அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரவலாகப் பாலியல் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருவது தெரிந்ததே. அத்தோடு இவை தமிழ் மக்களுக்குள்ளேயே பெருமளவில் நிகழ்வதும் வழமையானதொன்றாகிவிட்டது. பதின்ம வயதுச் சிறுமிகள் உட்படச் சிறுவர்கள் தமது தந்தைமார்கள், பேரன்மார்களுக்குச் சமான மான வயதுடைய முதியவர்களினாலேயே பாலியல் வன்முறைகளுக்கும், துஷ்பிர யோகங்களுக்கும் ஆட்படுத்தப்படுவது பெரும் வேதனையளிக்கக்கூடிய விடயமாகவுள்ளது.
யாழ்ப்பாணம், மலையகம் உட்படத் தமிழர் வாழ்விடங்களில் இவ்வாறான நிகழ்வுகளும், வாள்வெட்டுப்போன்ற வக்கிரமான செயல்களும் இடம்பெறுவதற்குத் தென்னிந்தியக் கருத்தற்ற தமிழ்ச் சினிமாக்களைத் தமிழர்கள் தமது வீடுகளில் மிகுதியாகப் போற்றி இரசித்து மகிழ்வதும் பிரதான காரணியாக விளங்குகின்றது. ஸ்ரீலங்காவின் சிங்கள அமைச்சரொருவரே தமிழர் வாழ்விடங்களில் தற்போது மிகுதி யாக இடம்பெற்றுவரும் மேற்றரப்பட்ட அசிங்கமான, அபத்தமான நிகழ்வுகளுக்குத் தென்னிந்தியச் சினிமாக் காட்சிகளில் பிரதிபலிக்கும் குப்பாடித்தனங்களும், கருத்தற்ற கண்றாவித்தனமான நகைச்சுவை யென்னும் பெயரிலான கபடியாட்டமும் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக இணைந்து ஆபாசமாக ஆட்டம்போடும் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களையே மயானத்துக்கு அனுப்பிவைக்க முயலும் தன்முனைப்புக்களும் கீழ்த்தரமான நடவடிக்கைகளைத் தமிழர் சமூகத்துக்குள் இடம்பெற வித்திடக்கூடியவையான அடிமட்டத் தந்திரோபாயங்களுமே காரணமென உணர்ந்து வேதனை வெளியிட்டிருக்கும்போது நமக்குள் இருக்கும் பெரிய மனிதர்களெனப் பெரும் பெயர்பெற்றவர்கள் இவ்விடயந் தொடர்பில் வாளாவிருப்பது விநோதமாகவேயுள்ளது.
நகைச்சுவைக்கு ஒரு வடிவேல், தந்திரோபாயத்துக்கு ஒரு விவேக், சண்டித்தனத்துக்கு ஒரு விஜய் எனத் தமிழ் இளையோர் இக்கருத்தற்ற சினி மாக் கபடி விளையாட்டு வீரர்களுக்கு பின்னால் செல்லும்போது அவர்கள் நிச்சயமாக இடறிவிழுந்து மயானத்தை ஏகுமட்டும் உடலாலும் உள்ளத்தாலும் வலது குறைந்தவர்களாகவே தமது வாழ்க்கையைத் தொலைப்பர் என்பது வெள்ளிடைமலையே.
அன்றைய காலகட்டத்தில் தென்னிந்தியத் தமிழ்ச் சினிமாக்களில் சந்திரபாபு, தங்கவேலு, வி.கே.இராமசாமி, நாகேஸ், மனோரமா போன்ற நகைச்சுவை நடிகர், நடிகைகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் இன்றுபோல் அன்று இவர்களினால் தமிழ்ச் சினிமாக்களின் வாயிலாக பிரபலிக்கப்பட்ட நகைச்சுவை அபிநயங்களும், கருத்துக்களும் தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கும் பாணியில் அமைந்திருக்கவில்லை. மாறாக அச்சமுதாயத்தில் நல்ல மனவிழுமியங்களை விதைக்கக் கூடியவையாகவும், நன்னெறி நின்று சிந்திக்க வைக்கக்கூடியவையாகவுமே இருந்தன. இதைப்போலவே ஏனைய காட்சி நிகழ்வுகளும் குடும்பம் தொடங்கிச் சமுதாயம் இடையிட்டு அரச நிர்வாகம் வரை ஆரோக்கியம் பேணவே தூண்டு கோல்களாக விளங்கினவெனலாம்.
