சின்னஞ்சிறு பாலகனின் தலையில் அரிவாளால் வெட்டுப்போடும் மாட்டு மௌலவி…

288

 

சின்னஞ்சிறு பாலகனின் தலையில் அரிவாளால் வெட்டுப்போடும் மாட்டு மௌலவி…
கேட்டால் மார்க்க நம்பிக்கை மருத்துவ முறையாம்.
மாட்டுமந்தைக்கூட்டம்!!!

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது.

வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும்.

முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; துஆ செய்யுங்கள் என்று போதிப்பர். இதைத்தான் அவர்கள் செய்யவும் முடியும். அடுத்து சட்ட ரீதியாக பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளுக்கான முனைப்பைக் காட்டலாம். இதை விட அவர்களால் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் அறிவை விட உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சமூக முன்னோடிகளை கிண்டல் செய்வதாக நினைத்து, மார்க்கம் சொல்லும் ஆன்மீக வழிமுறையைக் கேலி செய்து அநியாயமாக குப்ரைத் தேடிக் கொள்கின்றனர்.

மக்காவில் யாஸிரின் குடும்பம் குதறப்பட்ட போது நபி(ச) அவர்கள் யாஸிரின் குடும்பத்தினரே பொறுத்துக் கொள்ளுங்கள்! உங்கள் இடம் சுவர்க்கத்தில் உள்ளது என்று கூறினார்களே! அன்று இத்தகைய முகநூல் போராளிகள் இருந்திருந்தால் நபி(ச) அவர்களையும் கிண்டலும் கேலியும் செய்திருப்பார்களா?

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. நாம் பொறுமை செய்யும் நிலையில் இருக்கின்றோமா? போராட்டம் செய்யும் நிலையில் இருக்கின்றோமா? என நிதானமாகச் சிந்தித்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரச்சினைகளை சட்டபூர்வமாக அனுகப் பழக வேண்டும். சின்னப் பிரச்சினை பெரிய பிரச்சினைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிரச்சினைக்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அதை விடப் பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய பிரச்சினையையும் இழப்பையும் தவிர்ப்பதற்காக சின்னப் பிரச்சினையையும் இழப்பையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

நாம் ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பயணிப்பவர்கள் தமக்குத் தேவையான பொருட்களைத்தான் கப்பலில் ஏற்றியுள்ளார்கள். கப்பல் சுமை தாங்க முடியாமல் தள்ளாடுகின்றது. இப்போது கப்பலில் உள்ள பொருட்களைக் கடலில் கொட்டித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் கப்பல் மூழ்கிப் போனால் அனைத்துமே அழிந்துவிடும். பெரிய இழப்பைத் தவிர்ப்பதற்காக சிறிய இழப்பைத் தாங்கிக் கொள்வது என்று கூறுவது இதைத்தான்.

முஸ்லிம் சமூகம் என்கின்ற கப்பல் காப்பாற்றப்பட வேண்டும். ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற விழிப்புணர்வு என்றும் அவசியமாகும்.

நபி(ச) அவர்களது முன்னிலையில் ஒரு நாட்டுப்புற அரபி மஸ்ஜிதுன் நபவியில் சிறுநீர் கழிக்கின்றார். மக்கள் அவரை அதட்டி விரட்ட முற்பட்ட போது, ‘விடுங்கள். அவர் தமது தேவையை முடிக்கட்டும்” என நபியவர்கள் கூறி, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றக் கட்டளையிட்டார்கள். அத்துடன் அவரை அழைத்து நல்ல முறையில் எடுத்துச் சொன்னார்கள். அவர் சிறுநீர் கழிக்கும் போது அவரை விரட்டினால் பள்ளியின் பல இடங்களில் சிறுநீர் படலாம். அதை நபி(ச) அவர்கள் தவிர்க்கும் ஒரு நோக்கமாகவும் ‘அவரை பள்ளியில் சிறுநீர் கழித்து முடியும் வரை அவரைத் தடுக்க வேண்டாம்” என்று கூறுகின்றார்கள். சமூகப் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் போது இந்த நிதானமும் தூர நோக்கும் அவசியமாகும்.

அடுத்து. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற பிரச்சினைகளை சட்டரீதியாக முறையாகக் கையாள்வது காலத்தின் கட்டாயமாகும். இதற்கான பக்குவமும் பயிற்சியும் எமக்கு அவசியம் தேவையான ஒரு அம்சமாகும். பிரச்சினையை இன்னொரு பிரச்சினையால் தீர்க்க முடியாது. அது பிரச்சினையைப் பெரிதுபடுத்தவே உதவும். பிரச்சினை வந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டால் இராணுவமும் பாதுகாப்புப் படையும் நீதியின் பக்கம் முற்றுமுழுதாக நிலைத்து நிற்காது. அவர்களும் இனம் பார்த்துத்தான் சிந்திப்பார்கள். இது தவறு என்றாலும் யதார்த்தம் அதுதான். யதார்த்தத்தை மறந்து நாம் செயற்பட முடியாது.

