ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை…

519
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன் பாதிப்பைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளன. அந்நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோருக்குத் தடுப்பூசி ஏற்றியதனாலேயே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சில நாடுகளால் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்பட்டாலும், இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் தமது மக்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகளும் உள்ளன.
இலங்கைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவது தொடர்பில், கடந்த காலத்தில் நான் விஷேட கவனம் செலுத்தியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன், தனிப்பட்ட முறையில் உரையாடினேன். கடிதத் தொடர்புகள் மூலமும், கோரிக்கை விடுத்திருந்தேன். எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாகவும் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடினோம். எமது அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே, இம்முயற்சிகளின் நோக்கமாகும்.
இந்த முயற்சிகளின் பயனாக, ஒவ்வொரு மாதமும் எமக்குத் தேவையான பெருமளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.
தற்போது வரையில், 12 இலட்சத்து 64, ஆயிரம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், 31 இலட்சம் சைனோஃபாம் தடுப்பூசிகள்,
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உள்ளடங்களாக, 44 இலட்சத்து 94 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.
தற்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில், 4 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 இலட்சம் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.
இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய பெரும் எதிர்பார்ப்புடனேயே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். எத்தகைய பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது எனக் கருதப்பட்ட எல்டிடிஈ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பேற்றதைப் போன்று, நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து, மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துக்காக, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, நாம் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அத்துடன், தற்காலத்தைப் பற்றியும் மிகச்சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதே, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
அன்று இந்த நாட்டு மக்கள், மத அடிப்படைவாதம் குறித்து பெரும் அச்சம் கொண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன், எமது நாட்டின் பாதுகாப்புப் பொறிமுறை, பெரிதும் பலவீனப்பட்டிருப்பதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் காரணமாக, எமது புலனாய்வுத்துறை மிகவும் பலவீனப்பட்டிருந்தது. எமது பாதுகாப்புத்துறை, சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. எமது புனிதஸ்தலங்கள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்தன. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பகிரங்கமாக அழிவுக்கு உள்ளாக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட பயங்கரவாதம், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் மீண்டும் உருவாகியிருந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பில், நாம் தற்போது பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். பொறுப்புக் கூறவேண்டிய பதவிகளுக்கு, பொருத்தமான அதிகாரிகளை நியமித்துள்ளோம். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பாதுகாப்புத் துறையினரின் மனநிலையை, நாம் மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். அன்று பலவீனப்பட்டிருந்த புலனாய்வுத் துறையை, மீண்டும் ஒழுங்கமைத்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் திட்டங்களை, மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
நாட்டுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்த பாதாள உலகக் கோஷ்டிகளை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் பிரச்சினையை ஒரே தடவையில் தீர்ப்பது கடினம் என்றபோதும், அதனைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம். முழுமையாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கிறோம். அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து, அடுத்தவருக்குப் பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.
கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த, முஹுது விகாரை, கூரகல, தீகவாபி போன்ற கலாசார, மத மரபுரிமைகளை நாம் பாதுகாத்துள்ளோம். இன்று இந்த நாட்டின் ஒருமைப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேபோன்று, எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, இந்த அரசாங்கம் எவருக்கும் இடமளிக்க மாட்டாது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே, எமது மற்றமொரு முக்கிய சவாலாக இருந்தது. இதற்கான சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில், நாம் முகங்கொடுத்த முக்கிய சவால்கள், அவற்றை நாம் எதிர்கொண்ட விதம் பற்றி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
2015ஆம் ஆண்டில் உருவான புதிய அரசாங்கத்திடம் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளிக்கும் போது, எம்மிடம் பலமானதொரு பொருளாதாரம் இருந்தது.
சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன். ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம். நாட்டுக்குப் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. ரூபாயின் பெறுமதி ஸ்திரமான நிலையில் இருந்தது. வெளிநாட்டு இருப்பு பலமானதாக இருந்தது. கடன்சுமை தளர்த்தப்பட்டு இருந்ததுடன், முழு நாடுமே ஒரு தொழில் நிலையமாக மாறி, துரித அபிவிருத்திகள் கண்டுவந்தன.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், இந்த நாட்டில் எந்தவோர் இயற்கை அனர்த்தமும் ஏற்படவில்லை. அக்காலப்பகுதியில், கொரோனா போன்ற உலகளாவிய பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டாகும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அரசுக் கடன் 7,400 பில்லியன் ரூபாவில் இருந்து 13,000 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் மீதான வரிச்சுமை, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. ரூபாயின் பெறுமதியில் தளம்பல் ஏற்பட்டு, பொருட்களின் விலையும் அதிகளவு அதிகரித்துக் காணப்பட்டது. ஏற்றுமதி வருமானம் குறைந்து, வெளிநாட்டு இருப்பும் பலவீனமடைந்திருந்தது.
இவ்வாறு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு பொருளாதாரத்துடன் தான், நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். என்றாலும், அந்த யதார்த்தத்தை மிகச் சரியாக விளங்கிக்கொண்டு, முறையானதொரு திட்டத்துடன் தான் நாம் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்தோம். எதிர்பாராத விதமாக, எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகத்துக்குமே பிரச்சினையாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மாறியது. அதனால், அந்தத் திட்டங்களை நாம் எதிர்பார்த்த வகையில் நடைமுறைப்படுத்த முடியாததொரு சூழ்நிலை உருவானது. நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னர், கொவிட் 19 தொற்று சீனாவில் ஆரம்பித்து, முழு உலகிலும் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், இந்நோய் பற்றிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கத் தேவையான அறிவு, எந்தவொரு நாட்டிடமும் இருக்கவில்லை. உலகச் சுகாதார ஸ்தாபனமும், இதனை வியப்புடனேயே பார்த்தது.
தொற்றுப் பரவலின் தன்மையைப் புரிந்துகொண்ட உடனேயே, மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், சிறந்த நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஜனாதிபதிச் செயலணியை ஸ்தாபித்து, எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நிலைமையையும் முகங்கொடுக்கத் தயாரானோம்.
