ஜி– 20’ நாடுகளின் தலைவர்களிடம், மோடி முக்கிய வேண்டுகோள்!

385

பொருளாதார இலக்குகளை விட மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டுமென ‘ஜி– 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில், ஜி- 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘காணொளி கொன்பரன்ஸ்’ மூலம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஆரம்ப உரையாற்றிய முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும், கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்சினைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பொருளாதார இலக்குகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

இப்போது, கொடூர தொற்று வியாதியால், உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. எனவே ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள், குறிப்பாக, ஏழை நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இந்த நெருக்கடியை குறைக்க, ஜி- 20 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களின் நலனுக்காக, அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சிகளை, அனைத்து நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதன் பின்னர் பேசிய சீன ஜனாதிபதி ஜின்பிங், “கொரோனா வைரஸ், உலகளவில், இதுவரை இல்லாத அளவில், சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதை எதிர்த்து, சர்வதேச அளவில் போர் தொடுக்க வேண்டும். கொரோனா பரவலுக்கு எல்லைகள் கிடையாது. இது, நம் பொது எதிரி. இதற்கு எதிராக, நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

SHARE