எனவே இவ்வாறான தென்னிந் தியச் சினிமாக்களை வீட்டுக்கு வீடு மிக வும் கனம்பண்ணி மிகுந்த ஆவலுடன் நுகர்வதும், அச் சினிமாக்களில் ஒலிக்கப்படும் வக்கிரமான, காவாலித்தனமான பாடல் களும், அர்த்தமற்ற வினாடிக்கு வினாடி, எடுத்ததற்கெல்லாம் சண்டைகளில் ஈடுபட்டுத் தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்ந்து வருகின்ற அச்சமுதாயத்திலுள்ள தலைமுறையினரையும் பொருளற்ற சண்டியர்களாக்கும் காட்சிகளின் ஆளுகை யும் அசாதாரணமான மதுப் பாவனையும் போதாக்குறைக்குக் களவாக வடிக்கும் கசிப்பை அருந்துவதும், திருட்டுத்தனமாக விநியோகிக்கப்படும் கஞ்சாவை உண்பதும் தமிழர் வாழ்விடங்களில் முன்னெப்போதும் இல்லாதளவுக்குக் களவுகளும், கொள்ளை களும், வழிப்பறிகளும், வாள்வெட்டுப் போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளும் இடம்பெறுவதற்கான காரணிகளாக அமைந்துள்ளனவெனலாம். சுருங்கக் கூறின் ஆண்களுக்குள் வாள்வெட்டு வடிவேலுக்களும், பெண்களுக்குள் வாள் பையிற்(குiபாவ) வதனாக்களும் தமழிர் சமூகத்தில் அதிகரித்துச் செல்வதற்கு அச் சமூகத்தினர் பகல்-இரவாகத் தமது வீடுக ளில் பார்த்து இரசிக்கும் பாழ்பட்டுப்போன தமிழ்ச் சினிமாக்களே பிரதான காரணி களாக விளங்குகின்றனவெனலாம்.
இவ்விடயத்தை அமைச்சர் மட்டுமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் அவர்களும் ஒருமுறை தெளிவுபடுத்தித் தமது ஆழ்மனத் துயரத்தைப் புலப்படுத்தி யிருந்தார்.
யாழ்ப்பாணம் உட்படத் தமி ழர் வாழ்விடங்களில் தற்போது பரவலாக இடம்பெற்றுவரும் இந்நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாகப் பதவியேற்றிருக்கும் அம்மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் எவையென விளம்பியிருப்பதும் இந்த அவலந் தொடர்பிலான அவருடைய உள்ளக்கிடக்கையும் பாராட்டக்கூடியவை யாகவேயுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடங்கலான அசிங்கமான குற்றச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பொறுப்புவாய்ந்த ஒரு நீதிபதி என்னும் நிலையிலே அன்னாரின் உயர்ந்த பட்சத் தண்டனை வழங்கல் என்னும் எண்ணோட்டம் மிகவும் வர வேற்கத்தக்கவொன்றாகவிருந்தபோதும், இவ்வெண்ணோட்டத்தின் வலு தேசத்தின் சட்டமுறைமையின் ஆளுகைக்குள் ஆட்பட்டு பலவீனமடைந்துவிடக்கூடாதென்பதே நல்லோரின் அடுத்தபட்ச ஆதங்கமாக வுமுள்ளது.
