ஜனநாயக ஆட்சிமுறையை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு 

388

 

Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT
லங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.


சுதந்திர இலங்கைக்கு என இதுவரை மூன்று அரசியல் அமைப்புகள் வரையப்பட்டுள்ளன. முதலாவது அரசியல் அமைப்பு இலங்கை 1948இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது, பிரித்தானியரால் வரையப்பட்டு கையளிக்கப்பட்ட ‘வெஸ்ற்மினிஸ்ரர்’ முறையிலான சோல்பரி அரசியல் அமைப்பு.

‘இந்த அரசியல் அமைப்பு பிரித்தானிய காலனித்துவவாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வரையப்பட்டது, இலங்கையின் தேசிய நலன்களுக்கு எதிரானது’ என்று சொல்லி, 1970இல் பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கம், 1972இல் புதிய குடியரசு அரசியல் யாப்பொன்றை அறிமுகம் செய்தது.

இந்த அரசியல் அமைப்பில் பல நல்ல விடயங்கள் இருந்தபோதிலும், சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே தமிழரசுக் கட்சி இதற்கு எதிராகச் சட்டவிரோதப் போராட்டங்களை ஆரம்பித்து பின்னர் அது தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாவதற்கு வழிவகுத்தது. ஆனால், சோல்பரி அரசியல் சட்டத்தாலும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதையோ, அது அமுலில் இருந்த காலத்தில்தான் தமிழரசுக் கட்சி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது என்பதையோ, தமிழ் தலைமைகள் ஒருபோதும் பேசுவதில்லை.

இதன் பின்னர், 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், குடியரசு அரசியல் யாப்பை நீக்கிவிட்டு 1978இல் மீண்டுமொரு புதிய அரசியல் யாப்பை அறிமுகம் செய்தது. இந்த அரசியல் யாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்து தனிமனித சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிகக் கடுமையான ஒற்றையாட்சி முறையைக் கொண்ட இந்த அரசியல் அமைப்பால்தான் இனப் பிரச்சினை யுத்தமாக வடிவெடுத்தது. இந்த நிமிடம் வரை இந்த அரசியல் அமைப்புத்தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில்தான் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசாங்கம் மீண்டுமொரு புதிய அரசியல் அமைப்பை வரைவதைப் பற்றிப் பேசி வருகிறது. புதிய அரசியல் அமைப்பின் நோக்கம் இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சார்புச் சக்திகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் என்ற விமர்சனம் ஏற்கெனவே கிளம்பியுள்ள நிலைமை ஒருபுறமிருக்க, இந்த அரசியல் அமைப்பு என்ன உள்ளடக்கத்தைக் கொண்டு அமையப் போகிறது என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.

ஏனெனில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு சர்வாதிகாரத்தனமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையையும் சிக்கல்படுத்தி இருப்பதால், புதிய அரசியல் அமைப்பு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமா என்ற அவா மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.

எனவே, புதிய அரசியல் அமைப்பு முக்கியமாக இரண்டு விடயங்களுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். ஒன்று, பூரணமான ஜனநாயக அரசியல் சூழலை புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும். ஜனநாயகச் சூழல் எனும்போது, அரசியல் உரிமைகள், சம வாய்ப்பு, தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பேணுதல், சுற்றச்சூழலைப் பாதுகாத்தல் எனப் பலவகைப்பட்டதாகும். இரண்டாவது, முன்னைய மூன்று அரசியல் அமைப்புகளாலும் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகும்.
ஆனால், ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பதைப் போல, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பின் வெள்ளோட்டமாக அமைந்திருக்கிறது.
அதாவது, பதிய அரசியல் அமைப்பிலும் நிறைவேற்ற ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ள ஒரேயொரு நல்ல அம்சமான சிறுபான்மை இனங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அனுகூலமான விகிதாசார முறை நீக்கப்படும் சாத்தியமும் உள்ளது. இதுதவிர, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. அதுமாத்திரமின்றி, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதுபோன்ற பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையிலும், அரசாங்கமும் தமிழ் தலைமையும் சேர்ந்து குட்டையைக் குழப்பி வருகின்றன. இலங்கையை இரண்டாகப் பிரித்து, வடக்கு கிழக்குப் பகுதிக்கு சமஸ்டி வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு, எதிர்க்கட்சியாகவும் இருக்கும் கூட்டமைப்புத் தலைமையும் ஆதரித்துள்ளது. சமஸ்டி என்ற சொல்லால் கடந்த காலத்தில் இலங்கையில் எழுந்த பாரதூரமான அரசியல் கொந்தளிப்பு நிலைமையை அறிந்திருந்தும், மீண்டுமொரு திட்டமிட்ட குழப்ப விளையாட்டில் தமிழ் தலைமை ஈடுபட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.

