டு நடக்கவிருந்த தாக்குதலைத் தவிர்த்தனர். அது உயர்ந்த ஒரு புரட்சிகர வீரத்தின் வெளிப்பாடாக இல்லாது போனாலும் புரட்சிகர இயக்கத்தை காக்க எடுத்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். அத்தகைய ஒரு முயற்சி இல்லாது போயிருக்குமானால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தலைமையின் கணிசமான பகுதியினரும் அதன் அச்சகமும் 1983 கறுப்பு ஜூலையின் இனவாத தீப்பிளம்பில் நிச்சயம் சாம்பலாகிப் போயிருக்கும். அப்படி நடந்திருக்குமானால், யூ.என்.பி. ஆட்சிக்கு இயைந்து போயிருந்த நவசமசமாஜ கட்சி போன்ற குட்டி முதலாளித்துவத்தின் உற்சாகமான பேச்சாளர்கள், “அத்தகைய நாசங்கள் தன்னியல்பான பொதுஜன கிளர்ச்சியின் பெறுபேறு” எனக்கூறிக் கொண்டு வக்காலத்து வாங்கியதும் அந்த விதத்திலேயே உண்மையானதாகி இருக்கும்.
இத்தருணத்தில் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை தேசிய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் அவசியங்களுக்கு கீழ்ப்படுத்திக்கொண்டிருந்த பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பை கவனத்தில் கொள்ளும்போது, மேற்சொன்ன முடிவு எதுவிதத்திலும் ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல. தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) சார்பில் 1983 ஜூலை இனவாதக் கலகங்கள் பற்றி நியூஸ்லைன் பத்திரிகையில் கட்டுரை எழுதிய மைக் பண்டா, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்கள் அச்சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எந்த விதமான ஒரு மனக்கிலேசமும் இல்லாமல் கூறியிருந்தார். அச்சமயத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் பாதுகாக்கப்பட்ட சுயாதீன தொழிலாளர் வர்க்க அரசியல் விதிமுறையையிட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் பின்னால் வயிறளந்து கொண்டிருந்த தொ.பு.க. காட்டிய எதிர்ப்பின் படி பார்க்குமிடத்து, அது ஒரு எச்சரிக்கையைக் காட்டிலும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை எடுத்தது. ஆனால், அரச மற்றும் குண்டர் தாக்குதல்களில் இருந்து தமிழ்த் தோழர்கள் உட்பட்ட கட்சிக் காரியாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் பொருட்டு தாம் முன்னெடுத்த போராட்டத்தினைத் தொடரும் அளவுக்கு மனித சட வளங்களை அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்தது.
ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன¢வைத்த புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் பெரும்பான்மையினர் நின்றிராத ஒரு நிலையில், தெற்கிலும் மலையக மாகாணங்களிலும் தமிழ்பேசும் மக்கள் முகம் கொடுத்த அழிவு பிரமாண்டமானதாகியது. இது தமிழ் மக்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க முதலாளித்துவ பாராளுமன்றப் பேச்சுக் கடைகளின் வாய்வீச்சு விவாதங்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மறுபுறத்தில் வடக்கில் தனிமனித பயங்கரவாத தாக்குதல்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மற்றும் தமிழ் முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ இயக்கங்களதும் அரசியல் வங்குரோத்தை அம்பலமாக்கியது. யூ.என்.பி.யின் இனவாத குண்டர் தாக்குதல்களின் எதிரில் ஒரு துளி எதிர்ப்புக் காட்டக்கூட இந்த எந்த அமைப்பினாலும் முடியாது போயிற்று.
முக்கிய நகரங்களில் மட்டும் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகினர். தகவல் அமைச்சின் செயலாளர் டக்ளஸ் லியனகேயின் உத்தியோகபூர்வமான அறிக்கையின் படி 40,000 மக்கள் யாழ்ப்பாணம் சென்றனர். ஏனையோர் அகதிகள் முகாம்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்க நேரிட்டது. டசின் கணக்கான தமிழ் மக்கள் மிலேச்ச தாக்குதல்களுக்கும் டயர் சிதைகளுக்கும் பலியாகினர். நாடு பூராவும் டயர் சிதைகளை நிர்மாணித்த முதல் அரசாங்கம் இதுவாகும்.
ஆனால், அது வர்க்க வேறுபாடு இல்லாமல் சகல தமிழ் மக்களுக்குமெனச் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தலைவிதி அல்ல. தமிழ் செல்வந்தர்களுக்கு சிங்கள ஆளும் வர்க்கத்துடனும் யூ.என்.பி. அரசாங்கத்துடனும் நிலவிய உறவுகள் அவர்களின் உயிர்களை பிடித்துக்கொள்ளச் செய்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனை காப்பாற்றும் பொருட்டு யூ.என்.பி. அமைச்சர் காமினி திசாநாயக்க தனிப்பட்ட முறையில் அவரது இல்லத்துக்கு சென்று நடவடிக்கை எடுத்தது அதற்கு ஒரு உதாரணமாகும்.
தமிழர் விரோத மிலேச்ச பயங்கரவாத தாக்குதல்களின் முன்னணிப் பேர்வழியாக விளங்கிய சிறில் மத்தியூ கூட அந்த விதத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிய தமிழ் முதலாளிகள் இருந்திருப்பின் அது அப்படி ஒன்றும் புதுமைக்கு உரியது அல்ல. அதற்குக் காரணம் சிங்கள, தமிழ் முதலாளிகள் ஒன்றிணைந்து, இந்த இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் முட்டிமோத வைத்து, தமது பிற்போக்கு ஆட்சியின் வீரத்தை கொலைகார நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதம் செய்ய செயற்பட்ட முதலாவது ஒரே சந்தர்ப்பம் இது அல்லாததேயாகும். தேசிய சுயநிர்ணய உரிமையின் பேரால் தமிழ் முதலாளித்துவ குட்டி அரசை நிர்மானிக்க பிரச்சாரம் செய்யும் சிங்கள குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் தமது முதலாளித்துவ சார்பு தன்மை காரணமாக மறந்து போகும் விடயமும் அதுவாகும். ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி என்ற முறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் புறநிலை உலகின் யதார்த்தத்தை மிகவும் நெருக்கமாக அடையாளம் கண்டும் ஆய்வு செய்தும், தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை இதற்கு ஏற்ப சமரசமற்ற புரட்சிகர உயிர்த்துடிப்பினால் உயிரூட்ட இடைவிடாது செயற்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுப்பதும் இந்தப் பாரம்பரியங்களையே ஆகும் .
தமிழ் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள்
தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களைச் சுரண்டும் பொருட்டு தமக்கென ஒரு குட்டி அரசினை நிறுவ செயற்பட்டு வந்த தமிழ் முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ பகுதியினர், கறுப்பு ஜூலையின் தமிழர் படுகொலைகளுக்கும் இரத்தக் களரிகளுக்கும் காட்டிய எதிர்ப்பு என்ன? தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு தலைவரான நீலன் திருச்செல்வம் இந்திய ரூடே சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “அது தமிழ் மக்கள் பகுதியினரின் பொருளாதார, புத்திஜீவி அடிப்படையை நாசமாக்க திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்… அது தமிழ் தொழில்சார் நிபுணர்களுக்கு தொடுத்த தாக்குதலாகும்.” இந்தப் பேட்டி, கொலை செய்யப்பட்ட அகதிகளான தமிழ் தொழிலாளர்கள், ஏழைகளைப் பற்றி அக்கறை காட்டி வருத்தம் தன்னும் தெரிவிப்பதாக அமையவில்லை.
தமிழ் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக சுயாதீன நடிவடிக்கைகள் எடுக்கத் தள்ளப்படுவர் என அஞ்சிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கம் அதைப்பற்றிக் கூறியதாவது; ”தமிழர் மனதில் பாதுகாப்பின்மை பற்றிய எண்ணம் புகுந்து கொண்டுள்ளது” என்றார். முதலாளித்துவ பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் பொது மக்களை வழிதடுமாறச் செய்யும் பாதை இதனால் அடைபட்டுப் போகலாம் என்பதையிட்டு அவருக்கு நிலவிய அச்சத்தை அது காட்டியது.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு அமைக்கும் இலக்குடன் தொழிற்பட்ட தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் அக்கறை காட்டியது நாடு பூராவும் பரந்து வாழ்ந்த தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றி அல்ல. மக்கள் படுகொலையின் பிரச்சார இலாபத்தை தட்டிக்கொள்வதன் மூலம் தத்தமது அமைப்புக்களின் நிதி மூட்டிகளை நிறைத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டினர். தமது ஆளுமையின் கீழ் தனிநாடு அமைக்கப்படுமானால் தமிழ் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பாகக் காட்டும் ”அக்கறை” யின் கோலத்தை அதன் மூலம் வெளிக்காட்டிக்கொண்டனர்.