சீனாவில் தொற்றுப் பரவல் ஆரம்பித்த வூஹான் மாநிலத்தில் கல்வி கற்றுவந்த வெளிநாட்டு மாணவர்கள் அநாதரவாக இருந்த நிலையில், ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் அவசரமாகச் செயற்பட்டு, முழுமையான பாதுகாப்புடன் ஒரு விமானத்தைச் சீனாவுக்கு அனுப்பி. வூஹானில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 34 பேரையும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்தோம். அவர்களை, தியத்தலாவ இராணுவ முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தி, பின்னர் அவர்களது குடும்பங்களுடன் இணைத்ததன் மூலம், ஓர் அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பு குறித்த சிறந்த முன்னுதாரணத்தை, ஏனைய நாடுகளுக்கு வழங்கினோம்.
இலங்கையில் முதலாவது கொரோனா கொத்தணி உருவான சந்தர்ப்பத்தில், உரிய நேரத்தில் நாட்டை முடக்கி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தினோம். தொற்றுக்குள்ளான அனைவருக்கும், அரசாங்கத்தின் செலவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. வைரஸ் தொற்றிய காலத்தில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அனைவரையும் புலனாய்வுத் துறையின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்தினோம். அந்த வகையிலேயே, முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது. உலகில் ஏனைய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுமார் மூன்று மாதக் காலப்பகுதியில், இலங்கையில் எந்தவொரு தொற்றாளரும் கண்டறியப்படவில்லை.
எந்தவொரு நாட்டினாலும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை நீண்டகாலம் மூடிவைக்க முடியாது. வெளிநாடுகளில் அநாதரவான நிலையில் உள்ள தமது நாட்டு மக்களை நாட்டுக்கு மீள அழைத்துவர வேண்டும். ஏற்றுமதி -இறக்குமதி நடவடிக்கைகளை, கட்டுப்பாடுகளின் கீழேனும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தவிர்க்க முடியாத உலகளாவிய தொடர்புகள் காரணமாக, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டுக்குள் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த எந்தவொரு நாட்டினாலும் முடியவில்லை. நாட்டை மூடிவிடுவதால், அபாய நிலையைத் தற்காலிகமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா இரண்டாவது அலை உருவான சந்தர்ப்பத்தில், புதிய வைரஸ் திரிபு மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக, தொழிற்சாலைகள், மீன் மற்றும் மரக்கறிச் சந்தைகளை அண்மித்த பகுதிகளில், இது தீவிரமடைய ஆரம்பித்தது. கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான சட்டங்களை, மக்கள் பொறுப்புடன் கடைபிடிக்க வேண்டும். இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எவ்வாறான போதும், இரண்டாவது அலையையும் இந்த ஆண்டின் முதற்பகுதியிலேயே நாம் பெருமளவு கட்டுப்படுத்தி இருந்தோம்.
சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில், பெருமளவு மக்கள், கூட்டம் கூட்டமாகப் பயணங்களை மேற்கொண்டதன் விளைவாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது, பல வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் உருவாகி இருப்பதுடன், வேகமாகவும் அந்த வைரஸ்கள் பரவி வருவதால், முன்னைய நிலைமைகளைப் பார்க்கிலும் பாரதூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. வைரஸ் வேகமாகப் பரவி, தொற்றாளர்களின் அளவு துரிதமாக அதிகரிக்கின்ற போது, அதற்கு விரைவாக முகங்கொடுப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு உள்ள மனித வளங்களும் ஏனைய வசதிகளும் போதுமானதாக இல்லை. அதனால், நாட்டை மீண்டும் முடக்கவேண்டி சூழ்நிலை, அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
இத்தகைய தொற்றுப் பரவல் நிலைமைகளுடன் மேற்கொள்கின்ற போராட்டத்தில், உலகின் ஏனைய பல நாடுகளும் நாமும், அவ்வப்போது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பல்வேறு சட்டதிட்டங்களை விதிக்கவேண்டி ஏற்பட்டது.
தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்பவர்களை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டது. இந்த நிலைமை, எமது தொழிற்சாலைகளுக்குப் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டித்தரும் ஆடைத் தொழிற்றுறை, இதனால் பெரும் நட்டத்தைச் சந்தித்தது. பலர், தொழில் வாய்ப்புகளை இழந்தனர். ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தது.
வெளிநாடுகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நாட்டுக்கு வர ஆரம்பித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களது தொழில்களை இழந்தனர். தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களால், மீண்டும் அந்த நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இலங்கைக்குக் கிடைத்த அந்நியச் செலாவணி, இதனால் குறைவடைந்துள்ளது.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, சுற்றுலாத் துறை மீதே நாம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சுற்றுலாத்துறை வருமானத்தை. 2025ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இன்று, முழு உலக நாடுகளும் சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஏதோ ஒரு வகையில் தங்கியிருந்த சுற்றுலாத் தொழிற்றுறை, முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ பல இலட்சம் தொழில்வாய்ப்புகளை நாம் இழந்திருக்கின்றோம். சுயதொழிலை மேற்கொண்டுவந்த இலட்சக்கணக்கானோரின் வருமானங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இத்துறையுடன் தொடர்புபட்டவர்கள், இன்று பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
எமது அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது, நிர்மாணத் துறையாகும். வீழ்ச்சியடைந்திருந்த நிர்மாணத் தொழிற்றுறைக்கு புத்துயிர் அளித்து, மீண்டும் அதனை முன்னேற்ற வேண்டும் என்றே நாம் எதிர்பார்த்தோம். அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட நாட்டை முடக்குகின்ற நிலைமைகள் காரணமாக, இத்தொழிற்றுறை பாரியளவு பாதிக்கப்பட்டது.
நிர்மாணத்துறை நிறுவனங்களால், தேவையான முறையில் ஊழியர்களைக் கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டது. உரிய நேரத்துக்கு மூலப்பொருட்களைக் கொண்டுவர இயலாமல் போனது. கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் எதிர்பார்த்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளும், பெருமளவில் எமக்குக் கிடைக்கவில்லை.