இப்படிச் சமஸ்டி கோருபவர்கள், 2000ஆம் ஆண்டில் சந்திரிக குமாரதுங்க தலைமையிலான அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, ஏறக்குறைய சமஸ்டிக்கு ஒப்பான, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கிய ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற நல்லதொரு திட்டத்தை ஐ.தே.கவுடனும், ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் சேர்ந்து நிறைவேற்ற விடாது முறியடித்தது எதற்காக என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். தமிழ் தலைமையின் அந்த நடவடிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இப்பொழுது சமஸ்டி என்று கூக்குரல் இடுவது, இனப் பிரச்சினையைத் தீரவிடாமல் குட்டையை குழப்பி அரசியல் இலாபம் பெறுவதற்கே என்பது தெட்டத் தெளிவானது.

மறுபக்கத்தில், தமிழ் தலைமையின் கோரிக்கைக்கு மறுத்தான் அடிப்பது போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் தெட்டத்தெளிவாக, “சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வலியுறுத்திக் கூறியுள்ளார். அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ வைபவம் ஒன்றில் உரையாற்றகையில், “இலங்கையில் ஒற்றையாட்சி முறை இருப்பதே, நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவசியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபக்கத்தில், தென்னிலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட, இடதுசாரிக் கட்சிகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரையும் தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சியை நீக்கிய அதிகாரப் பகிர்வுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்கத் தயார் இல்லை.

எனவே இந்த நிலைமையில், அமையப்போகும் புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி வகையிலான அரசியல் தீர்வுக்கு இடம் இல்லை என்பது தெட்டத் தெளிவானது. இருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் – சுமந்திரன் அணியினர் இந்த அரசாங்க காலத்தில், அதுவும் இந்த வருடத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்படும் எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர் என்ன முகாந்திரத்தை வைத்து இவர்கள் இப்படிக் கூறி வருகின்றனர் என்பது ‘ஆண்டவனுக்குக் கூட’ தெரியுமோ என்னவோ?
இந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பற்றுறுதியுடன் இருப்பதாகவும், அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் சொல்லுவது, மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களை நம்ப வைத்துக் கழுத்றுக்கும் செயலே அன்றி வேறு எதுவுமல்ல.

எனவே, இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பு என்பது, நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறையை நிலைநாட்டுவதற்கோ அல்லது தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வ காண்பதற்காகவோ அல்ல என்பது தெளிவானது. அவர்கள் புதியதொரு மேற்கத்தையப் பாணியிலான அரசியல் அமைப்பைக் கொண்டுவர இருப்பதன் நோக்கம், நாட்டின் அரசியல், பொருளாதார, நிர்வாக, நிதிக் கட்டமைப்பு முறைமையை அந்நிய மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கே தவிர வேறெதற்குமல்ல.
இந்த விடயத்தில் தேவைக்கு அதிகமாக மாயை கொள்வது நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்வதாகத்தான் முடியும். அடிப்படை உண்மை என்னவெனில், நாட்டுக்கு எதிரான, அந்நிய சக்திகளுக்கு விசுவாசமான ஒரு அரசால், நமது நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு ஏற்ற அரசியல் அமைப்பை வரைய முடியாது என்பதே. இதை உணராமல், பல நல்லெண்ணம் கொண்டவர்கள் கூட, இந்த அரசியல் அமைப்பால் ஏதோ மந்திர தந்திரங்கள் நிகழப்போகிறது என நினைத்து, தமது நேரத்தை வீணாக்கி ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களுக்கு எஞ்சப்போவது ஏமாற்றமே தவிர வேறெதுவுமல்ல.
முதலில் செய்ய வேண்டியது, நாட்டில் உண்மையான மக்கள் நலன் காக்கும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே. அதன் பின்னர் நாட்டு மக்கள் அனைவரதும் ஆலோசனைகளுடன் புதிய அரசியல் அமைப்பொன்றை வரைவதே சாலப் பொருத்தமாக இருக்கும். எங்களுக்குத் தேவை முற்றுமுழுதான ஜனநாயக ரீதியிலான புதிய அரசியலமைப்பே தவிர, புதிய வடிவத்தில் இன்னொரு 1978இன் அரசியல் அமைப்பல்ல. இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

SHARE