இதன் ஆதாயத்தை தட்டிக் கொள்ள தமிழர் எதிர்ப்பு இனவாதக் காட்டுமிராண்டி தனத்தை கட்டவிழ்த்துவிட்ட யூ.என்.பி.யும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவும் தாமதிக்கவில்லை.
ஜூலை மக்கள் படுகொலைகளின் நான்கு நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதி ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்தப் பேச்சு முற்றிலும் சிங்கள இனவாதிகளிடம் மன்னிப்புக் கோருவதாக விளங்கியது. அது இரண்டு நாட்களுக்கு மேலாக அவர்களது காட்டுமிராண்டி நடவடிக்கைகளை மனம் போன போக்கில் தொடர்வதற்கு தம்மாலும் தமது அரசாங்கத்தாலும் இடமளிக்க முடியாது போனது சம்மந்தமானதாக விளங்கியது. ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரைநிகழ்தியது எல்லே குணவங்ச (பிக்கு) என்ற பெயர்போன இனவாதியின் தூண்டுதலின் பேரிலாகும் என்பது பிரசித்திபெற்றது. ஆதலால் அந்த உரையை குணவங்சவே எழுதிக் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கவும் காரணம் இல்லாமல் இல்லை.
ஐந்து நிமிடம் பத்து செக்கண்டுகளுக்கும் குறைவான காலத்துக்கு மட்டுபடுத்தப்பட்ட இந்த ஜனாதிபதியின் பேச்சில், தமிழ் தேசிய இனம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அதன்படி அத்தகைய தேசிய ஜனநாயக உரிமைகளைக் காப்பதையிட்டு தமக்கு அணுவளவும் அக்கறை கிடையாது என்பதை அவர் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் பேச்சு இனவாத படுகொலைகளையும் இரத்தக்களரிகளையும் நியாயப்படுத்துவதை அடிநாதமாகக் கொண்டிருந்தது. அவர் கூறியதாவது: ”2000 ம் ஆண்டுகளாக வாழும் சிங்கள மக்கள் நாட்டை பிரிப்பதை எதிர்க்கிறார்கள். சிங்கள மக்களின் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கி ஆகஸ்ட் 4ம் திகதி நாட்டைப் பிரிக்கும் பேச்சுக்களை சட்டத்தின் மூலம் தடை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நாம் முடிவு செய்தோம்.”
தமிழர் எதிர்ப்பு கறுப்பு ஜூலை ‘சிங்கள பொதுமக்களின் அபிப்பிராயத்தின் வெளிப்பாடு’ என கூறுவதன் மூலம் மக்கள் படுகொலை அலுக்கோசுகளின் கொலைகளை மூடி மறைப்பதோடு சிங்களத் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அந்தக் காட்டுமிராண்டித்தனத்துடன் இனங்கானச் செய்வதாகும்.