இந்த அனைத்துக் காரணங்களினாலும், நாம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த அந்நியச் செலாவணியின் அளவு, எமக்குக் கிடைக்காமல் போயுள்ளது. இத்தகையதொரு நிலைமையின் கீழ், நாம் அந்நியச் செலாவணியை மிகவும் முறையாக முகாமைத்துவம் செய்யவேண்டி இருக்கின்றது.
எமது தேசிய பொருளாதாரத்தின் மற்றுமொரு முக்கியத் துறையாக விளங்குவது, சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையாகும். மொத்தத் தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிக பங்களிப்பை வழங்கும் இந்தத் துறை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியாகத் தடைகள் ஏற்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கும் வருமான வழிகள் இல்லாமல் போய், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் சம்பளத்தைக்கூட வழங்க முடியாத பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகனங்களைக் குத்தகைக்கு பெற்றவர்கள், அவற்றுக்கான தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் உள்ளனர். வீட்டுக் கடன் பெற்றவர்களால், அந்தக் கடன் தவணையைச் செலுத்த முடியாமல் போயுள்ளது. தினசரி கடன் பெற்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இல்லாமல் போனதால், பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இந்த நிலைமைகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக, அவர்களின் கடன்களைச செலுத்துவதற்கான மேலதிகக் காலத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில், சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையினருக்குக் கடன் தவணை வசதியை வழங்குவதற்காக, அரசாங்கம் 400 பில்லியன் ரூபாய்கும் அதிக நிதியை ஒதுக்கியது.
நாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரிகளைக் குறைத்ததன் காரணமாக, அரச வருமானங்கள் குறைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். அவ்வாறு நாம் செய்யாதிருந்திருந்தால், இந்தத் தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலைமை, இன்னும் மோசமடைந்திருக்கும்.
கடந்த அரசாங்கம், மக்கள் மீது பாரிய வரிச்சுமையைச் சுமதித்தியிருந்தது. 2015 – 2019 காலப்பகுதியில், நேரடியானதும் மறைமுகமானதுமான வரிகள் இரட்டிப்பாகக் காணப்பட்டன. நாம் அதிகாரத்துக்கு வந்த உடனேயே, அந்தக் கஷ்டத்தில் இருந்து மக்களை விடுவித்தோம். இந்த அனைத்துத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும், வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், அரசாங்கத்திடம் ஏராளம் உள்ளன. அவற்றில், சமூர்த்தி கொடுப்பனவுக்காக 50 பில்லியன் ரூபாயும் இலவச மருத்துவச் சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக 90 பில்லியன் ரூபாயும், அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக 40 பில்லியன் ரூபாயும், ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக 250 பில்லியன் ரூபாயும், உர மானியங்களுக்காக 35 பில்லியன் ரூபாயும், பாடசாலை மாணவர்களுக்காக சீருடைகள், பாடநூல்கள் மற்றும் போஷாக்கான உணவுகளுக்காக 25 பில்லியன் ரூபாயும், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட மேலும் பல நிவாரணங்களுக்காக 70 பில்லியன் ரூபாயும் என, மொத்தமாகச் சுமார் 560 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு, புதிதாகப் பல செலவுகளை அரசாங்கம் சுமக்கவேண்டியதாயிற்று. தொற்று நிலைமைகள் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாளாந்த வருமானத்தை இழந்து அனாதரவான நிலைக்கு ஆளான மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க, ஒவ்வொரு முறையும் நாம் சுமார் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில் பல சந்தர்ப்பங்களில், அரசாங்கம் இந்தச் செலவை ஏற்றிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட பல மேலதிகச் செலவுகளை அரசாங்கம் ஏற்றிருக்கின்றது.
பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளுக்காகவும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையங்களைப் புதிதாக உருவாக்குவதற்காகவும், அரசாங்கம் மேலதிகச் செலவுகளை ஏற்றிருக்கின்றது. அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான செலவுகளுக்கு மேலதிகமாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும், இரண்டு வாரங்களுக்குச் சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா பிரச்சினை உருவான காலம் முதல் இதுவரையில், 260 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை, மக்கள் நிவாரணங்களுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது. திட்டமிடப்பட்டிருந்த நிவாரணங்களுடன் கொரோனா செலவுகளும் சேர்ந்துகொள்கின்ற போது, அது கடந்த வருடம் நாட்டின் மொத்த அரச வருமானமான 1,380 பில்லியன் ரூபாயின் அரைவாசியாகக் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும், அரசாங்கம் ஒருபோதும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கோ கொடுப்பனவுகளை நீக்குவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை.
எமது அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதும், அரசாங்கத்தினால் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டியிருந்த கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதில்லை.
கடந்த காலத்தில், பல்வேறு அரசாங்கங்களினால் எடுக்கப்பட்டிருந்த கடன் காரணமாக, நாம் வருடம் ஒன்றுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பாரிய கடன் தவணையைச் செலுத்த வேண்டியிருந்தது. அரசாங்கத்தினால் இந்தக் கடனைச் செலுத்த முடியாது போகும் என்ற ஒரு கருத்தை, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி கொண்டு சென்றது. இருப்பினும், நாம் நாட்டை அபகீர்த்திக்கு உட்படுத்தாது, அந்த அனைத்துக் கடன் தவணைகளையும் உரிய காலத்தில் செலுத்தியிருக்கிறோம்.
