வடமாகாண சபையில் முதலமைச்சராகத் திகழும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மைக்காலங்களில் பொறுப்பற்ற முறையில் அவரது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலை நடந்ததாக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 வருடங்கள் முடிந்துவிட்டது. வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. இதனை நிறைவேற்றியவர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவர் ஒரு சிங்கள இனவாத்துடன் இரண்டறக் கலந்திருப்பவர். குறிப்பாக சொல்லப்போனால் அவர் வாசுதேவ நாணயக்காரரின் சம்பந்தி. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய பிள்ளைகள் சிங்களவர்களை மணம் முடித்திருப்பதால் அவர் இன ரீதியாக முன்னெடுக்கின்ற எந்தவித இனவாதப் பேச்சசுக்களும் பெரியளவில் எடுபடப்போவதில்லை. மாறாக சிங்கள இனவாத அரசிற்குத் தீனி போடும் செயற்பாடுகளையே அவர் முன்னெடுத்து வருகிறார்.
கடந்த காலத்தில் இனவாதப் பேச்சுக்களை முன்னெடுக்காத சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மைக்காலமாக இனவாதப் பேச்சுக்களை முன்னெடுப்பதென்பது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கொண்டு வந்து தான் மீண்டும் முதலமைச்சராகித் தனது பதவியை தக்கவைக்க வேண்டும் என்னும் நப்பாசையிலேயாகும்.
அவ்வாறு இவருக்கு ஆசைகள் இல்லாதிருந்தால் அரசாங்கத்தை உசுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் செயல் வடிவத்தை நிறுத்த வேண்டும்.
வுடமாகாண சபையின் முதலமைச்சரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்படவில்லை என்பதை இவர் தென்னிலங்கை அரசுக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார். இது வரலாற்றில் மாபெரும் தவறுகளில் ஒன்று. இப்படிப்பட்ட ஒருவர்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலங்கை அரசுக்கு எதிராக தனது வாசகங்களைப் பறக்கவிட்டார். இது விக்னேஸ்வரனின் நடிப்பாகும்.
காலத்திற்குக் காலம் அரசியலில் மாற்றம் நிகழ்த்தப்படுகிற போது தென்னிலங்கையிலிருந்து வந்த அரசியல்வாதிகளே குழப்பவாதிகளாகச் செயற்படுகின்றனர். தென்னிலங்கையிலிருந்நு அதன் தலைமையின் கீழ் செயற்பட்டு வந்த 200ற்கும் மேற்பட்ட புத்திஜீவிகள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அக்காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டனர். அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஷ்மன் கதிர்காமர் வரை 200ற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அந் நிலைக்கேத் தள்ளப்படுவார்.
முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகள் கபடத்தன்மையுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பக்கூடாதெனவும் தான் நடுநிலை வகிப்பதாகவும் கூறுவது நம்பத்தகாதது.
முதலமைச்சரின் ஆலோசகராக செயற்பட்டு வந்த நிமலன் கார்த்திகேயன் தற்போது இவரைக் கைவிட்டுவிட்டார். அவர் இறுதியாகக் கூறிய விடயம் என்னவெனில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். இவருடன் தொடர்ந்தும் பயணிக்க நான் தயாரில்லை.
குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் அரசாங்கத்தினால் இந்த வருடம் நடைபெறும் என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மாகாண சபைகளில் அமைச்சர்கள் ஊழல் மோசடி தொடர்பில் நீக்கப்பட்டதையடுத்து புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு மாகாண சபைத் தேர்தல் வருகின்ற பொழுது ஊழல் மோசடிப் பெயர் வழிகளில் இருக்கின்ற முன்னைய அமைச்சர்கள் மீண்டும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்களா என்பதும் சந்தேகமே. இதுவும் சிங்களவர்களுக்கு தீனி போட்டு தமிழமைச்சர்களை இழிவுபடுத்தும் ஓர் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக தன்னை ஓர் தமிழினப் பாதுகாவலன் என்று குறிப்பிடும் நோக்கில் சிங்களவர்களுடன் பிண்ணிப்பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் இப்படியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது தனது புதல்வர்களின் இருப்பை தக்கவைப்பதற்கும் மஹிந்தவின் அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்குமான செயற்பாடாகவே அமையும்.