நீதியரசர் இளஞ்செழியன் அவர்களின் கடமைக்காலத்தில் புங்குடுதீவு வித்தியாலய மாணவி வித்தியாவினுடைய நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியத்தக்கதான பாலியல் வன்புணர்வுடனான படுகொலை வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதோடு வாள்வெட்டு வீரர்களும் கைதாகி விசாரணையும் இடம்பெற்றுக் கொண்டிருக் கின்றது.
அமைச்சர் ஒருவரின் கூற்றுக்கு இயைபாக வாள்கள் சகிதமாக வீரசாகசங்களில் ஈடுபட்டுத் தற்போது விளக்கமறியற் கைதிகளாகியுள்ளவர்கள், விசாரணையின்போது தமது வாய்களாலேயே தென்னிந்தியச் சினிமாக்களின் காட்சிகளைப் பார்த்து அதில்வரும் கதாநாயகர்களாகவும், வில்லன்களாகவும் தம்மையும் பாவனை செய்துகொள்ளவேண்டுமென்னும் தன் முனைப்பினாலேயே வாள் வெட்டுக்களில் ஈடுபட்டதாகக் கூறியிருப்பதாகவுந் தெரியவருகின்றது. விசாரணைகளின் போது அவர்கள் இவ்வாறாகக் கூறியிருப்பதனால் உண்மையில் அந்நபர்கள் அனுதாபத்திற் குரியவர்களாகவே தோன்றுகின்றார்கள். ஆனால் அவர்களை இவ்வாறாக அனுதாபத்துக்குரியவர்களாக்கிய தென் னிந்தியத் தமிழ்ச் சினி மாத் தயாரிப்பாளர்களும், அதில் அட்டகாசமாகத்தோன்றி அர்த்தமற்ற அபி நயம் பிடித்த நடிகர், நடிகைகள் என்னும் பெயரோடு பிரபல்யங்களாகத் தம்மை ஆக்கிக்கொண்டவர்களும் இவ்வாறான சமூக விரோத மக்கள் நலன்களுக்கு எதிரான சினிமாக்களைத் தடைசெய்யாமல் தமிழர் பார்வையில் உலவவிட்டுக்கொண்டிருக்கும் அரசியலாளருமே ஆத்திரத்தோடு உள்ளீர்க்கப்படவேண்டியவர்களாகவுள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு அந்நாட்டில் தற்போது அட்டகாசமாக உலாவந்துகொண்டிருக்கும் மக்கள் விரோத சினிமா நடிகர்கள், நடிகைகள் அனை வருக்குமே உடன் மரண தண்டனை வழங்கி வளர்ந்துவந்துகொண்டிருக்கின்ற வருங்காலத் திராவிட தமிழ்த் தலை முறைகளையும் இனிவரப்போகின்ற அதே தலைமுறைகளையும் சான் றோராகப் பாதுகாக்க முற்பட்டபோதும் அவ்வமைப்பு முறையிலேயே நசுக்கப் பட்டிருந்தமையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டியேயாகவேண்டும். அத்தோடு இவ்விடத்தில் திராவிட இயக்க மூலவரான தந்தை ஈ.வே.இராமசாமிப்பெரியார் அவர்கள் சினிமாவினால் இவ்வாறான ஓர் ஆபத்து நீண்டகால நகர்வின் பின்னர் திராவிட-தமிழ்ச் சமூகத்துக்குள் இடம்பெறக்கூடிய ஏதுநிலையுண்டென்னும் தீர்க்கதரிசனத்தினால் போலும் சினிமா திராவிட தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயனளித்த காலப் பகுதியிலேயே சினி மாவே வேண்டாம் என்று கூறியிருக்கிறார் எனத் தற்போது எண்ணமுடிகின்றது. கடவுளின் பெயரால் மதத்தைப் பாதுகாப்புக் கவசமாகக்கொண்டு தென்னிந்தியா முழுவதும் இழைக்கப்பட்ட சமூக அநீதி களையும், மூடத்தனங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாதநிலை யில் பொங்கியெழுந்தவரும் தமிழ் நாட்டின் முன்னணி ஆத்திகவாதி களிலொருவருமான மூதறிஞர் இராஜாஜி அவர்களுக்கே ஆத்ம நண்பராக விளங்கியவருமான தந்தை பெரியார் அவர்கள் கடவுளே இல்லை எனக்கூறித் தன்னை ஒரு முழுமையான நாத்திகராக்கிக்கொண்டார். பெரியார் கடவுளே இல்லையென்றமையும் சினி மாவே வேண்டாம் என்றமையும் எவ்வடிப்படையில் அமைந்திருந்தன வென்பதை முன்னணி ஆத்திகரும் சுதந்திரக் கட்சித் தலைவராக விளங்கியவருமான இராஜாஜி அவர்களே தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தாரென்பதை அன் னார் 1967ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் சி.என்.அண்ணாதுரை அவர்களது தலைமையிலான தி.மு.கவுக்கு வாக்களிக்கும்படி அக்கழகத்தின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தமையிலிருந்தே அறியக்கூடியதாயிருக்கின்றது.