இந்த நிலைமையின் கீழ், அந்நியச் செலாவணி பிரச்சினையைத் தவிர்ப்பது, அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் காரணமாக, ஓர் அரசாங்கம் என்ற வகையில், நாம் சில முக்கியத் தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. சில அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் குறிப்பாக ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்தோம். இவ்வாறான தடைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டை நேசிக்கின்ற, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கின்ற அறிவார்ந்த மக்கள், இந்தத் தற்காலத் தேவையை விளங்கி, இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு, எம்முடன் ஒத்துழைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
நாம் முன்னெடுக்கின்றன அபிவிருத்திப் பணிகள், உரிய முறையில் மக்களிடம் சென்றடையவில்லை என்பது, எமது அரசாங்கத்தின் குறைபாடாக இருந்துவருகிறது. இதன் விளைவு, ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் பிரச்சினைகளை மாத்திரமே மக்கள் பார்த்தனர். சமூக ஊடகங்களின் வாயிலாகப் பேசப்படுகின்ற சில பிரச்சினைக்குரிய விடயங்களை மட்டுமே தெரிந்துகொண்டார்கள். இதனால், கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்ளால், நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த பயன்கள் பற்றி எவரும் பேசவில்லை.
தனிநபர் அடையாளங்களை ஊதிப் பெருப்பிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற பிரசார நடவடிக்கைகளைச் செய்யாத போதும், ஓர் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பற்றி மக்கள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின், மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை அரசியல் தேவைகளுக்காகக் கொண்டுசெல்லும் எதிர்த் தரப்பினருக்கு, அது சாதகமாக அமைந்துவிடும். இதன் பெறுபேறாக, இன்று உண்மை மறைக்கப்பட்டு பொய் வெற்றிகண்டுள்ளது.
மக்கள்மையப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நாட்டில் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி நாம் விசேட கவனம் செலுத்தியிருந்தோம். இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், அதற்கு ஒரு முக்கிய ஆசிர்வாதமாக அமைந்தது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளில் தங்கியிருந்த நாடுகள், பல கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற போதும், நாம் அத்தகையப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படவில்லை. எமது கொள்கைகளின் ஊடாகத் தேசிய விவசாயத்துறையைப் புத்துணர்ச்சி பெறச்செய்வதற்கு முடிந்தது. நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியதன் மூலம், நாம் நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளைப் பலப்படுத்தி இருக்கிறோம்.
உரங்களை இலவசமாகப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். தேயிலை, தென்னை, இறப்பர், கருவா போன்றவற்றுக்கு, கடந்த காலத்தில் நல்ல விலை கிடைத்திருக்கிறது. இலங்கையில் பயிர்ச் செய்ய முடியுமான விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அல்லது மீள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்ததன் மூலம், மிளகு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பு உருவாகி இருக்கிறது. எத்தனோல் இறக்குமதியை முற்றாகத் தடை செய்த காரணத்தால், எமது சீனித் தொழிற்சாலைகள் இன்று இலாபமீட்டும் நிலையை அடைந்துள்ளன.
விவசாயத்துக்கு உரிய கௌரவத்தை வழங்கியதன் காரணமாக, முன்பு விவசாயத் துறையில் அக்கறை காட்டாத பலர், இன்று பல்வேறு மட்டங்களில் விவசாயத் திட்டங்களுக்கு மாறியிருக்கிறார்கள்.
விவசாயத்துறையைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் நாடளாவிய ரீதியில் 14,000 குளங்களை புனர்நிர்மாணம் செய்கின்ற பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனூடாக, கைவிடப்பட்டிருந்த நெல் வயல்கள் மற்றும் தரிசு நிலங்களாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்ச் செய்கை செய்யப்படும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு உறுதியாக முகங்கொடுக்கக்கூடிய, பேண்தகு அபிவிருத்திக் கொள்கை ஒன்றுக்காக, நாம் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
நாட்டில் இரசாயன உர இறக்குமதியை முற்றாகத் தடை செய்வது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம், இதில் ஒரு முக்கிய தீர்மானமாகும். இந்த விடயம் தொடர்பில் பல தசாப்தங்கள் எமது நாட்டில் பேசுபொருளாக இருந்து வந்திருக்கிறது. இற்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரப் பாவனை, எமது நாட்டுக்கு இன்று பாரிய சமூகப் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதன் பக்க விளைவாக, எமது மண் வளம் குன்றியிருக்கிறது. எமது நீர் மாசடைந்துள்ளது.
நீரிலும் மண்ணிலும் பாரியளவிலான இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதே, சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு காரணமாகியுள்ளன என்று, நிபுணர்கள் கருதுகின்றனர். இரசாயன உரப் பாவனை மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
நீண்ட காலமாக மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிய உரையாடல்கள் சமூக மட்டத்தில் இருந்த போதும், அது தொடர்பில் நேரடியான தீர்மானத்தை எடுப்பதற்கு, இதற்கு முன்பு இருந்த எந்தவோர் அரசாங்கத்தினாலும் முடியவில்லை. இரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து நீங்கி, நாட்டை சேதனப் பசளைப் பயன்பாட்டுக்கு மாற்ற நாம் வழங்கிய உறுதிமொழியை, இந்த நாட்டின் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்தனர். இதன் காரணமாக, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தற்போதைய தலைமுறையின் பொறுப்பாகும்.
வெளிநாடுகளில் இருந்து இரசாயன உரம் கொண்டுவரப்படுவதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், ஓர் அவசரத் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, எதிர்வரவுள்ள போகத்துக்குத் தேவையான உரம் இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது, 1 1/2 மில்லியன் ஹெக்டயார் நிலத்துக்குத் தேவையான மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் உரம் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், 8,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரக்கூடிய பெரும் போகத்தில், விவசாயத்துக்குத் தேவையான சேதனப் பசளையை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. நாம் இந்தக் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதன் மூலம், நாட்டில் சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்கள், நிறுவனங்கள் என்பன, பாரியளவில் முன்வந்துள்ளன. காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடிய கொள்கைகள் காரணமாக, சுமார் மூன்று தசாப்த காலமாக எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வந்த யுத்தத்தை, நேரடியானதும் நிலையானதுமான கொள்கையின் கீழ், இரண்டரை வருட குறுகிய காலப்பகுதியில் நிறைவு செய்ததை, நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய சாதகமான காரணங்களின் அடிப்படையில், சரியான தீர்மானத்தை எடுத்து, முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது.
