சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள்-தேசியப் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை

652

 .

unnamed-1தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றனர்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வகைகளிலும் சிறி லங்காவில் தமிழர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது கனடாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பாகக் கனடிய அரசுக்குக் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவிக்கிறது. இத்தோடு நின்று விடாமல் சிறி லங்காவுக்கு எதிராக பொருளாதார மற்றும் அரசு முறைத் தடைகளை விதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். கனடிய அரசின் பக்கச் சார்பற்ற குழுவின் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் சிறி லங்கா ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளத் தவறுமிடத்து இத்தடைகளை விதிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழருக்கு எதிரான 66 ஆண்டுகால அடக்குமுறை நீங்கி அமைதியான அரசியற் தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். யெனீவாவில் சர்வதேயத்தின் உறுதியான முடிவுகளே இதற்கு வழிகோலும் எனத் தெரிவித்தார்.

 

SHARE