நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கின் போக்கை மாற்றி உள்ளார்.
சீமான் வழக்கறிஞர்
இந்த வழக்கு, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்னா மற்றும் ஜஸ்டிஸ் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன் பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்நிமேஷ் துபே ஆஜராகி உள்ளார்.
பாலியல் குற்ற வழக்கில் சீமானுக்கு ஆஜராகும் நிர்நிமேஷ் துபே இதற்கு முன் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகள் ஆகும். அர்னாப்பிற்கு அவசர அவசரமான ஜாமீன் வாங்கி தந்தது இவர்தான். அதிக பீஸ் வாங்க கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவர்.
என்ன வழக்கு
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகைக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை அந்த நடிகை குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜய லட்சுமியிடம் பெருந் தொகையை பெற்றிருப்பதாகவும் நடிகை புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் நடிகை கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை நடிகை திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்குத்தான் உச்ச நீதிமன்றம் ஸ்டே வழங்கி உள்ளது.