நாம் தற்போது முறையாக சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஒரு தேசம் என்ற வகையில் ஒன்றுபட்டு, இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம், நீண்டகால நன்மைகளை நாடு என்ற வகையில் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் கூறுகின்றார்கள். மண் வளம்பெறுவது, வினைத்திறன் அதிகரிப்பது, அதிக வருமானம், விவசாய உற்பத்திக்கு அதிக சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வது போன்று, மக்களின் ஆரோக்கியமும் எமக்குக் கிடைக்கின்ற பெறுபேறுகள் ஆகும்.
மனிதன் இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தும் வெளி அழுத்தங்களை நிறுத்தினால், மிக விரைவாக அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு வழங்க, சுற்றாடலினால் முடியுமாக இருக்கும். முதலாவது கொரோனா அலை வந்த சந்தர்ப்பத்தில், ஒரே காலத்தில் பல வாரங்களாக உலகின் அனைத்து நாடுகளும் முடக்கப்பட்டிருந்தன. அச்சந்தர்ப்பத்தில், அந்நாடுகளில் மிகவும் மாசடைந்து காணப்பட்ட வளிமண்டலம், இயல்பாகத் தூய்மையானது. இதன் மூலம் ஒரு நல்ல செய்தி எமக்குக் கிடைத்தது. அதாவது, சுற்றாடலுக்கு மனிதன் பாதிப்பை ஏற்படுத்தாத போது, அவன் எண்ணிப் பாராத வேகத்தில் சுற்றாடல் செயற்பட்டு மனிதனைப் பாதுகாக்கும் என்பதே, அந்தச் செய்தியாகும்.
உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையுடன் அல்லது ஏனைய மூலப்பொருட்களுடன் எமது தேயிலையைக் கலப்படம் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது. இருப்பினும், எமது தேயிலையின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. அதன் பெறுபேறாக, 2019ஆம் ஆண்டை விடவும், ஒரு கிலோகிராம் தேயிலையை, 83 ரூபாய் அதிக இலாபத்துடன் விற்பனை செய்வதற்கு, தொழிற்சாலைகளுக்குச் சந்தர்ப்பம் கிட்டியது. 2021ஆம் ஆண்டாகும் போது, இந்த விலை மேலும் அதிகரித்தது. மட்டுமன்றி, தேயிலை உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, 2021ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதக் காலப்பகுதியில், தேயிலைத் தொழில் ஈட்டிய அந்நியச் செலாவணி 81 பில்லியன் ரூபாயாகும்.
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களைப் பார்க்கிலும், 17 பில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் ஏனைய நாடுகளுக்கு இணையாக எமது “சிலோன் டீ” தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு 4.82 டொலர் அதிக பெறுமதி, அந்நியச் செலாவணியாக எமக்குக் கிடைத்திருக்கின்றது. நாம் மேற்கொண்ட கஷ்டமான காரியமாயினும், சரியான தீர்மானங்களின் பெறுபேற்றின் வெற்றிக்கு இது சிறந்த உதாரணமாகும்.
இரசாயன உரம் இல்லாமல் விவசாயத்தை முன்னேற்ற முடியாது என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றவர்கள், இந்தத் தீர்மானம் காரணமாகக் கிடைக்கும் நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை எதிர்காலத்தில் தெளிவாக விளங்கிக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்று இரசாயன உரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கு, உலகெங்கிலும் பாரிய கேள்வி உள்ளது. இலங்கையானது, இரசாயன உரத்தைப் பயன்படுத்தாத ஒரு நாடாக சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் போது, எமக்கு பாரிய சந்தை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், விவசாயிகளும் தொழில் முயற்சியாளர்களும், நல்ல விலையை எதிர்பார்க்க முடியும். சேதனப் பசளைகள் மூலமான உணவுகளுக்கு உலகில் பாரிய கேள்வி உள்ளது. இது, நாட்டுக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இதன் காரணமாக, அறிவார்ந்த தொழில் முயற்சியாளர்கள் செய்யவேண்டியது சிறந்ததோர் எதிர்காலத்திலிருந்து முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தயாராவது அன்றி, தற்போதைய கஷ்டங்கள் பற்றி முறைப்பாடுகளை தெரிவித்துக்கொண்டிருப்பதல்ல.
வீடமைப்பு அபிவிருத்தி என்பது, எனது அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ள மற்றுமொரு துறையாகும். நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 6 மில்லியன் குடும்பங்கள் உள்ள பிரஜைகளில் பலருக்கு, தமது வாழ்க்கை மட்டத்துக்கு ஏற்ற ஒரு வீடு இல்லை. பெருமளவானவர்கள், பகுதியளவு நிறைவடைந்த வீடுகளிலும் அல்லது குறைவான வசதிகளைக் கொண்ட வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் அதிகமானவர்கள், சேரிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வதிவிடங்களைக் கொண்டிருக்கும் சிலருக்கு, தமது காணிகளுக்கான ஓர் உறுதி இல்லாத காரணத்திதால், வீட்டின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு முடியாதிருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றி, ‘மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்’ என்ற எண்ணக்கருவின் கீழ் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும், வாழ்வதற்குப் பொருத்தமான வீட்டைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்துவோம்.
