மூளை குறித்த நமது அறிவு, தற்காலத்தில் தான் நுட்பமாக வளர்ந்து வருகிறது. சுயநினைவை இழப்பது என்பது என்ன.
சில சமயம் எல்லா நினைவுகளும் போகும், சில சமயம் தற்கால நினைவுகள் மட்டுமே போகும், சில சமயம் கோமா நிலைக்கு சென்றுவிடுவோம்.
ஆயினும் மூளை முழுமையாக செயல்பாட்டை நிறுத்துவது இல்லை. முழுமையாக மூளை செயல்படவில்லை என்றால் மரணம் தான்.
தாய்மொழி, சைக்கிள் ஓட்டும் திறன் போன்ற பல திறன்கள் மூளையின் பல்வேறு பகுதியில் பதிந்து இருக்கும். எந்தப் பகுதியில் மூளை பழுது ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு விளைவும் இருக்கும்.
சில நோயாளிகளுக்கு முகங்களை நினைவில் கொண்டு வரும் திறனும் பழுதுபடும். அப்போது அவர்களால் தமது தாயைக் கூட இனம்காண முடியாது.
ஆனால் அதே தாய் தொலைப்பேசியில் பேசினால், இது என் தாய் என அவரால் நினைவுபடுத்தி இனம் காணமுடியும்.
இந்த நோயாளிக்கு முகங்களை நினைவுபடுத்தும் மூளைப் பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கருதலாம். மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து நினைவு பிறழ்ச்சி மாறுபடும்.
பொதுவாக சிறுசிறு நினைவு தப்பும்படியான மயக்க நிலைக்கு நாம் சென்று மீளும் போது நம்முடைய மன ஓட்டத்தில் இடைவெளி விழும்.
அப்போது தான் நாம் எங்கே இருக்கிறோம், ஆண்டு எந்த நாள் போன்ற இடம் காலம் சார்ந்த கேள்விகள் எழுகின்றன.