ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது

223

தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் !

இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ரைட் திரும்பு என கையைப் பிடித்து கூட்டிப் போகின்றன இந்த கருவிகள்.

செயற்கைக் கோளைப் பயன்படுத்தி பூமியிலுள்ள எந்த ஒரு இடத்தையும் வெகு துல்லியமாய்க் காட்டும் வல்லமை படைத்தது தான் இந்த ஜி.பி.எஸ். ஆங்கிலத்தில் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என அழைக்கப்படும் இதற்கு தமிழில் பல பெயர்கள் உண்டு. புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்கள் உண்டு. உங்களுக்கு வசதியான ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது முதலில் அமெரிக்க ராணுவப் பயன்பாட்டுக்காய் ஆரம்பிக்கப் பட்ட விஷயம் தான். ராணுவத்துக்கு ரகசிய இடங்களை கண்டு சொல்லவும், இரவு பகல் பாராமல் சில இடங்களைக் கண்காணிக்கவும், துல்லியமாய் வேவு பார்க்கவும் இந்த ஜி.பி.எஸ் பயன்பட்டது. பிறகு அது காலத்துக்கேற்ற மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.

இன்றைக்கு நீங்கள் மொட்டை மாடியில் காயப் போடும் துணியில் அழுக்கு இருக்கிறதா என்பதைச் சொல்லுமளவுக்கு ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும். இது அச்சமும், வியப்பும் கலந்த ஒரு மனநிலையில் உங்களை இட்டுச் சென்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

இப்போதைக்கு இதன் மிகப்பெரிய பயன்பாடு கார்களில் வழிகாட்டுவது தான். ஒரு இடத்துக்குப் போகவேண்டும் என நீங்கள் சொன்னால். அந்த இடத்துக்குப் போக எந்தெந்த வழிகள் உண்டு. எப்படிப் போனால் சீக்கிரம் போகலாம். எந்த ரூட் ரொம்ப கடியான ரூட். எந்த ரூட்டில் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது என சர்வ சங்கதிகளையும் புட்டுப் புட்டு வைக்கும் ! ஊரோடு ஒத்து வாழ் என்பதைக் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு ஜி.பி.எஸ் சோடு ஒத்துவாழ் என காரோட்டும் போது நினைத்துக் கொண்டாலே போதும்

அமெரிக்காவுக்குச் சொந்தமானாலும் இதை உலகெங்கும் பயன்படுத்த அது அனுமதித்திருக்கிறது ! 1973ம் ஆண்டு தான் இது தனது பயணத்தைத் துவங்கியது ! 24 செயற்கைக் கோள்கள் இந்த ஜி.பி.எஸ் சிறப்பாகச் செயல்பட இரவு பகல் பாராமல் உழைக்கின்றன. இவை பூமியின் வட்டப்பாதையில் தினமும் இரண்டு முறை சுற்றி, தகவல்களை பூமிக்கு இறக்குமதி செய்து கொண்டே இருக்கின்றன.

சரி, இந்த செயற்கைக் கோள்களில் ஒன்று பழுதாகிப் போனால் என்ன செய்வது ? ஒட்டு மொத்த வழிகாட்டலும் தடைபடுமே ?? பயம் வேண்டாம். அப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து தான் மூன்று “எக்ஸ்ட்ரா” செயற்கைக் கோள்களை வான்வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு செயற்கைக் கோள் வலுவிழந்தால் இது “பை ரன்னராக” ஓடத் துவங்கும் !

அப்படியானால் 1973க்கு முன்னாடி “புவியிடங்காட்டிகள்” ஏதும் இல்லையா எனும் சந்தேகம் உங்களுக்கு வருகிறதா ? 1940களிலேயே புவியிடங்காட்டிகள் உண்டு. அவை ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள். லோரான் (LORAN) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (Decca Navigator) இரண்டும் மிக முக்கியமானவை. லாங் ரேஞ்ச் நாவிகேட்டர் (Long Range Navigator ) என்பதன் சுருக்கமே லோரான் ! இரண்டாம் உலகப் போரில் எதிரிகள் பதுங்கியிருக்கும் இடங்களை உளவு பார்த்து வில்லன் வேலை செய்ததில் இந்த் இரண்டுக்கும் கணிசமான பங்கு உண்டு !