அந்த வகையில், 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் வெற்றிகரமாக ஆரம்பித்த வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் விரைவாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். எதிர்வரும் 4 வருடக் காலப்பகுதியில், மூன்று இலட்சம் வீடுகள், அரசாங்கத்தினாலும் அரச, தனியார் துறைகள் இணைந்தும் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் ஊடாக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில், 60,000 நகர வீடுகளும் 200,000 கிராமிய வீடுகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. 40,000 தோட்டப் பகுதி வீடுகள், கூலி வீடுகளும் எமது திட்டத்திற்குள் வருகின்றன. இந்த வீடுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சுமார் 10 ஆயிரம் வீடுகள் இந்த வருடம் நிறைவுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த அரசாங்கத்தால், குறைந்த வருமானம் பெறுவோருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை 450 மட்டுமே ஆகும். என்றாலும், தற்போது நாம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 7,000 அடுக்கு மாடி வீடுகளை நிர்மாணித்து வருகிறோம். நடுத்தர வருமானம் பெறுவோருக்கு 3,000 அடுக்குமாடி வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 14,000 கிராமிய வீடுகள் ஒரு கிராமத்துக்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
கிராமிய மக்களின் வறுமையை ஒழிக்கும் மற்றும் ஒரு நடவடிக்கையாக, காணிகளை இழந்த குடும்பங்களுக்கு விவசாயம் செய்யக்கூடிய காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமானவர்களுக்கு, ஒரு ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. பரம்பரை பரம்பரையாகப் பல வருடங்களாகக் குடியிருக்கின்ற போதும், காணி உரிமைகள் இன்றி இருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு சட்டபூர்வமான காணி உறுதிகளை வழங்குகின்ற நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் குடிநீர் பெற்றுக்கொடுப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான ஓர் உறுதிமொழியாகும். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்த களனி தென்கரை, தெதுரு ஓயா போன்ற பாரிய நீர்வழங்கல் திட்டங்கள், கடந்த அரசாங்கக் காலத்தில் முடங்கிய நிலையிலேயே இருந்தன. எமது தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டதைப் போன்று, நாம் அதிகாரத்துக்கு வந்த உடனேயே 50 பில்லியன் ரூபாய் நிதியை முதலீடு செய்து, இந்தத் திட்டங்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டாகும் போது, 41 சதவீதமாக காணப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கல், தற்போது 52 வீதமாக நாம் அதிகரித்துள்ளோம். 2025ஆம் ஆண்டாகும் போது அதனை 79 சதவீதமாக அதிகரிப்பதே எமது இலக்காகும். இதன் கீழ் 2021ஆம் ஆண்டாகும் போது அலவ்வ, பொல்கொல்ல, மத்துகம, அகலவத்தை, மாத்தளை, அநுராதபுரம் வடக்கு, கொழும்பு கிழக்கு, மெதிரிகிரிய மற்றும் காலி கொத்தணி நீர் வழங்கல் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 100 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பது, தேர்தல் காலத்தில் என்னிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கையாகும். அந்த வகையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, அப்போது தொழில்வாய்ப்பு இல்லாதிருந்த 65,000 பட்டதாரிகளுக்கு அரச தொழில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதற்கு மேலதிகமாக, சாதாரண தரம் சித்தியடையாத, பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்தில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதற்கு நாம் திட்டமிட்டோம். அதன் முதற்கட்டத்தின் கீழ், தற்போது 35,000 இளைஞர், யுவதிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கு பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின் நிறைவில் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆரம்ப வகுப்பு பதவிகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
எதிர்காலத்தில் ஏனையவர்களையும் விரைவாக இணைத்துக்கொள்ள நாம் நடவடிக்கை எடுப்போம்.
கல்வித்துறை குறித்தும் நாம் எமது தேர்தல் மேடைகளில் அதிகம் பேசியுள்ளோம். நாம் உறுதி அளித்ததன் பிரகாரம், கல்வித்துறைக்கு உரிய கவனத்தை வழங்கியிருக்கின்றோம். கடந்த காலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்பட்ட போதும், தொலைக்கல்வி வாயிலாகப் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். பிள்ளைகளுக்குத் தேவையான கல்வி வசதிகளைத் தொடர்ச்சியாக வழங்கியிருக்கிறோம்.
பத்தாயிரம் பாடசாலைகளுக்கு, “சைபர் ஒப்டிக்ஸ்” இணைப்புகளை வழங்கியிருக்கின்றோம். மேலும் பல பாடசாலைகளை, இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது 373ஆக உள்ள தேசிய பாடசாலைகளுக்கு மேலதிகமாக 1,000 தேசிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இப்பாடசாலைகள் தற்போது இனங்காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் மூன்று பாடசாலைகள், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டு, அவற்றின் பௌதீக வசதிகள், தரம் என்பனவற்றை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்வாங்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னர் உள்வாங்கப்பட்ட 20,000 பேருக்கு மேலதிகமாக, 10,000 மாணவர்கள் கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரே வருடத்தில் பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்களின் தொகை இவ்வளவு அதிகரிக்கப்பட்டதில்லை.
இதற்கு மேலதிகமாக, இவ்வருடம் திறந்த பல்கலைக்கழகங்களுக்கு, தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்காக புதிதாக 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும் அவர்கள், முதல் வருடத்திலிருந்தே தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுக்கொண்டே கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கான தயார்ப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம், இலங்கையில் முதலாவது சுதேச மருத்துவப் பல்கலைக்கழகமாக கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்வி நிறுவனம், தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் உள்வாங்கப்பட்டது. இவ்வருடம் ஆரம்பமாகும் இரண்டாவது பல்கலைக்கழகமாக, ஓகஸ்ட் மாதம் முதல் வவுனியா பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழங்களில் காணப்படும் சித்த மருத்துவப் பிரிவு, பல்கலைக்கழகப் பீடங்களாகத் தரமுயர்த்தப்படுவதுடன், அரங்கேற்றக் கலைகளை அபிவிருத்தி செய்வதற்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்கேற்றக் கலைகள் பீடம் தாபிக்கப்படவுள்ளது.