எனவே நீதியை நிலை நாட்டக்கூடிய நல்லவர், வல்லவர் எனக் கருதப்படுகின்ற நீதியாளர் இளஞ்செழியன் அவர்களும், ஆத்ம நண்பர்களான ஈ.வெ.ரா. பெரியார் அவர்களினதும், இராஜாஜி அவர்களினதும் மன ஒருமைப்பாட்டையும் உள வேறுபாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துச் சீரழிந்து போய்க்கொண்டிருக்கும் புதிய யாழ்ப்பாணத்தைப் பழைய யாழ்ப்பாணமாக்கி நான் யாழ்ப்பாணத்தவன் என ஒவ்வொரு யாழ்ப்பாணத்தவனும் பெருமையோடும் களிப்போடும் கூறும் நிலையை உடன் உருவாக்க வேண்டியது இன்றைய இடறிவிழுந்த யாழ்ப்பாணத்துக்கு இன்றியமையாத தேவையாகவுமுள்ளது. இவ்வாறான ஓர் அறப்பணியில் அறிஞர் அண்ணா அவர்களின் சட்டம் ஓர் இருட்டறை என்னும் கூற்றின் வலுவை இயன்றளவு குறைக்கக்கூடியவர் நீதியாளர் இளஞ்செழியன் என அவருடைய அண்மைக் காலத்தைய கருத்துக்களிலிருந்தும், நடவடிக் கைகளிலிருந்தும் நம்பக்கூடியதாகவு முள்ளது.
மேலும் நவநாகரிக யுவதிகளாக வலம்வந்துகொண்டிருக்கும் சிலர் கடைகளில் கன்னக்கோலிடுவதையும் பெருந்தொகையான கோடிக்கணக்கான கேரளக் கஞ்சா நாட்டுக்குள் எடுத்து வரப்படுவதும் மிகவும் ஆபத்தானது.
அண்மையில் பருத்தித்துறையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த கேரளக் கஞ்சா காவற்றுறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையின் வடமுனையாகவும் யாழ்ப்பாணத்தின் சான்றாண்மை மிக்க ஊர்களில் முன்னணியிலுள்ளதுமான பருத்தித்துறையில் இவ்வாறான ஓர் அவலம் இடம்பெற்றிருப்பது மிகவும் அருவருப்பானது.
ஆதலால் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் காரணிகளாக விளங்குபவற்றில் முதனிலை வகிப்பது ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் பாலர் முதல் வயோதிபர் வரை அசாதாரணமான ஆவலுடன் நுகரும் தென்னிந்தியத் தமிழ்ச் சினிமாக்கள் தான் என்பது மிகையன்று.