இன்றைய ஜி.பி.எஸ் கள் உருவான கதை ரொம்ப சுவாரஸ்யமானது ! இந்த சிந்தனைக்கான முதல் விதையைப் போட்டவர் பெரிலின் நாட்டு இயற்பியலார் பிரைட் வார்ட் வின்டர்பெர்க் என்பவர். அவர் முன்வைத்த அணு கடிகாரத்தை (Atomic Clock ) செயற்கைக் கோள்களில் பொருத்தி  ஜெனரல் ரெலேடிவிடி யை சோதிக்கும் சிந்தனை இந்த ஜி.பி.எஸ்களின் அடிப்படை. இதை அவர் 1956ம் ஆண்டு வெளியிட்டார்.

இரண்டாவது ஐடியாவைத் தந்தது ரஷ்யா ! 1957ம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் (sputnik) எனும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. ரிச்சர்ட் கிரெஷ்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ரேடியோ அலைகளைக் கவனித்து வந்தார்கள். செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த வேறுபாடு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதையே அந்த வேறுபாடு மிகத் துல்லியமாகச் சொன்னது ! முதல் சிந்தனையையும், இரண்டாவது சிந்தனையையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டதில் இன்றைய ஜி.பி.எஸ் உருவானது !

அமெரிக்க கடற்படை உருவாக்கிய டிரான்சிட் எனும் ஜி.பி.எஸ் கருவிக்கு செயற்கைக் கோளால் இயங்கிய முதல் ஜி,பி.எஸ் எனும் பெயரைக் கொடுக்கலாம். தப்பில்லை ! 1960 ம் ஆண்டு இது வெள்ளோட்டம் விடப்பட்டது.

கடற்படை இப்படி  டிரான்சிட் டை அறிமுகம் செய்ததால் வான்படையும் தன் பங்குக்கு ஒரு புவியிடங்காட்டியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பெயர் மொஸைக் (MOSAIC). ஒரே விஷயத்தை தனித்தனியே முயல்வதை விட கூட்டாக முயற்சி செய்யலாமே எனும் யோசனையில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

1973ம் ஆண்டு 12 இராணுவ அதிகாரிகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்த ஒரு புவியிடங்காட்டிக்கான வழி  வகைகளைக் குறித்து விவாதித்தார்கள். டி.என்.எஸ்.எஸ் (DNSS ) எனப்படும் டிஃபன்ஸ் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Defence Navigation Satelitte System ) அங்கே உருவானது. அது பின்னர் நேவ்ஸ்டார் (Navstar) என்றழைக்கப்பட்டு, அதன் பின் நேவ்ஸ்டார் ஜி.பி.எஸ் (Navstar – GPS ) என்றாகி கடைசியில் வெறும் ஜி.பி.எஸ் என்று நிலை பெற்றுவிட்டது !

ஜிபிஎஸ் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா என்றாலே அலர்ஜி தானே ! அவை இதைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. ஜி.பி.எஸ் போல தனியே ஒரு சமாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காய் இருக்கிறது.

குறிப்பாக, ரஷ்யா தனது ராணுவப் பயன்பாட்டுக்காய் வைத்திருக்கும் குளோனாஸ் (GLONASS) தன்னிச்சையாய் இயங்கக் கூடியது. த ரஷ்யன் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் ( The Russioan GLObal Navigation Sattelite System) என்பதன் சுருக்கமே குளோனாஸ். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த சிஸ்டம் 1991ம் ஆண்டு உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. பின்னர் அரசியல் மாற்றங்களால் களையிழந்து போன அது கடந்த 2010ம் ஆண்டில் குளோனாஸ் கே (GLONASS-K) எனும் பெயரில் நவீனமானது !

ரஷ்யா வெற்றிபெற்றால் சீனா சும்மா இருக்குமா ? அவர்களுக்கு  காம்பஸ் இருக்கிறது. அவர்களுடைய  காம்பஸ் (COMPASS) கருவி பீடோ 2 (Beidou – 2 ) என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு சீனாவையும், அதன் சுற்றியுள்ள இடங்களையும் கவனிக்கும் வகையில் தான் இதன் பயன்பாடு இருக்கிறது. சீனாவின் திட்டம் அப்படியே அதை விரிவாக்கி உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் மாற்றுவதில் தான் என்பதில் சந்தேகம் இல்லை !

