சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்த போது காலையில் களையிழந்த அ.தி.மு.க ஆண்டு விழா, நண்பகல் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாடியதால் களைகட்டியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அக்கட்சியின் 43வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்தார். பின்னர் கட்சியின் கொடியை ஏற்றிய அவர், ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதனை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஆட்டம், பாட்டம், பட்டாசு, இனிப்பு, கச்சேரி என இருந்த அ.தி.மு.க ஆண்டு விழா இந்தாண்டு, ஜெயலலிதா சிறையில் இருந்ததால் களையிழந்து காணப்பட்டது.
காலையில் களையிழந்து காணப்பட்ட கட்சி அலுவலகம், நண்பகலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியதால், உற்சாகமாக காணப்பட்டது.
அதேபோன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் குவிந்த அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அசத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
பெங்களூரிலும் கொண்டாட்டம்
மேலும் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அருகே திரண்டிருந்த அதிமுகவினரும், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா சிறையிலிருந்து எப்போது வெளியே வருவார் என காத்திருக்கும் அவர்கள், அவரை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.