மிக முக்கியமான தீர்மானமென முதலமைச்சர் விக்னேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களாக,
1.இவ்வருடத்திலிருந்து ஒவ்வொரு மே 18ஆம் நாளிலும் தமிழர் இனவழிப்பு நாளாக தொடர்ந்தும் எமது மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2.சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட கால தாமதமின்றி தலையிட வேண்டும்.
3.தொடர்ச்சியாக கட்டமைப்பு சார் இனவழிப்பை சந்தித்து வரும் இனம் என்ற வகையில் இவற்றைத் தடுக்கும் வகையில் எமக்கான தீர்வை, இறைமை, தாயகம், தனித்துவம், ஆகியவற்றின் அடிப்படையில் பரிகார நீதியினூடாக பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.
4.முள்ளிவாய்க்கால் அவலம் இடம் பெற்று 8 வருடங்கள் கடந்த போதிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் போருக்குப் பின்னரான இன்றைய அவலத்தை கவனத்தில் கொண்டு அவர்களது வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.
5.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசத்திலிருந்து படையினர்கள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். எமது மக்களுக்கு சில நன்மைகளை அழித்திருப்பினும் தொடர்ந்தும் எமது பிரதேசங்களில் முகாமிட்டுத் தங்கும் எண்ணத்திலேயே படையினர் செயற்படுகின்றனர். சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
6.முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து 09 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக நிரூபித்து, துக்கநாளாக மே 18 ஐ அறிவித்து, வரும் வருடங்களில் தமிழர் தம் சகல நலன்புரித் தத்துவங்களையும் ஒன்றிணைந்து, குழு அமைத்து, இந்த நினைவேந்தலை கட்சி, பிராந்திய பேதமின்றி நடாத்த நாம் முன்வரவேண்டும் என்றும் அவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குறிப்பட்டுள்ளார்.
இவ் வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மர்ம உலகின் பின்னணி என்னவெனில்,
குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்
வட மாகாண சபை உருவாக்கப்பட்ட வேளையில் 13 வது திருத்தம் போதவில்லை எனப் போலிக் காரணங்களைக் கூறி புலிகளுடன் ஒத்தியைந்து தேர்தலைப் பறக்கணித்த கூட்டமைப்பினர்,
-அதிகாரம் போதவில்லை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே தேர்தலில் ஈடுபடுவதாகக் கூறி பதவிகளைப் பெற்றார்கள்.
-அதன் பின்னர் ஆளுனரைக் குற்றம் கூறி தமது இயலாமையை மறைத்தார்கள்.
-அதிகாரம் போதாது எனக் கூறியவர்களால் இவ்வளவு பெரும் தொகையான பணத்தைக் கொள்ளையிட எவ்வாறு முடிந்தது?
ஊழல் மோசடி விசாரணைக் குழு வட மாகாண சபையைக் குழப்புவதற்கான உள் நோக்கங்களைக் கொண்டிருந்ததாக சிறீதரன் கூறுகிறார். அவ்வாறானால் அரசின் ஆலோசனையுடன்தான் முதலமைச்சர் விசாரணைக் குழுவினை அமைத்தாரா? சிறீதரனும், முதலமைச்சரும் அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவ்வாறானால் யார் கூறுவது உண்மை? சிறீதரனின் ஊழல் மற்றும் பல தில்லுமுல்லுகளை உளவுத்துறை அறிந்துள்ளதால் அவரை அவர்கள் நாலாம் மாடியில் விசாரித்துள்ளனர். அதன் பின்னர் அவரும் உளவுப் பிரிவின் முகவராக தொழிற்படுவதாக செய்திகள் கசிந்திருந்தன. அவ்வாறானால் யார் அரசுடன் ஒத்துழைக்கிறார்கள்? முதலமைச்சருக்கும், ரணிலுக்குமிடையே ஆகாது என பலரும் நம்புகின்றனர். அவரும் அரசுக்கு எதிராகப் பேசுகிறார். ஓன்றும் புரியவில்லையே!