இவ்வாஞ்சையோடு இயைந்த அர்த்தமற்ற, அருவருப்பான தென்னிந்தியத் தமிழ்ச் சினிமா நுகர்வும், அதனோடு இயைந்ததான பெருமளவான மதுபாவனையும் கிராமிய மட்டத்தில் இரகசியமாக நுகரப்படும் கசிப்பு என்னும் ஆட்கொல்லியும் சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரை சமநிலை நின்று சுவைக்கும் கஞ்சாவும் இணையும் போது சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்செயல்களும், துஷ்பிரயோகங்களும், மாணவிகள் மீதான பகிடிவதைகளும், இளம்பெண்கள் தொடர்பிலான எகத்தாளங்களும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிக வீச்சோடு தொடர்ந்தும் எகிறி ஏறிக்கொண்டேயிருக்கும்.
அதனால் யாழ்ப்பாணம் உள்ளடங்கலான தீவின் அனைத்துப் பிரதேசங்களிலும் இக்கொடிய நோயை அகற்றுவதற்கு யாழ்;ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் போன்ற நீதியாளர்கள் தேசம் முழுவதும் இன்னும் பலர் உருவாகு வதோடு ஆன்மீக, அரசியல் பீடங்களில் உள்ளவர்களும் இவ்வவலம் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வேண்டும்.
வடபகுதியில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், வன்புணர்வுகளுக்கும் அப்பிரதேசத்தில் பெருகிவரும் போதைவஸ்து நுகர்வு பெரிதும் காரணியாக அமைந்துள்ளதென, கேரளாவில் இருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகின்ற கஞ்சாவை உடமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பினை மனு மீதான விசாரனையின்போது நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தனது வேத னையை வெளியிட்டதோடு போதைவஸ்து குற்றம் புரிவோரின் கருணைமனு நிராகரிக்கப்படுவதோடு அவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே விதிக்கப்படுமெனவும் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மேலும் அன்னார் போதைவஸ்து பாவனை மற்றும் போதைவஸ்து குற்றச் செயல்களில் இருந்து மாணவர் சிறார்களைப் பாதுகாக்கவேண்டும். இளைஞர்களையும் பாதுகாக்கவேண்டும். அதேபோன்று மாணவிகளையும், இளம்பெண்களையும் பாதுகாக்கவேண்டிய தேவையுமுள்ளது.
ஏனெனில் அனைத்துக் குற்றங்களுக்கும் ஒருவகையில் போதைவஸ்துவே பின்னணி யாகக் காணப்படுகின்றது எனவும் மேற்படி வழக்கு விசாரணையின்போது கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
எனவே சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், வன்செயல்கள், வன்புணர்வுகள் என்பவற்றுக்கு மூல காரணியாகப்போதை வஸ்துக்களே காரணியாக விளங்குகின்றன வெனப் பொறுப்பு மிகு பதவி வகிக்கும் இளஞ்செழியன் அவர்களே கருத்து வெளியிட்டிருப்பது யாழ்ப்பாணத்தின் நல னில் அக்கறையுள்ள அனைவருக்குமே மிகுந்த ஆறுதல் அளிக்குமொன்றாக வேயுள்ளது. ஆதலால் போதைவஸ்துக் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்து வதோடு தயங்காமல் மரணதண்டனை களையும் வழங்கிப் போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளிவைத்து மாணவர் களையும், இளைஞர்களையும், இளம் பெண்களையும் பாதுகாப்பதோடு சிறு வர் மீதான துஷ்பிரயோகங்களையும் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் இல்லாதொழிப்பாரெனவே நம்பக் கூடியதாகவே இருக்கின்றது.
அத்தோடு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் ஆகியவற்றை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் அடியோடு அகற்றுவதற்கு அந்நாளில் தமிழகத்தின் வைதீக வன்புணர்வுகளைப் பூண்டோடு களைவதற்குத் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் அரும்பாடுபட்டது போன்று சகல தரப்பினரும் பாடுபட்டு உழைப்பதொன்றே சாலவும் சிறந்ததும் பொருத்தமானதுமென இவ்விடத்தில் இடித்துரைப்பது இன்றைய இழிநிலை மேலோங்கிய காலநகர்வில் பிரதானமானவொன்றாக விளங்குகின்றதென நிச்சயமாக உறுதிபட உரைக்கவும் முடியும்.
வீரப்பதி விநோதன்