ரஷ்யா, சீனா போல ஐரோப்பியன் யூனியன் தனது பங்குக்கு உருவாக்கி வரும் புவியிடங்காட்டி கலிலியோ இடங்காட்டி. ஜி.என்.எஸ்.எஸ் (G.N.S.S) அல்லது கலிலியோ நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Galileo Navigation satellite System ) எனும் இந்த புவியிடங்காட்டி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரலாம் !

துவக்க காலத்தில் ஒரு ஜி.பி.எஸ் சிஸ்டத்தை உங்கள் காரில் வாங்கி வைக்கும் பணத்தில் ஒரு குட்டிக் கார் வாங்கிவிடலாம் எனுமளவுக்கு காஸ்ட்லி. இப்போதோ அது ரொம்ப மலிவு விலைக்கு வந்து விட்டது ! சில ஆயிரம் ரூபாய்களுக்கே இதை வாங்கி விடலாம். இன்னும் சொல்லப் போனால் எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த ஜி.பி.எஸ் அழகான வடிவமைப்பிலேயே வந்து விட்டது. ஒரு மொபைலை கையில் வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போய் விடலாம் எனும் சூழல் உருவாகிவிட்டது !

கூகிள் எர்த் (Google Earth) கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் தெருவைத் துல்லியமாய் நோட்டமிடும் இந்த மென்பொருளுக்கும் ஜி.பி.எஸ் தான் அடிப்படை. ஜி.பி.எஸ் இன் பயன்கள் நீண்டாலும் அது தனி மனித சுதந்திரத்தில் மூக்கு நுழைக்கிறது எனும் குற்றச்சாட்டு வலிமையாகவே எழுகிறது ! நோட்டம் விடுதல், வேவு பார்த்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கலாம் எனும் அச்சமும் உண்டு.

பொதுவாக, புவியிடங்காட்டி ஒரு இடத்தைக் கணிக்கவும் அதன் தூரத்தையும், நேரத்தையும் சொல்லவும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து அலைகளைப் பெறும். குறைந்தபட்சம் மூன்று செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் இதற்குத் தேவைப்படும்.

செயற்கைக் கோள் இடைவிடாமல் தொடர்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  எப்போது அந்தத் தகவல் அனுப்பப் படுகிறது? எந்த செயற்கைக் கோளில் இருந்து அது அனுப்பப் படுகிறது? அப்போது அந்த செயற்கைக் கோளின் இருப்பிடம் என்ன ? எனும் மூன்று கேள்விகள் மிக முக்கியமானவை. இந்த தகவல்களை பூமியிலுள்ள ரிசீவர்கள் பெற்றுக் கொண்டு செயற்கைக் கோளுக்கான தூரத்தைக் கண்டுபிடிக்கின்றன.

ஒர்ய் இருப்பிடைத்தைக் கண்டுபிடிக்க மூன்று செயற்கைக் கோள்கள் தேவை என்றோமில்லையா ? மூன்று கோளங்கள் போல இருக்கும் இந்த சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம் ! இதை விஞ்ஞானம் டிரைலேட்டிரேஷன் (trilateration) முறை என்கிறது. அடிப்படையில் செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் தகவலையும், அது வந்து சேர எடுத்துக் கொள்கின்ற நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த புவியிடங்காட்டி செயல்படுகிறது.

இதில் சின்ன ஒரு பிழை ஏற்பட்டால் கூட தகவலில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து விடும். ஒளியின் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் தகவல்களில் பிழை வரக் கூடாது என்பதற்காகத் தான் மூன்று செயற்கைக் கோள்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. தகவல்கள் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த ரிசீவர் கடிகாரத்தில் ஒரு குட்டித் தவறு நேர்ந்தால் கூட எல்லாம் குழப்பமாகிவிடும். அதாவது ஒரு வினாடியை இலட்சமாக உடைத்து, அதில் ஒரு பாகம் அளவுக்கு நேரப் பிழை ஏற்பட்டால், பூமியில் இடம் சுமார் 300 மீட்டர் தூரம் தூரமாய் போய்விடும் ! தகவலின் நேர்த்தி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இதற்கு மேல் ஆழமாகச் சொன்னால் நீங்கள் கணக்கு பாடம் நடத்துவது போல இருக்கும் என்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் !

SHARE