குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இனவாதிகளால் தாக்கப்பட்டு பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த அனைத்து பள்ளிவாசல்களையும் புனரமைத்து தரப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேதமடைந்த பள்ளிவாசல்களின் விபரங்களை தருமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, மத்திய கலாசார நிதியத்தின் ஒதுக்கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளி வாசல்களை நிர்மாணித்துக்கொடுப்பதற்கான யோசனையை அமைச்சர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பிலான விபரங்களை திரட்டுமாறும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இதனிடையே, முஸ்லிம் சமய விவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு பாதிப் புக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர் பிலான முழு அறிக்கையும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.