சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதம் விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறல்ல

621

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: 

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

letter

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2letter

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த  உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்

ruban

 அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

letter_001letter_002letter_003letter_004
letter_005

letter_006

letter_007

letter_008

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான்  போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.

ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’

‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.

அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

 தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.

SHARE