ஜனநாயகத்தைப்பற்றி கருணா பேசக்கூடாது மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ்ப்பாண மக்களை 24மணி நேரத்தில் வெளியேற்றியவர் கருணா துரோகிகள் புனிதராக நிணைப்பது தவறு

298

 

Muhamalai_2வடமாகாணத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் கருணா குழுவினர் அறிவித்தனர். இரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வெளியேறாதவர்கள் சட்டவிரோதமாக மட்டக்களப்பில் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த ஒலிபெருக்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.  மட்டக்களப்பு செங்கலடி வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி நகரங்களில் கருணா குழுவினர் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

மட்டக்களப்பு நகரில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. வர்த்தகர்கள் அனைவரும் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். சிலர் கொழும்புக்கு சென்றனர். சிலர் வவுனியாவுக்கு சென்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர்களும் தமது குடும்பங்கள் சகிதம் வெளியேறினர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றிய இடமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்ந்தது. அங்கு ஏற்கனவே யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான ஒரு தரப்பு தீவிரமாக செயற்பட்டு கொண்டிருந்தது. கருணா குழுவின் அறிவிப்பு அவர்களுக்கு இரட்டி மகிழ்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். கருணா குழு வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினால் மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர். கருணா குழுவின் அறிவிப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெளியேறினர்.

சில வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், அரச ஊழியர்கள், வர்த்தகர்கள் வடபகுதியை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் அவர்களில் சிலர் மட்டக்களப்பில் திருமணம் முடித்திருந்தனர். உதாரணமாக கிழக்கு பல்கலைக்கழக பொருளியியல்துறை தலைவராக இருந்த தம்பையா வவுனியாவை சேர்ந்தவர். ஆனால் அவர் திருமணம் முடித்திருந்தது மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணையாகும். இவ்வாறு மட்டக்களப்பில் திருமணம் முடித்திருந்தவர்களும் தமது குடும்பங்கள் சகிதம் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். தம்பையா மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருந்த பின் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறிய பின் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். ( மட்டக்களப்பு நகரில் இருந்த அவரின் வீட்டில் வைத்தே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இது பற்றிய பின்னர் எழுத இருக்கிறேன். )

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என கருணா குழு எடுத்த முடிவு மிக மோசமான தவறான முடிவாகும். இதனால் மட்டக்களப்பு தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை, ஆகிய நகரங்களில் இருந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முஸ்லீம் வர்த்தகர்கள் தமிழ் வர்த்தகர்களை தொடர்பு கொண்டு பெரும்பாலான வர்த்தக நிலையங்களை அவர்கள் வாங்கி கொண்டனர்.   மார்ச் 30ஆம் திகதி இரவு யாழ்ப்பாண தமிழர்களின் சில கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை கருணா குழுவே செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகரில் இருந்த ஒரே ஒரு ஆடைத்தொழிற்சாலை யாழ்ப்பாண தமிழருக்கு சொந்தமானதாகும். கல்வியங்காட்டில் இருந்த ஆஞ்சநேயர் ஆடைத்தொழிற்சாலையும் மூடப்பட்டது. இதில் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த இளம் பெண்கள், மற்றும் இளைஞர்கள் வேலை செய்தனர். இந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டதால் இவர்கள் அனைவரும் வேலை இழந்து நிர்க்கதியாக நின்றனர்.

கருணா குழுவினர் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த மக்கள் எந்த காரணம் கொண்டும் வடபகுதியை சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்களுடனோ அல்லது வன்னியில் இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைகளுடனோ தொடர்புகளை வைத்திருக்க கூடாது என்றும் அவ்வாறு வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

வடபகுதியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் எந்த தொடர்பையும் வைத்திருக்க கூடாது என கருணா குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் நெருக்கடியாக அமைந்தது.

இந்த அறிவிப்பு மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்களுக்கு கருணா குழு மீது வெறுப்பை ஏற்படுத்திருந்தது. அதுவரை அமைதியாக இருந்த மட்டக்களப்பு தமிழ் மக்கள் கருணா குழுவுக்கு எதிரான கண்டனங்களை வெளியிட ஆரம்பித்தனர்.