இந்த அலுகோசுக் கீதத்துடன் பெரிதும் ஒத்தூத முன் வந்தார் நவசமசமாஜ கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணரத்தின. அவர் இந்தக் கறுப்பு ஜூலையின் தமிழ் மக்கள் படுகொலைகள் யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்ட ”பொதுமக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு” எனக் கூறினார். யூ.என்.பி. அரசாங்கத்தின் எதிர்ப்பாளனாகக் காட்டிக்கொண்ட இந்த முதலாளித்துவ கையாள், யூ.என்.பி. யினால் நடத்தப்பட்ட இனவாதப் படுகொலைகளை பொதுஜன அபிப்பிராயத்தின் வெளிப்பாடு எனக் கூறிய கதைக்கு சாமரை வீசியது அத்த விதத்திலாகும். அது குட்டி முதலாளித்துவத் தீவிரவாதம் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் பாணிக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
1983 ஜூலையில் வாயால் கூறிக் கொள்ளாத போதிலும், ஜே.வி.பி. தலைவர்கள் நீண்ட காலமாக கட்டவிழ்த்து வந்த இனவாத நஞ்சை உட்கொண்டவர்கள், கறுப்பு ஜூலையில் சிறில் மத்தியூவின் குண்டர்களுடனும் இராணுவத்தில் உள்ள குண்டர்களுடனும் சேர்ந்து தமிழ் மக்கள் படுகொலைகளில் நடைமுறையில் பங்கு கொண்டதன் மூலம் நடைமுறையில் காட்டிக்கொண்டதும் அந்த விடயத்தையேயாகும்.
யூ.என்.பி.யின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்துக்கு சாமரை வீசும் இந்த விதிமுறையே நவசமசமாஜக் கட்சியின் மீதும் ஜே.வி.பி.யின் மீதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் கறுப்பு ஜூலையின் கறுப்பு கறையை பூசி விடுவதற்கு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது. ஜனாதிபதி ஜயவர்த்தன அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் தடைசெய்யவும் அவற்றின் அச்சகங்களுக்கு சீல் வைக்கவும் கட்சிகளின் தலைவர்களை கைது செய்யவும் தொழிற்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பி. சில்வா அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் எல்.டபிள்யூ. பண்டித உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவதை தவிர்த்துக் கொண்டிருந்த நவசமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, ஜே.வி.பீ.யின் றோஹண விஜேவீர போன்ற தலைவர்களை கைது செய்யத் தகவல் தருபவர்களுக்கு ரூபா 50,000 சன்மானம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
யூ.என்.பி. அரசாங்கமே முன்நின்று கட்டவிழ்த்துவிட்ட இனவாத இரத்தக்களரியை சாட்டாகக் கொண்டு இடம்பெற்ற இந்த ஜனநாயக எதிர்ப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட கொள்கைப்பிடிப்பான முறையில் முன்னணியில் நின்றது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே.
கட்சித் தடைகள் நடைமுறைக்கு வந்ததும் உடனடியாக அறிக்கை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதனால் தோன்றியுள்ள ஆபத்தை விளக்கி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு கூறியது இதுதான்: ”மூன்று இடதுசாரி கட்சிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் கைதுகளையும் சாதாரண விடயமாகக் கொள்ள எந்த விதமான இடமும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடையாது. இது அடக்குமுறை இயந்திரத்துக்கு அனைத்தையும் நசுக்கித் தள்ளிக்கொண்டு உருண்டோட இடமளிப்பதாகும்.
”இடதுசாரிக் கட்சிகளின் தடை முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரணத்தைக் குறித்து நிற்கிறது. இன்றைய உலக ஏகாதிபத்திய நெருக்கடியின் மத்தியில் இப்போது அது முதலாளித்துவ நாடுகள் தோறும் நடைமுறைக்கிட தொடங்கப்பட்டுள்ள அனைத்துலகத் தோற்றப்பாடாகும்.
”அவசரகாலச் சட்டம் முடிவடையும் போது கட்சித் தடையும் பத்திரிகைத் தடையும் நீங்கும் எனவும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வைப்பது ஆபத்தானதாகும். ஆட்சியாளர்கள் செயற்படுவது சிறையில் இருந்து ஆட்களை வெளியேற்ற அல்ல. அவற்றை மூச்சுவிட முடியாத விதத்தில் நிரப்பித் தள்ளுவதற்காகும்.
”இந்த நிலைமையில் சமசமாஜ தலைவர்கள் கட்சித் தடைகளையிட்டு ஊமைகளாக இருந்து வருவது பிற்போக்குக்கு உதவுவதும் அதற்கு ஏஜண்டுகளாக செயற்படுவதும் ஆகும் எனக் கூறுவது பிழையானதாகுமா?
‘அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி இன்றே பிரச்சாரம் செய்ய வேண்டும்.” (கம்கறு மாவத்தை 1983 செப்டம்பர் 09)