செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா? அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயம் உள்ளதா? என்பது பற்றி விரிவான ஆய்வுகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆராய்கின்றது.
இதன் ஒருபகுதியாக, தற்போது, செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய அளவிலான நிலத்தடி நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா கூறியுள்ளது.
செவ்வாயில் உள்ள உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், நிலத்திற்கு அடியில் 80 மீட்டர் ஆழத்தில் தொடங்கி 170 மீட்டர் ஆழம் வரை, இந்த நீர் உறைந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 85% வரையான நீர் பனிக்கட்டியாகவும், இதர நீர் பாறை துகள்கள், தூசுக்களில் கலந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலத்தடி நீர்த்தேக்கம், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரியான சுப்பீரியர் ஏரியைப் போன்று அளவில் பெரியதாகும்.
இது சுமார் 1,20,000 ஆண்டுகளாகக் காணப்படுவதால், அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
இல்லாவிட்டால், தற்போது இந்த நிலத்தடி நீர்ப்பகுதியில், சிறிய அளவிலான உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாகவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது