”சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும் தமிழர்களுடன் ஒப்பிட்டு சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்”

225

ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும்  தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் இன்றும்  மாவீரர் தினம் நடத்துகிறார்கள்.ஆனால், நாம் அப்படி செய்யவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளை நாம் இன்று பாதுகாப்புத் தரப்பினரிடம் காட்டிக்கொடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தனியார் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழரின் போராட்டத்துடன் ஒப்பிட்டு இதுபோன்ற கருத்துகளை பல்வேறு மேடைகளிலும், ஊடகங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய மத தலைவர்களும் அவசர அவசரமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

சிங்கள மொழியில் இத்தகைய கருத்துகளை இவர்கள் கூறுவதை தமிழர்கள் அறியார் என இவர்கள் நினைக்க கூடாது. ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும், தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும்  தமிழர்களை இவ்விதம் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.

இன்றைய தினங்களில் தமிழர்கள் அனுஷ்டிப்பது மாவீரர் தினமல்ல. இது பத்து வருடங்களுக்கு முன் கொத்து கொத்தாக கொள்ளப்பட்ட தமது உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகளே நடக்கின்றன.

இத்தகைய நினைவு கூரல்களை இந்நாட்டின் ஜனாதிபதியும், இராணுவ தளபதியும் கூட புரிந்துக்கொண்டு இருக்கும்போது எம்.பி. முஜிபுர் ரகுமான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது வாதங்களை முன்வைக்க, தாம்  ஐ.எஸ். பயங்கரவாதிகளை காட்டிக்கொடுக்கிறோம் என்று பெருமை பேசி நல்ல பெயர் வாங்குவதற்காக தமக்கு புரியாத தமிழர் அரசியல் பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதுபற்றி கவனத்தில் எடுக்கும்படி  அமைச்சர் மனோ கணேசனிடமும் கோரியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE