செய்மதி புகைப்படங்களால் சர்ச்சை

936

கடந்த வாரம் இந்திய விமானங்கள் பாக்கிஸ்தானில் குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்ட பகுதியில் உள்ள மத்ரசாக்கள் சேதமடையாததை  காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

பலகொட் நகரின் ஜபாகிராமத்திலுள்ள  ஜெய்சி-இ- முகமட் அமைப்பினால் நடாத்தப்படும் இஸ்லாமிய மத பாடசாலைகளை  இலக்குவைத்து இந்திய விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது

இஸ்லாமிய மத பாடசாலைகளின் கட்டிடங்களிற்கு எந்த வித சேதமும் ஏற்படாததை காண்பிக்கும் உயர் தர செய்மதி படங்களை பார்த்துள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது

குறிப்பிட்ட மத்ரசா காணப்படும் பகுதியில் ஆறு கட்டிடங்களை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள ரொய்ட்டர் விமானதாக்குதல் இடம்பெற்று ஆறு நாட்களின் பின்னர் இந்த செய்மதி படங்கள் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் செய்மதி நிறுவனமொன்று இந்த படத்தை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்த கட்டிடங்களை செய்மதி படத்தில் காணமுடிகின்றது, 2018 ஏப்பிரல் மாதம் அதே பகுதியில் எடுக்கப்பட்ட படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்தவேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ள ரொய்ட்டர் தாக்குதல் இடம்பெற்றது என்பதற்கான  எந்த  அறிகுறியும் தென்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது

பெப்ரவரி 26 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலின் போது மத்ரசாக்களிற்கு அருகில் உள்ள இலக்குவைக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களும் தாக்கப்பட்டன என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து செய்மதி புகைப்படங்கள் காரணமாக சந்தேகம் எழுந்துள்ளது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

செய்மதி புகைப்படங்கள் குறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்களிடம்  மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் ரொய்ட்டர்  தெரிவித்துள்ளது.

SHARE