இதன் பின்னணியில் அரசு இருப்பதை மறைத்து மக்களின் பார்iவையைத் திசை திருப்பும் ஒரு முயற்சியே இந்த விசாரணை எனவும், முதலமைச்சர் அவரே விரித்த வலையில் வீழ்ந்துள்ளதாகவும் சிறீதரன் கூறுகிறார்..
பாராளுமன்ற உறுப்பினரான அவரின் கருத்துக்களைப் பார்க்கும்போது பொது மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக அவரது கவனம் விசாரணைக் குழு மேல் திரும்பியிருப்பது பலமான சந்தேகங்களை எழுப்புகிறது. அவர் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சி இவை குறித்து இதுவரை மௌனமாக இருப்பதும்,அமைச்சர் குருகுலராஜா தனது ராஜினாமாவை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக கட்சியிடம் கொடுத்திருப்பதும், அதனைக்கட்சித் தலைவர்மாவை முடக்கி வைத்து முதலமைச்சரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அகற்றுவதாக மிரட்டுவதும் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல ஊழலுக்குத் துணைபோவதுமாகும்.
அரசியல் அமைப்பு நெருக்கடி
மாகாண சபைகள் சுயாதீனமாக இயங்கும் வகையிலும், வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப் பெறாத வகையிலும் அதிகார பரவலாக்கம் தேவை என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் இவர்களே அதன் சுயாதீனத்தை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.
முதலமைச்சர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனில் சகலருடனும் பரஸ்பர பேச்சுவார்;தைகளை நடத்தி சபைக்குள் ஒரு சுமுகமான தீர்வுக்குச் சென்றிருக்க வேண்டும். பதிலாக ஆளுனரிடம்சென்று முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி அகற்றும்படி கோருவது உள் விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை வலிந்து கோருவதாகும்.
முதலமைச்சர் தொடர்பான பிரச்சனை சட்டப் பிரச்சனை அல்ல. அது நிர்வாக சிக்கல்கள். இச் சிறிய பிரச்சனையைப் பேசித் தீர்க்க முடியாதவர்கள் ஆளுனரிடம் செல்வது சுயாதீனத்தை வலிந்து விட்டுக் கொடுத்து எதிர்காலத்திலும் மத்திய அரசு தலையிடும் வாய்ப்பை இவர்களே ஊக்குவிப்பதாக உள்ளது. அதாவது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை தமது சுயநலன்களுக்காக விற்பதற்கு ஒத்ததாகும்.
ஆளுனர் சந்திப்பும் குழறுபடிகளும்
மொத்த அங்கத்தவர் தொகையான 38பேரில் 21 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒப்பமிட்டு ஆளுனரிடம் கையளித்த போது அவர் என்ன காரணங்களால் நம்பிக்கை இல்லை?எனக் கேட்டதோடு அதற்கான காரணங்களைத் தரும்படி கேட்டார்.தனக்கு எதிராகவும் கடந்த காலத்தில் அவ்வாறான தீர்மானம் கொண்டு வந்தார்கள் எனவும், இருப்பினும் அவர்கள் அதற்கான காரணங்களை எழுத்தில் முன்வைத்தார்கள் எனவும்;கூறினார். கையைப் பிசைந்து கொண்டிருந்த சிவஞானம் அவர்கள் தம்மில் பெரும்பான்மையோருக்கு முதலமைச்சரில் நம்பிக்கை இல்லை எனக் கூறி பெரும்பான்மை என்பதையே அவரது காரணமாக முன்வைத்தார்.
ஆனால் முதலமைச்சர், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு காரணங்கள் இருந்தன. அவர்கள் மீது விசாரணை நடத்தியே அதன் பிரகாரம் பதவியை நீக்கினார். ஆனால் முதலமைச்சரைக்காரணங்கள் இல்லாமல் அகற்றுவதற்கு பெரும்பான்மை மட்டும் போதுமா? அவ்வாறானால் முதலமைச்சர் எவ்வாறு சுயாதீனமாக இயங்குவது? அவர் நம்பிக்கையில்hத் தீர்மானத்தை என்னேரமும் எதிர்பார்த்தபடி செயற்பட முடியுமா? உறுப்பினர்களின் நிர்வாகம் தொடர்பான தகுதியற்ற நிலமைகளையே இவை காட்டுகின்றன.