ஒரு வேளை இந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்து இராணுவமும் முஸ்லிமாக இருந்து இப்படி ஒரு கலவரம் வந்தால் அந்த இராணுவமும் அப்படித்தான் நடந்து கொள்ளும். எந்த இராணுவமும் நபித்தோழர்கள் போன்று பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது.

எனவே, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிடாமல் எத்தகைய பிரச்சினைகளாக இருந்தாலும் சட்ட ரீதியாக அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க நாம் முற்பட வேண்டும். பிரச்சினை பெரிதானால் அதிக இழப்பு எங்களுக்குத்தான் என்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிடக் கூடாது.

இதே வேளை, நாம் தாக்கப்படும் போது, எமது சொத்துக்கள் அழிக்கப்படும் போது… அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சட்டமும் சொல்லவில்லை, மார்க்கமும் சொல்லவில்லை. எமது உயிரையும் உடைமையையும் பாதுகாக்க தாக்குதல் நடக்கும் போது தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம். இதற்கு மார்க்கத்திலும் அனுமதியுள்ளது. சட்டமும் அதைத் தடுக்கவில்லை.

‘தனது மானத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிப்பவன் தியாகியாவான். தனது பொருளைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணிப்பவனும் தியாகியாவான்” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தக் கட்டத்தில் ஒருவர் சொத்து இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை; உயிரைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று செயற்பட்டாலும் பிரச்சினை இல்லை. உயிர் போனாலம் பரவாயில்லை போராடி மரணிப்போம் என்று நினைத்தாலும் பிரச்சினையில்லை. எதுவாக இருந்தாலும் நடக்கும் போது எதிர் கொள்ள வேண்டும். நடந்து முடிந்துவிட்டால் சட்ட நடவடிக்கைதான் எடுக்க வேண்டும். நடந்து முடிந்த பின்பு தாக்குதல் நடாத்த முற்படுவது என்பது சட்ட விரோதமானது. சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது. எனவே, நாம் மார்க்க வரம்புகளுக்குள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களை அரசியல் ஆதாயத்திற்காகவும் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்களாகவும் பயன்படுத்துவது வெட்கக் கேடான அருவறுக்கத்தக்க விடயமாகும்.

அடுத்து எனது தலைவர்தான் அதைச் செய்தார்; இவர்தான் பாதுகாப்பு எற்பாட்டுக்குக் காரணம்…. என நடந்து முடிந்த பின்னர் நடந்ததை விட்டு விட்டு பெருமை பேசுவது கேவலத்திலும் கேவலமாகும். இத்தகைய இழி செயலையும் நாம் கைவிட வேண்டும்.

அத்துடன் கள நிலவரத்தை அறியாமல் ‘தாக்குங்கள்” என முகநூலில் பதிவிடுவது ஆபத்தானது; அபத்தமானது. அறிவிலித்தனமானதாகும். தற்கொலைக்கு நிகரான இத்தகைய செயற்பாடுகளை முகநூல் போராளிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உண்மை நிலவரம் தெரியாமல் வெறும் வாய் வார்த்தைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு சில நேரம் அவற்றை மிகைப்படுத்தி பதிவிடுவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பொய்யான தகவல்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எம்மை பொய், வதந்தி, புறம்,…. போன்ற மகா பாதக செயற்பாட்டின் பக்கம் இட்டுச் சென்றுவிடும் ஆபத்தும் உண்டு என்பதை மறந்துவிடலாகாது.

சமூகத் தலைவர்கள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து பிரச்சினையான சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களின் புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் நடத்த வேண்டும்.

பிரச்சினைகள் நடந்து முடிந்த பின், இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று கூறுவதோ, எப்படி நடக்க வேண்டும் என்று போதிப்பதோ, இழப்புக்களைப் புள்ளிவிபரப்படுத்துவதோ எந்தப் பயனையும் ஏற்படுத்தாது,

எனவே, இது குறித்து கூடுதல் கவனம் எடுப்பது அனைவரினதும் கட்டாயக் கடமை என்பதை உணர்ந்து செயற்பட முனைவோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்நிய ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! மேலும், எம்மையும் தூய இஸ்லாத்தின் பால் நெறி பிறழாது உறுதியுடனும் பொறுமையுடனும் நிலைத்திருக்கச் செய்து ஈருலக வெற்றியைத் தந்தருள்வானாக!

SHARE