தேர்தல் காலங்களில் நாம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றையும் அனைத்து அரச தாதியர் கல்விக் கல்லூரிகளையும் இணைத்து, தேசிய தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றையும் ஆரம்பிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்டு தாபிக்கப்பட்டுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, பெருந்தோட்ட, விவசாயம் தொடர்பான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக, அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கு மேலதிகமாக, உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத 10 மாவட்டங்களைத் தெரிவு செய்து, அவற்றின் நகரப் பிரதேசங்களில், நகரப் பல்கலைக்கழகங்களை (CITY UNIVERSITIES) கட்டியெழுப்புவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை முன்னேற்றுவதற்கு, பாரிய நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளின் கீழ், முழு பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் ஒன்லைன் முறைமையின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல, நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் கணிதம் (STEM) பாடத்துறைகளுக்கான மாணவர்களை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதிதாகப் பீடங்களை நிர்மாணிக்கவும் நாம் நிதி ஒதுக்கி, அதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
தொழில்நுட்ப நிறுவனங்களில் கற்கை நெறிகளைக் கற்கின்ற மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க, இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் நாம் அங்கீகரித்து உள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் யுகத்தில் திட்டமிடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை முறைமைகளை முழுமைபடுத்துவது, எமது நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமான முதலீடாக அமையும். இதன் காரணமாக, கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் மந்தகதியில் இருந்த இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நாம் மீண்டும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் பகுதி, தற்போது துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அது, இன்னும் மூன்று மாதக் காலப்பகுதியில் நிறைவு செய்யப்பட உள்ளது.
சுமார் 15 கிலோமீற்றர் அளவு தூரம், தூண்களின் மேல் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடவத்தை – மீரிகம பகுதி, 2023இன் அரையாண்டுக் காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குருநாகல் – தம்புளை பகுதி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கண்டிக்குச் செல்லும் வீதியில் பொத்துஹர முதல் கலகெதர வரையான முக்கிய பகுதி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2023ஆம் ஆண்டாகும் போது, இதுவும் நிறைவு செய்யப்படவுள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டாகும் போது கொழும்பிலிருந்து கண்டிக்கு, மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊடாகச் செல்வதற்கு, மக்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்.
களனி பாலத்தில் இருந்து ராஜகிரிய ஊடாக அத்துருகிரிய வரையில் தூண்களின் மேல் நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் களனி பாலத்தில் இருந்து துறைமுக நகரம் வரையான அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டாகும் போது, இவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவுக்கு வரும். 06 ஓடு பாதைகள் கொண்ட புதிய களனிப் பாலத்துடன் இணைந்த சந்தி, இவ்வருடம் திறந்துவைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, அரசாங்கம் திட்டமிட்டுள்ள நாடளாவிய ரீதியிலான ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப் பணிகளில், 25,000 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, கொழும்பு நகரத்தில் 5 மேம்பாலங்களும் கண்டியில் ஒரு மேம்பாலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக, சன நெரிசல் நிறைந்த நகரங்களை உள்ளடக்கிய வகையில், பல்நோக்கு வாகனத் தரிப்பிடங்களைக் கொண்ட ஒன்பது கட்டிடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டத்தை நாம் அண்மையில் ஆரம்பித்து வைத்தோம். இந்த அதிவேக நெடுஞ்சாலை, 2023ஆம் ஆண்டு நிறைவில் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு, உட்கட்டமைப்பு வசதிகளின் அவசியம் பற்றி எவரும் அறிவர். வீடமைப்பு, வீதிகள் மட்டுமன்றி, அனைத்து வகையிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்வதற்கு, எமது அரசாங்கம் கடந்த காலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.
2021ஆம் ஆண்டில் 14,000 கிராமிய குளங்களைப் புனரமைப்பதற்கும் 10 ஆயிரம் பாலங்களை நிர்மாணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கிராமிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ‘100 நகரங்கள்’ திட்டத்தின் கீழ், சிறிய, நடுத்தர அளவிலான 100 நகரங்களின் அபிவிருத்திப் பணிகள், இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும். நகரங்களை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் பசுமைத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு, நாம் கொள்கை சார்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
அனைத்து முக்கிய, உப நகரங்களிலும், நகரப் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு உள்ளாகி, அண்மையில் பாரிய சமூகக் கலந்துரையாடலுக்கு உட்பட்ட முத்துராஜவெல ஈரநிலத்தை அரசாங்கம் பொறுப்பேற்று, அதனை ரெம்ஸா ஈரநிலமாகப் பாதுகாப்பதற்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு உதவியாக, காலி, குருநாகல், நுவரெலியா, கண்டி மற்றும் தம்புளை நகரங்களில், தொழில்நுட்பப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
2030ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் சக்திவலுத் தேவையில் 70 சதவீதம் மீள் பிறப்பாக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதாக நாம் உறுதி அளித்திருந்தோம். இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, நாம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ‘கிராமத்துக்கு ஒரு மின் நிலையம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 100 கிலோ வோட் கொள்ளளவு உடைய கிராமிய மட்டத்திலான 7,000 சிறிய சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை தேசிய முதலீட்டில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 750 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இணைக்கப்படவுள்ளது. 100 மெகா வோட் கொள்ளளவுடைய மன்னார் காற்றாலை மின் நிலையம், 240 மெகா வோட் கொள்ளளவுடைய பூநகரி காற்றாலை மின் ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 120 மெகா வோட் கொள்ளளவுடைய உமா ஓயா மற்றும் 35 மெகா வோட் புரோட்லண்ட்ஸ் மின் உற்பத்தி நிலையங்கள் இவ்வருடம் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளன.
31.5 மெகா வோட் கொள்ளளவுடைய நீர் மின் நிலையத்தின் பணிகள், 2023ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளன. நகரத் திண்மக் கழிவுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது திட்டம், கெரவலபிட்டியவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 300 மெகா வோட் கொள்ளளவுடைய நாட்டின் முதலாவது இயற்கை வாயு மின் நிலையத்தை (Natural Gas) கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரத்தை 2023ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தி கட்டமைப்பில் இணைக்க முடியும். கூரைகளின் மீது பொருத்தப்படும் 30,000 சூரிய சக்தி மின் தகடு முறைமை ஊடாக, தற்போது 140 மெகா வோட் கொள்ளளவு, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூன் 16ஆம் திகதி இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 2,000 கோடி ரூபாய் கடன் வசதிகளின் மூலம், அரச அலுவலகங்களின் கூரைகள் மீது சூரிய மின் சக்தி (rooftop solar) தகடுகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
‘தேசத்துக்கு ஒளி’ திட்டத்தின் கீழ், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான, மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, எவ்வித கட்டணங்களும் இன்றி மின்சாரம் வழங்கப்படும்.
