சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் திருமணமானவர் எனவும் அவரது மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

427

குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கடந்த 9ம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேஷானி பண்டார என்ற சிறுமி இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பினை அடுத்து பொலிஸார், குறித்த சிறுமியை குருநாகல் நெரியாவ பிரதேசத்தில் மீட்டுள்ளனர்.

மேலும் சிறுமியை அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நெரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டில் இருந்த தாய் ஒருவர் மற்றும் சந்தேகநபரின் சகோதரி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தாய் 60 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சிறுமி கடத்தப்பட்ட குருநாகல் – வெல்லவ பகுதி வீட்டுக்கும், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த நெரியாவ பிரதேச வீட்டுக்கும் சுமார் 7 கிலோ மீற்றருக்கும் குறைவான வித்தியாசமே காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் திருமணமானவர் எனவும் அவரது மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குழந்தை, வீடொன்றின் அறையில் மர பலகைகளுக்கு இடையில் இருந்ததாகவும், அவருடைய தலைமுடி சிறிது வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபரின் உறவினரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் இவ்வாறான சந்தேகமொன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

சிறுமி கடத்திச் செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குவேனிகல ( குவேனி பாறை) அருகில் புதையல் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

இளவரசர் விஜயன், குவேனி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை விரட்டிய பின், குவேனி அழுது புலம்பியவாறு குருநாகல் பகுதிக்கு வந்தாகவும் அவர் பாறை ஒன்றின் மீது ஏறி விஜயனுக்கு சாபமிட்டதாகவும் அந்த பாறையே குவேனிகல என அழைக்கப்படுவதாகவும் மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.

குவேனிகல என்ற குவேனிபாறை குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ளது.

இவ்வாறான நிலையில், குறித்த சிறுமி புதையல் எடுப்பதற்கு பலி கொடுப்பதற்காக கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது என அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் கைது

குருநாகல் கனேவத்த பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் நேற்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நான்கரை வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் நேற்று பிரதேசத்தின் ஒரு இடத்தில் கைவிடப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டார்.

இதனையடுத்து பெண் ஒருவர் உட்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தநிலையிலேயே இன்று பிற்பகல் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவரின் தகவல் மற்றும் சிறுமியை கடத்தியமைக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவரவில்லை.

இதேவேளை குறித்த சிறுமி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

 

SHARE