சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். –

341

 

சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 29ஆம் திகதி அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நினைவு கூரப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையக ஊடக அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில், மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் ஆவணப்பட வெளியீடும் நடைபெறவுள்ளன.

sivaram0105052

 

‘சிவராமுடனான நாட்கள்’ என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, ‘ஊடகங்களின் சுதந்திரம்’ என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, ‘இனிய நண்பன்’ என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான சமன் வகவாராட்சி, ‘தமிழ் அரசியல் போக்கும் ஊடகமும்’ என்ற தலைப்பில் புதியவன் நாளிதழ் ஆசிரியர் எஸ்.சிவகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். ஊடகவியலாளன் சகலமும் அறிந்தவன்- சிவராமினுடைய கனவாகும் என்ற வகையில், தமிழ்ச் சமூகத்தில் ஊடகக் கல்வி வாய்ப்புகளும் சவால்களும் தலைப்பில் நிரைவுப் பேருரையினை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தின் மொழிகள் மற்றும் தொடர்பாடல் துறையின் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி சி.ரகுராம் நிகழ்த்தவுள்ளார். வடக்கு கிழக்கு ஊடகவியலாளர் அமைப்புக்கள், இலங்கை சுதந்திர ஊடக இயக்கம், ஊடக செயற்பாட்டுக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். –

SHARE