நீர்ப்பாசன முகாமைத்துவ முறைமைகளைப் பலப்படுத்துவதை, ஒரு துரித தேசியத் தேவையாக எமது அரசாங்கம் இனங்கண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள நீர்ப்பாசன முறைகளைப் பலப்படுத்துவதற்கும் புதிய நீர்ப்பாசன முறைகளை அமைப்பதற்கும், நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட 10 நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், வட மேல், வட மத்திய மற்றும் வட மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, உலர் வலயங்களில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நீர் தேவைகளை நோக்காகக் கொண்டு, வடமத்திய மாகாணத்தில் மகா எல கால்வாய் மற்றும் வடமேல் மாகாணத்தின் மக எல கால்வாய் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மினிப்பே இடது கரை கால்வாய் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படவுள்ளன.
கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக, நீர் இன்றித் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் இரண்டு போகங்களுக்குமான விவசாய நடவடிக்கைகளுக்காக நீர்ப்பாசன நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல மல்வத்து ஓயா மற்றும் முந்தன் ஆறு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக, குறிப்பாக, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களினதும் கிழக்கு மாகாணத்தினதும் குடிநீர் மற்றும் நீர்ப் பாசனத்துக்கான நீர்த் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மருந்து இறக்குமதிக்காக, அரசாங்கத்தால் வருடாந்தம் பாரிய தொகை செலவிடப்படுகிறது. இந்தப் பாரிய செலவைக் குறைத்து, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, தேசிய ரீதியாக மருந்துகளை உற்பத்தி செய்வதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வகையில், கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி அளவு, முன்னரைப் பார்க்கிலும் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் மட்டும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான 7 புதிய மருந்து வகைகள் உள்ளிட்ட 65 மருந்து வகைகளை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துள்ளது. அவற்றில் 36 வகையான மருந்துகளுக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற்றுக்கொண்டிருப்பதன் மூலம், இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட பாரிய தொகையை மீதப்படுத்த முடியுமாகியுள்ளது.
புற்றுநோய் ஒழிப்பு மருந்துகள், அங்கவீனர்களுக்கான உபகரணங்கள் என்பவற்றுடன், சாதாரண மருந்து உற்பத்தி நிலையமாக மூன்று மருந்து உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை, ஹொரண – மில்லேவ பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அனைத்துத் திட்டங்களினதும் இறுதி நோக்கம், உள்நாட்டிலேயே மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அதனூடாக பெருமளவு அந்நியச் செலாவணியை நாட்டில் மீதப்படுத்துவதும் ஆகும்.
இதற்கு மேலதிகமாக, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச – தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும், தற்போது மருந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளன.
இலங்கையின் நிலப்பகுதியுடன் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 269 ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்ட கொழும்புத் துறைமுக நகரத்துக்கு, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளது. துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அதற்காக நூறு சதவீதம் இலங்கையர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். நாம் கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்ற நிதி நகரத்தின் முதலாவது முதலீடாக, 400 மில்லியன் டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்படும் 2 கோபுரங்களுடன் கூடிய வர்த்தகக் கட்டிடங்களுக்கு, அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற நிதிக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர், இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை நாம் சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தினோம். இதன்போது, பெருமளவான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், எமது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முதலீடுகளைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் குறித்த சாதகமான செய்தியை எமக்குத் தந்திருக்கிறது. இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வெற்றியை, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் நாமும் அடைந்துகொள்ள முடியுமானால், அது எமது நாட்டின் வெளிநாட்டு இருப்பைப் பலப்படுத்துவதற்கு பெரும் உதவியாக அமையும். இதனூடாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நன்மைகளை, எமது நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியும். இந்த முதலீடுகளுக்கு, இலங்கையின் பங்குச் சந்தையில் இடம்பெறக்கூடிய வாய்ப்பை வழங்குவதன் ஊடாக, எமது நாட்டின் சாதாரண மக்களுக்கும் இந்தத் திட்டங்களில் பங்குதாரர்களாககும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
அரச நிர்வாகத்தில், நாம் சட்டத்தின் ஆட்சியை எப்போதும் மதித்து வந்திருக்கிறோம். அரச ஊழியர்கள் அச்சமின்றி தமது கடமைகளை நிறைவேற்ற முடியும். நான் ஆட்சிக்கு வந்த பின்னர், எந்தவொரு நியமனமும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படவில்லை. தகைமை அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம், சட்ட மா அதிபர் நியமனம் போன்ற நியமனங்களின் போது, இந்தக் கொள்கை மிக உயர்ந்த மட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளைச் சரி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்தின் அடிப்படையில், உறுதியாகச் செயற்படுகின்ற போது மட்டுமே, நாம் சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும். இலங்கை வரலாற்றை எழுதுகின்ற போது, நாம் கடந்து சென்றுகொண்டிருக்கின்ற இக்காலப்பகுதி, எவ்வளவு கஷ்டமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். என்றாலும், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும், நாம் வெற்றியோடு முன்னோக்கிச் செல்ல போகின்றோமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்த சந்தர்ப்பத்தில், நாட்டை முன்னிறுத்திய ஒரு தலைமையையே, எனக்கு ஆதரவளித்த பெருமளவானவர்கள் கோரினர். தனிப்பட்ட கோரிக்கைகள் எவையும், அவர்கள் என்னிடம் முன்வைக்கவில்லை. இருப்பினும், நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிலர் தமது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினுத், எனக்குத் தேவையான சிலரை மகிழ்விப்பதற்காக, எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. நான் உறுதியளித்த வகையில், ‘சுபீட்சத்தின் நோக்கு’’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும்.
அன்று போலவே இன்றும் உங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன். நான் எனது பொறுப்புகளைக் தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவேன். நாட்டை நேசிக்கின்ற, எதிர்காலத் தலைமுறைக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாரான அறிவார்ந்த மக்கள், எனக்கும் எனது அரசாங்கத்துக்கும், எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வு கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
SHARE