ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் – முஸ்லீம் அரசியல் தலைமைகள் சஜித்தை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை

482

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களப் பேரின வாதிகளான இரண்டில் ஏதோ வொரு கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும். ஒன்று ரணிலைத் தலைமை தாங்கிய கட்சிக்கும். மற்றையது மஹிந்த ராஜபக்ஷ அணிக்கும் தான். நிலைமை இவ்வாறு இருக்கின்றபோது சஜித் பிரே மதாசாவை ஏன் தமிழ் மக்கள் அல்லது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போகின்றது என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் – முஸ்லீம் தரப்புக்கள் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மாறாக 40 சதவீதமான சிங்கள மக்கள் கோத்தபாயவை ஆதரிப்பார்கள்.

தமிழ்த் தரப்பு கோத்த பாயவை ஆதரிக்காது ஏனெ னில் இனப்படுகொலையினை மேற்கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. மறுபக்கத்தில் முஸ்லீம் தரப்பினைப் பொறுத்தவரையில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இந்நாட்டிற்கு வந்தால் முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் இந்நாட்டில் தூண்டப்படும் என்பதாகும். இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் உடைக்கப் பட்டிருக்கின்றது. தரை மட்டமாக்கப் பட்டிருக்கின்றது. பொருட்கள் சேதமாக்கப் பட்டிருக்கின்றது. கடைகள் எரி யூட்டப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் முஸ்லீம் தரப்பின் பிரதான கட்சிகள் இம்முறை சஜித் பிரேமதாசாவையே ஆதரித்திருக்கிறது.

தமிழ்த் தரப்பு சஜித் பிரேம தாசாவை ஏன் ஆதரிக்கும் என்று பார்க்கின்றபோது, ஒன்று காலத்தின் கட்டாயம். சஜித் அவர்கள் புதிதான திட்டத்தை அமுல்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பிலும், இவரது தந்தையான ரணசிங்க பிரேமதாசாவை விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள். இதனால் சஜித் பிரேமதாசா அவர்கள் தமிழினத்தை பழிவாங்குவார் என்கிற பயமும் இருக்கிறது. ஆனால் அவ்வாறு அவர் செயற்படப் போவதில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உறுதி மொழியாகும்.

இவருடைய தந்தையின் காலத்தில் தான் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லீம்களும் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். அந்தவொரு காரணத்தினால் சிங்கள மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசாவினது ஜனாதிபதி வருகையானது புறக் கணிக்கப்படலாம். இங்கே 40 சதவீதமான வாக்குகளைப் பெற்றால் மாத்திரம் போதாது. ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு 51 சதவீதமான வாக்குகள் தேவை. ஆகவே தமிழ் – முஸ்லீம் மக்களின் ஆதரவு சஜித் அவர்களுக்கு கட்டாயம் தேவை.

ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷவை தமிழ்த் தரப்பு ஆதரிக்கின்ற நிலை தோற்று விக்கப்பட்டால், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள் என்பதிலும் மாற்றமில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், ஒரு இனப் படுகொலையாளிக்கு வாக்களிக்கக் கூறுகிறார் என்பதை சாட்டாக வைத்து எதிர்வரும் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் எதிர்த் தரப்புக்கள் தமது பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வார்கள். ஆகவே வேறு வழியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சஜித் பிரேமதாசாவினை நோக்கியே தமது கையினை நீட்டப்போகின்றது. அதில் மாற்றமில்லை.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அரசி யலில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளது. கிழக்கை முஸ்லீம்களிடமிருந்து மீட்கவேண்டும் என கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் என பலர் களத்தில் குதித் துள்ளார்கள். இவர்கள் கோத்த பாயவினை ஆதரிப்பதன் நோக்கம் முஸ்லீம்களுடைய ஆக்கிரமிப்பும், சஹ்ரான் போன்றவர்களது தாக்கு தல்களும் கிழக்கில் மீண்டும் இடம் பெறாமலிருக்கவும், காணிச் சுரண்டல்களை தடுத்து நிறுத்தவும் தான். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை அப்பகுதி தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவிருக்கிறார்கள்.

எது எவ்வாறாக விருப்பினும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தமது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த இந்த காரணத்திற்காக சஜித் நல்லவர் எனச் சொல்வார்கள். இவர்கள் பக்கம் செல்வதற்கும் ஒரு கூட்டத்தார் தயாராக விருக்கிறார்கள். அதுவும் அவ்வாறே நடந்தேறும்.

தமிழர் தரப்பானது ஒரு வேட்பாளரைத் தெரிவுசெய்து அவரை களத்தில் நிறுத்தி தமிழர்களின் பலத்தைக் காட்டும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. ஆகவே வேறு தெரிவுகளின்றி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித்தையே ஆதரிக்கவேண்டிய தேவை உள்ளது.

பூகோள ரீதியாகப் பார்க்கின்ற போது இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் மஹிந்த தலை மையிலான கோத்தபாயவினை ஆதரிக்கும் நிலைப்பாட்டினையே கொண்டி ருக்கின்றார்கள். இதிலிருந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை மீட்டெடுக்கவேண்டும் என்கிற நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை அல்லது ஈழக்கோரிக்கையினை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்கிற நோக்கமும் இல்லை. வெறு மனே அபிவிருத்தி என்று கூறிக்கொண்டுதான் இவர்கள் பயணிக்கிறார்கள். ஒரு சில அரசியல் தலைமைகள் தமி ழீழம் தான் தமிழ் மக்களின் தீர்வு என்று கூறினாலும் அதனை அழித்துவிடும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இனியும் செயற்படக் காத்திருக்கின்றது.

அண்மைய முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லீம்கள் தமது பாதுகாப்பை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.

முஸ்லீம் தலைமைகளும் தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் இணக்கமாகச் செயற்படப் போவதில்லை. மாறாக அதனைக் குழப்பும் நோக்கிலேயே அவர்கள் இதுவரை காலமும் செயற்பட்டு வந்தார்கள். இனியும் அவ்வாறே செயற்பட்டு வருவார்கள். தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடிப் பிடித்துப் பார்ப்பதுமில்லை. தமிழ் மக்களிடம் வந்து பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியாத நிலை இன்று இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நிலைமைகள் இவ்வாறிருக்க தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான தேசியம், சுயநிர்ணய உரிமை அங்கீ கரிக்கப்படும் வகையிலும் ஆயுத பலம் இல்லாத கட்டத்தில் அஹிம்சை வழியிலான போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழ்த் தரப்புகளுக்கு இருக்கிறது. ஆகவே ஒரு இணக்கப்பாட்டு அரசியலின் ஊடாக ஏழு ஆட்சியாளர்களைக் கடந்து எட்டாவது ஆட்சியா ளரிடத்திலும் அடிபணிந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது. வேறு வழியின்றி தமிழ் – முஸ்லீம் அரசியல் தலை மைகள் சஜித் பிரேமதாசாவையே ஆதரிக்கும் நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

நெற்றிப்பொறியன்

SHARE