அதேவேளை கருணா குழுவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றன. கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருச்செல்வம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மோனகுருசாமி ஆகியோர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கருணா குழு ஆதரவாளரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ராசன் சத்தியமூர்த்தியின் சடலம் மட்டக்களப்பு நகரில் மட்டுமன்றி கொக்கட்டிச்சோலைக்கும் எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண தமிழ் மக்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறு கருணா குழு அறிவித்த அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிவிப்பில் மட்டக்களப்பை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என தெரிவித்தனர். கருணா குழுவின் அறிவிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் பெருந்தொகையான மக்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியநிபுணர்கள், மற்றும் வைத்தியர்கள் வெளியேறியதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவசர சத்திரசிகிச்சை உட்பட வைத்தியசேவைகள் நிறுத்தப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மட்டுமன்றி கல்முனை அக்கரைப்பற்று வரையான மக்களும் பாதிக்கப்பட்டனர்.
கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 6 வைத்திய நிபுணர்கள் உட்பட 11 வைத்தியர்கள் வெளியேறினர்.

கருணா குழுவின் இச்செயலை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள் ஏப்ரல் முதலாம் திகதி வைத்தியசாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். வைத்தியநிபுணர்களின் வெளியேற்றத்தால் பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சில உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம், யுனிசேவ், உலக உணவுத்திட்டம், ஆகிய அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தன.

காலம் காலமாக ஒரு இடத்தில் வாழும் மக்களை வன்முறைகளின் மூலம் அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை சட்டங்களை மீறும் செயலாகும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கருணா குழுவின் இத்தகைய மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களும் கண்டிக்க ஆரம்பித்தனர். படிப்படியாக கருணா குழு மீது மட்டக்களப்பு மக்களுக்கு வெறுப்பு அதிகரிக்க தொடங்கியது.

இந்த குழப்பங்களின் மத்தியில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. மட்டக்களப்பில் கருணா குழுவினர் ஜோசப் பரராசசிங்கம் தவிர்ந்த ஏனையவர்களுக்கு வாக்களிக்குமாறு ஊக்குவித்தனர்.
அதேபோன்று வன்னி, யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் விடுதலைப்புலிகள் சிபார்சு செய்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்குமாறு தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட கனகரத்தினம், கிசோர் சிவநாதன், ஆகியோரின் இலக்கங்களுக்கே வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேச மக்களுக்கு ஓமந்தையில் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.

அதேபோல யாழ். மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் இலக்கங்களே கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மக்களிடம் வழக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு முகமாலை சோதனை சாவடியில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இரவே கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களுக்கு கஜேந்திரன், மற்றும் பத்மினி ஆகியோரின் இலக்கங்களை வழங்கி வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டிருந்தனர். அவை எந்த வேட்பாளர்களின் இலக்கங்கள் என்பதோ, தாம் வாக்களிக்க இருப்பவர்களின் முகங்களையோ அறியாத நிலையில் வீட்டு சின்னமும் விடுதலைப்புலிகள் கொடுத்த இலக்கங்களும் மட்டுமே அந்த மக்களின் கைகளில் இருந்தன.Muhamalai_2

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் 2004ஆம் ஆண்டில் தான் வடக்கு கிழக்கில் வாக்களிப்பு வீதம் அதிகரித்து காணப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி மற்றும் படுவான்கரைப்பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் நான்கு தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டது 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வன்னி மாவட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், வி.நோகராதலிங்கம், எஸ்.கனகரத்தினம், சிவநாதன் கிசோர் ஆகிய ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டனர். வன்னி மாவட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டது அதுவே முதல் தடவையாகும்.

யாழ். மாவட்டத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஈ.பி.டி.பிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் செயலாளராக அப்போது இருந்த மாவை சேனாதிராசா விருப்பு வாக்கில் எட்டாவது இடத்திலேயே தெரிவு செய்யப்பட்டார். தீவுப்பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்ற வேளையில் ஈ.பி.டி.பியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்திருந்ததால் மாவை சேனாதிராசா பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் இருந்தார்.

செல்வராசா கஜேந்திரன் 112077 வாக்குகளை பெற்று முதலாவது இடத்திற்கு வந்திருந்தார். பத்மினி சிதம்பரநாதன் 68,239 வாக்குகளையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 60,768 வாக்குகளையும், சுரேஷ் பிரேமச்சந்திரன் 45,783 வாக்குகளையும், கிட்டிணன் சிவநேசன் 43,730 வாக்குகளையும் நடராசா ரவிராஜ் 42,963 வாக்குகளையும், க.சிவாஜிலிங்கம் 42,191 வாக்குகளையும் மாவை சேனாதிராசா 38,779 வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆர்.சம்பந்தனும் அம்பாறை மாவட்டத்தில் எஸ்.பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது. ஜோசப் பரராசசிங்கமும், ஈழவேந்தனும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இத்தேசியப்பட்டியல் தெரிவும் விடுதலைப்புலிகளின் சிபார்சிலேயே நியமிக்கப்பட்டனர்.

SHARE