தமிழரசுக் கட்சி அஸ்தமனத்தை நோக்கி…
மாகாண சபை நிர்வாக ஊழல்களும், அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளும் முறைகளும் அதன் எதிர்ப்பு அரசியல் வழிமுறைகளின் விளைவுகளாகும். அரசியல் எதிரிகளின் கைகளில் அதிகாரங்கள் போகக் கூடாது என எண்ணிய அளவிற்கு நிர்வாகம் சீராக மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற திட்டம் அக் கட்சிக்குள் இருந்ததில்லை.
இதனால் ஜனநாயக சக்திகளுக்கான கதவுகள் அடைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியினதும், கூட்டமைப்பினதும் உள் கட்டமைப்பு ஊழல் சக்திகளின் இருப்பிடமாக மாறி அதன் உள் பண்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.தற்போது அரசின் அங்கமாக உள்ளதால் எதிர்ப்பு அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றவும் முடியவில்லை. அவை தற்போதுமக்களால் நிராகரிக்கப்பட்ட பிற்போக்கு தேசியவாத சக்திகளின் ஆயுதமாக உள்ளது. இதனால் அதிகார இருப்பைக் காப்பாற்றுவதற்கான தந்திரங்களே இறுதி வழிமுறையாக உள்ளது.
இவ் ஊழல் பிரச்சனைகளில் தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளும் முறை மிகவும் பரிதாபகரமானது. விசனிக்கத் தக்கது. அதன் அரசியல் வங்குறோத்து துலாம்பரமாக தெரிகிறது.
தமிழரசுக் கட்சி அறிக்கை
சமீபத்தில் கட்சியின் உதவிச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தாம் முதலமைச்சரை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால் ஐங்கரநேசனைப் பாதுகாக்கவே சகல அமைச்சர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிடுகிறார்.
அவ்வாறானல் இதர அமைச்சர்களுக்கு எதிராகவும் அவர் விசாரணை நடத்தியதில் என்ன தவறு? அவர்களின் ஊழல் குறித்தும் அவரிடம் தகவல்கள் இருந்திருக்கலாம் அல்லவா? அமைச்சர் ஐங்கரநேசனைப் பாதுகாப்பதற்கு ஏனைய அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்தினால் அவர் எவ்வாறு ஐங்கரநேசனைப் பாதுகாக்க முடியும்? அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறுவது அதிகார துஷ்பிரயோகம் அல்லவா? அதிகார துஷ்பிரயோகம் என்பதும் ஊழலின் வடிவம் தானே.
ஊழலையும்,குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்தினார் அல்லது மறைத்தார் என அவ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. குற்றவாளிகளையும், குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வது குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை என அவ் அறிக்கை மேலும் கூறுகிறது.
அவ்வாறானால் பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் அக் குற்றங்களிலிருந்து தப்பியுள்ளார்கள் என அர்த்தம் கொள்ள முடியுமா? முதலில் பதவியைப் பறித்த பின்னர்தான் குற்ற விசாரணைக்கு உத்தரவிட முடியும். இதனை எவ்வாறு குற்றங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி எனக் கூற முடியும்? நால்வரையும் ஒன்றாக நீக்குவது என்பது குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சரிடம் தெரிவித்ததாக கூறுவது அர்த்தம் அற்றது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பதவியிலிருந்து விலகுமாறும், ஏனைய இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதால் ஓய்வில் அல்லது விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் கூறியுள்ளார். இது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? அவர்களைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரவில்லையே. அவர்கள் பதவியிலிருந்தால் விசாரணை நடத்துவது கடினம் என்பதே நடைமுறை. அமைச்சர்கள் முதலமைச்சரின் நம்பிக்கைப் பெறவில்லை எனில் புதிதாக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. இதில் கட்சி அரசியல் தலையிட முடியாது.
தமிழரசுக் கட்சியால் ஒரு சிறிய நிர்வாகத்தை மூன்று வருட காலம் கூட நடத்த முடியாத நிலையில் தமிழீழம், மாநில சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாகம் எனக் கூப்பாடு போடுவது அதன் இருப்பின் பலவீனத்தையே காட்டுகிறது. .
வாசகர்களே!
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வானத்திலிருந்து குதிக்கவில்லை. தமிழரசுக் கட்சியே விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த அவரை கொண்டு வந்தது. சிங்கள மக்களிடையே பெரும் பாலமாக அவர் இருப்பார் எனப் பலரும் கருதினர். ஆனால் அவரது பதவி ஆசையும், தகாத உறவுகளும், இந்து ஆதிக்க வெறியும் தமிழ்க் குறும் தேசியவாத சகதிக்குள் அவரைத் தள்ளியது.தற்போது கூட்டமைப்பினால் கைவிடப்பட்டு அநாதையாக்கப்பட்டுள்ள அவர் சந்தர்ப்பவாத, சுயநல அரசியல் சக்திகளால் தத்து எடுக்கப்பட்டு நாயகராக வலம் வருகிறார்.
போரின் கொடுமைகளால் சிதையுண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க மக்கள் புதிய மீட்பர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இவர்கள் யார்? போரின் உச்சத்தின்போது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காக, நீதியான பொருளாதார சமத்துவத்திற்காக, தேசிய நல்லிணக்கத்திற்காக பல்வேறு இழப்புகளுக்கு மத்தியிலும் குரல் கொடுத்த அந்த சக்திகளே உண்மையான, நேர்மையான மீட்பர்களாக முடியும்.
இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள் – முதலமைச்சர்
அண்மைக் காலத்தில் இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள். வீடுகள் கட்டிக் கொடுப்பது, கிணறு வெட்டிக் கொடுப்பது, குளங்கள், கடலோரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொடுத்தல், வாழ்வாதாரங்கள் கொடுத்தல், வெசாக் பண்டிகை போன்ற தினங்களில் கௌதமரின் பெயரைச் சொல்லி களியாட்டங்களையும், உணவகங்களையும் நடாத்துவது போன்ற நடவடிக்கைகளால் மக்களைத் தம்பால் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்துக்கொரு கேள்வி என்ற அடிப்படையில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இவ்வாரத்துக்கான கேள்வி பதில்,
வாரத்துக்கொரு கேள்வி – 04.05.2018 – நான் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியதும் எனக்கு கிடைத்த கேள்வி இது. 2018 ஏப்ரல் 29ந் திகதிய சிலோன் ஒப்சேர்வருக்கு நான் (முதலமைச்சர் விக்னேஸ்வரன்) வழங்கிய செவ்வியின் அடிப்படையில் கேள்வி அமைகின்றது.
கேள்வி–வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குக்கூறியுள்ளீர்கள். இதனால் அரசாங்கத்துடன் நீங்கள் முரண்டு பிடிப்பது மட்டுமன்றி குடியிருக்கும் இராணுவத்தினரை கோபமடையச் செய்துள்ளீர்கள். இவ்வாறான கூற்றுக்களைத் தவிர்த்திருக்கலாமே?
பதில்- “சண்டே ஒப்சேவர”; பத்திரிகையின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போது பாதுகாப்புக் காரணங்கள் எதுவும் தற்போது இல்லாததால் இராணுவத்தினர் தொடர்ந்து வடகிழக்கில் குடியிருந்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். அத்துடன் இராணுவக் கண்காணிப்பு செய்வதற்கு பயன்தரக் கூடிய காணிகளை ஏக்கர் ஏக்கராய் வைத்திருக்கத் தேவையில்லை என்றும் ஒரு அறையினுள்ளே இருந்து நவீன கருவிகளைப் பாவித்து கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் கூறினேன்.
உங்கள் கேள்வி எமது தமிழ் மக்கள் பலரின் மனோநிலையை எடுத்துக் காட்டுகின்றது. போர்க்காலப் பயங்களும் பாதிப்புக்களும் இன்றும் எம்முள் அமிழ்ந்து கிடக்கின்றன என்று தெரிகின்றது. உதாரணத்திற்கு இராணுவம் வெளியேற வேண்டும் என்றால் அரசாங்கமும் இராணுவமும் எங்கள் மீது கோபம் அடைவன என்று கூறுவது போர்க்காலத்தில் பயத்தில் சிந்தித்து நாங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பிரதிபலிக்கின்றது. அந்தப் பயத்தை நாங்கள் தொடர்ந்து எங்கள் உள்ளங்களில் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து.
