ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
556 இலக்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்களும், இங்கிலாந்து 319 ஓட்டங்களும் குவித்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 430 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதன்படி 556 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. பென் டக்கெட் 4 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
அடுத்து ஜக் கிராவ்லே 11 ஓட்டங்களில் lbw முறையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஓலி போப் (3), பேர்ஸ்டோவ் (4) மற்றும் ஜோ ரூட் (7) அடுத்தடுத்து ஜடேஜாவின் மாயாஜால சுழலில் வெளியேறினர்.
இமாலய வெற்றி
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் போராடினாலும், குல்தீப் மற்றும் ஜடேஜா ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மார்க் வுட் 15 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.