தற்போது ஜனநாயக சூழல் பிறந்துள்ளது. இவ்வாறான ஜனநாயக சூழலை ஏற்படுத்தாது இருக்கவே முன்னைய அரசாங்கம் கோத்தபாயவின் கீழ் ஒரு வல்லாட்சியை முடுக்கி விட்டிருந்தது. வெருட்டி ஆள்வதை அவ் வல்லாட்சி தனது குறிக்கோளாக வைத்திருந்தது.
இன்று ஜனநாயகம் பிறக்கக் காரணம் வெளிப்படையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் சில நாடுகளே பின்னிருந்து இன்றைய கூட்டரசாங்கத்தைப் பதவிக்கு வர உதவி புரிந்தமையே.
தமிழ்ப் பேசும் மக்களும் எமது பெரும்பான்மையான வாக்குகளை அளித்தே இந்த ஜனநாயக அரசை பதவிக்குக் கொண்டு வந்தோம். அரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பது பிழையான சிந்தனை.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், இராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எடுத்துக் கூறுவதே எமது கடமை.
நீங்கள் கூறுவது போல் அவருக்குப் பயந்து இவருக்குப் பயந்து நாங்கள் எமது மனோநிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறாமல் இருந்தோமானால் ஏன் என்று கேட்க முதலே வடக்கு கிழக்காய் மாறிவிடும்.
இன்று வடக்கில் நடந்து வருவன பற்றி அறிந்து தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்களா என்று சந்தேகமாக இருக்கின்றது. இராணுவம் சுமார் 60000 ஏக்கர் காணியை வடமாகாணத்தில் பிடித்து இன்றும் தன் கை வசம் வைத்திருக்கின்றது. கேட்டால் அவ்வளவு இல்லை என்கிறார்கள்.
புள்ளி விபரங்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுகின்றன. இதுவரை சிறிது சிறிதாகத் திருப்பிக் கையளித்து வருங் காணிகள் தனியாருக்குச் சொந்தமான காணிகளே. இவற்றை விட பண்ணைகள், அரசாங்கக் கட்டிடங்கள், சனசமூக நிலையங்கள், அரச காணிகள்,காடுகள் போன்ற பலவற்றையும் பிடித்து வைத்துள்ளார்கள் படையினர்.
காட்டுப்பாங்கான பிரதேசங்களில் எமது வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. விலையுயர்ந்த மரங்கள் தறிக்கப்படுகின்றன. அவை போகுமிடம் யாரும் அறியார். இத்தனைக்கும் ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் வன்னியில் குடிகொண்டுள்ளனர்.
கொழும்பில் வழங்கும் அனுமதிப் பத்திரங்கள் குறிப்பிடும் அளவுக்கு அதிகமாக கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை இராணுவ அனுசரணையுடன் நடக்கின்றன என்பதற்கு அத்தாட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏ9 தெருக் கடைகள் வைத்திருப்போர் பலர் இராணுவத்தினரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது உளவாளிகள். இராணுவம் பெருமளவில் காட்டுப் பிரதேசங்களில் கையகப்படுத்தி வைத்திருக்குங் காணிகளைச் சென்று பார்க்க முடியாது.
திருமுருகண்டி ஒரு நல்ல உதாரணம். சுமார் 1702 ஏக்கர் காணியை இராணுவம் அங்கு வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அங்கு நாங்கள் எவரும் போக முடியாது.
பாதுகாப்புக்காக இராணுவம் வடமாகாணத்தில் தரித்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க வணிக நோக்குடன் இராணுவம் இயங்குகின்றது என்பதே உண்மை.
இராணுவம் மட்டுமல்ல. கடற்படை, விமானப்படைகளும் இவ்வாறான வணிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சட்ட கோட்பாட்டுக் கற்கைகளுக்கான தெற்காசிய மையம் South Asia Centre for Legal Studies (SACLS) என்ற நிறுவனம் சென்ற மாதம் ஒரு கைநூலை வெளிக் கொண்டு வந்துள்ளது.
அதில் எவ்வாறான வணிக வியாபார நடவடிக்கைகளில் இராணுவம் இதுகாறும் முழு நாட்டிலும் இயங்கி வருகின்றது என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
தொடரும்….